திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தலையங்கம்:மூச்சு முட்டுகிறதே...


ராஜ்பவன், ஆளுநர் மாளிகை என்றெல்லாம் இப்போது அழைக்கப்படும் இடம் கில்பர்ட் ரோட்டரிக்ஸ் என்ற ஆங்கிலேயரின் சொத்தாக இருந்தபோது அதன் பெயர் "கிண்டி லாட்ஜ்'. பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடிக் களிக்க, மரம் செடி கொடிகள், அடர்ந்த வனப்பகுதியாகக் காட்சியளித்த இந்த "கிண்டி லாட்ஜ்' தோட்டத்துக்கு நடுவில் ஒரு பங்களாவைக் கட்டிக் கொண்டு வாழ்ந்த கில்பர்ட் ரோட்டரிக்ஸ், 1817-ல் இறந்த அடுத்த சில ஆண்டுகள் பராமரிப்பு இல்லாமல் இருந்தது, இந்த "கிண்டி லாட்ஜ்'.1821-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்த 500 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த "கிண்டி லாட்ஜ்' என்கிற தோட்ட வீட்டை விலைக்கு வாங்கியது. அப்போது கவர்னர் மாளிகை அரசினர் தோட்டத்தில் அமைந்திருந்தது. "கிண்டி லாட்ஜ்', அன்றைய பிரிட்டிஷ் ஆளுநர்களுக்கு வாரக் கடைசிகளில் ஓய்வெடுக்கும் மாளிகையாகவும், நண்பர்களுடன் பறவைகளை வேட்டையாடிக் களிக்கும் இடமாகவும் இருந்தது. 1910-ல்தான் இந்த கிண்டி லாட்ஜைச் சுற்றியுள்ள பகுதிகள், சென்னை வனச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கிண்டி லாட்ஜும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியும்தான் ஆளுநர் மாளிகைக்காக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டது. சென்னை நகரின் ஒரு பகுதியாக, அதேநேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இணையான கட்டடக்கலை வனப்பும், வசதிகளும் நிரம்பிய "கிண்டி லாட்ஜ்', தமிழக ஆளுநரின் மாளிகையாக மாற்றப்பட்டது ஒருவகையில் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்த இடம் அடையாறு பகுதியைப்போல, "மால்'களும், வணிக வளாகங்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பகுதியாக மாறியிருக்கக் கூடும்.500 ஹெக்டேர், அதாவது 1,250 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இந்த ஆளுநர் மாளிகைத் தோட்டம் (வனம்!), காலப்போக்கில் சுருங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறது. முதலில், 1954-ல் மகாத்மா காந்தி நினைவகத்துக்காக 9.25 ஏக்கரும், புற்றுநோய் மருத்துவமனைக்காக 9 ஏக்கரும் இதிலிருந்து வழங்கப்பட்டது. 1958-ல் இந்தியத் தொழில் நுட்பக் கல்லூரிக்காக (ஐ.ஐ.டி.) 388 ஏக்கரும், தேசியப் பூங்கா அமைப்பதற்காக வனத்துறைக்கு 625 ஏக்கரும் வழங்கப்பட்டது.1970-ல் குருநானக் கல்லூரி தொடங்குவதற்காக இதிலிருந்து நிலம் வழங்கப்பட்டது. 1974-ல் 2.5 ஏக்கர் பரப்பில் ராஜாஜி நினைவகமும், 1975-ல் 6 ஏக்கர் நிலப்பரப்பில் காமராஜ் நினைவகமும் இதிலிருந்து வழங்கப்பட்ட இடங்கள்தான்.1977-ல் தான், 1958-ல் வனத்துறைக்கு வழங்கப்பட்ட இடம் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. மேலும், 88 ஏக்கர் நிலப்பரப்பு வனத்துறைக்கு வழங்கப்பட்டு, அதில் 22 ஏக்கரில் பாம்புப் பண்ணையும், குழந்தைகள் பூங்காவும் அமைக்கப்பட்டன.ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள வனப்பகுதி, கான்கிரீட் கட்டடங்களால் நிறைந்து விட்டிருக்கும் தென்சென்னைக்கு பிராணவாயு வழங்கும் நுரையீரல் பகுதியாகத் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, இதன் பெருமை. இந்த வனப்பகுதி சுமார் 130 வகை பறவை இனங்களுக்கும், 350 தாவர இனங்களுக்கும், 60 விதமான வண்ணத்துப் பூச்சிகளுக்கும், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் ஒன்றான "பிளாக் பக்' என்றவகை மான்களுக்கும், புள்ளிமான்களுக்கும், நரிகள், பல்வேறு விதமான பாம்புகள், ஆமைகள், நத்தை வகைகள் போன்றவற்றுக்கும் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.இத்தனை பெருமைகளும், முக்கியத்துவமும் வாய்ந்த ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள வனப்பகுதி ஏற்கெனவே கணிசமாகச் சுருங்கி விட்டிருக்கிறது. இப்போது, இந்த வனப்பகுதிக்கு மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய முயற்சிகள் அரங்கேற்றப்படுகிறது என்னும்போது மௌனமாக வேடிக்கை பார்ப்பது விபரீதத்தில் முடிந்துவிடக் கூடும்.கடந்த மாதம், தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்திருக்கும் ஒரு தகவல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இடியெனத் தாக்கி இருக்கிறது. ஆளுநர் மாளிகை வனப்பகுதியில் 500 படுக்கைகளுடன்கூடிய ஒரு மருத்துவமனையை நிறுவுவதற்காக நான்கு ஏக்கர் நிலப்பரப்பை வழங்க ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பதுதான் துணைவேந்தரின் அந்தத் தகவல்.ஏற்கெனவே வனப்பகுதிகள் சுருங்கிக் கொண்டு வருகின்றன. கிழக்குக் கடற்கரை ஓரமாக அமைந்த உஷ்ணப் பிரதேசங்களில் மட்டுமே காணப்படக்கூடிய தனித்தன்மை வாய்ந்த இதுபோன்ற வனப்பகுதி மிகவும் குறைவு. அதே மேலும் அழித்து, அதிலிருக்கும் மரம், செடி, கொடிகளையும், அதை வாழ்வாதாரமாகக் கொண்ட பறவைகள், விலங்குகள், பிராணி வகைகளை இம்சிப்பதில் மனிதன் என்ன சுகம் காண்கிறானோ தெரியவில்லை.குறிப்பாக, மருத்துவமனை கட்டப்பட்டால், அதனால் உருவாகும் ஆள் நடமாட்டம், அதிலிருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் போன்றவை அந்த உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாக அமையும் என்பது உறுதி. கடந்த 15 ஆண்டுகளில் பல பறவை இனங்கள் இந்தக் காடுகளில் இருந்து சென்று விடவோ, அழிந்துவிடவோ, செய்துவிட்டன என்கிறார்கள். இந்த நிலையில், மிச்சம் மீதி இருக்கும் வனப்பகுதியையும் அழித்து மருத்துவமனை அமைக்க  வேண்டிய அவசியம்தான் என்ன? வேறு இடமா கிடைக்கவில்லை?ஆளுநர் மாளிகையும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியும் எந்தக் காரணத்துக்காகவும் கட்டடம் கட்ட பயன்படுத்தப்படக் கூடாது. ஏற்கெனவே சென்னை சுற்றுச்சூழல் பாதிப்பால் மாசுபட்டுக் கிடக்கிறது. இந்த நிலையில் அதன் நுரையீரலைக் கசக்கிப் பிழிந்தால் எப்படி?
கருத்துக்கள்

அடடா! எங்கிருந்துதான் விவரங்களைத் திரட்டித்தருகிறீர்களோ! பாராட்டுகள்! அப்படியே கில்பர்ட் வாங்கும் முன் இப்பகுதி என்னவாக யாருடைய கட்டுப்பாட்டில் இரு்நதது என்றும் உண்மையையும் கிண்டி என்னும் பெயருக்கான காரணத்தையும் அறிந்து சொல்ல வேண்டுகிறேன். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 5:29:00 AM
Though a 500 bedded hospital is a boon to the general public the land required can be better obtained from 338 acres given to IIT thro proper negotiations.After all only 5 to 10 acres will be required for the hospital.The existing wooded areas should never be allowed to be touched.Hospital in the existing forest area would bring calamity to the environment.People should protest.
By K.Moorthy
8/23/2010 4:06:00 AM
கர்நாடக மாநிலத்தில் இயற்கையை பாதுகாப்பதில் மக்கள் இன்னமும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மெட்ரோ ரயில் திட்டமானாலும் சரி, நினைவகங்கள் என்றாலும் சரி, மரங்களை மனம் போல் வெட்டுவதற்கு மக்கள் அனுமதிப்பது இல்லை. தேவைக்கு மேலே ஒரு மரம் வெட்ட அரசு திட்டமிட்டாலும் உடனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விடுவார்கள். இதனால் அரசும் மேம்போக்காக செயல்படாமல் , ஓரளவு பய உணர்வுடனேயே திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. இதே போன்று குடியிருப்பு பகுதிகளில் பூங்காக்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில வேறு எந்த கட்டிடத்தையும் , வணிக வளாகங்களையும் அனுமதிப்பது இல்லை. இதற்க்கு முக்கிய காரணம் மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் காட்டும் அக்கறை தான். ஆனால் தமிழகத்திலோ அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் மரங்கள் கணக்கில்லாமல் வெட்டப்படுகின்றன. பூங்காக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை வணிக வளாகங்கள் கட்டி கட்சிக்கரர்களுக்கு விற்று விடுவது இல்லை. மக்கள் விழிப்படைந்து பொங்கி எழுந்தால் தான் , இது போன்ற இயற்கை அழிவுகளை தடுக்க முடியும். இயற்கை ஆர்வலர்கள் தடுக்க முயன்றால் அரசின் அடக்குமுறைகளை எதிநோக்க வேண்டுமே என்ற
By jeyachandran s. dindigul
8/23/2010 3:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக