இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி
காஞ்சிபுரம் இதுவரை கண்டிராத அளவில் செங்கொடி அஞ்சலி நிகழ்ச்சி அமைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஞ்சலி செலுத்த பல ஆயிரம் பேர் திரண்டு வந்ததால் உடல் தகன நிகழ்ச்சியை நாளை வரை தள்ளி வைத்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ஒப்படைக்கப்பட்ட செங்கொடியின் உடல் ஊர்வலமாக நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றபோது ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பேரணியிலும் பங்கேற்றனர். வீடுகளின் மாடிகள், மொட்டை மாடிகளிலும் ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. கடந்த 8 வருடமாக மக்கள் மன்றம் மூலமாக காஞ்சிபுரம் மக்களின் தேவைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் செங்கொடி என்பதால் காஞ்சிபுரம் மக்கள் செங்கொடியின் இந்த அகால மறைவால் பெரும் சோகமடைந்துள்ளனர். அவரது மரணம் மிகவும் அசாதாரணமானது, உண்மையான தியாகம் என்று பலரும் சோகத்துடன் தெரிவித்தனர்.
இருள் வகுப்பைச் சேர்ந்தவரான செங்கொடியின் தாயார் ஏற்கனவே காலமாகி விட்டார். இதையடுத்து அவரது தந்தை இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு போய் விட்டார். இதனால் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட செங்கொடி மக்கள் மன்றத்தில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.
பறை வாசிப்பதில் மிகவும் கை தேர்ந்தவரான செங்கொடி பல்வேறு சமூக நாடகங்கள் மூலம் மக்களுக்கு சமூ்க கருத்துக்களையும் பரப்பி வந்தார்.
செங்கொடியின் உடல் தற்போது அவரது சொந்த கிராமமான மங்கல்பாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பெருமளவிலானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் முக்கியத் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்த வரவுள்ளனர். இதன் காரணமாக இன்று நடப்பதாக இருந்த உடல்தகன நிகழ்ச்சி நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன், முருகன், சாந்தனை தூக்கில் போட 8 வாரம் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்
வாசகர் கருத்துகள் (2)
- வீர நங்கை செங்கொடிக்குச் சிறப்பான வீர வணக்கச் செய்தியை வெளியிட்டு உள்ளீ்ர்கள். எனினும் எதற்காகவும் யாரும் உயிரைஇழக்கும் முயற்சியில் இறங்கக்கூடாது. நம்அரசுகளுக்குயாருடைய உயிரைப்பற்றியும் கவலை இல்லை என்னும் பொழுது அதற்கான முயற்சியில் இறங்குவதும் விழலுக்கு இறைத்த நீரே! எனினும் மூவர் உயிர் காக்கப்படும்!தமிழ் ஈழம் மலரும்! செங்கொடிக்கு வீர வணக்கம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/
-