அப்பாவும் நானும்!
First Published : 04 Mar 2012 12:00:00 AM IST
Last Updated :
இலங்கை நாட்டின் கொழும்புவிலுள்ள தேசிய மைதானம். ஆயிரக்கணக்கான இந்திய, இலங்கை ரசிகர்கள் சூழ்ந்திருக்க 14 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய, இலங்கை தடகளப் போட்டிகள் அரங்கேறுகின்றன. அப்போது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி ரசிகர்களின் ஏகோபித்த கைத்தட்டல்களுக்கு இடையே, வீராங்கனை ஒருவர் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாக வந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார். அவர் சென்னையைச் சேர்ந்த வள்ளி என்கிற ஐஸ்வர்யா. சென்னை கஸ்டம்ஸ் சூப்பிரடெண்டும், முன்னாள் தடகள சாம்பியனுமான ஆர். நடராஜனின் மகள்தான் ஐஸ்வர்யா. இந்திய, இலங்கை தடகளப் போட்டியில் அவர் வென்றது இரண்டு தங்கப் பதக்கங்கள் மட்டுமல்ல; தனிநபர் சாம்பியன் பட்டத்தையும்தான்! சென்னை, ஒய்.எம்.சிஏ. கல்லூரி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஐஸ்வர்யா நம்மிடம் பேசியதிலிருந்து... தட களத்தில் தடம் பதிக்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது எப்போது? 5 வயதிலிருந்தே அப்பாவுடன் உடற்பயிற்சி செய்வதற்காக மைதானத்திற்குச் சென்றுவிடுவேன். அப்பாவைப் பார்த்துப் பார்த்து எனக்கும் தட கள ஆசை வந்தது. இதில் ஆச்சர்யம் இல்லைதான். அப்பாவும் ஊக்கமளித்தார். 10 வயது முதல் இடைவிடாத பயிற்சியில் ஈடுபட்டேன். 11 வயது முதல் 14 வயதுக்குள்பட்டோர் தட களப் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினேன். தட களத்தில் அப்பாதான் என்னுடைய முன்மாதிரி! பங்கேற்ற போட்டிகளில் உங்களுக்கு எத்தகைய அனுபவங்கள் கிடைத்தன? சென்னை மாவட்ட தட களப் போட்டிகள், மாநில அளவிலான தட களப் போட்டிகள், இந்தியா, இலங்கை இரு நாடுகளிடையிலான தட களப் போட்டி என பத்துக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். அதில் பலவிதமான அனுபவங்களும் கிடைத்தன. 2011-ல் நடந்த சென்னை மாவட்ட தட களப் போட்டியில் 100 மீட்டர் தட களத்தில் முதலாவதாக வந்து தங்கம் வென்றேன். அதன்பிறகு இலங்கையின் கொழும்புவில் நடந்த இந்திய, இலங்கை தட களப் போட்டியில் 2 தங்கம் உள்பட தனி நபர் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினேன். இதே போட்டி சென்னையில் மீண்டும் நடத்தப்பட்டபோது 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றேன். இந்தப் போட்டியை "இந்திய, இலங்கை இரட்டை தட களப் போட்டி' என்று அழைப்பர். இலங்கை வீராங்கனைகளின் கடும் போட்டிக்கு இடையே தங்கம், தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றது மறக்க முடியாதது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளேன். தட களத்தில் நீங்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் விளையாட்டுகள் என்னென்ன? 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன். 100 மீட்டர் ஓட்டத்தில் 14.8 விநாடிகளில் கடக்கிறேன். அதைப் போல 200 மீட்டர் ஓட்டத்தில் 32.5 எனது பெஸ்ட் டைமிங். நீளம் தாண்டுதலில் 3.80 மீட்டர் தூரம் தாண்டியிருக்கிறேன். எனது செயல்திறனை அதிகரிப்பதற்காக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுவருகிறேன். தட களத்தில் சாதிக்கும் ஐஸ்வர்யா படிப்பில் எப்படி? தட களத்தைப் போலவே படிப்பும் எனக்கு முக்கியம். குட் ஷெப்பர்ட் பள்ளியில் 8-வது படித்து வருகிறேன். 85 சதவீத மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்று விடுவேன். பள்ளியில் கிளாஸ் லீடர், ஜூனியர் ஸ்கூல் கேம்ஸ் கேப்டன் எனப் பல பொறுப்புகளைப் பெற்றுள்ளேன். உங்களுடைய பொழுதுபோக்கு? தட களத்தைத் தொடர்ந்து எனக்குப் பிடித்தது பரதநாட்டியம்தான். அதை பொழுதுபோக்கு என்று சொல்ல முடியாது. மிகவும் சிரத்தையுடன் பயின்று சமீபத்தில் அரங்கேற்றம் செய்தேன். 6 வருடங்களாக பரதம் பயின்று பல்வேறு கோயில்களில் நாட்டியம் ஆடியுள்ளேன். இதுதவிர கைவினைப் பொருள்கள் செய்வது, பல்வேறு நாடுகளின் நாணயங்கள், கரன்சிகளைச் சேகரிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். படங்கள்: ராதாகிருஷ்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக