வியாழன், 25 அக்டோபர், 2012

"குடிசைத் தொழிலை நிறுவனமாக மாற்றினோம்!'

சொல்கிறார்கள்

  "குடிசைத் தொழிலை கம்பெனியாக மாற்றினோம்!'
கடலை மிட்டாய் தயாரிப்பில், ஈடுபட்டு வரும் வள்ளிமயில்: என் சொந்த ஊர் திண்டுக்கல். அங்கு மளிகை கடை வைத்திருந்தோம். மொத்த குடும்பச் செலவும், அந்த கடையை நம்பித் தான் இருந்தது. என் கணவர், காந்தியவாதி என்பதால், பொருட்களை குறைந்த விலைக்கே விற்க வேண்டும் என்பதில், உறுதியாக இருந்தார். எங்கள் கடைக்கு அருகில் பள்ளிக் கூடம் இருந்தது. இப்போது போல், விதவிதமான, மிட்டாய் இல்லாத அந்தக் காலத்தில், பிள்ளைகள் எல்லாம், கடலை மிட்டாய் தான் விரும்பி வாங்கிச் சாப்பிடுவர்.ஒரு முறை எங்கள் கடைக்கு மிட்டாய் போடுபவர் வராததால், நானே அதை செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தது. நான் தயாரித்த கடலை மிட்டாயை, என் கணவர் சாப்பிட்டுவிட்டு பாராட்டி, "இனி நாமே கடலை மிட்டாய் தயாரிப்போம்' என்று கூறிவிட்டார். வீட்டில் இருந்த என் மூன்று நாத்தனார், நான் என நான்கு பேரும் சேர்ந்து, கடலை மிட்டாய் செய்து, கடையில் விற்றுக் கொண்டிருந்தோம். இதையே இன்னும் பெரிய அளவில் செய்யலாம் என ஊக்குவிக்க, இரவு, பகலாக வேலை பார்த்தோம்.என் கணவர் ரயிலில் சரக்கை எடுத்துச் சென்று, மதுரையில் உள்ள கடைகளுக்குப் போட்டு வசூல் செய்து கொண்டு வருவார். நானும், என் கொழுந்தனாரும் திண்டுக்கல்லில் உள்ள கடைகளில், சரக்கைப் போடுவோம். ஒரு நாள் வாடிக்கையாளர் ஒருவர், எங்கள் கடலை மிட்டாயை பாராட்டி பேசியதுடன், கூடுதலாக எள் மிட்டாயையும் செய்து தரச் சொல்லி கேட்டார். தரமும், சுவையும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, மெனக்கெட்டு உழைத்தோம்.நாங்கள் எதிர்பார்த்தபடியே, சரக்குகள் விற்றுத் தீர்க்க, அடுத்தடுத்து, "ஆர்டர்'கள் குவியத் துவங்கின. இனியும் இதை குடிசைத் தொழிலாக செய்ய முடியாது என்ற அளவிற்கு, வியாபாரம் பெரிதாகவே, திண்டுக்கல்லில் இருந்த வீடு, நிலத்தை விற்று, பெரிய கம்பெனி கட்டினோம். 50 பெண்களுக்கு வேலை கொடுத்தோம். இந்த தலைமுறையைக் கவர, கவர்ச்சியான, "பேக்கிங்'கிற்கு மாறியுள்ளோம். இப்போது எங்கள் தயாரிப்பு, இந்தியா முழுவதும் பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக