ஆட்டோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆட்டோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 அக்டோபர், 2013

குறுந்தகவல் அனுப்பினால் மிதியூர்தி தேடிவரும்

எஸ்.எம்.எஸ். செய்தால் உங்களைத் தேடி வரும் ஆட்டோ

"கால்-டாக்ஸி' சேவையைப் போல், "எஸ்.எம்.எஸ். ஆட்டோ' சேவையும் சென்னையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
பெயர், முகவரியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும், ஆட்டோ உங்களைத் தேடி வந்துவிடும்.
"பார்ட்னர் ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டம் வரும் 14-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். சேகர் சென்னையில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான ஆட்டோ சேவையை அளிக்கும் வகையில் இந்தப் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தச் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் மீட்டர் கட்டணத்துடன், கூடுதலாக சேவைக் கட்டணமாக ரூ. 10 செலுத்தவேண்டும். இதற்கு மேல் கூடுதலாக எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
பதிவு செய்து, மீட்டர் பொருத்தியுள்ள அனைத்து ஆட்டோக்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து தொடர்ச்சியான சவாரியைப் பெற முடியும்.
சிஐடியு, ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கங்கள் இந்தத் திட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னையில் இயங்கி வரும் 70,000 ஆட்டோக்களில் இதுவரை 5,000 ஆட்டோக்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளன. படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்த்தப்படும்.
முதல்கட்டமாக சென்னையிலும், பின்னர் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
எப்படி பயன்படுத்துவது?
இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்பும் பயணிகள் முதல் முறை மட்டும் 044 - 4555 4666 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவ்வாறு அழைக்கும் வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ். செய்வதற்கான எண் வழங்கப்படுவதோடு, எவ்வாறு இந்தச் சேவையைப் பயன்படுத்தவது என்ற விவரமும் தெரிவிக்கப்படும்.
பின்னர் தேவைப்படும்போது, கால் - சென்ட்டர் மூலம் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு தாங்கள் இருக்கும் இடத்துக்கான அஞ்சல் குறியீóட்டு எண்ணை எஸ்.எம்.எஸ். செய்தால், மூன்று முதல் ஐந்து ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் ஏதாவது ஒரு ஓட்டுநரை தேர்வு செய்து, அவர்களோடு நேரடியாக தொலைபேசியில் பேசி இருக்கும் இடத்துக்கே வரவழைத்து பயணம் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

தாகத்துக்குத் தண்ணீர் தராமல் சம்பாத்தியம் எதற்கு? - மதியூர்தியில் அறப்பணி

தாகத்துக்கு த் தண்ணீர் தராமல் சம்பாத்தியம் எதற்கு?
தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 32 அறங்களில், தண்ணீர் பந்தல் வைத்தலும் ஒன்று. சென்னையில் கடந்த கோடையில் தண்ணீர் பந்தல்கள் வைக்கப்பட்ட விதம், பத்திரிகைகளில் பல விதமாக வெளிவந்தது.ஆனால், தண்ணீர் பந்தலை வித்தியாசமாக வைக்க முடியும் என, நிரூபித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனநர் இரகுபதி,29. மதுராந்தகம், ஓணம்பாக்கம் தாலுகா அருகில் உள்ள பவுந்தன் கருணை கிராமம். இவரது தந்தை பக்தவத்சலம், மில் ஊழியர். அம்மா கோவிந்தம்மாள். எட்டாவது வரை படித்துள்ள ரகுபதி,தற்போது சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் தங்கி,திருவான்மியூரில், ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவில் குடிநீர் வைத்துள்ளதோடு, 'மக்களுக்காக நடமாடும் இலவச குடிநீர்' என, தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதி வைத்து உள்ளார்.
தண்ணி கிடைக்கல...:

ஆட்டோவில் இலவச குடிநீர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது குறித்து இவ்வாறு கூறுகிறார்:நான் ரெண்டு வருஷமா ஆட்டோ ஓட்டு றேன். ஆட்டோ ஓட்டும் போது எங்கேயாவது இறங்கி ஓட்டலில் தண்ணி கேட்டா, இது கேன் தண்ணி, காசு குடுத்து வாங்கினது... தர முடியாதுன்னு சொல்வாங்க.பெரிய ஓட்டலில் சாப்பிட்டாலும், தனியா கேனில் தண்ணி எடுக்க கூடாதும்பாங்க... எனக்கு மட்டும் இல்ல, யாருக்குமே எந்த பெரிய ஓட்டல்லேயும், இலவசமா தண்ணி கிடைக்கிறதில்ல. ஒரு நாளைக்கு 30, 40 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் சம்பாதிக்கிற ஓட்டல்களிலேயே இலவச தண்ணி கிடையாது.ஒரு நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிற நாமளே இலவசமா, தண்ணி தந்தா என்னன்னு தோணிச்சு. நாம செய்ய ஆரம்பிச்சா, யாராவது அதை பார்த்து செய்வாங்க இல்லியா? ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் சொந்தமா ஆட்டோ வாங்கின பிறகு, என்னோட சொந்த ஆட்டோவில் தண்ணி வசதிய வெச்சுட்டேன். தாகத்திற்கு தண்ணி கூட தரமா, சம்பாதிக்கிற பணத்தை வைச்சு இவங்கஎல்லாம் என்ன பண்ண போறாங்கன்னு தெரியல. இவ்வாறு அவர் தன் மன ஓட்டத்தை வெளிப்படையாக சொன்னார்.

