செவ்வாய், 30 அக்டோபர், 2012

ஆதலின், தண்ணீர் அருந்துவீர்...

ஆதலின், தண்ணீர் அருந்துவீர்...

First Published : 29 October 2012 01:30 AM IST
நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவப் பெருந்தகை. அதுபோல, நீரின்றி அமையாது நம் உடம்பு. நம் உடம்பு பஞ்ச பூதங்களின் கூட்டாகவும், கோளங்களின் பிம்பமாகவும் விளங்குகிறது. நீர்தான் உயிரினங்களை வாழ வைக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் உயிரினங்கள் ஏதுமில்லை. ஏன் - மரம், செடி, கூட இல்லை.
நம் உடம்பில் காணப்படும் உறுதியான - இளக்கமான தோல் சவ்வுகளையும், திசுக்களையும், அங்கங்களையும் கட்டமைக்கும் பணியைத் தண்ணீர் செவ்வனே செய்து வருகிறது. மனிதனின் ஒவ்வொரு உறுப்பும் தண்ணீரை நம்பியே இருக்கிறது. நமது உடம்பு 75 சதவீதத் தண்ணீரை உள்ளடக்கியதாக உள்ளது. மூளையில் 80 சதவீதமும், இரத்தத்தில் 90 சதவீதமும், தோலில் 75 சதவீதமும், சிறுநீரகத்தில் 82 சதவீதமும், எலும்பில் 22 சதவீதமும் தண்ணீர் உள்ளது.
உடம்பிலுள்ள சுரப்பிகள் மற்றும் உறுப்புகளில் தேவையான அளவில் நல்ல சுத்தமான தண்ணீர் இல்லையெனில் அவை படிப்படியாகச் சீர்கெடும். சராசரி மனிதன் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீரை வியர்வையின் மூலமாகவும், சீறுநீர் கழிப்பதன் மூலமாகவும், கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாகவும், ஏன் - மூச்சு விடுவதன் மூலமாகவும்கூட வெளியேற்றுகிறான். நம் உடம்புக்குத் தேவையான தண்ணீரின் அளவில் 5 சதவீதம் குறைந்தாலே உடல் சீர்கேட்டிற்கான அறிகுறிகள் தென்படும்.
திடகாத்திரமான மனிதனுக்கு தண்ணீரின் அளவு குறைந்தால் சோர்வும், வலுவிழப்பும் ஏற்படும். குழந்தைகளானால் தோல் உலர்ந்து, கண்களில் மிரட்சி தெரியும். வயதானவர்களுக்குத் தேவைப்படும் தண்ணீரில் 5 சதவீதம் குறைந்தால், உடம்பில் அசாதாரண வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு உப்புடன் இரசாயன கூட்டுப் பொருள்களைப் பிரிப்பதில் சமநிலைப்பாடு குறைந்து உடம்பில் பாதிப்புகள் ஏற்படும். மாறுபட்ட சூழலுக்கு ஏற்பத் தக அமைத்துக் கொள்ளாமை, தோலில் சுருக்கம் விழுதல், சோர்ந்து போதல் ஆகியவை முதுமையின் அடையாளமாகும்.
நம் உடம்புக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கப் பெறவில்லையானல், அது ரத்த ஓட்டத்திலிருந்து தண்ணீரைப் பெற்று, இதயம் இயங்குவதற்குக் கடினமான நிலையை ஏற்படுத்தி, தீராத நோய் ஏற்பட எளிதில் வழி வகுக்கும். அதே சமயத்தில் சிறுநீரகம் ரத்த சுத்திகரிப்புப் பணியைச் செய்யாது.
இது தொடர்ந்தால் சிறுநீரகத்தின் பணி கல்லீரலுக்கும் மற்ற அவயங்களுக்கும் தள்ளப்பட்டு அவை மிகுந்த அழுத்தத்துடன் தம் செயலைச் செய்வதால் உடலில் மற்ற நோய்கள் ஏற்படக் காரணமாகும்.
இதனால் நம் உடம்பில் மற்ற உடல் உபாதைகளான மலச்சிக்கல், தோல் உலர்ந்து நமைச்சல் ஏற்படுதல், முகப்பரு, மூக்கில் ரத்தம் வழிதல், மூக்கில் நீர் சேர்ந்து சீழ் ஏற்படுதல், சிறுநீர் செல்லும் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுதல், இருமல், தலைவலி போன்றவை ஏற்படக் காரணமாகும்.
நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் அனைத்தும் - பால் உட்பட - சத்தினை விட்டுச்செல்வதாக உள்ளன. ஆனால், அருந்தியதும் அற்றுப்போகக் கூடியது நீர் மட்டுமே. உடம்பின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் நீரால், உடம்பின் உட்புறத்தையும் சுத்தம் செய்யலாம்.
எனவே, உங்களுக்குக் குறைந்தபட்ச தண்ணீர் தேவை எவ்வளவு என்பது உங்களது உடல் எடையைப் பொருத்தே அமையும்.
நம் உடம்பின் எடையில் ஒவ்வொரு இரண்டு பவுண்டுக்கும் ஒரு அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது, ஆண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீரும் (13 கப்புகள்) பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் (9 கப்புகள்) அருந்த வேண்டும்.
தொடர்ந்து நீர் அருந்திவந்தால் உடல் வெப்பநிலை ஒரே சீராக இருப்பதுடன், ஆரோக்கியமாக இருக்கும். தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடம்பிலிருந்து தேவைக்கதிகமான உப்பு வெளியேறும். இதனால் கண் பார்வை பிரகாசமாகிக் கூர்மையாகும், பற்கள் வெண்மையாகும், வியர்வை தோன்றாது. துர்நாற்றம் ஏற்படாது.
நீர் அதிகம் குடிப்பதால் செரிமான உறுப்புகள் துரிதமாகத் தங்கள் வேலையைச் செய்வதால் இரைப்பைக்கு ஓய்வு கிடைக்கிறது. பழைய திசுக்கள் மறைந்து புதிய திசுக்கள் தோன்றுகின்றன. உணவுக் குழாய் தூய்மையடைகிறது. கல்லீரல் போன்ற செரிமான உறுப்புகள், சிறுநீரகங்கள், வியர்வை நாளங்கள் புத்துணர்ச்சி அடைகின்றன.
கல்லீரலில் தேங்கியிருக்கும் கார்பன் போன்ற உடம்புக்குக் கெடுதல்தரும் நச்சுப் பொருள்கள் வெளியேறுகின்றன. செரிமானத்துக்காக சுரக்கின்ற அமிலப் பைகள் சுத்தமடைகின்றன. அதன் செயல்திறன் அதிகமாவதால் குடல் சுத்தமாகி உடம்பிலுள்ள கழிவும், கொழுப்பும் அகற்றப்படுகிறது. இதனால் ரத்த நாளங்கள் சுத்தமாகின்றன. அவரவர் உடல் எடையில் எவ்வளவு நச்சுப் பொருள்கள் உள்ளனவோ அவை வெளியேறும்போது உடல் எடையும் குறைகிறது.
உடம்பிலுள்ள உள்ளுறுப்புகள் அனைத்தும் தன்னைத் தானே அக சுத்தம் செய்து கொள்கின்றன. இதனால், உடற்பருமன், சர்க்கரை நோய், வயிற்றுப்புண், நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்குகின்றன. உடலில் சுறுசுறுப்பும், ஆரோக்கியமும், இளமையும், பொலிவும் வந்தடைகிறது.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் - பல் கூட விளக்காமல் - சுமார் 1.50 லிட்டர் அல்லது 6 டம்ளர் தண்ணீர் பருகினால் உடம்பு அன்று முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும். இதை முதலில் செய்வது கடினமாகவே இருக்கும். போகப்போக பழகிவிடும். இந்த முறையைச் செய்யும் முன்பும் பின்பும் ஒரு மணி நேரத்துக்கு எதையும் குடிக்கவோ, சாப்பிடவோ கூடாது. முதலில் 1.50 லிட்டர் குடிக்க முடியாதவர்கள் சிறிய இடைவெளிவிட்டு குடிக்கலாம்.
தண்ணீரை உரிய முறையில் பருகினால் முகம் பொலிவு பெறும், உடலில் கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறையும், உடல் புத்துணர்வு பெறும், ஜீரண சக்தி அதிகரிக்கும், நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும், ரத்த அழுத்த நோய் நீங்கும், சர்க்கரை வியாதி சரியாகும், மேலும் பல நன்மைகள் ஏற்படும். ஆதலின், எப்போதும் தண்ணீர் அருந்துவீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக