செவ்வாய், 30 அக்டோபர், 2012

கருநாடகா அரசின் புதிய குடிநீர் த் திட்டங்களால் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் குறையும்

கருநாடகா அரசின் புதிய குடிநீர் த் திட்டங்களால் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் குறையும்
ிர்

பெங்களூரு: காவிரி குடிநீர், நான்காவது கட்டம், இரண்டாவது பேஸ் திட்டத்தின் கீழ், பெங்களூரு மற்றும் மைசூருக்கு கூடுதல் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறையும் வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலுள்ள அணைகளில், செப்டம்பர், 28ம் தேதி, 70 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. இந்த தண்ணீர், அக்டோபர், 8ம் தேதி, 58 டி.எம்.சி., யாக குறைந்தது. இப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கடந்த ஞாயிறன்று மைசூரு கே.ஆர்.எஸ்., அணையில், 104.92 அடியாக இருந்த நீர்மட்டம், 107.77 அடியாக உயர்ந்தது. இதே போல், கபினி அணையிலும், 10 டி.எம்.சி., தண்ணீர் அதிகரித்துள்ளது. தற்போது, நாள் தோறும் விவசாயப் பணிகளுக்காகவும், குடிநீர் தேவைக்காகவும், அரை டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடகா அரசு உள்ளது. கர்நாடக அணைகளில், 40 முதல், 60 நாட்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே உள்ளது. இதற்கிடையில், நவம்பர் முதல் தேதியிலிருந்து, பி.பி.எம்.பி., நிர்வாகத்துடன் இணைக்கப்பட்ட, நூறு புதிய வார்டுகளுக்கு, தினமும், 500 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டமும், மைசூருவுக்கு தினமும், 60 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டமும் ஒரே நாளில் துவங்கப்படவுள்ளது.
இதற்கான தண்ணீர் திறந்து விடப்படுவதால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளை நிர்வகிக்கும் அதிகாரிகள், பெரும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த, இரண்டு நகர குடிநீர் திட்டத்துக்காக பரிசோதனை ஓட்டமாக, அக்டோபர், 22ம் தேதியிலிருந்தே கபினியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 19 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடும்படி குடிநீர் வாரியம் கேட்டுக் கொண்ட போதிலும், 12 டி.எம்.சி., அதாவது, 900 மில்லியன் லிட்டர் தண்ணீரை மட்டுமே திறந்து விடப்படுகிறது. காவிரி குடிநீர் நான்காவது கட்டம், இரண்டாவது பேஸ் திட்டத்தின் கீழ், தினமும், 600 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் மூலம், ஏழு டி.எம்.சி., தண்ணீர், "பம்ப்' செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது பற்றாக்குறையாக உள்ளதால், தினமும், நூறு மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே, பம்ப் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக தண்ணீர் பம்ப் செய்வது அதிகரிக்கப்படும். அதற்குள், காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதால், பிரச்னையை சமாளிக்க முடியும், என்று குடிநீர் வாரியம் கருதுகிறது. கர்நாடக குடிநீர் தேவையை அதிகரித்து வருவதால், தமிழகத்துக்கு அனுப்பும் நீரில், கர்நாடகம் நிச்சயம் கை வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக