சொல்கிறார்கள்
துப்பாக்கி சுடும் விளையாட்டு வீராங்கனை சவீந்தனா தேவி: என் தாத்தா, அப்பா இரண்டு பேரும், காட்டுக்கு வேட்டையாடப் போற பழக்கமுள்ளவங்க; எனக்கு துப்பாக்கி மேல் ஈர்ப்பு வருவதற்கு, அது தான் காரணம்.பள்ளியில் படிக்கும் போது, என்.சி.சி.,யில் சேர்ந்தேன். எனக்குள் உள்ள திறமையை உணர்ந்த ஆசிரியர், சிறப்புப் பயிற்சியளித்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, தேசிய அளவிலான என்.சி.சி., போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றேன். ஆனால், நான் துப்பாக்கி சுடுவதில் ஆர்வமாக இருப்பது, என் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை.நான் எம்.ஏ., முடித்ததும், திருமணம் முடித்தனர். என் ஆசையை, ஆர்வத்தை கணவரிடம் கூறினேன். அவருக்கும் துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் இருந்ததால், என்னை பயிற்சியில் சேர்த்து விட்டார்; மகிழ்ச்சியுடன் பயிற்சி எடுத்தேன்.ஒரு கட்டத்தில், போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு முன்னேறி, வெற்றிகளுடன் திரும்பினேன். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால், போட்டிகளைத் தவிர்த்தேன்; இருந்தாலும், பயிற்சியை விடவில்லை.குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பின், போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். நாட்டின் சிறந்த, 300 போட்டியாளர்களுடன் மோதிய அனுபவம், சுவாரஸ்யமானது; தேசிய அளவில் அது தான் என் முதல் போட்டி. அதில் முதல் ஆளாக வந்து, தங்கப் பதக்கம் வென்றேன்.ஒரு பெண்ணாகப் பிறந்து மகள், மனைவி, அம்மா என்று குடும்பப் பொறுப்புகளையும் விட்டுக் கொடுக்காமல், நான் விரும்பிய இலக்கை அடைந்த பெருமை என் மனதில் உள்ளது.துப்பாக்கி சுடும் போது, மனதை ஒருமுகப்படுத்துவது தான் மிகவும் முக்கியம் என்பதால், குழந்தைகள் நினைப்பை விட்டுவிட்டு, கல் மனதாக மாற்ற கற்றுக் கொண்டேன்.இப்போது, நான் ஒவ்வொரு முறை ஜெயிக்கும் போதும், என் குடும்பத்தினர் மனதார என்னை பாராட்டுகின்றனர். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் போட்டியில், நிச்சயம் நான் தங்கம் வெல்வேன்.