சனி, 15 ஜனவரி, 2011

encouragement for solar system: மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும்: ஆர்க்காடு வீராசாமி

நல்ல முயற்சி ! பாராட்டுகள்! சூரிய ஆற்றலைக் கொண்டு நம் நாடு மின்னாற்றல் பயன்பாட்டைக்  குறைத்து அதே நேரம் மிகுதியான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.  ஆனால், தொடர்புடைய துறையினர் மாணாக்கர்களுக்கு ஊக்கம் தருவதில்லை. இதில் அரசு கருத்து செலுத்த வேண்டும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும்: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, ஜன.14: தமிழகத்தில் வீட்டு மொட்டை மாடிகளில் சூரிய மின்சக்தி (சோலார்) மின் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.  சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் பேசியது:  சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவித்து வருகிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பாக ஏற்கெனவே தமிழகத்தில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையில் சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சூரிய மின்சக்தி (சோலார்) கலன்களை வீட்டு மொட்டை மாடிகளில் வைத்து மின்சாரம் தயாரிக்கும் முறையை ஊக்கப்படுத்த உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்திக்கு, மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே 30 சதவீதம் மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் 43 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு ஆகும் என்றார்.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறை செயலாளர் டேவிதார் பேசியது:  வீட்டு மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மின்சார வாரியம், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி கிடைத்த பிறகு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். அதைத்தொடர்ந்து கட்டண விகிதம் அறிவிக்கப்படும்.  வீடுகளில் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும்போது, நுகர்வோர் தேவை ஓரளவு நிறைவு செய்யப்படும். உபரி மின்சாரத்தை, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கலாம். இது தொடர்பாக பொது கொள்கை உருவாக்கப்படும் என்றார்.  இந்தக் கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 80 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.  புதுப்பிக்கதக்க எரிசக்தி தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கான கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மொத்தம் ரூ.2 லட்சம் அளவுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஜனவரி 16-ம் தேதி வரை நடைபெறும்.  அமெரிக்க துணை தூதர் ஆன்ட்ரூ டி.சிம்கின், பிரிட்டன் தூதரக அதிகாரி மைக் நிதாவ்ரியானகிஸ், சிங்கப்பூர் தூதர் அஜீத்சிங், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் சி.பி.சிங், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் கிறிஸ்துதாஸ் காந்தி, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் குத்சியா காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக