வெள்ளி, 22 ஜூலை, 2011

Samacheer kalvi: Supreme Court trail on july 26சமச்சீர் கல்வி வழக்கு 26-இல் விசாரணை: உச்ச நீதிமன்றம்


நல்ல தீர்ப்பு நானிலம் மகிழ வரட்டும்! மக்கள் யாவரும சமநிலை என்பதை மெய்ப்பிக்கட்டும்! அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வகை பிறக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

 
சமச்சீர் கல்வி வழக்கு 26-ல் விசாரணை: உச்ச நீதிமன்றம்

First Published : 22 Jul 2011 02:03:35 AM IST


புது தில்லி, ஜூலை 21: சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.  அத்துடன், ஆகஸ்டு 2-ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இறுதி விசாரணை ஜூலை 26-ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்.  சமச்சீர் கல்வித் திட்டம் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதில் இடம்பெற்ற பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது என்றும் நடப்பு கல்வி ஆண்டில் பழைய பாடத் திட்டமே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு கோரியிருந்தது.  இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பிஎஸ் செüகான் ஆகியோர் கொண்ட அமர்வு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ், முகுல் ரோத்தகி ஆகியோர் வாதாடினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும்போது தங்களது கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரி "கேவியட்' மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கங்குலி வாதாடினார்.  தமிழக அரசு சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர்கள், மாணவர்களின் எதிர்கால நலன், கல்வி அறிவு, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போட்டி மிகுந்துள்ள நிலையில் திறமையான மாணவர்களாக அவர்கள் வர வேண்டும் என்பனவற்றைக் கருத்தில் கொண்டும், அரசியல் கலப்புள்ள, தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட சமச்சீர் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததைச் சுட்டிக் காட்டினர்.  சமச்சீர் கல்வி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவும், கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டம் தரமற்றது என்று ஒருமித்த கருத்து அளித்துள்ளது. ஆனால் அதன் அறிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது என்று அவர்கள் கூறினர். அவ்வாறு ஏற்க மறுத்தது தவறு என்று அவர்கள் வாதிட்டனர்.  சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று தமிழக அரசு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. தரமான கல்வியை அளிக்கும் வகையில் நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரைப்படி செயல்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.  தனியார் மெட்ரிகுலேஷேன் பள்ளிகளின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தனியார் மெட்ரிகுலேஷேன் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறந்தவுடன் கடந்த ஆண்டு பாடத்திட்டங்களைக் கொண்ட புத்தகங்கள் நடப்பு ஆண்டில் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டி, மீண்டும் புதிய புத்தகங்களை வழங்க அனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.  "கேவியட்' மனு செய்தவர்களின் சார்பில் ஆஜரான கங்குலி, சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகே தீர்ப்பு வழங்கியுள்ளதால் தமிழக அரசின் மேல் முறையீட்டை ஏற்கக் கூடாது என வாதிட்டார். தமிழகத்தில் உள்ள 4 விதமான கல்விமுறையைச் சுட்டிக் காட்டி, கடந்த ஆட்சியின்போது 4 ஆண்டுகள் ஆய்வு நடத்தி, நிபுணர்களுடன் ஆலோசித்தும், வெளிமாநிலங்களில் ஆய்வு செய்தும் அதன் அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டதை சுட்டிக் காட்டினார்.  மேலும் 200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்களும் தயார் செய்யப்படுள்ளதாகவும், இந்தாண்டு இந்தப் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு அளிக்கப் படாத நிலையில் பட்சத்தில் மக்களின் வரிப்பணம் 200 கோடி ரூபாய் வீணாகி விடும் என வாதாடினார்.  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சமச்சீர் கல்வித் திட்டத்துக்காக 200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்கள். மேலும், தேவைப்படும் திருத்தங்களைச் செய்துகொள்ள சட்டத்தில் இடம் உண்டு என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கூறியுள்ள நிலையில் அதைச் செய்யாமல் தமிழக அரசு ஏன் பிடிவாதத்துடன் இருக்கிறது என்று கேட்டனர். மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தனர். அத்துடன், இந்த மனு மீதான இறுதி விசாரணை வரும் ஜூலை 26 ம் தேதி நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், ஆகஸ்டு 2-ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனால் ஜூலை 26-ம் தேதி வழக்கின் இறுதி விசாரணை முடிந்து வெளியாகும் தீர்ப்பைப் பொறுத்து ஆகஸ்ட் 2-ம் தேதி பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகம் வழங்குவதா அல்லது திருத்தப்பட்ட பாட நூல்கள் வழங்கப்படுமா என்பது தெரியவரும். சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றதைப் பார்ப்பதற்காக தமிழக அரசின் பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம், பள்ளிக் கல்விச் செயலர் சபிதா, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ. அசோகன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

1 கருத்து:

  1. இதனை நல்ல தீர்ப்பாகத் தினமணிகருதாமையால் கருத்தினை வெளியிடவில்லை.

    பதிலளிநீக்கு