First Published : 31 Aug 2011 10:25:35 AM IST
சென்னை, ஆக.31: தமிழக அரசின் சட்டமன்றத் தீர்மானம் மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளதற்கு தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் மறுஆய்வு செய்து தமது முந்தைய நிராகரிப்பு முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களது மரண தண்டனையை நீக்கி வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளார். இந்த மனிதநேய முடிவை இந்தியாவெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனைக்கெதிரான இயக்கங்களும் வரவேற்றுள்ளன.சென்னை உயர்நீதிமன்றம் மூன்று தமிழர்களுக்கும் நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து நிறுத்தி வைத்துள்ளது. இந்தச் சிறப்பு மிக்க உயர்நீதிமன்ற முடிவை உலகெங்கும் வாழும் தமிழர்கள் வரவேற்று ஒட்டு மொத்தத் தமிழினமும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.இந்த நிலையில் புதுதில்லியில் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்றும் அது ஒரு தீர்மானம் என்பதைத் தாண்டி அதற்கு முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை ஒரு கருத்துதான் என்றும் உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களும் கூறும் கருத்துகளைவிட குடியரசுத் தலைவர் ஆணையே இறுதியாக நிற்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து பதில்மனு தாக்கல் செய்வோம் என்றும் சொல்லியுள்ளார். சட்ட அமைச்சர் சல்மான் குருஷித்தின் மேற்கண்ட கருத்துகள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தைச் சவாலுக்கு அழைக்கும் முரட்டுத்தனமான வாதங்களாகும்.தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று நடுவண் அமைச்சர் கூறுவது ஏழு கோடித் தமிழ் மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் இழிவுபடுத்தும் செயலாகும். ஏற்கெனவே புண்பட்டுள்ள தமிழினத்தை மேலும் புண்படுத்துவதாகும். அத்துடன் சட்டமன்றத்திற்கு இருக்கின்ற அரசமைப்புச் சட்டப்படியான அங்கீகாரத்தையும் மதிப்பையும் கேவலப்படுத்துவதாகும்.அடுத்து நீதித் துறையையும் கொச்சைப்படுத்தும் முறையில், உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ கருத்துகள் சொல்லலாம். ஆனால் இறுதி முடிவு குடியரசுத் தலைவரிடம் இருக்கிறது என்று அவர் கூறியிருப்பது நீதித்துறையின் தற்சார்புத் தன்மையை மறுப்பதாகும்.இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கூட்டம்கூட்டமாகக் கொன்று குவிக்க எல்லா வகையிலும் சிங்கள இனவெறி அரசுடன் பங்கெடுத்த இந்திய ஏகாதிபத்தியம், குற்றமற்ற மூன்று தமிழ் இளைஞர்களையும் காவு கொள்ளத் துடிக்கிறது என்பது தெரிகிறது. இந்த நிலையில் மூன்று இளைஞர்களைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டு உரிமைகளை மீட்கவும், தமிழர்கள் தொடர்ந்து ஓய்வின்றி போராட வேண்டிய தேவை இருக்கிறது.தமிழக சட்டப் பேரவை தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று இந்திய ஏகாதிபத்தியம் ஏகடியம் செய்தால் இந்திய அரசின் சட்டங்கள் தமிழினத்தைக் கட்டுப்படுத்தாது என்ற நிலைக்குத்தான் தமிழர்கள் செல்லவேண்டி வரும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனித நேயமற்ற மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இந்திய அரசு தமிழ் மக்களின் உணர்வுகளையும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால ஆணையையும் உரியவாறு கவனத்தில் எடுத்து அவற்றிற்குட்பட்டு செயல்படவேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மணியரசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக