ஞாயிறு, 22 ஜூலை, 2012

நகை வடிவமைப்பும் பேணலும் - சொல்கிறார்கள்


"நகை பராமரிப்பையும் கூறுவோம்!'

ஐ.டி., வேலையை உதறிவிட்டு, நகை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கமலா, தீபா: நாங்கள் இருவரும், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கு, 12 மணி நேரம் வேலை என்பதால், குடும்பத்தை சரியாக கவனிக்க முடியவில்லை. குடும்பத்தையும் கவனித்து, வருமானத்திற்கு வழி ஏற்படுத்துவது போல, சுய தொழில் ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்தோம்; இருவரும் வேலையை விட்டு விட்டோம். என்ன மாதிரியான தொழில் செய்யலாம் என, இணையதளத்தில் தேடினோம். அப்போது தான், பேஷன் நகைகளுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு இருப்பது தெரிந்தது. கடுமையான போட்டி நிலவும் இத்தொழிலின், மார்க்கெட்டிங் சூட்சுமத்தை தெரிந்து கொள்ள, பெங்களூரில், பெண் சுய தொழில் முனைவோருக்கான மூன்று மாத பயிற்சியை எடுத்துக் கொண்டோம். அங்கு, சொந்தமாக ஒரு தொழிலைத் துவங்கி, நடத்துவதற்கான நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தனர். மற்றவர்கள் செய்யும் நகைகளை விட, எங்கள் தயாரிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என நினைத்தோம். அப்போது தான், கேரளாவில் மூங்கில், மேற்கு வங்கத்தில் டெரகோட்டா, சணல் நகைகள், மிகவும் பிரபலம் என்பதை அறிந்தோம். அந்தந்த ஊர்களில் இருந்து, பொருட்களை வரவழைத்து, எங்கள் ரசனையையும் சேர்த்து, புதுமையான நகைகள் செய்து விற்கிறோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு நகையையும் போட்டோ எடுத்து, "பேஸ்புக்'கில் போட்டு விடுவோம். அதைப் பார்த்து, வெளிநாடுகளில் இருந்து நகைகளை கேட்டால், அனுப்பி வைப் போம். சென்னையிலும், "ஸ்டால்' போட்டு விற்று வருகிறோம். ஒவ்வொரு நகைக்கும் ஏற்றாற் போல், 50 முதல், 500 ரூபாய் வரை, விலை நிர்ணயித்து உள்ளோம். நகைகளை விற்கும் போதே, பராமரிப்பையும் சொல்லிக் கொடுக்கிறோம். இத்தொழிலில் ஆர்வம் உள்ள பெண்களுக்கு உதவவும், நாங்கள் தயாராக இருக்கிறோம்.

"நான் சந்தித்த சவால்கள் அசாதாரனமானது!' டெக்ஸ்டைல் சார்ந்த இயந்திரங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வடிவமைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மல்லிகா தேவி: திருப்பூரில், டெக்ஸ்டைல் வியாபாரம் வளர்ந்து வந்த கால கட்டத்தில், அந்த தொழிலுக்குப் பயன்படுவது போன்ற இயந்திரங்களை வடிவமைத்து உருவாக்கும் தொழிலில், தன் பங்குதாரர் ரத்தினகுமாருடன் சேர்ந்து, தொழில் செய்து வந்தார் என் அப்பா. என் அப்பாவின் மரணத்திற்குப் பின், என் சகோதரிகள் யாரும் அந்த தொழிலை செய்ய முடியாத சூழல். ஆனால், "இது நம் பிசினஸ், செய்தே ஆக வேண்டும்' என்ற உத்வேகத்தில் களமிறங்கினேன். "ஈகோ' இல்லாமல், எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர் ஆதரவு கொடுத்தது, பெரிய பலம். இந்த தொழிலைப் பற்றி, எந்த ஞானமும் இல்லாமல், கால் வைத்த நான், தொழிற்சாலைக்குள்ளேயும், வெளியேயும் சந்தித்த சவால்கள் அசாதாரணமானவை. முக்கியமாக, தொழிலாளர்களுக்கும் நமக்கும் இடையில், நல்ல புரிதல் உண்டாக வேண்டியது அவசியம். தொழிலாளர்கள், அறிவில் கொஞ்சமும் குறைந்தவர்கள் இல்லை. அவர்கள் சொல்லும் ஆக்கபூர்வமான அனுபவ ஆலோசனைகளைக் காது கொடுத்து கேட்டு, அவர்களுக்கு இடையிலான உறவை சீர் செய்தேன். வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சிகளில் பங்கேற்று, புதிய தொழில்நுட்பங்களை கற்று, தொழிலில் செயல்படுத்தியது, பெரிய அளவில் கை கொடுத்தது. தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்த, என் கணவர் உதவினார். ஆரம்பத்தில் எங்களின் தயாரிப்பை ஏற்றுமதி மட்டுமே செய்து கொண்டிருந்தோம். பின், உள்நாட்டு தேவைக்கும் கொடுக்க ஆரம்பித்தோம். இப்போதும், கென்யா, அர்ஜெண்டினா உட்பட, 16 நாடுகளுக்கு எங்களின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறோம். என் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு தான், இந்த தொழிலில் நான் சாதிக்க காரணம். என் தொழில் நன்றாக வளர்ந்து நிற்பதை, என்னால் உணர முடிகிறது.

1 கருத்து: