ஞாயிறு, 27 மார்ச், 2011

Film Saatappadi kutram - Political bomb: அரசியல் நெடி வீசும் "சட்டப்படி குற்றம்'

விருதகிரிக்கே தடை கேட்டுப் போராடுபவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்? ஆனால், இப்படம் ஆளுங்கட்சிக்கு எதிரானது என்று எண்ணக்கூடாது. ஒட்டு மொத்த அரசியலே அவ்வாறுதான் உள்ளது. இவ்வாறு எழுதுபவர்கள், பேசுபவர்கள், நடி்பவர்கள், இயக்குபவர்கள்,வேறு வகையில் தொடர்பு உள்ளவர்கள் என எல்லாத் தரப்புமே கை தட்டலுக்கான இப்பணியைச் செய்து விட்டு அரசியல் சாக்கடையில் புரண்டு ஆதாயம் தேடுபவர்களாகத்தான் உள்ளனர். ஒட்டு  மொத்த அரசியல் விழிப்புணர்வும் நேர்மையின்பால் பற்றுமதொண்டு உணர்வும் மக்களுக்கு வந்தால்தான் மக்கள் சார்பாளர்களும் நேர்மையும் தூய்மையும் கொண்டு விளங்குவார்கள்.  இல்லையேல் கைதட்டி மறக்கும் காடசிகளாக மாறும்  அவலம் தொடரும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அரசியல் நெடி வீசும் "சட்டப்படி குற்றம்'
First Published : 27 Mar 2011 12:00:00 AM IST

சென்னை,மார்ச் 26: எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள "சட்டப்படி குற்றம்' படத்தின் வசனங்கள் ஆளும் கட்சியை சாடும் வகையில், அரசியல் நெடி கலந்து உள்ளன.  நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் "சட்டப்படி குற்றம்'. இதில் சத்யராஜ், சீமான், ராதாரவி, விக்ராந்த், ஹரீஸ் கல்யாண், பானு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  விஜயின் அரசியல் பிரவேச பேச்சுகளுக்குப் பின் ஆளும் கட்சியினரால் அவர் பாதிப்புகளுக்கு உள்ளானதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் நடித்த "காவலன்' படத்தை வெளியிட விடமால் ஆளும் கட்சியினர் தடங்கல் ஏற்படுத்தியதாகவும் அவரது தரப்பில் புகார்கள் கூறப்பட்டன.  இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடர்ச்சியாக மூன்று முறை சந்தித்து பேசியது, தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியது, ஆகிய நிகழ்வுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த பேரவைத் தேர்தலை, விஜய் எப்படி சந்திக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், இதன் பின் அவர் அமைதியானதையடுத்து பரபரப்பு சற்று ஓய்ந்தது. இந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகரனின் "சட்டப்படி குற்றம்' படம் ரிலீசுக்கு தயாரானது. ""இந்தப் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் பலர் வாங்க ஆர்வத்துடன் முன்வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் ஆளுங்கட்சியினரின் மிரட்டல்களால் இந்தப் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயங்கினர்'' என்று செய்தியாளர்களிடம் பகிரங்கமாக எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்தார். இது, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இப்படத்தை தடை செய்யவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடைசி நேரத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், இப்போது "சட்டப்படி குற்றம்' தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.  இந்தப் படத்தில், அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நபராக சத்யராஜ் வருகிறார். பின்னர் போராளியாக மாறுகிறார். தன்னை போலவே பாதிப்புக்கு உள்ளான இளைஞர்களை இவர் ஒன்று சேர்த்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.  உள்ளூரில் விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் நடிகர் விக்ராந்திடம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாக்கு கேட்டு வரும் போது ஆரம்பிக்கின்றன படத்தின் அரசியல் நெடி கலந்த வசனங்கள். ""தேர்தலின் போது பிச்சைக்காரர்கள் போல் ஓட்டு கேட்டு வருவீங்க.  தேர்தல் முடிந்தவுடன் எங்களை பிச்சைக்காரர்கள் ஆக்கி விடுவீங்க'' என்று விக்ராந்த் சொல்ல, வாக்கு கேட்டு வந்த வேட்பாளர் (இயக்குநர் வெங்கடேஷ்) ""உங்களுக்கு அரசியல் தெரியாது தம்பி'' என்கிறார். ""எங்களுக்கு அரசியலும் தெரியும். அரசியலில் நடக்கிற கொள்ளைகள் பற்றியும் தெரியும்'' என்கிறார்.  விவசாயி, நெசவாளி என யாரும் சௌகரியமாக இல்லாத நிலையில் யாரைக் கேட்டு ஓட்டுக் கேட்டு வந்தீங்க என்று கேட்பதிலும் அரசியல் நெடி. தேர்தலில் ஜெயித்த பிறகு சினிமாத்துறையைத்தான் முதலில் கைக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார் ஒரு அரசியல்வாதி. அது ஏன்? என கேட்பருவருக்கு சினிமாவை கைக்குள் வெச்சுக்கிட்டாதான் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்கலாம் என்கிறார்.  விஜய் ரசிகர் மன்றத் தலைவர் விக்ராந்த் தலைமையிலான இளைஞர்கள் உள்ளூரைச் சேர்ந்தவரை இடைத்தேர்தலில் ஜெயிக்க வைக்கின்றனர். ஆனால், அவரோ அரசியல்வாதியிடம் ரூ. 200 கோடி வாங்கி கொண்டு தேர்தல் முடிவையே மாற்றி விடுகிறார்.  இதன்பின் நியாயம் கேட்கச் செல்லும் விக்ராந்திடம் ""நீ 200 ரூபாயை வாங்கி கொண்டு ஓட்டு போட்டே, நான் ரூ. 200 கோடி வாங்கி கொண்டு அதை விற்று விட்டேன். நீ சில்லறை வியாபாரி, நான் மொத்த வியாபாரி என அவர் விளக்கமளிக்கிறார். இது வாக்குக்கு லஞ்சம் என்ற இப்போதைய நிலையை எடுத்துரைக்கிறது.  பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் சத்யராஜ் தலைமையிலான மக்கள் இயக்கத்தால் (இது விஜய் ரசிகர் மன்றத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்) கடத்தப்பட, ""அரிசி கடத்துகிறார்கள், சாராயம் கடத்துகிறார்கள்! இப்போது அதிகாரிகளை கடத்துகிறார்கள். எங்கே சார் போகுது நாடு'' என அரசு அதிகாரிகள் ஒரு காட்சியில் பேசிக் கொள்கிறார்கள்.  ஸ்பெக்ட்ரம் ஊழல் - மறைமுக தாக்கு: கனிம வள ஊழல் தொடர்பாக கைதான ரங்கராசன் வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக ஆஜராகிறார் சீமான். அப்போது நீதி தேவதையின் கண்களை மட்டும் இவர் கட்டவில்லை.  நாட்டு மக்கள் எல்லோரின் கண்களையும் கட்டி விட்டார் என்கிறார் சீமான். வழக்கு விசாரணையின் போது ரங்கராசனுக்கு, சேர் (இருக்கை) கொடுங்கள் என ஒருவர் சொல்ல, நீதிபதி அவர்களே உங்களுக்கும் ஒரு ஷேர் தந்து கூட்டு சேர்த்து விடப் போகிறார் என்று கமெண்ட் அடிக்கிறார் மற்றொருவர்.  1 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு ஒரு வருஷம் ஜெயில், 5 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு 5 வருஷம் ஜெயில். ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் அடித்தவனுக்கு எத்தனை ஆண்டு என கேட்க, நீதிபதியாக இருக்கும் ராதாரவி, எத்தனை சைபர் என்று எனக்கே தெரியவில்லை என்கிறார்.  வழக்கின் தீர்ப்பின் போது ராதாரவி, இதுவரை நீங்க எழுதிக் கொடுத்த வசனங்களை இதுவரை பேசியிருக்கிறோம். இப்போதாவது சுயசிந்தனையுடன் தீரப்பு எழுத விடுங்கள் என்கிறார்.  இப்படி ஆங்காங்கே நடப்பு அரசியலையும், நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகளையும் நினைவூட்டும் வசனங்கள் இந்தப் படத்தில் நிறைந்துள்ளன.

1 கருத்து:

  1. இக்கருத்துப் பதிவைத்தினமணி வெளியிடவில்லை. வாழ்க் தினமணியின் நடுவுநிலைமை!
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
    / தமிழே விழி! தமிழா விழி! /

    பதிலளிநீக்கு