திங்கள், 22 அக்டோபர், 2012

நீர் இடித்து நீர் விலகுவதா? கருணாநிதி கவலை

நீர் இடித்து நீர் விலகுவதா? கருணாநிதி கவலை

First Published : 22 October 2012 04:53 PM IST
திமுக கட்சியினருக்குள் ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் குறித்து கவலை அடைந்துள்ள திமுக தலைவர் கருணாநிதி நீர் இடித்து நீர் விலகுவதா என்ற தலைப்பில் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நேற்று காலையிலே சேப்பாக்கம் ராஜுவுடைய வளர்ப்பு மகனுக்கு என் வீட்டிலே திருமணத்தை நான் நேற்று நடத்தி வைத்தேன். சேப்பாக்கத்தில் நான் தேர்தலில் போட்டியிட்ட போது இரவும் பகலும் உழைத்தவர் ராஜு. திருமணம் முடிந்து மணமக்கள் எல்லாம் போய் விட்டார்கள். ஆனால் ராஜு மட்டும் மேலே தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த என்னிடம் வந்து என் கால்களில் விழுந்தார். “என்ன?” என்றேன். “அய்யா, என் வாழ்நாளில் எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை, தங்கள் கையால் தாலியெடுத்துக் கொடுத்து, என் மகனை வாழ்த்தினீர்களே, அதுவே எனக்குப் போதும். இந்தப் பிறவியின் பயனை அடைந்து விட்டேன்” என்றார். இப்படிப்பட்ட தன்னலமற்ற, தலை வணங்கத்தக்க உடன்பிறப்புகள் எல்லாம் - கழகத்திலே பதவிச் சுகம் கண்டு, முன்னணித் தலைவர்களாக இருப்பவர்கள் - ஒருவரோடொருவர் திறந்தவெளி மைதானத்தில் மோதிக் கொள்வதைக் கண்டு, ரத்தக் கண்ணீர் வடிக்காமல் என்ன செய்வார்கள்?
ஒரு குழுவினர் துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடம் கொடுத்து விட்டுச் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு, நமது கழகத்தைச் சேர்ந்த இன்னொரு குழுவினர் தனியாக வந்து அதே துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் கேள்விப்படுகிறேனே, அந்தச் செய்திதான் என்னைப் பெரிதும் வருந்தச் செய்கிறது. அந்த வருத்தம், என்னை உண்ண விடாமலும் இரவு முழுவதும் தூங்க விடாமலும் செய்து விடுகிறது.
1967ஆம் ஆண்டு முதன் முதலாகக் கழகம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, அண்ணா மட்டும் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லை. அமைப்புச் செயலாளர் என்.வி. நடராசன் அப்போது அண்ணாவிடம், “என்ன அண்ணா?  உங்கள் முகத்திலே மகிழ்ச்சி இல்லையே” என்று கேட்ட போது, “ஆட்சி வந்து விட்டது, ஆனால் கட்சி போச்சே” என்று அண்ணா சொன்னார். அவர் என்ன அர்த்தத்தில் அப்படிச் சொன்னார் என்பதை நான் இப்போது அனுபவ ரீதியாக உணருகிறேன். இரவு 11 மணி வரை கழக முன்னணியினரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு, படுக்கச் சென்றால், உள்கட்சியை அரித்து வரும் இத்தகைய குழுக்களைப் பற்றிய வேதனை தான் என்னை சூழ்ந்து கொள்கிறது. தூங்கவிடாமல் செய்கிறது.
நேற்று மாலையில் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் அளித்த பேட்டி பற்றி அறிந்ததும், “இன்றிரவு என் தூக்கம் போச்சு” என்றுதான் கூறினேன். அதுபோலவே இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.
அண்ணா சொன்னாரே; “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று! அதெல்லாம் மறந்து போய் விட்டதா? அதுவும் தஞ்சை மாவட்டத்திலா? கடந்த சில நாட்களுக்கு முன்பு, தஞ்சை மாவட்டத்தில் கீழ் மட்டத்திலே இரண்டு பிரிவினருக்கு இடையே உள்ள பிரச்சினையைச் சமாதானப்படுத்துவதற்காக, கழக அலுவலகத்திற்கே அழைத்து நானும், பேராசிரியரும் இரண்டு மணி நேரம் செலவிட்டோம். தம்பி துரைமுருகன் அந்தக் கூட்டத்தில் பேசும்போது தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் இணைந்த மாவட்டம், நம் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அவருடைய சொந்த மாவட்டம். அங்கே அவர் கூறுவதுதான் “வேதவாக்கு” என்றெல்லாம் தெரிவித்து, அங்கே குழு உருவாகலாமா என்று கண்ணீர் மல்கக் கேட்டாரே! அந்த மாவட்டத்திலா இந்தத் தலைக்குனிவு?
என்னுடைய குணம் முக தாட்சண்யம்! சில கட்சிகளின் தலைமையைப் போல எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தாலும், மூத்தவர்களாக இருந்தாலும் கணநேரத்தில் “கட்டம் கட்டி” விடுகிறார்கள்? என்னால் அப்படி - இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் - இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, கடினமாக இருக்க முடிவதில்லை. அதையே காரணமாகக் கொண்டு, தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருதினால் பிறகு நான் என்ன தான் செய்ய முடியும்? இரண்டு நாட்களுக்கு முன்பு பழனிமாணிக்கம் என்னைச் சந்தித்தார். அவருடைய தொகுதியிலே நடைபெறுவதைப் பற்றியெல்லாம் என்னிடம் கூறினார். பொறுத்திருங்கள், தலைமைக் கழகத்திற்குப் புகாராக எழுதிக் கொடுங்கள், என்று சொன்னேன். அதற்குள் என்ன அவசரம்? எதற்காக இந்தப் பேட்டி? நான் எல்லாவற்றையும் மன்னித்து விடுகிறேன், மறந்து விடுகிறேன் என்பதற்காக எதையும் செய்யத் துணிவதா? எதிர்க் கட்சிகளிடமிருந்து கட்சியைக் காப்பாற்றுவதா? நமக்குள்ளேயே உலவுகின்ற இத்தகைய குழு பேதத்தைப் போக்குவதா?
இலை நிறைய பண்டங்களையும், பதார்த்தங்களையும் பரிமாறி விட்டு, அதன் மூலையிலே சாணத்தையும் சிறிது வைப்பதற்குப் பெயர் விருந்தோம்பலா? எதற்காக நான் இருக்கிறேன்? எதற்காகக் கழகத் தலைமை இருக்கிறது? மாவட்டத்திற்கு மாவட்டம் இது போன்றதொரு நிலைமை உருவானால் அதற்கு எங்கே எல்லை? தம்பி பழனிமாணிக்கம் தஞ்சையிலே பேட்டி கொடுத்து விட்டு, அவரது மனச்சாட்சியே உறுத்திய காரணத்தால் நேற்றிரவே அவசர அவசரமாகச் சென்னை வந்து என்னைச் சந்தித்து என்ன காரணத்தால் அந்தப் பேட்டியைக் கொடுக்க நேரிட்டது என்பதை விளக்கினார்.
இவர்கள் இருவருமே ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் - அதாவது தமிழகத்திற்கு வர வேண்டிய ஒரு திட்டம் மேற்கு வங்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதைப் பற்றி தம்பி டி.ஆர். பாலு காரசாரமாக ஆளுங் கட்சியைத் தாக்கிப் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், டி.ஆர். பாலுவைத் தாக்குவதற்காக வருகிறார்கள். ஆனால் அவர்கள் பாலுவை நெருங்குவதற்கு முன்பாக, பழனிமாணிக்கம்ஓடி வந்து, டி.ஆர். பாலுவிற்கு அரணாக அவர் முன்பு நின்று கொண்டு மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தடுத்தார்! அந்த உணர்வு இன்று எங்கே போய் விட்டது? “ஊரிடத்துப் பகை என்றால் உறவிடத்துப் போயுரைப்பேன்; உறவிடத்தே பகை என்றால், யாரிடத்துப் போயுரைப்பேன்?” என்ற நிலையில் நான் நிம்மதி இழந்திருக்கிறேன்! பாலுவிற்காக பழனிமாணிக்கம் அல்ல பழனிமாணிக்கத்தைத் தாக்குவதற்கு அங்கே யார் முற்பட்டிருந்தாலும், பழனிமாணிக்கத்தை விட வேகமாக ஓடி வந்து பாதுகாக்கக் கூடியவர் தான் டி.ஆர். பாலு! என்ன செய்வது? அதைத் தான் அண்ணா “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்றார். “நீர் இடித்து நீர் விலகாது” என்பது முதுமொழி அல்லவா? மறந்து விடாமல் அதை நினைப்போம்; மறந்திருந்தாலும் மீண்டும் அதை நினைப்போம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக