ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan |
| |||||||||||||||||||||||||||||
செந்தமிழ் மாமணி', 'இலக்கணச் செம்மல்', 'முத்தமிழ்க் காவலர்', 'செம்மொழி ஆசான்', 'தமிழர் தளபதி' என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர் சி. இலக்குவனார். "தமிழுக்கென தோன்றிய அரிய பிறவிகளில் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும், தமிழ்வீரமும் தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை. தமிழுக்காகத் துன்பத்தில் வளர்ந்து துன்பத்தையே தாங்கித் துன்பத்திலேயே கண்ணயர்ந்தவர்" என்கிறார் தமிழறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கனார்.
சி. இலக்குவனார், 1909 நவம்பர் 17ம் நாள், திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மேடு என்னும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர் சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி அம்மாள். மளிகைக்கடை உரிமையாளரும், நிலக்கிழாரும் ஆன தந்தை, இலக்குவனாரின் ஏழாவது வயதில் இயற்கை எய்தினார். சிங்காரவேலரிடம் கடன் பெற்றிருந்த பலர் திருப்பித் தராததால் குடும்பப் பொருளாதாரம் தாழ்ந்தது. இல்லப் பொறுப்பை சகோதரர் நல்லபெருமாள் ஏற்றார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த இலக்குவனாரின் கல்வி தடைப்பட்டது. அண்ணனுக்கு உதவியாக வயல்வேலையைக் கவனிப்பதும், மாடு மேய்ப்பதும் அவரது வேலையாயிற்று.
வகுப்பில் முதல் மாணவராக விளங்கிய இலக்குவனாரின் கல்வி தடைப்பட்டதால் தாய் இரத்தினத்தாச்சி பெரிதும் வருந்தினார். தாய் ஊக்குவிக்க, தாய்வழி உறவினர் சதாசிவம் பிள்ளையின் ஆலோசனையோடு அரசர்மடத்தில் அமைந்திருந்த பள்ளி ஒன்றில் படிப்பதற்கு இடம் கிடைத்தது. அரசர்மடம், ஒரத்தநாடு பள்ளிகளில் பயின்றார் இலக்குவனார். தமிழாசிரியரான சாமி. சிதம்பரனார், இலட்சுமணன் என்ற இவரது பெயரை 'இலக்குவன்' என்று தூய தமிழ்ப் பெயராக மாற்றி அமைத்தார். அவரது வழிகாட்டலில், தனித்தமிழ் நாட்டமும், பிறமொழிக் கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.
தமிழ் மொழியின் உயர்விற்கும் உழைப்பதே எனது உறுகடன் என்றும், தமிழ்ப்போரே எனது வாழ்க்கைப் போர் என்ற குறிக்கோளையும் வாழ்வின் உயிராக ஏற்றுக் கொண்டேன். |
"புலவர் பட்டத்துக்குப் படித்ததனால் தமிழின் தொன்மை பற்றியும், தமிழிலக்கிய வளமையைப் பற்றியும் அறிய முடிந்தது. பண்டைத் தமிழரின் சிறப்பும், தமிழர் வாழ்வின் மேன்மையும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. தமிழகத்தின் உரிமைக்கும், தமிழ் மொழியின் உயர்விற்கும் உழைப்பதே எனது உறுகடனாகும் என்று உறுதி கொள்ளச் செய்தது. தமிழ்ப்போரே எனது வாழ்க்கைப் போர் என்ற குறிக்கோளை வாழ்வின் உயிராக ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பெரும்பயன் இஃதேயாகும்" என்கிறார் இலக்குவனார், தனது 'என் வாழ்க்கைப் போர்' என்னும் தன்வரலாற்று நூலில்.
பின்னர் அவர் ஆசிரியர் பயிற்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின் தஞ்சை மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். குடவாசல், நன்னிலம், திருவாரூர் முதலான ஊர்களில் அவரது ஆசிரியர் பணி தொடர்ந்தது. திருவாரூரில் அவர் பணியாற்றிய போது அவரிடம் பயின்ற பல மாணவர்களுள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியும் ஒருவர். தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர் இலக்குவனார் என்று தன்வரலாற்று நூலான 'நெஞ்சுக்கு நீதி'யில் குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி.
நன்னிலத்தில் இலக்குவனார் பணியாற்றியபோது அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பட்டம்மாள் தமிழுணர்வும், இலக்கிய ஆர்வமும் மிக்குத் திகழ்ந்தார். கணவருக்கு உறுதுணையாக விளங்கினார். மாணவர்களிடையே தமிழார்வத்தை வளர்த்த இலக்குவனார், அவர்கள் மொழியில் ஆழ்ந்த அறிவு பெறும் வண்ணம் பல விழாக்கள் எடுத்தார். அவற்றுள் குறிப்பிடத் தகுந்தது 'தொல்காப்பியர் திருநாள்'. இந்நிலையில் துணைவியார் பட்டம்மாள் காலமானார். அவரது பிரிவு இலக்குவனாரைப் பெரிதும் வாட்டியது. நண்பர்களின் ஆதரவால் அதிலிருந்து மீண்டவர், மலர்க்கொடி என்பாரைத் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து கற்கும் ஆர்வத்தால் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல், எம்.ஏ., தேர்வுகள் எழுதி பட்டம் பெற்றார்.
இந்நிலையில் திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகும் வாய்ப்புக் கிடைத்தது. தாம் பயின்ற கல்லூரியிலேயே ஆசிரியப் பணி கிடைத்ததை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார் இலக்குவனார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்திப் பரிசளித்ததுடன், தமிழார்வத்தையும் தூண்டினார். ஆனாலும் அங்கு நிலவிய சூழல் திருப்தி தராமையால் அவர் செ.தெ. நாயகம் அவர்களால் குலசேகரன்பட்டினத்தில் ஆரம்பிக்கப் பெற்ற 'இராமநாதன் கல்விக்கூட'த்தில் முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அங்குச் சில காலம் பணியாற்றினார். பின்னர் திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார்.
கல்வியாளர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியம், முனைவர் வேங்கடசாமி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய இரா. நல்லகண்ணு போன்றோர் இலக்குவனாரிடம் அக்காலத்தில் தமிழ் பயின்ற மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை 'ஆஜர்' என்று மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி 'உள்ளேன் ஐயா' எனக் கூறவைத்த பெருமைக்குரியவர் சி. இலக்குவனார் அவர்கள்தான். பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படுவதற்கு முன்னோடி அவரே என்கிறார் இரா. நல்லகண்ணு.
மொழிப்போரில் கைது செய்யப்பெற்ற முதல் பேராசிரியர் இலக்குவனார்தான். 'தன்மானத் தமிழ் மறவர்' என்று இலக்குவனார் போற்றப்பட்டார். எப்பொழுதும் தமிழ் உயர்வைப் பற்றியே சிந்தித்து வாழ்ந்தார். |
பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார் இலக்குவனார். ஐந்தாவது தமிழ்ச் சங்கம் எனப் போற்றப்பட்ட அக்கல்லூரியில் அவர் பணிபுரிந்த காலம் அவரது வாழ்வின் பொற்காலம். தமிழறிஞர்கள் ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை, அ.கி.பரந்தாமனார் போன்றோரின் நட்பு அவருக்கு ஊக்கத்தைத் தந்தது. மீ. ராஜேந்திரன் (மீரா), முகமது மேத்தா (மு.மேத்தா), இன்குலாப் (சாகுல் அமீது), அப்துல் ரகுமான் போன்றோர் இப்பேராசியர்களின் அன்பிற்குகந்த மாணவர்களாக விளங்கினர். 'தமிழ்க்காப்புக் கழகம்' என்பதனை நிறுவி தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்ட இலக்குவனார், விளம்பரப் பலகைகளில் தமிழே இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, விரிவாக ஆய்வு நிகழ்த்தி, தமது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். 1963-இல் முனைவர் பட்டம் பெற்றார். மேனாட்டவரும் போற்றும் விதத்தில் அவர் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்திருந்ததால், அறிஞர்கள் பலரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்ததுடன், தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளுக்கும் அழைக்கப் பெற்றுப் பாராட்டப் பெற்றார்.
"இலக்குவனார் தமிழார்வம் மிக்கவர்; தாய்மொழியாகிய தமிழின் வாயிலாகவே பல்கலைக்கழகக் கல்வி அமைதல் வேண்டும் என்பதில் தணியாத வேட்கை கொண்டவர்" என்கிறார் பேராசிரியர் டாக்டர் மு.வ. அதற்கேற்றவாறு, கல்வித்துறை, நீதித்துறை, ஆட்சித்துறை போன்ற அரசின் பல துறைகளில் தமிழ் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், 'தமிழ் உரிமைப் பெருநடைத் திட்டம்' என்ற ஒன்றை உருவாக்கினார் இலக்குவனார். அதன் காரணமாக இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பெற்றார். பின் பணிநீக்கமும் செய்யப் பெற்றார். சிறை சென்று மீண்டு வந்த பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் ஓராண்டுக் காலம் முதுநிலைப் பேராசிரியாராகப் பணியாற்றினார். ஆனால் அங்கும் பிரச்சனை தொடர்ந்தது. கல்வியமைச்சருடன் ஏற்பட்ட பிணக்கினால் அவருக்கு பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டது. பின்னர் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து, பின் மீண்டும் நாகர்கோயில் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணியில் சேர்ந்தார். சிறிதுகாலம் அங்குப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
ஹிந்தி எதிர்ப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர் இலக்குவனார். மாலை நேரத்தில் மன்றங்களின் மூலம் தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் குறித்த இலவச வகுப்புகளை நடத்தினார். தாம் சென்ற இடங்களிலெல்லாம் மன்றங்கள் நிறுவியும், தம் கைக்காசைக் கொண்டு இதழ்கள் நடத்தியும் தமிழ் உணர்வு நிலைபெற உழைத்தார்.
மொழிப்போரில் கைது செய்யப்பெற்ற முதல் பேராசிரியர் இலக்குவனார்தான். 'தன்மானத் தமிழ் மறவர்' என்று இலக்குவனார் போற்றப்பட்டார். எப்பொழுதும் தமிழ் உயர்வைப் பற்றியே சிந்தித்து வாழ்ந்தார். 'சங்க இலக்கியம்', 'இலக்கியம்', 'திராவிடக் கூட்டரசு', 'குறள்நெறி' போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார். அதே சமயம் தமிழின் தொன்மையை, பண்பாட்டுச் சிறப்பை, அகப்பொருள் ஒழுக்கங்களை உலகுக்குப் பறைசாற்றும் முகமாக ஆங்கில இதழ்கள் இரண்டையும் வெளியிட்டார். அக்காலத்திலேயே தமிழில் ஆறு இதழ்களையும், ஆங்கிலத்தில் எட்டு இதழ்களையும் இவர் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருக்குறளுக்கு எளிய பொழிப்புரை எழுதிய இலக்குவனார், தொல்காப்பிய விளக்கம், வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், கருமவீரர் காமராசர், எழிலரசி, மாணவர் ஆற்றுப்படை, துரத்தப்பட்டேன், பழந்தமிழ், தமிழன்னை காவியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் கற்பிக்கும் முறை, தமிழிசைப்பாடல்கள் என் வாழ்க்கைப் போர் போன்ற பல கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி நூல்களைப் படைத்துள்ளார். போராட்ட வாழ்வு, ஓய்வின்மை, பணி நிமித்தமாக அடிக்கடி குடுமபத்தைப் பிரிந்து வாழ்ந்தது போன்ற காரணங்களால் அடிக்கடி இலக்குவனாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வயதின் காரணமாக நீரிழிவு நோயும் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தும் குணமாகாமல் 1973 செப்டம்பர் 3ஆம் நாள் இலக்குவனார் காலமானார். தமிழும், தமிழரும் உயர உழைத்த முன்னோடி சி. இலக்குவனார் எனில் மிகையல்ல.
பா.சு.ரமணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக