செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

காந்தி மியூசியத்தை புதுப்பிக்க 2.50 கோடி நிதி


மதுரை, ஆக. 23:   மதுரை காந்தி மியூசியத்தைப் புதுப்பிக்க முதல்கட்டமாக மத்திய அரசு  2.50 கோடி நிதி அளித்துள்ளது.  இதனையடுத்து, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜயந்தி முதல் பணிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ராணிமங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடத்தில், 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.  இதில், காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள், காந்தியடிகள் பயன்படுத்திய கண் கண்ணாடி, காலணி மற்றும் அவர் சுடப்பட்டபோது அணிந்திருந்த ஆடைகள் (ரத்தம் படிந்த நிலையில்) உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே காந்தியடிகளின் நினைவாக, முதன்முதலில் மதுரையில்தான் மியூசியம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகே புதுதில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் மியூசியங்கள் ஆரம்பிக்கப்பட்டன. முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டதால், மதுரை காந்தி மியூசியத்துக்கு இந்திய அளவில் ஏராளமானோர் தினமும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில், மியூசியத்தை புதுப்பொலிவுடன் ஆக்க, அதன் நிர்வாகக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, 2009-ல் தமிழக அரசின் பரிந்துரையின்படி, மத்திய அரசின் கலை, பண்பாட்டுத்துறையிடம்  5 கோடி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. மியூசியத் தலைவர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தலைமையிலான குழுவினர், கோரிக்கையை விடுத்து அதற்கான முயற்சியை மேற்கொண்டனர். இந்த நிலையில், மியூசியத்தை மேம்படுத்தும் பணியில் பொதுமக்கள் பங்களிப்பாக  62 லட்சம் திரட்டவும், மதுரை என்எம்ஆர் சுப்புராமன் அறக்கட்டளை மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தற்போது 30 லட்சம் திரட்டப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் மியூசியத்தை புதுப்பிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு முதல்கட்டமாக  2.50 கோடி அளித்துள்ளது.  இந்த நிதி மூலம், மியூசியத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கை மழை, வெயிலுக்கு பார்வையாளர் அமரும் வகையில் மாற்றி அமைக்கவும், மியூசிய வளாகத்தில் புல்வெளிகளை அமைத்து அழகூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும், மியூசிய வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையைப் புதுப்பிக்கவும், புத்தகக் கடை, நூலகத்தை நவீனமயமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காந்தி மியூசியம் வெள்ளை நிறத்தில் உள்ள நிலையில் இதை பழைய வண்ணமான பொன்நிறத்துக்கு மாற்றவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதையும் மியூசிய நிர்வாகிகள் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. இச்சீரமைப்பு பணிகள் குறித்து மியூசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் மு. மாரியப்பனிடம் கேட்டபோது, காந்தி ஜயந்தி அன்று சீரமைப்புப் பணிகளைத்  தொடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறியாளர் மூலம் மியூசிய வளாகத்தை நவீனப்படுத்தத் திட்டம் தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது என்றார்.
கருத்துக்கள்

பொள்ளாச்சியார் தலைமை ஏற்கும் முன் பல்வேறு ஊழல்கள் நடைபெற்ற இடமாகக் காந்தி அருங்காட்சியகம் விளங்கியது. காந்தியின் பெயரில் உள்ள அமைப்பு என்ற போர்வை ஊழலுக்குத் துணை நின்றது. பணியாளர்கள் பலருக்கு முறையான ஊதியம் அளிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. தேசியச் சிறுவர் மன்றத்திடம் இருந்து அறிவியல் பூங்கா அமைத்ததிலும் ஊழல். எனவே, தற்போதைய பொறுப்பாளர்கள் ஊழல்களைக் களைந்தும் ஊழல் புரிந்தோருக்குத் தண்டனை வழங்கியும் காந்தி அருங்காட்சியகத்தைத் தூய்மையான அமைப்பாக மாற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக