வெள்ளி, 22 ஜூலை, 2011

Arjun Sambath article about natural colour: திருப்பூர்: தேவை திருப்புமுனை!

கட்டுரையாளர் கருத்திற்கேற்ப  இயற்கை வ்ண்ணமேற்றும் முறையே துணிக்கும் பயன்படுத்துவோருக்கும் நல்லது என்பதை உணர்ந்து அதனைப் பரப்ப அரசு முன்வரட்டும்.!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திருப்பூர்: தேவை திருப்புமுனை!

First Published : 22 Jul 2011 01:42:52 AM IST


ஆயத்த ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னிலை வகித்த காரணத்தால் இந்தியாவின் "டாலர் சிட்டி', "குட்டி ஜப்பான்', "பனியன் நகரம்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட திருப்பூர் இப்போது சாயக் கழிவுநீர்ப் பிரச்னையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். பல பனியன் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.  இப்போது திருப்பூரில் வேலைவாய்ப்பும் போதிய வருவாயும் இல்லாத காரணத்தால் தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். திருட்டு, வழிப்பறி குற்றச்சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பூர் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள சாய, சலவைத் தொழிற்கூடங்கள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுவிட்டதால் இந்நிலை உருவாகியுள்ளது.  சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில் "ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' முறையை அமல்படுத்த வேண்டும் என 2006-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த "ஜீரோ லிக்விட் டிஸ்ஜார்ஜ்' முறையை நடைமுறைப்படுத்துவதில் திருப்பூர் சாயத் தொழிற்சாலைகள் தோல்வியடைந்துவிட்டன.  இதன் காரணமாக, உயர் நீதிமன்றம் இத்தகைய தொழிற்சாலைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் சாயக்கழிவுநீர் பிரச்னை பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.  திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு, நமது நாட்டுக்கு வரவேண்டிய வர்த்தக ஒப்பந்தங்கள் போட்டி நாடுகளான சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு கைமாறிச் சென்றுள்ளன.  திருப்பூர் சாயக் கழிவுநீர்ப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வுகாண எந்தவோர் ஆட்சியாளர்களும் வழிவகுக்கவில்லை. ஏனென்றால், திருப்பூரின் பனியன் தொழில் வளர்ச்சிக்கு ஆட்சியாளர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகும். அதேபோல, நமது அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கும் திருப்பூர் பனியன் தொழிற்சாலை அதிபர்களின் பங்களிப்பு குறைவாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தச் சிக்கல்களுக்குக் குறுகியகாலத் தீர்வு காணும் முயற்சியிலேயே செயல்பட்டு வருகின்றனர் அல்லது நீதிமன்றங்களில் பிரச்னையை வளரவிடுகின்றனர்.  சாயக்கழிவுகளை குழாய்கள் மூலமாக கடலுக்குக் கொண்டுசென்று கலப்பது, இதற்கு மத்திய, மாநில அரசுகள் முழுச்செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.  சாயக் கழிவுகளைக் கடலில் கொட்டினால் கடலும் மாசுபடும். மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதும் முக்கியமான கருத்தாகும்.  குஜராத் மாநிலத்தில் சாயக் கழிவுகளைக் கடல் நீரில் கொட்டுகிற காரணத்தால் அரபிக் கடல் முழுவதும் இத்தகைய சாயக் கழிவுகளால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.  சாயக் கழிவுநீர்ப் பிரச்னையை முற்றிலுமாகத் தீர்ப்பதற்கு இயற்கைச் சாயமேற்றும் முறைக்கு மாறுவது ஒன்றுமட்டுமே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். இயற்கை முறையில் சாயமிடப்பட்ட ஜவுளி ரகங்களையே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டினர் பெரிதும் விரும்பி வாங்குகின்றனர். விலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.  வருங்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் ரசாயன முறையில் சாயமேற்றப்பட்ட ஜவுளி ரகங்களுக்குத் தடைவிதிக்கும் சூழல்கூட உருவாகும். ஏனென்றால், ரசாயன முறையில் சாயமேற்றப்பட்ட ஜவுளிகள் அணிவதால் உடலில் அரிப்பு உள்ளிட்ட ஒவ்வாமைகள் தோன்றுகின்றன. இதன் காரணமாக, நல்ல விலை கொடுத்து இயற்கைச் சாயமேற்றப்பட்ட துணிகளை வாங்க மேலை நாட்டினர் தயாராக உள்ளனர்.  நம் நாட்டிலேகூட ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி வகைகளை விலை அதிகமானாலும்கூட மக்கள் தேடிச்சென்று வாங்குகின்றனர். இதற்காகத் தனியாக விற்பனை நிலையங்கள்கூட தொடங்கப்பட்டுள்ளன. எனவே, நாம் நமது பண்டைய இயற்கைச் சாயமேற்றும் முறையில் துணிகளை உற்பத்தி செய்வதே நல்ல லாபமும் வேலைவாய்ப்பும் கொடுக்கும் தொழிலாக அமையும்.  துணிகளில் சாயமேற்றும் நுட்பங்களில் நம்மவர்கள் உலகில் தலைசிறந்து விளங்கினார்கள். பண்டைய சாயமேற்றும் முறைகள் உலகிலுள்ள அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது. அவுரிச் செடிகளைப் பயிரிட்டு அதிலிருந்து நீலநிறச் சாயம் உற்பத்தி செய்து இச்சாயத்தை நூல்களுக்கும், துணிகளுக்கும் சாயமேற்றி அழகூட்டினர். இந்தியாவில் இருந்து இந்த நீலநிறத்தைத் தெரிந்துகொண்டதால்தான் இதற்கு இண்டிகோ நீலம் என்ற பெயர் உலக அளவில் ஏற்பட்டது. சுண்ணாம்பு, சங்கு, முட்டை ஓடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறங்களும், நிறமேற்றிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.  செங்கல் மண்ணில் கிடைக்கும் கனிமங்களில் சிவப்பு சார்ந்த வண்ணங்கள் உருவாக்கப்பட்டன. மஞ்சள் சிறந்த கிருமிநாசினியாகவும், மூலிகையாகவும் பயன்பட்டதோடல்லாமல் மஞ்சள் நிறச் சாயம் உற்பத்தி செய்யவும் பயன்பட்டது. தாவரங்கள், கிழங்கு வகைகள், பல வண்ணப்பூக்களிலிருந்து பல்வேறு வண்ணச் சாயங்கள் நம்மவர்களால் உற்பத்தி செய்யப்பட்டன.  இத்தகைய இயற்கைச் சாயங்கள் மூலமாக உருவாக்கப்பட்ட துணிகள் நீண்டகாலம் நிறம் மாறாமலும் மங்காமலும் இருந்தன. இப்போதுகூட பழைய பட்டுப் புடவைகளை நல்ல விலைக்கு வாங்கிக்கொள்வதை நாம் பார்க்க முடிகிறது. இத்தகைய இயற்கைச் சாயங்கள் மூலமாக கோயில்களிலும், சுவர்களிலும், மலைக் குகைகளிலும் அழியாத ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். பல நூறு ஆண்டுகளாக இருக்கும் அழியாத ஓவியங்களை இப்போதும்கூட கண்டு ரசிக்க முடிகிறது.  நூல்களுக்கும், ஆடைகளுக்கும் வண்ணமேற்ற நம் நாட்டில் இயற்கை சார்ந்த தொழில் நுட்பங்கள் இருந்தன. இத்தகைய வண்ணங்களால் மனிதகுலத்துக்குத் துன்பம் ஏதும் ஏற்பட்டதில்லை. சுற்றுச்சூழல் மாசு ஏற்படவில்லை. நமது நாட்டின் ஜவுளி உற்பத்தி தொழில்நுட்பம் மிகவும் பழமையானது. உழவுத் தொழிலோடும் நெசவுத் தொழிலும் செழித்து வளமான தேசமாக நமது நாடு திகழ்ந்தது. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான நமது ஜவுளித் தொழில்நுட்பங்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.  வியாபாரத்துக்காக வந்து இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளையர்கள், இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளை விற்பனை செய்யும் உள்நோக்கத்தோடு இந்தியாவின் ஜவுளித் தொழில்நுட்பங்களை அழித்தனர்.  ஒரு தீப்பெட்டிக்குள் மடித்து வைக்கும் அளவுக்கு மெல்லிய பட்டுப்புடவைகளை வங்க மாநிலம் டாக்கா நகரில் உள்ள நெசவாளர்கள் உற்பத்தி செய்துவந்தனர். இந்திய நெசவாளர்களின் இத்தகைய திறமையைக் கண்டு அதிசயித்த வெள்ளையர்கள், நமது நெசவாளர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்து துன்புறுத்தினர். டாக்கா மஸ்லின் பட்டுத் துணி உற்பத்தியைத் தடைசெய்தனர். உச்சகட்டமாக, இத்தகைய தொழில்நுட்பங்களைத் தெரிந்த நெசவாளிகளின் கட்டைவிரலை வெட்டியதாகக்கூட சரித்திரங்களில் படிக்கிறோம்.  இந்திய நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிகள் இருக்கும் வரையில் தனது துணிகளை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது என்பதைத் தெரிந்துகொண்டு, திட்டமிட்டு நமது ஜவுளி உற்பத்தியை அழிக்கும் முகமாக இயற்கைச் சாயமேற்றும் தொழில்நுட்பங்களையும் அழித்தனர்.  கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு ஆகிய ஜவுளி உற்பத்தி நகரங்களில் துணிகளுக்குச் சாயமேற்றும் ரசாயன முறை காரணமாக விவசாய விளைநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர்கூட மாசடைந்துள்ளது.  ஆறுகள் சாக்கடைகளாகவும், குளங்கள் கழிவுநீர்த் தொட்டிகளாகவும் மாறிவிட்டன. இக்கழிவுநீரை அருந்துவதால் ஆடு, மாடுகள் செத்து மடிகின்றன. நீர்நிலைகளில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இப்பகுதிகளில் குடிநீர்கூட மாசு அடைந்துள்ளது. ரசாயன சாயங்கள் காரணமாக மனிதர்களுக்குப் பல்வேறு விதமான புதிய வியாதிகள்கூட ஏற்பட்டுள்ளன.  ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ரசாயன சாயமேற்றும் முறை காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. முடி உதிர்தல், சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட வியாதிகள் ஏற்பட்டு வருகின்றன.  விவசாய அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல்லாண்டுகளாக இதுகுறித்து எச்சரிக்கை செய்தும் பலனில்லாத காரணத்தால் நீதிமன்றம் சென்று இத்தகைய தொழிற்சாலைகளுக்குத் தடை உத்தரவு பெற்றுள்ளனர். தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான பேருக்கு வாழ்வாதாரமாகத் திகழும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது பற்றிய அக்கறையும் கவலையும் ஆட்சியாளர்களுக்கு இருப்பதாகவே தெரியவில்லையே. மத்திய, மாநில அரசுகள் இவ்விஷயத்தில் அக்கறையில்லாமலேயே இருக்கின்றனவே, ஏன்?  இப்போதும்கூட சாய ஆலை அதிபர்கள் ரசாயன சாயமேற்றும் முறைகளையே தொடர விரும்புகின்றனர். சாயக் கழிவுகளை மேலும் மேலும் உற்பத்தி செய்வதால் பிரச்னைகள் கூடுவதோடு, நிரந்தரத் தீர்வு ஏதும் ஏற்படப்போவதில்லை. நூற்றுக்கணக்கான சாயத் தொழிற்சாலை அதிபர்கள் வருவாய் ஈட்டுவதற்காக இந்த நாட்டின் வருங்காலச் சந்ததிகளின் வாழ்வாதாரம் கெடுக்கப்படுகிறது.  சாயத் தொழில் அதிபர்கள் இயற்கைச் சாயமிடும் முறைக்கு மாற வேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு இல்லாத நமது இயற்கைச் சாயமேற்றும் முறையை மேம்படுத்தி காலத்துக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய சுதேசி உணர்வு சாயத் தொழில் அதிபர்களுக்கும், அரசுக்கும் வரவேண்டும். இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  ஏற்கெனவே திண்டுக்கல் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் இயற்கைச் சாயமேற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம், ஈஷா யோகா மையம் உள்ளிட்ட பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இயற்கைச் சாயமிடும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகின்றன. இயற்கைச் சாயமிடப்பட்ட ஜவுளிகளை உற்பத்தி செய்து விற்பனையும் செய்து வருகின்றனர்.  இயற்கைச் சாய உற்பத்தி காரணமாக விவசாயம் வளம் பெறுவதோடு கிராமியப் பொருளாதாரமும் மேம்படும். இயற்கைச் சாயமேற்றும் முறை காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பும் பெற முடியும். இதன் மூலம் பொருளாதாரப் பரவலாக்குதல் உருவாகும்.  ஓர் ஆங்கில அடிமை மனப்பான்மை நம்மை ஆக்கிரமித்துள்ளது. இயற்கைச் சாயமேற்றும் முறை குறித்து சிந்திக்கக்கூட அரசோ, சாய ஆலை அதிபர்களோ தயாராக இல்லை.  இந்நிலை மாற வேண்டும். இயற்கைச் சாயமேற்றும் முறைக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க மத்திய, மாநில அரசுகள், சாய ஆலை அதிபர்கள் முன்வர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கைச் சாயமேற்றிய துணிகளையே பயன்படுத்துவோம் என்ற முடிவுக்கு மக்கள் வரவேண்டும். மாற்றம் மக்களிடம் இருந்தே தொடங்கட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக