இலங்கை பேராசிரியைக்கு எதிர்ப்பு : பல்கலை.,யில் போராட்டத்தால் பரபரப்பு
திருநெல்வேலி : நெல்லை பல்கலை., யில் கருத்தரங்கில் பங்கேற்க வந்த இலங்கை பெண் பேராசிரியைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கருத்தரங்கு நடந்தது. "போதை பழக்கமும், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியை ஜீவா நீரல்லா, இங்கிலாந்தின் லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஹெலன்காட் உள்ளிட்ட பெண் பேராசிரியைகள் பங்கேற்றனர். கொழும்பு பல்கலை பேராசிரியை ஜீவா நீரல்லா,இலங்கையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கவில்லை என்றும் அவ்வாறு நடப்பதாக சித்தரிப்பது சரியல்ல என்றும் பேசியதாக கூறப்படுகிறது. இலங்கை பேராசிரியை பங்கேற்பது குறித்து ஏற்கனவே தெரிந்திருந்த நெல்லையை சேர்ந்த தமிழ்ஆர்வலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சேவியர் தலைமையில் பல்கலையின் கருத்தரங்கு அரங்கிற்குள் புகுந்தனர். தாங்கள் கொண்டுசென்றிருந்த பேனர்களைதூக்கி பிடித்தபடி "இலங்கை பேராசிரியை வெளியேறு' என்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். எதிர்ப்பாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேராசிரியை ஜீவா நீரல்லாவை உடனடியாக பாதுகாப்புடன் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக