ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தமிழ் வளர்ச்சிக்கு ஒரு பேராயுதம்!

தமிழ் வளர்ச்சிக்கு ஒரு பேராயுதம்!

First Published : 14 October 2012 03:36 PM IST
இயல், இசை, நாடகம் என பன்முகச் சிறப்புகளைக் கொண்ட செம்மொழியாம் தமிழ் மொழி, அறிவியல் தமிழாகவும் வளர்ந்து செழிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. குறிப்பாக படைப்பாளிகள், பயன்பாட்டாளர்கள் அனைவரது வசதிக்காகவும் கணினித் தமிழ் வளர்ச்சி அவசியம் என்பது இன்று பரவலாக உணரப்பட்டுள்ளது.
 எனினும், எல்லாவித விசைப் பலகைகள், எல்லாவித எழுத்துருக்களையும் பயன்படுத்தக் கூடிய வகையில் ஆங்கிலத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேர்டு போன்ற ஒரு தொழில்நுட்பம் தமிழில் இல்லாதது நீண்ட நாளைய குறையாக இருந்து வந்தது.
 அந்தக் குறைபாட்டை பெருமளவு நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது வெளிவந்துள்ளது மென்தமிழ்
 மென்மம்.
 ஆம். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழியியல் துறையின் முன்னாள் தலைவர் முனைவர் ந. தெய்வசுந்தரம் தலைமையிலான வல்லுநர் குழுவின் 10 ஆண்டு கால உழைப்பின் பலனாக இந்த மென்தமிழ் மென்மம் உருவாக்கப்பட்டுள்ளது.
 இதனை இப்போது மக்களின் பயன்பாட்டுக்காக சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ்ப் பேராயம் அமைப்பு வெளிக்கொண்டு வந்திருக்
 கிறது.
 மென்தமிழ் மென்மத்தின் சிறப்புகள் பற்றி விவரிக்கிறார் தமிழ்ப் பேராயத்தின் கணினித் தமிழ்க் கல்வித் துறை ஒருங்கிணைப்பாளர் இல. சுந்தரம்.
 மென்தமிழ் மென்மத்தைக் கொண்டு தமிழ் 99, தமிழ்த் தட்டச்சு, புதிய தட்டச்சு, ரோமன் மற்றும் பாமினி உள்பட பல விதமான விசைப் பலகைகளைப் (ந்ங்ஹ் க்ஷர்ஹழ்க்ள்) பயன்படுத்தலாம்.
 அதேபோல் எந்த வகை தமிழ் எழுத்துக் குறியீட்டையும், அதன் வடிவமைப்பு மாறாமல் வேறு எந்த வகைக் குறியீட்டுக்கும் மாற்றலாம். தட்டச்சு செய்யப்படும் தமிழ் ஆவணங்களில் சொற்பிழைகளோ அல்லது சந்திப் பிழைகளோ காணப்பட்டால் அந்தப் பிழைகளை அடையாளம் கண்டு, திருத்தம் செய்யக் கூடிய வசதி மென்தமிழ் மென்மத்தில் உள்ளது.
 உதாரணமாக, "படித்து பார்' என்று எழுதும்போது அதில் உள்ள சந்திப் பிழையை சுட்டிக்காட்டி "படித்துப் பார்' என்றும், "வந்துப் பார்' என எழுதும்போது தேவையின்றி எழுதப்பட்ட ஒற்றை நீக்கி "வந்து பார்" என்றும் சந்திப் பிழைகளை திருத்தம் செய்யும் வசதி இதில் உள்ளது.
 அதேபோல் "நான் காலேஜில் டீச்சரை சந்தித்தேன்' என எழுதினால், ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை சுட்டிக்காட்டி, "நான் கல்லூரியில் ஆசிரியரைச் சந்தித்தேன்' என திருத்தம் செய்யக் கூடிய தொழில்நுட்பமும் இந்த மென்மத்தில் உள்ளது.
 மேலும், தமிழ் - ஆங்கிலம் அகராதி, ஆங்கிலம் - தமிழ் அகராதி, ஒரு சொல்லுக்கு இணையான பல சொற்களை அறியக் கூடிய இணைச்சொல் அகராதி, எதிர்ச்சொல் அகராதி, தமிழக அரசின் ஆட்சிச் சொல் அகராதி உள்பட ஆறு வகையான அகராதிகள் உள்ளன என்கிறார் சுந்தரம்.
 ஆக, கணினியில் தமிழைப் பயன்படுத்துவோரின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள மென்தமிழ் மென்மத்தை கணினித் தமிழ் வளர்ச்சிக்கான ஒரு பேராயுதம் என்றே கூறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக