சனி, 3 செப்டம்பர், 2011

தூக்குத் தண்டனையை நீக்க அமைச்சரவையில் தீர்மானம்:இராமதாசு

தூக்கு தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையில் தீர்மானம்: ராமதாஸ்

First Published : 03 Sep 2011 05:26:49 AM IST

Last Updated : 03 Sep 2011 06:10:58 AM IST

சென்னை, செப். 2: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெள்ளிக்கிழமை அவர் அனுப்பிய கடிதம்:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது பாராட்டுக்குரியது.அதே நேரத்தில் அரசியல் அமைப்பின் 161-ம் பிரிவின்கீழ் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் மூலம் ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கருணை மனுவை பரிசீலிக்குமாறு ஆளுநரை மாநில அரசு கோர முடியாது என்று 1991-ம் ஆண்டு மத்திய அரசு தெளிவுரை வழங்கியுள்ளதாக 2-9-2011-ல் சட்டப்பேரவையில் முதல்வரால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அரசியல் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக அரசியல் சட்டம் 161-ன் படி உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அரசியல் சட்டத்தின் 257 (1) பிரிவு கூறுவதாக 5-3-1991-ல் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த தெளிவுரை மாநில அரசையோ, ஆளுநரையோ கட்டுப்படுத்தக்கூடியது அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.எந்த அரசியல் சாசனத்திலிருந்து மத்திய அரசு அதிகாரத்தைப் பெறுகிறதோ, அதிலிருந்துதான் மாநில அரசும் அதிகாரத்தைப் பெறுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 72-வது பிரிவின் கீழ் மத்திய அமைச்சரவையின் மூலமாக குடியரசுத் தலைவருக்கு மன்னிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே அரசியல் சட்டத்தின் 161-ன் பிரிவின்படி மாநில அமைச்சரவையின் மூலம் ஆளுநருக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருவரின் அதிகாரங்களும் சரிசமமானவை. இரண்டும் தனித்தனி அதிகாரங்கள். ஆளுநர் மற்றும் அவரது அமைச்சரவை, குடியரசுத் தலைவரைவிட உயர்வானது அல்ல எனும் கருத்திலிருந்து அரசியல் அமைப்பின் 161-வது பிரிவு விதிவிலக்கானதாகும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மாநில ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் உள்ள மன்னிக்கும் அதிகாரம் முழுமையான கட்டற்றதும் ஆகும். இங்கிலாந்து மன்னருக்கும், அமெரிக்க அதிபருக்கும் உள்ள உச்சமான மன்னிக்கும் அதிகாரம் இந்தியாவில் ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் உண்டு என்கிறது உச்ச நீதிமன்றம்.அரசியல் சட்ட விதி 161-ன் கீழ் ஆளுநர் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவை மறுக்கவும் முடியாது. மாநில ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாது.கருணாநிதியின் வரலாற்றுப் பிழை: 19-4-2000-ல் தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின்படிதான் ஆளுநரால் மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதியின் இந்த வரலாற்றுப் பிழையை இப்போதைய முதல்வரால் மாற்ற முடியும்.ஆளுநராலும், குடியரசுத் தலைவராலும் ஏற்கெனவே கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என்பது ஒரு தடையல்ல. தண்டனை குறைப்பு கோரி மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க சட்டப்படி இடம் உண்டு. எனவே, மூவரின் கருணை மனுக்களை ஏற்றுக்கொள்ள தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் எவ்வித தடையும் இல்லை. எனவே, மூவரின் தூக்குத் தண்டனையை குறைக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக