திங்கள், 28 மார்ச், 2011

learn lesson from japanese - Messystems chairman: சப்பானிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்:

தமிழ்ப்பண்பாட்டை இந்திய  ஆரிய ஆதிக்கமும் மேலை ஆரிய ஆதிக்கமும்  சிதைத்து வருகின்றன.  ஆனால், சப்பானியர்களின் பண்பாடு போற்றக்கூடிய அளவில் வளர்ந்து சிறந்து விளங்குகிறது.  நெருக்கடியைப் பணம் ஆக்கத் துடிக்காத மனித நேயமும் வணிக அறமும்,  நெருக்கடியிலும் கூட்டு உணர்வுடன் பொறுமை காக்கும் அமைதியும் கடமை, கண்ணியம், பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பெற்றிமையும் அனைவரும் போற்றத்தக்கன.. குறிப்பாகப் பண்பாடு என்று வாயளவில் பிதற்றும் நாம் கவனித்துப் பின்பற்ற வேண்டியன. சோதனையிலும் வேதனை காணாமல் சாதனை காணும் சப்பானியர்கள் விரைவில் தங்கள் துயரங்களில் இருந்து மீள்வார்களாக! உலகில் முதல் நிலையை உறுவார்களாக! அடைவார்களாக! வெல்வார்களாக! வாகை சூடுவாரகளாக!  நாம் திருந்துவோமாக!  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! /  எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஜப்பானிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: 
மெஸ் சிஸ்டம்ஸ் தலைவர்

சென்னை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவி ஒருவருக்கு பணி நியமன உத்தரவை வழங்குகிறார் மெஸ் சிஸ்டம்ஸ் தலைவர்
தாம்பரம், மார்ச் 27: இயற்கையின் சீற்றத்தை மன உறுதியோடு எதிர் கொண்ட ஜப்பான் மக்களிடமிருந்து இந்திய இளைஞர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மெஸ் சிஸ்டம்ஸ் தலைவர் டி.சீனிவாசன் கூறினார்.  சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பணிநியமன உத்தரவு வழங்கும் விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:  பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பயின்று வெளிவரும் மாணவர்கள் மத்தியில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையைப் பெறுவதில்தான் ஆர்வம் உள்ளது. ஆனால், எதிர்கால முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வாய்ப்பளிக்கும் வேலையைப் பெறுவதில் அக்கறை இல்லை.  இந்த விஷயத்தில் மாணவர்கள் மத்தியில் மனமாற்றம் தேவை. பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை தேடாமல், திறமையையும், ஆற்றலையும் வளர்த்துக் கொண்டால் பணம் தானாகத் தேடி வரும்.  சமீபத்திய இயற்கைச் சீற்றத்தாலும், வெடித்து சிதறிய அணுமின் நிலையங்களாலும் உண்டான பேரழிவை அந்த நாட்டு மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நாம் உணர்ந்தால் அவர்களிடமிருந்து நாம் மகத்தான பாடத்தைக் கற்றுக் கொள்ள முடியும்.  தங்களது உடைமைகளை இழந்து நடுத் தெருவில் நின்ற போதும் அழுது, புரண்டு துயரத்தை வெளிப்படுத்தாமல் அமைதி காத்தனர்.  எல்லா மக்களும் கட்டுப்பாடுடன் வரிசையில் நின்று உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றனர். யாரும் முண்டியடித்துக் கொண்டோ, ஆவேசத்துடன் போராடியோ எதையும் பெறவில்லை.  கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருந்த போது மின்தடை ஏற்பட்டதால் கையில் இருந்த பொருட்களை அங்கேயே வைத்து விட்டு வெளியேறிய மக்களின் நேர்மையும், மனசாட்சியும் பாராட்டுக்குரியது.  இப்படிப்பட்ட கடமை உணர்வும், கட்டுப்பாடும், பொறுமையும் நிறைந்த மக்களே ஜப்பானின் மகத்தான சொத்து என்பதை நாம் உணர்வது மட்டுமல்லாமல், அவர்களைப் போன்ற குணாதியங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் சீனிவாசன்.  விழாவில் 214 மாணவர்களுக்குப் பணிநியமன உத்திரவுகளை டி.சீனிவாசன் வழங்கினார். க கல்லூரி டீன் ஜி.சம்பந்தம், முதல்வர் எஸ்.பூர்ணச்சந்திரா, பணிநியமன அதிகாரி கே.எஸ்.நிவாஸ்குமார், மென்திறன் பயிற்சி பேராசிரியர்கள் அர்ச்சனா, சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

1 கருத்து:

  1. ஆரியம் பற்றிக் குறிப்பிட்டதால் தினமணி இதில் குறிப்பிட்டுள்ள கருத்துப்பதிவை ஏற்கவில்லை. வாழ்க தினமணியின் நடுவுநிலைமை!

    பதிலளிநீக்கு