சனி, 28 ஜூலை, 2012

படிப்பிலும் உயர்வு! அறியாமையிலும் உயர்வா? ஏமாற்றப்படும் பொறி.பட்டத்தினர்


ஐ.டி., நிறுவனங்களில் வேலை ஆசை காட்டி மோசடி: ஏமாறும் பட்டதாரிகள் ஏராளம்

"பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐ.டி.,) வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகூறி, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து மோசடியாக பணம் பறிக்கும், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை, அரசு கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.

விப்ரோ, அசென்ஜர், சி.டி.எஸ்., போன்ற, பிரபல ஐ.டி., நிறுவனங்கள், கல்லூரி வளாகத் தேர்வு மூலம், தங்களுக்குத் தேவையான பணியாளர்களை பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றன. இதில் வாய்ப்புக் கிடைக்காத, பி.இ., - எம்.சி.ஏ., பட்டதாரிகள், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களையே பெரிதும் நம்பி உள்ளனர்.

மோசடி கும்பல்
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நூற்றுக்கணக்கான தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம், ஐ.டி., நிறுவனங்களில் வேலை பெறுவோர், தங்களின் ஒரு மாத சம்பளம் அல்லது குறிப்பிட்ட தொகையை சேவைக் கட்டணமாக வழங்குவது வழக்கம்.பணிவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களிடம் மட்டும், சேவைக் கட்டணம் பெறும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களும் உள்ளன. தற்போது, "பிரபல ஐ.டி., நிறுவனங்களில் வேலை' என, "இ-மெயில்' மற்றும் தொலைபேசி மூலம், பொறியியல் பட்டதாரிகளை தொடர்புகொண்டு, பல்லாயிரக்கணக்கில் பண மோசடி செய்யும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பெருகி வருகின்றன.

ஆசை வார்த்தை...
இது குறித்து, சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் கூறியதாவது:"ஆன் -லைன்' வேலைவாய்ப்பு நிறுவனங்களில், என் "பயோடேட்டா'வை பதிவு செய்துள்ளேன். சில நாட்களுக்கு முன், "டைம்ஸ் ஜாப்' வேலை வாய்ப்பு நிறுவனத்திலிருந்து பேசுவதாக, என் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், "விப்ரோ, சி.டி.எஸ்., போன்ற நிறுவனங்களில் பணி வாங்கி தருகிறோம். முன்பணமாக, 1,500 ரூபாய் செலுத்துங்கள்,' என்றார்."பணிக்கான தேர்வுகளுக்கு முதலில் ஏற்பாடு செய்யுங்கள்; பிறகு பணம் தருகிறேன்,' என்றேன். உடனே, "உங்கள் வேலைக்காக, 1,500 ரூபாய் கூட செலவு செய்ய மாட்டீர்களா?' எனக் கோபமாக கேட்டப்படி, அந்த மர்ம நபர் தொடர்பைத் துண்டித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும், "இதுபற்றி நண்பர்களிடம் விவாதித்தபோது தான், பிரபல ஐ.டி., நிறுவனங்கள், "ஆன் -லைன்' வேலை வாய்ப்பு நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கில் பணமோசடி நடப்பது தெரிந்தது,'' என்றார்.

இதுவும் காரணம்
பெயர் வெளியிட விரும்பாத, மனிதவள ஆலோசகர் ஒருவர் இதுகுறித்து கூறியதாவது:கல்லூரி வளாகத் தேர்வு மூலம், பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஐ.டி., நிறுவனங்களில் பெரும்பாலானவை, பட்டப்படிப்பில் மட்டுமல்லாமல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களையும் கணக்கில் கொள்கின்றன.இதனால், பட்டப்படிப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கும் பலரும், வளாகத் தேர்வுகளில் பங்குபெறும் வாய்ப்பை இழக்கின்றனர். இவர்களும், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களை நாட வேண்டியதாகிறது.முறையாக இயங்கும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், பணி தொடர்பான தகவல்களை தெரிவிக்க மட்டுமே, தொலைபேசி மற்றும் "இ-மெயில்' வசதிகளை பயன்படுத்துகின்றன. தொலைபேசியிலேயே நேர்முகத் தேர்வு நடத்தி, "இ-மெயில்' மூலமே பணி நியமன ஆணையை வழங்குபவை, நிச்சயம் போலி நிறுவனங்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார்.

மாற வேண்டும்
மேலும், "பட்டதாரிகள், இத்தகைய நிறுவனங்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாறுவது வருந்தத்தக்கது. இதை தவிர்க்க, வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்து, பட்டதாரிகள் விடுபட வேண்டும். தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்த பின் தான், அவற்றை அணுக வேண்டும்,'' என்றார்.

பண மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது போலீசில் புகார் அளிக்க, பாதிக்கப்பட்டோர் தைரியமாக முன்வர வேண்டும் என்றும்; வேலை தேடுவோர், குறிப்பிட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, முழு விளக்கங்களை பெற்று, அவற்றை அணுகுவது அவசியம் என்றும், அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக