சொல்கிறார்கள்
இளைஞர்களுக்கானவாய்ப்பு!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு நடத்திய குறும்படப் போட்டியில், சிறப்புப் பரிசு வென்றுள்ள சேலத்தைச் சேர்ந்த வித்யா பிரியதர்ஷினி: நான், சேலத்திலுள்ள பொறியியல் கல்லூரியில், பி.டெக்., படிக்கிறேன். குறும்படப் போட்டி குறித்து, எங்கள் கல்லூரி மூலம் அறிந்து கொண்டேன்; உடனே, குறும்படத் தயாரிப்பில் இறங்கினேன்.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, 50 ஆண்டு பாரம்பரியமிக்க, ஓ.இ.சி.டி., என்ற அமைப்பில், 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 18 முதல், 25 வயது நிரம்பிய இளைஞர்களுக்காக, அந்த அமைப்பு நடத்திய குறும்படப் போட்டியில், மொத்தம், 46 நாட்டு இளைஞர்கள் பங்கேற்றனர்."இந்த உலகிற்கு, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?' என்ற கேள்விக்கு விடையாக, நான் தயாரித்த, இந்தியா ஒரு விவசாய நாடு; நலிவடைந்து வரும் விவசாயத்திற்கு, ஐ.டி., துறையால், எந்தெந்த வகையில் உதவ முடியும் என்ற மையக் கருத்தைக் கொண்டு, "நாளை நம் கையில்' என்ற தலைப்பில், நான் எடுத்த மூன்று நிமிட குறும் படம் தான், போட்டி நடுவர்களை மிகவும் கவர்ந்தது. என் குறும்படத்திற்கு நடுவர்கள் சிறப்பு விருது வழங்கினர்.அந்த அமைப்பின் செலவிலேயே என்னை பிரான்ஸ் நாட்டிற்கு வரவழைத்து, ஐந்து நாட்கள் தங்க வைத்தனர். அங்கு நடந்த அந்த அமைப்பின், 50ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில், ஹிலாரி கிளிண்டன் தலைமையிலான பரிசளிப்பு விழாவில் என்னை பங்கேற்க வைத்து கவுரவப்படுத்தினர்.இன்று, "பேஸ் புக், யூ டியூப்' வந்துவிட்ட பின்னர், இளைஞர்களுக்கு குறும் படம் எடுப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்துவிட்டன. எடுத்த படங்களை இணையதளத்தில் பதிவேற்றிய பின், உலகம் முழுவதுமிருந்து நிறைய வரவேற்பு கிடைக்கிறது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.உலக அளவில் நடத்தப்படும் குறும்படப் போட்டிகளில் தமிழக இளைஞர்கள் பங்கேற்று பரிசுகளை வெல்ல வேண்டும்!