ரூ 4 ஆயிரம் :

இதற்கு எவ்வளவு செலவுசெய்கிறார்? அதையும் அவரே சொல்கிறார்:'டிரைவர் சீட்' பக்கத்தில் கம்பி போட்டு வைக்கிறதுக்கும், திருவள்ளூவர் படம் ஸ்டிக்கர் ஒட்டி, பேர் எழுதுவதற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவானது.ஒரு நாளைக்கு 30 ரூபாய் கேன், மூணு கேன் ஆகும். வாரத்தில் ஒரு நாள் 70 ரூபாய் பிஸ்லெரி கேன் மூணு வைப்பேன். அது தான், பார்க்க சுத்தமாக இருக்கும்.தண்ணிக்கு ஒரு மாதத்திற்கு நாலாயிரம் ரூபாய் வரை செலவாகும். மே மாதத்தில் தண்ணி கேன் வைக்கிறேன். இதை குடிப்பதோடு, பாட்டில்லேயும் பிடிச்சுட்டு போலாம்.இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.இந்த குடிநீர் கேன், ரகுபதிக்கு சமூகத்தில் தனிப்பட்ட அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

தனது சேவைக்கு மக்களின் வரவேற்பு குறித்து, சிலாகித்து பேசுகிறார்:எல்லாரும் பாரட்டுறாங்க. ஒருமுறை ஒரு கர்ப்பிணி பெண்ணை, சோழிங்கநல்லூரில் இருந்து பெசன்ட் நகர் வரை அழைச்சிட்டு போய் விட்டு வந்தேன். அவங்க, இப்போ ரெகுலர் சவாரி வராங்க. இதுவரை, 10 பயணிகள் என்னோட போன் நம்பரை வாங்கி வைச்சி கூப்பிடுறாங்க.நாலு பேர், அவங்க விசிட்டிங் கார்டு கொடுத்து எந்த உதவி வேணுமானாலும் கூப்பிடுன்னு சொல்லிருக்காங்க... ரோட்டுல போகும் போது பலரும் கை காட்டி, கட்டை விரலை உசத்தி காண்பிச்சுட்டு போவாங்க. ஒருமுறை, ஈஞ்சம்பாக்கத்துல இருக்கிற காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., காரில் சாலையை கடந்து போகும் போது, பக்கத்துல வந்து கட்டை விரலை உயர்த்தி வாழ்த்திட்டு போனாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க பேர் தெரியல (விஜயதாரணி).கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணி குடிக்கும் போது, போக்குவரத்து எஸ்.ஐ., ஒருத்தர், 'உன் ஆட்டோவுக்கு இந்த லைன்ல கேசே கிடையாது' ன்னு சொன்னார்.

வரவேற்பு:

நெகிழ்ச்சியுடன் சொன்ன ரகுபதி, மும்மொழியில் எழுதி வைத்திருப்பது, வள்ளுவர் படத்தின் பின்னணி குறித்து உற்சாகம்குறையாமல் சொல்கிறார்: சென்னையில வட மாநில தொழிலாளர்கள் நிறைய பேர் இருக்குறாங்க சார். அவங்களுக்கு தமிழ், ஆங்கிலம், படிக்கவும் தெரியாது. யார்கிட்டயும் போய் பேசவும் மாட்டானுங்க. இந்தியில எழுதியிருந்தா அவங்களே வந்து குடிப்பாங்க. அதுக்காக, மூணு மொழிகள்ள எழுதியிருக்கேன். இலவச குடிநீர் கேன் பெயரை, ஒரு படம் போட்டு வைத்தால், நல்லா இருக்குமேன்னு தோணிச்சு. எல்லாருக்கும் பொதுவான படம் போடலாம்னு நினைச்சேன். அதனால், திருவள்ளுவர் படம் போட்டேன்.ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் எப்படிவரவேற்பு இருந்தது? அதையும் அவரே சொல்கிறார்... செலவ எப்படி சமாளிக்கிறேன்னு எல்லாரும்கேட்பாங்க. செம்மஞ்சேரி, இ.சி.ஆரில் ரெண்டு ஆட்டோ டிரைவர்கள், நாங்களும் இந்த மாதிரி தண்ணீர் வைக்கிறோம்?னு சொன்னாங்க.அரக்கோணத்துல ஒரு ஆட்டோ டிரைவர், இதை எங்க ஊர்ல செய்றேன்னு சொன்னார். அவர் ஆரம்பிச்சிருப்பார்.எனக்கு இப்ப வர்ற பணம் போதும் சார்.ஆட்டோவை, பாதி பணம் கட்டி தான் எடுத்தேன், மீதி மாத வாடகையில் தான் கட்டி வருகிறேன். எனக்கு இந்த செலவு ஒரு விஷயம் இல்லை. நான் சமாளிக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.தண்ணி வைச்சதால, பயணிகளின் வருகை கூடியிருக்கிறதான்னு தெரியல, ஆனா கொஞ்சம் நட்போட இருக்காங்க... அந்த வித்தியாசம் தெரியுது.

ஜனங்ககிட்ட, நல்ல விஷயத்தை நேரடியாக கொண்டு போகனும்னு தான் என் விருப்பம். என்ன மாதிரி சாதாரண ஆளே, இந்த மாதிரி தண்ணீர் வைக்க முடியுதுன்னா, நாட்ல வசதியா இருக்குறவங்க ஏதாவது நல்லது செய்ய முடியாதா என்ன?

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

மிதியூர்தி ஓட்டும் பெண், வழக்கறிஞர்

மிதியூர்தி(ஆட்டோ)  ஓட்டும் பெண், வழக்கறிஞராகிய  அருந்திறல்



பெங்களூரு: பெங்களூரு நகரில், ஆட்டோ ஓட்டி, பிழைப்பு நடத்திய பெண், வழக்கறிஞராகி, சாதனை படைத்துள்ளார்.வெங்கடலட்சுமி, 40, பெங்களூரு நகர வீதிகளில், ஆட்டோ ஓட்டும் பெண்களில் ஒருவர். பட்டப்படிப்பு முடித்திருந்த இவர், வழக்கறிஞராக வேண்டும் என, சிறு வயதிலிருந்தே விரும்பினார்.எனினும், பட்டப்படிப்பு முடித்ததும், திருமணம், குழந்தை, வாழ்க்கையை ஓட்ட, ஆட்டோ ஓட்ட வேண்டிய நிர்பந்தம் போன்ற கட்டாயங்களால், நேரடியாக அவரால், வழக்கறிஞர் ஆக, தேவையான படிப்பை படிக்க முடியவில்லை.கடந்த, 13 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டி வரும் வெங்கடலட்சுமி, தினமும் காலை, 8:00 மணிக்கு, தன் பணிகளை துவக்கி விடுவார். 8:30 மணிக்கு, மகளை, பள்ளியில் கொண்டு விடும் இந்த பெண், 10 கி.மீ., தூரத்தில், பசவேஸ்வர் நகரில் உள்ள, பாபு ஜெகஜீவன் ராம் சட்ட கல்லூரியில், எல்.எல்.பி., படிக்க, ஆட்டோவிலேயே செல்வார்.வகுப்புகள் மதியம் முடிந்ததும், கறுப்பு, வெள்ளை சீருடையை கழற்றி, வீட்டில் போட்டு விட்டு, ஆட்டோ டிரைவருக்குரிய, காக்கி சீருடையை அணிந்து, ஆட்டோ ஓட்ட செல்வார். நள்ளிரவு வரை, ஆட்டோ ஓட்டும் வெங்கடலட்சுமி, இரவில் வீட்டுக்கு சென்ற பிறகும், சிறிது நேரம் படித்த பின், தூங்குவார்.சில மாதங்களுக்கு முன் வெளியான, எல்.எல்.பி., தேர்வில், அவர் வெற்றி பெற்றார். எனினும், பார் கவுன்சில் தேர்வில் வெற்றி பெற்றால் தான், வழக்குகளில் ஆஜராக முடியும் என்பதால், அந்த தேர்வுக்காக, கடுமையாக தயாரானார்.கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, பார் கவுன்சில் தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று, முழு அளவில் வழக்கறிஞர் ஆகிவிட்டார்.தேர்வு முடிவை, கம்ப்யூட்டரில் பார்த்த, வெங்கடலட்சுமியின், 17 வயது மகள், "அம்மா, நீங்க, பார் கவுன்சில் தேர்வில், பாஸ் ஆயிட்டீங்க' என கூறிய போது, வெங்கடலட்சுமியால், ஆட்டோவை தொடர்ந்து ஓட்ட முடியவில்லை.சில நிமிடங்கள், ஓரமாக ஆட்டோவை நிறுத்தி, தன் வெற்றியை நினைத்து, பூரித்த அவர், "இனிமேல் ஆட்டோ ஓட்ட மாட்டேன்; முழு நேர வழக்கறிஞராக பணியாற்றுவேன்' என, உறுதி பூண்டார்.வறுமை காரணமாக, தவறான பாதைகளை பலர் தேர்ந்தெடுக்க, கடுமையான பெங்களூரு நகர வீதிகளில், ஆட்டோ ஓட்டி, கிடைத்த நேரத்தில், ஐந்தாண்டுகள் கஷ்டப்பட்டு, எல்.எல்.பி., படித்து முடித்து, வழக்கறிஞராகவும் மாறியுள்ள, "ஆட்டோ வெங்கடலட்சுமியை' இனி அனைவரும், "வழக்கறிஞர் வெங்கடலட்சுமி' என, அழைப்பர் என்பது நிச்சயம்.