உயிருக்கு போராடும் மகனுடன் தவிக்கும் தாய்: காற்றில் பறந்தது கலெக்டர் பரிந்துரை
கள்ளக்குறிச்சி: வயிற்றில் துளையிட்டு பொருத்தப்பட்ட குழாய் வழியே மூன்று ஆண்டுகளாக பால் செலுத்தி தனது மகனை உயிர் பிழைக்க வைக்க ஒரு தாய் தவியாய் தவித்து வருகிறார். குழந்தையின் மருத்துவ மேல் சிகிச்சைக்காக கலெக்டர் கொடுத்த பரிந்துரை கடிதமும் பயனற்று போனதால் அந்த தாய் செய்வதறியாது பரிதவித்து நிற்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்,45; தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி பத்மா, 38. இவர்களுக்கு சிவமணி, 10 என்ற மகன் உள்ளார். கடந்த 2006ம் ஆண்டு பாட்டிலில் இருந்த ஆசிட்டை குளிர்பானம் என்று தவறுதலாக சிவமணி குடித்துள்ளார். இதனால் இரைப்பை முழுவதும் புண்ணாகி வலியால் துடித்தான். சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிவமணியின் உயிரை காப்பாற்றினர். இருப்பினும் சாப்பிட முடியாமல் சிவமணி மிகவும் சிரமப்பட்டான். தொண்டையின் உணவுக் குழல் முழுவதும் ஆசிட்டால் காயம் ஏற்பட்டதால் அது சரியாகும் வரை உணவை வாய்வழியே கொடுக் கக் கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அதற்கு தற்காலிக ஏற்பாடாக கடந்த 2009ம் ஆண்டு சிவமணியின் வயிற்றில் ஒரு துளையிட்டு, அதன்வழியே குழாயை இரைப்பையில் செலுத்தி அதில் திரவ உணவை கொடுக்கும் படியும், சிலவாரங்களுக்கு பின் மீண்டும் வருமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். மேற்கொண்டு சிகிச்சை அளிக்க போதிய பண வசதி இல்லாததால் குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் பத்மா தவித்து வந்தார். சிவமணியின் தந்தை மோகனுக்கு குடி பழக்கம் உள்ளதால், வீட்டு செலவுக்கு கூட பணம் தருவதில்லை. வயிற்று பிழைப்புக்கே வழியின்றி தவித்த பத்மா சில வீடுகளில் பாத்திரம் தேய்த்து அதன்மூலம் மாதம் தோறும் 750 ரூபாய் சம்பாதித்து வருகிறார்.
வயிற்றில் உள்ள துளை வழியே சிவமணிக்கு தினமும் பால் செலுத்தி அதன் மூலம் அவனது உயிரை காப்பாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக வாய்வழியே உண்பது நிறுத்தப்பட்டதால் தொண்டை குழலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற குழந்தைகளை போல் தின்பண்டங்களை சாப்பிட ஆசைப்பட்டாலும், அதற்கு வழியின்றி சிவமணி தவித்து வந்தான். ஆசைப்படும் திண்பண்டத்தை வாயில் வைத்து சுவைத்துவிட்டு முழுங்க முடியாமல் கீழே துப்பிவிடும், அவலம் நீடித்து வந்தது. வயிற்றில் பொருத்தப்பட்ட குழாய் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதால் அதில் தொற்று உருவாகி, அதை சுற்றி புண் ஏற்பட்டுள்ளது. குழாய் வழியே பால் செலுத்தும் போது வலிதாங்காமல் சிவமணி துடிப்பது பார்ப்பவர்களை பதற செய்கிறது. பாலை தவிர வேறு உணவுகளை கொடுக்க முடியாததால் சிவமணியின் உடல்நிலை பலகீனமடைந்து நிற்க கூட முடியாமல் கால்கள் நடுங்க சிறுவன் சிரமப்படுவது வேதனையாக உள்ளது. மற்ற குழந்தைகளை பார்க்கும் போது அவர்களுடன் சேர்ந்து ஓடி விளையாட வேண்டும் என்ற ஏக்கம் சிவமணியின் முகத்தில் அப்பட்டமாய் தெரிகிறது. ஆனால் வயிற்றில் உள்ள குழாயை பார்த்தபடி வேடிக்கை பார்க்க மட்டுமே அவனால் முடிகிறது.
அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் கூறியதையடுத்து, கடந்த 15 நாட்களுக்கு முன் தனது மகன் சிவமணியை அழைத்துக்கொண்டு விழுப்புரம் கலெக்டர் சம்பத்தை நேரில் சந்தித்து தனது மகனுக்கு மருத்துவ உதவி செய்யும் படியும், சுயதொழில் செய்ய வங்கி கடன் வழங்கவும் பத்மா கோரிக்கை விடுத்தார். அதை பரிசீலித்த கலெக்டர் கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் சிறுதொழில் செய்ய கடன் பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்து கடிதம் வழங்கினார்.கடன் பெறும் எதிர்பார்ப்போடு கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய வங்கிக்கு சென்று கலெக்டர் கொடுத்த கடிதத்தை கொடுத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வங்கி அதிகாரிகள் வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் செய்வதறியாது பத்மா தவித்து வருகிறார். வயிற்றில் குழாய் பொருத்தப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி வரும் தனது மகனை தூக்கிக்கொண்டு யாராவது உதவமாட்டார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார். மகனுக்கு மேல்சிகிச்சை தந்து மீட்டெடுக்க போராடி வரும் இந்த ஏழை தாய் பத்மாவுக்கு உதவ முன்வருபவர்கள் 93604 73263 என்ற மொபைல் போனுக்கு தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக