செவ்வாய், 7 டிசம்பர், 2010

கிரந்தம் எப்போதும் வேண்டா

சென்னை நிகழ்வுகள்

natpuஒருங்குகுறியில் கிரந்தத்  திணிப்பும்  தமிழ்காப்பும்  கருத்தரங்க செய்திகள்
மேற்கண்ட தலைப்பில் 4.12.2010 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை, சென்னை - எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்திலுள்ள அண்ணா அரங்கில் இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இவ்விழாவிற்கு இன்னிசையேந்தல் கோ.ஆத்மநாதன், முனைவர் பா.இறையரசன், முனைவர் மு.பொன்வைக்கோ, முனைவர் மு.தெய்வநாயகம், முனைவர் ந. அருள், பொறிஞர் வேங்கடேசன், பொறிஞர் ஆண்டோ பீட்டர், கவிஞர் இளவரச அமிழ்தன், தமிழ்திரு த.தமிழ்த் தென்றல், முனைவர் இராமகி, பேரா.மா.தமிழ்ப்பரிதி, பொறிஞர் ப.செல்லப்பன், பேரா.இலக்குவனார் மறைமலை, பேரா. இலக்குவனார் திருவள்ளுவன், அறிஞர் ஔவை நடராசன் ஆகிய தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல தமிழ் ஆர்வலர்களும் பல  கல்லூரிகளைச்  சேர்ந்த மாணவ மாணவிகளும்  கலந்துகொண்டனர். விழா  தொடக்கமாகத் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருபுவனம் ஆத்மநாதன் குழுவினர் பாரதிதாசன் பாடல்களைப் பாடினர்.

தமிழில் 26 கிரந்த எழுத்துகள் சேர்க்கப்படவேண்டும் என்று இரமணசர்மா கூறுவதையும் எதிர்க்கிறோம். கிரந்தத்தில்  5 தமிழ் எழுத்துகள் சேர்க்கப்பட வேண்டும் என்று நா.கணேசன் கூறுவதையும் எதிர்க்கிறோம்.   இதைப் பற்றி ஆய்வு செய்வதற்காகவே இக்கருத்தரங்கம் கூடியிருக்கிறது  என்று வரவேற்புரையில் முனைவர் பா.இறையரசன் கூறினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.தெய்வசுந்தரம் “கணினிக்கு ஏற்ற  அறிவியல் மொழி தமிழ் என்பதால் வடமொழியைப் பின்பற்றித் தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தேவையில்லை” என்றார். தமிழ் எழுத்துகளை கிரந்த எழுத்தில் சேர்த்துவிட்டால் கிரந்தத்தில் இருந்துதான் தமிழ் வந்தது என்று கூறிவிடுவார்கள்; கிரந்த  எழுத்துகள் தமிழில் நுழைந்தாலும்  கேடுதான். ‘வரலாற்று  ஆவணங்களுக்குக் கிரந்த எழுத்துகள் தேவை’ என்று சிலர் சொல்லுவதை தமிழறிஞர்கள் முடிவு செய்து கூறவேண்டும் என்று பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்கள் தொடக்க உரை ஆற்றுகையில்  கூறினார்.
தமிழர் சமயம் இதழின் ஆசிரியர் தெய்வநாயகம் பேசுகையில் சமற்கிருதமும் கிரந்தமும் இல்லாமல் தமிழால் இயங்க முடியும்; இந்து மதத்தின் பெயரால் அவற்றைத் திணிப்பது தவறு என்று கூறினார். தமிழக முதல்வர் கலைஞர் கிரந்த எழுத்துகளை தமிழில் நுழைய விடமாட்டார் என்று தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர்   முனைவர் ந.அருள் வாழ்த்துரையில்   கூறினார்.  பொறியாளர் வேங்கடேசன்  நன்றியுரை  கூறினார்.

natpu கருத்தரங்க முதல் அமர்விற்கு  கவிஞர் இளவரச அமிழ்தன் வரவேற்றார். கணினித்தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த   ஆண்டோபீட்டர் தலைமை ஏற்றுத்  தமிழில் கணினிப் பயன்பாடு அதிகமாகி உள்ளது. ‘உத்தமம்’  அமைப்பின் மூலம் ஒருங்குகுறியில் தமிழ் இடம்பெற தொடர்ந்து பாடுபட்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்.
   
அறிமுக உரையாற்றிய தமிழ்த் தென்றல் கிரந்த எழுத்துகள் தமிழில் சேர்க்கப்படக் கூடாது என்பதுடன் இதுவரைத் திணிக்கப்பட்டுள்ள ஜ, ஸ, ஹ முதலிய எழுத்துகளையும்  நீக்க  வேண்டும் என்று வலியுறுத்தினார். கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் ஆவணப்படுத்த கிரந்த எழுத்துகள் தேவை. இவற்றை தனித்தளத்தில்  வைத்துக் கொள்ளலாம் என்று  முனைவர் இராமகி வலியுறுத்தினார். பொறியாளர்  ப.செல்லப்பன்  கணினியில் எழுத்துருவிற்கான குறியீடுகள் அமைந்த முறை குறித்து  விளக்கினார்.
   
நண்பகல் உணவிற்குப் பின் இரண்டாம் அமர்வு தொடங்கியது.  தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் இலக்குவனார் “மறைமலை  பிறமொழிச் சொற்களைத் தமிழிலேயே ஒலிக்க முடியும். சிறு மாற்றங்கள் இருந்தாலும் ஒலிக்கலாம். கலிஃபோர்னியா என்பதைச் சீன மொழியில் சடிபூர்னியா என்று ஒலிக்கிறார்கள்; உருசிய மொழியில் காமராஜ் என்ற பெயரை காமராச்கி  என்றும் பத்மினி என்ற பெயரை பத்மியா என்றும் ஒலித்தார்கள். எனவே கிரந்த எழுத்துகள் தேவையில்லை” என்றார். சேலம் கல்லூரி கணினிப் பேராசிரியர் மா. “தமிழ்ப்பரிதி தமிழ் வழிக் கல்வியால்தான் தமிழை மீட்டெடுக்க முடியும் தமிழால் அனைத்து அறிவியல் நுட்பங்களையும் கூறமுடியும்” என்று விளக்கினார்.
தென்மொழி இதழின் ஆசிரியர் மா.பூங்குன்றன்  தமிழுக்கு வர்க்க எழுத்துகள் தேவையில்லை.  எனவே கிரந்த எழுத்துகளும் தேவையில்லை, வரலாற்று ஆவணங்களைத் தமிழுக்குக் கொண்டுவரவும் ஒருங்குகுறியை அச்சுத்துறையில் முழுமையாகக் கொண்டுவருவதில் உள்ள தடைகளை நீக்கவும்  ஆவன செய்யவேண்டும் என்றார்.
பாடலாசிரியர் தமிழ்ப் பிரபாகரன் “தமிழின் ஒலி அமைப்புகளைக் கெடுக்கக்கூடிய கிரந்த எழுத்துகளை தமிழில் நுழைய விடமாட்டோம்” என்று உணர்ச்சியுடன் கூறினார். தமிழ்க் காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் “கிரந்தம் வேண்டும் என்போர் சொல்லும் காரணங்கள் பொய்யானவை” என்று அடுக்கடுக்கான காரணங்களைக் கூறி நிறுவினார். கிரந்த நிலைப்பாடு குறித்து அவர் வாக்கெடுப்பு எடுத்தபொழுது மூவர் தவிர அனைவரும்  கிரந்தம் எந்த வடிவிலும்  வேண்டா என்று கையைத்தூக்கி வாக்களித்தனர்.
      
natpu
 பின்னர்க் கருத்தரங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


1. தமிழகமுதல்வர் அறிவித்தவாறு ஒருகுகுறி தொடர்பான வல்லுநர் குழுவை உடனே நியமிக்க  வேண்டும்; அதில் தமிழறிஞர்களையும் சேர்க்க வேண்டும்.

2. தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முதலான அரசு சார்நிறுவனங்களுக்கும் தமிழ்ச் சங்கங்களுக்கும் அரசே உறுப்பினர் கட்டணம்செலுத்தி  ஒருங்குகுறி அவையத்தின் உறுப்பினர்களாக ஆக்க  வேண்டும்.

3. கிரந்த எழுத்துகளே அயற்சொற்கள் கலப்பிற்கும் தமிழ்மொழிச் சிதைவிற்கும்வழி வகுத்து வருவதால், கிரந்த  எழுத்துகளை அடியோடு பாட நூல்களில் இருந்துஎடுக்க வேண்டும்.

4. இலங்கையிலும் ஈழத்திலும் கிரந்தம் கலக்காமல் கலைச்சொற்களின்  அகராதிகள்வெளியிட்டுள்ளதைப் பின்பற்றித்  தமிழ்க் கலைச்சொற்கள் அகராதிகளில் உள்ளகிரந்த எழுத்துகளை நீக்கிப் புதிய பதிப்பு வெளியிடவேண்டும்.

5. இக்கருத்தரங்கத்தின் முடிவிற்கிணங்க கிரந்த  எழுத்துகளை ஒருங்குகுறியில் சேர்க்கவே கூடாது.

மாலையில் பேராசிரியர் தெய்வசுந்தரம்  தாம் உருவாக்கிய தமிழ்ச் செயலியைத்  திரைக்காட்சி  மூலம் விளக்கினார். பேராசிரியர் பா.இறையரசன் கனடாவில் இருந்து  ‘காப்பிடல்’ என்ற கணினி அறிஞர் அனுப்பிய “இந்திய அரசே சமற்கிருத – தேவ நாகரி அடிப்படையில் தமிழ் நெடுங்கணக்கை இடம் மாற்றித்தான் ஒருங்குகுறியில் இடஒதுக்கீடு செய்தது; தமிழர்கள் அப்போதே கண்டுபிடித்துச் சரிசெய்யவில்லை” என்பதை விளக்கும் திரைக்காட்சியை விளக்கினார்.
   
நிறைவு விழாவில்  அன்றில் பா.இறை எழிலன் வரவேற்புரை நல்கினார். தமிழ்க் காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தீர்மான உரைகளைப் படித்து  விளக்கினார்.  சிங்கப்பூரில் இருந்த வந்திருந்த தமிழாசிரியர் புலவர் தா.இளங்குமரன் கிரந்த எழுத்துகள் வரவேண்டும் என்று கூறியவர்களுடைய திட்டம் தீட்டிய அறிவு நுட்பத்தைப் பாராட்டுவது நம் வீட்டுக்கு தீ வைத்தவனுடைய அறிவுத் திறனைப் பாராட்டியதாகும்; இது நம்முடைய தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இடையூறு ஆகும் என்று கூறினார். 
    
natpu
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர்  நக்கீரன்  தமிழக அரசு கிரந்த எழுத்துகளை வரவிடாது என்றார். தலைமை உரை ஆற்றிய தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் ஜ, ஸ, ஹ முதலிய கிரந்த எழுத்துகளில் இருந்து தமிழ் படிப்படியாக விடுதலைப் பெற்றுள்ளது. காக்ஷி, சாக்ஷி என்பவை காட்சி, சாட்சி என்று வழங்கத் தொடங்கின. மீண்டும் கிரந்த எழுத்துகளுக்கு  இடம் தரக்கூடாது.  வரலாற்று ஆவணங்களைத் தமிழிலே கொண்டுவர முடியும் முடியாது என்றால் அவற்றைத் தூக்கி எறியுங்கள் என்று தமிழ் உணர்ச்சி பொங்கப் பேசினார். 

நிறைவுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் தி.கோ.சீ.இளங்கோவன், “ஸ்ரீ நீக்கப்பட்டு திரு கொண்டுவரப்பட்ட அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து கிரந்த எழுத்துகள் நீக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்; மேலும் கிரந்த எழுத்துகள் வர விடமாட்டோம்” என்று உறுதிபடக் கூறினார். கருததாளர்களுக்கும் நோக்கர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கினார். நன்றி உரை கூறிய மரபுக் கட்டடக்கலை அறிஞர் பெருந்தச்சன் தென்னன், “மெய்ம்மன்  கலைகளுக்கும் அறிவியல் நூல்களுக்கும் கிரந்த எழுத்துகள் தேவையே இல்லை” என்று கூறி நிறைவு செய்தார்.
தொகுப்பு: இ.தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக