புதன், 24 அக்டோபர், 2012

"விடா முயற்சியும்,பயிற்சியும்வெற்றிக்கு வித்து!'

சொல்கிறார்கள்

"விடா முயற்சியும்,பயிற்சியும்வெற்றிக்கு வித்து!'
 குரூப் - 2 தேர்வில் ஐந்தாம் இடம் பிடித்துள்ள மகேஸ்வரி: என் திருமணத்திற்குப் பிறகே, போட்டித் தேர்வுகளுக்கு படிக்க ஆரம்பித்தேன். இதற்கு தூண்டுகோல், என் மாமியாரும், கணவரும் தான். 2007ல், வி.ஏ.ஓ., தேர்வு எழுதினேன். அது தான், என் முதல் போட்டித் தேர்வு. படிக்காமலேயே எழுதினேன். அந்தத் தேர்வில், காத்திருப்போர் பட்டியலில் தேர்ச்சி பெற்றேன்; அது எனக்கு ஊக்கம் தந்தது.இதையடுத்து, குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்று, "டெபுடி கலெக்டர்' ஆக வேண்டும் என, ஆர்வம் எழுந்தது. அதற்காக, 2008லிருந்து, வீட்டில் இருந்தபடியே படித்தேன். அந்த ஆண்டு நடந்த தேர்வில், இரண்டு மதிப்பெண்களில் தோல்வியடைந்தேன். நூலிழையில் வெற்றியை தவற விட்டதால், சென்னையில், பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து, வெற்றி பெற்றுள்ளேன்.ஆனாலும், என் லட்சியம், குரூப் - 1 தேர்வில், வெற்றி பெறுவது தான். தினமும், 12 மணி நேரம் படிப்பேன். மொபைல் போனை, "சுவிட்ச் ஆப்' செய்து விடுவேன். காலை ஒரு தேர்வு, மாலை ஒரு தேர்வு என, தினமும் என்னை தயார் செய்தேன். செய்தித் தாள்களையும், "டிவி' செய்திகளையும் பார்த்து, குறிப்புகளை எடுத்தேன்.தமிழக அரசின் மாத இதழான, "திட்டம்' இதழைப் படித்து, அரசின் திட்டங்களை அறிந்து கொண்டேன். ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப் பாடங்களையும், இலக்கணப் பாடங்களையும், நன்கு படித்தால், பொதுத் தமிழில் வெற்றி நிச்சயம். பொது அறிவுத் தேர்விற்கு, ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாடங்களை, தவறாமல் படிக்க வேண்டும்.அந்த வாரம் முழுக்க படித்ததை, ஞாயிற்றுக் கிழமை, "ரிவிஷன்' செய்து கொள்ள வேண்டும். நமக்கு நாமே தேர்வு வைத்துக் கொள்ள வேண்டும். வினா வங்கிப் புத்தகங்களை வாங்கி, அதற்குப் பதில் எழுதி, நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.நேர்காணலில், பதற்றப்படாமல், சிரித்த முகத்துடன் தெளிவாகப் பேச வேண்டும். தெரிந்த கேள்விகளுக்கு, தெளிவாய் பதிலளிக்க வேண்டும். தெரியாதெனில், சற்று யோசித்து விட்டு, "தெரியாது' என கூற வேண்டும். விடா முயற்சி, விடா பயிற்சி, இதுவே, வெற்றிக்கு வித்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக