திங்கள், 28 மார்ச், 2011

No plan to kill kadaffi - obama: கடாஃபியை கொல்லும் திட்டம் இல்லை: ஒபாமா

கடாஃபியை கொல்லும் திட்டம் இல்லை: ஒபாமா


வாஷிங்டன், மார்ச் 26: லிபிய அதிபர் மம்மர் கடாஃபியை கொல்லும் திட்டம் ஏதும் இல்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.  அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் லிபியா மீது தாக்குதல் தொடுப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த விளக்கத்தில் அவர் இத்தகவலைத் தெரிவித்ததாக "வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.  லிபியாவில் பன்னாட்டு படைகளின் செயல்பாடுகள் உடனுக்குடன் அதிபர் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், நேட்டோ படைகளின் முக்கிய நோக்கமே, லிபியாவில் உள்ள பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும். இதற்காகத்தான் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சில் விதி 1973-ன்படி அங்கு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது என்றும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தின்போது உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை அதிபரிடம் கேட்டு துளைத்தனர். அவை அனைத்திற்கும் ஒபாமா பதிலளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. மம்மர் கடாஃபியை கொல்லும் திட்டம் ஏதும் அமெரிக்க அரசுக்குக் கிடையாது. வட ஆப்பிரிக்க நாடான அங்கு ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புவதாக நாடாளுமன்ற முன்னாள் தலைவர் நான்சி பெலோசி கூறியதாக "பொலிடிகோ' செய்தி வெளியிட்டுள்ளது.  பன்னாட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் கார்டர் ஹாம் உரிய நேரத்தில் தலையிட்டு தாக்குதல் நடத்தியதால் பொதுமக்களின் உயிர் பெருமளவு காக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.  லிபியா முழுவதும் பன்னாட்டுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு எத்தகைய நடவடிக்கையை அடுத்தகட்டமாக எடுப்பது என்பது குறித்து அடுத்த வாரம் கூடி முடிவு செய்யலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.  லிபியா மீதான கூட்டுப் படைகளின் தாக்குதல் அமெரிக்கா அவசர கதியில் எடுத்த முடிவு என்று பரவலான விமர்சனம் எழுந்தது. இதைத் தடுக்கும் பொருட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிபர் விளக்கம் அளித்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் 20 முன்னணி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  பொதுமக்களுக்கு விளக்கம்: லிபியாவில் தாக்குதல் நடத்த முடிவு செய்தது குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார் ஒபாமா. திங்கள்கிழமை இது தொடர்பாக விரிவான உரை நிகழ்த்த உள்ளார் அவர். லிபியா மீதான தாக்குதல் நடவடிக்கையை குடியரசு கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளார் ஒபாமா. தேசிய ராணுவ பல்கலைக் கழகத்தில் தனது விளக்க உரையை நிகழ்த்த உள்ளார் ஒபாமா.  லிபிய மக்களைப் பாதுகாக்கவே பிற நாட்டுப் படைகளுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்தியதாக அவர் கூறுவார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.  லிபியாவில் கடாஃபியின் சர்வாதிகார செயல்களையும் அவர் நாட்டு மக்களிடம் விளக்குவார். லிபிய விவகாரம் குறித்து முதல் முறையாக ஒபாமா நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.  
கருத்துகள்

எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை என்கிறார் ஒபாமா! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2011 5:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக