திங்கள், 2 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 2

 அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 1 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 2

காதல் விடுமையா? பாலியல் விடுமையா?

கிளாரா செட்கினுடன் பாலியல் சிக்கல்கள் குறித்து உரையாடுகிறார் மா இலெனின். இந்த உரையாடலின் போக்கில்தான் “கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு” எனும் பாலியல் விடுமைக் கொள்கை பற்றிப் பேசுகிறார்.

இளைஞர்கள் பலரும் தாங்கள் நம்பும் பாலியல் விடுமைப் போக்குதான் புரட்சியமானது என்று நம்புகின்றனர். இதுதான் பொதுமைத் தனமானது (கம்யூனிசுட்டுகளுக்குரியது) என்றும் புரிந்து கொள்கின்றனர். இலெனின் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. எம்மைப் போன்ற  [அல்லது நம்மைப் போன்ற?] வயதானவர்களை இது ஈர்க்கவில்லை என்று சொல்லும் போது இலெனினுக்கு 50 வயதிருக்கலாம். கிளாராவுக்குக் கிட்டத்தட்ட 63. இலெனின் எச்சரிக்கையாகச் சொல்கிறார்:

“அடியேன் ஒன்றும் வாழ்க்கையை வெறுத்து விட்ட துறவி அல்லேன். ஆனால் இந்த இளைஞர்களின் — சிலநேரம் முதியவர்களின் — ‘புதிய பாலியல் வாழ்வு’ எனப்படுவது முழுக்க முழுக்க முதலாண்மைத்தனம் என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது, இது முதலாண்மைய விலைமாதர் விடுதிகளின் நீட்சிதான் எனத் தோன்றுகிறது. இதற்கும் பொதுமையராகிய நாம் புரிந்து கொண்டுள்ள காதல் விடுமைக்கும் பொதுவானது ஒன்றுமில்லை.”

காதல் விடுமை வேறு, பாலியல் விடுமை வேறு. இதைத்தான் கிளாராவிடம் இலெனின் விளக்கிச் சொல்கிறார். பாலியல் விடுமையை வலியுறுத்தும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாட்டைக் குறிப்பிட்டு “இது நம் இளையோரை வெறி கொள்ளச் செய்து, இளம் ஆண்பெண்களின் அழிவுக்குக் காரணமாகியுள்ளது என்று வருத்தப்படுகின்றார். காதல் விடுமைக்கு மாறான பாலியல் விடுமைக் குளறுபடிக்குப் பூசப்படும்  மார்க்குசிய வண்ணப் பூச்சை இலெனின் உரித்தெறிகின்றார்.

இது என்ன வகையான மார்க்குசியம்? குமுகத்தின் [சமூகத்தின்] கருத்தியல் மேல்கட்டுமானத்தில் ஏற்படும் நிகழ்வுகள், மாற்றங்கள் அனைத்துக்கும் பொருளியல் அடிப்படையைக் காரணங்காட்டும் இவ்வகையான ‘மார்க்குசியம்’ காட்டுவது போல் இந்தச் சிக்கல் அவ்வளவு எளிமையானதன்று. மெய்யியல் அறிஞர் பிரெடெரிக்கு எங்கெல்சு நெடுங்காலமுன்பே வரலாற்றுப் பொருண்மியம் [‘வரலாற்றுப் பொருள்முதல்வாதம்’] தொடர்பாக இந்த உண்மையைச் சுட்டிக்காட்டினார் என்று இலெனின் நினைவுபடுத்துகிறார்.

“இந்தக் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு மார்க்குசியத்துக்கு அறவே புறம்பானது, மேலும் குமுகப் பகையான [சமூக விரோதமான] ஒன்று பாலியல் வாழ்வில் கருத்தில் கொள்ள வேண்டியது இயற்கை மட்டுமன்று. பண்பாட்டுத் தனித்தன்மைகளும்தாம். அவை உயர்வானவையா, கீழானவையா என்பதையும் கருதிப் பார்க்க வேண்டும்.” என்கிறார் மா இலெனின்.

பொதுவான பாலியல் வேட்கை தனியொருவரின் பாலியல் காதலாக வளர்ந்து செம்மையுறுவது எவ்வளவு முகன்மையானது என்பதை பிரெடெரிக்கு எங்கெல்சு குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற புகழார்ந்த நூலில் எடுத்தியம்பினார். எங்கெல்சின் இந்த விளக்கத்தின் அடிப்படையில் பாலியல் விடுமைப் போக்கை –– கோப்பைத் தண்ணீர்க் கோட்பாட்டை —  இலெனின் குற்றாய்வு செய்வதை நாளை பார்ப்போம்.

இப்போதைக்கு ஒன்று: திருக்குறளில் அறம், பொருள் போலவே காமம் அல்லது இன்பத்துக்கும் நம் திருவள்ளுவப் பெருந்தகை தந்த இடத்தை எண்ணிப் பார்க்கிறேன். அவருக்குக் காவி உடுத்திக் காட்சிப்படுத்தும் கயவர்களின் கொலை வெறியை என்னென்பீர்! பாலியல் வேட்கையையும் அவ்வேட்கையின் நிறைவையும் அவர் போல் சுவைமிளிர வண்ணிக்க [வர்ணிக்க அல்ல, வண்ணிக்க] எவருளர்? குறளில் மிகவும் வலியுறுத்தப்படுவது பாலியல் விடுமையா? காதல் விடுமையா? என்பதற்கு ஒரு பட்டிமண்டபம் தேவையா?

தமிழ் என்ற சொல்லே இல்லாமல் தமிழ்மக்களின் அறநெறி வகுத்தது போலவே, காதல் என்ற சொல்லே இல்லாமல் காதல் நெறி போற்றியவர் நம் வள்ளுவப்பெருந்தகை.

தம் பிள்ளைகளின் காதலை ஏற்க மறுக்கும் தமிழாசிரியர் இருப்பின் அவரிடமிருந்து திருக்குறளைப் பறித்து விடுங்கள்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 2

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 1

 அகரமுதல






தோழர் தியாகு எழுதுகிறார் – முன்னுரை

இனிய அன்பர்களே!

தாழி மடலுக்கு நான் எந்த வரம்பும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த ஊடகம் இடமளிக்கும் வரை உள்ளடக்கத்தை விரிவாக்கிக் கொள்ள முடியும்.

தாழி மடலில் தன்வரலாறு, பிறர் வரலாறு, தன்னாட்டு வரலாறு. பன்னாட்டு வரலாறு, பொருளியல், அரசியல், மெய்யியல், கலை இலக்கியம், ஐயந்தெளித்தல், ஐயந்தெளிதல் இன்னும் என்னவெல்லாம் முடியுமோ இடம்பெறச் செய்வோம். சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள், விலங்கிற்குள் மனிதர்கள் … இவற்றின் தொடர்ச்சியாக எழுத வேண்டியவை ஏராளம். சொல்லடித்தல் என்று நான் குறிப்பிடும் புதிய சொற்களின் உருவாக்கம். செவ்வகராதி படைக்க வேண்டும். அரைகுறையாக நிற்கும் தூய தமிழாக்க முயற்சிகள் தொடர வேண்டும். பழைய, புதிய நூல்களின் அறிமுகம். எழுதுபொருளுக்கு எல்லை என்பதே இல்லை! நீங்களும் முன்மொழியலாம். எழுதலாம்.

தாழியில் வெண்ணெய்த் தாழியும் உண்டு. முதுமக்கள் தாழியும் உண்டு. எதுவானாலும் உடையும் வரைதான் அல்லது புதையும் வரைதான். விரைந்திடு தோழா! என்பது எனக்கான என் கட்டளை!

தோழர் தியாகு எழுதுகிறார் 1

கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு

(இப்படி ஒரு பாலியல் கொள்கை?)

பொதுமைக் குமுகத்தில் பாலியல் விருப்பங்களையும் காதலையும் நிறைவு செய்து கொள்வது எப்படி இருக்கும்? அது சிக்கலற்றதாக இருக்கும்; எளிமையானதாக இருக்கும். கோப்பைத் தண்ணீர் அருந்துவது போல் அவ்வளவு எளிமையானதாக இருக்கும். முகன்மையற்றதாக (‘சர்வ சாதாரணமானதாக’) இருக்கும். அலட்டிக் கொள்ள வேண்டியிராத ஒன்றாக இருக்கும். பாலியல் தொடர்பான இந்தக் கொள்கை — இந்தக் கோட்பாடு — கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு (glass of water theory) எனப்படுகிறது.

பொதுமைக் குமுகத்தில் இதுதான் பாலுறவுக் கொள்கை என்றால், பொதுமைக் குமுகத்தைக் குறிக்கோளாகக் கொண்டு உழைத்திடும் பொதுமையரின் பாலுறவுக் கொள்கையும் இப்படி இருப்பதுதானே இயல்பு? பாலியல் விடுமைக்காரர்கள் இப்படித்தான் கேட்கின்றார்கள். பாலுறவு தொடர்பான இந்தப் போக்கு பொதுமைக் கொள்கை என்றும் புரட்சிக் கொள்கை என்றும் போற்றப்படும் நிலை ஏற்பட்டால் என்னாகும்?

பாலியல் விடுமை (sexual freedom) என்ற பெயரால் இந்தக் கொள்கையை முன்னிறுத்துவோர் உண்டு. இப்படி முன்னிறுத்தும் அனைவரும் சொந்த வாழ்வில் பாலியல் விடுமையைக் கடைப்பிடிக்கிறவர்களாக இருப்பார்களோ என்று ஐயுற வேண்டா. ‘கற்புநிலை’யில் கண்டிப்பாக இருந்து கொண்டே நேர்மையாகவும் உண்மையாகவும் பாலியல் விடுமையை ஒரு கொள்கையாக வலியுறுத்துகிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

‘பாலியல் விடுமை’ குறித்தும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு’ குறித்தும் உருசியப் புரட்சியின் தலைவர் மா இலெனின் பேசியுள்ளார். நெருங்கிய நண்பரும் அணுக்கத் தோழருமாகிய கிளாரா செட்கினுடன் உரையாடும் போது இலெனின் கூறிய பல செய்திகளையும் அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புகளில் கிளாரா சுவைபடப் பதிவு செய்கிறார். நினைவுக் குறிப்புகளின் இந்தப் பகுதிக்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு: ‘பெண்கள், மணவாழ்வு, பாலியல்’ என்பதாகும். இலெனின் சொல்வதைக் கேட்போம்:

புரட்சி நடந்து முடிந்து விட்டது. பாலுறவுச் சிக்கல்கள் தொடர்பில் ‘ஒழுக்கம் பற்றிய முதலாண்மைப் பார்வைகளை’த் திருத்தியமைக்கும் துடிப்பு நிறைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. போரும் புரட்சியும் நடந்த நிலைமைகளில் பழைய கருத்தியல் விழுமியங்கள் மறைந்து போயின, அல்லது நம்மைக் கட்டிப் போடும் படியான ஆற்றலை இழந்து விட்டன. போராட்டப் போக்கில் புதிய விழுமியங்கள் மெல்ல மெல்ல உருப்பெற்று வருகின்றன. மாந்தர்களிடையிலான –– ஆணுக்கும் பெண்ணுக்குமான —உறவுகளில் உணர்ச்சிகளும் எண்ணங்களும் புரட்சிய மாற்றங்கள் அடைந்து வருகின்றன. தனியொருவரின் உரிமைகளுக்கும் முழுமையின் உரிமைகளுக்கும் இடையே — தனியொருவர்களின் கடமைகளில் — புதிய எல்லைகள் வரையப்பெறுகின்றன. இது தொடர்பில் ஒரு குழப்பநிலை காணப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் சட்டென்று நடந்து விடாது. இது பையப்பைய நடந்தேறுகின்ற ஒன்று. இது வலிநிறைந்த செயல்வழி.

குறிப்பாகச் சொன்னால் பாலியல் உறவுமுறைகள், மணவாழ்வு, இல்லறம் (குடும்பம்) — இவற்றில்தான் மாற்றத்தின் வலி கூடுதலாக உள்ளது.

முதலாண்மை+ (முதலாளித்துவ) மணவாழ்வின் சீர்கேடு பற்றி இலெனின் குறிப்பிடுவது இன்றைக்கும் நமக்குப் பொருத்தப்பாடு கொண்டுள்ளது. நமக்குள்ள சாதி மதச் சிக்கல் இந்தச் சீர்கேட்டை இன்னுங்கூட மோசமாக்கி விடுகிறது.

சீர்கேடு! ஊழல்! குப்பை! — இலெனின் சீறுகிறார்; முதலாண்மை (முதலாளித்துவ) மணவாழ்வை இப்படித்தான் சாடுகிறார். ஆணுக்கு விடுமை! பெண்ணுக்கு அடிமைத்தனம்! பாலியல் ஒழுக்கம், பாலுறவுகள் குறித்து வஞ்சகப் பொய்மை! இதைப் பார்க்கும் போது துடிப்பான நல்ல உள்ளம் கொண்டோர், உயர்வானவர்கள் ஆழ்ந்த அருவருப்பு அடைவார்கள்.

முதலாண்மை மணவாழ்வின் கட்டுத்தளையும் முதலாண்மை அரசுகளின் இல்லறச் (குடும்ப) சட்டங்களும் இந்தக் கேடுகளையும் பூசல்களையும் கடுமையாக்கி விடுகின்றன. புனிதமான தனிச் சொத்துடைமையின் வலிமை அப்படி! காசுக்கு விலைபோவதை, கெட்டழிவதை, இழிசெயல் செய்வதைப் புனிதமாக்கி விடுகின்றன. முதலாண்மைக் குமுகத்துக்கே உரிய வாடிக்கையான பொய்மை வேறு.

இந்த அழுகலுக்கும் போலித்தனத்துக்கும் எதிர்ப்பு தலைதூக்கி வருகிறது. தனியொருவரின் உணர்ச்சிகளில் விரைவான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. வலிமைபொருந்திய பேரரசுகள் ஆட்டம் கண்டு, பழைய ஆட்சிமுறைகள் முறிவடைந்து வரும் நேரத்தில், ஒரு குமுக உலகம் முழுவதும் மறைந்து வரும் நேரத்தில், இன்பம் துய்க்கும் விருப்பமும் வேட்கையும் கட்டுக்கடங்கா வேகம் பெறுவது எளிதாகிறது. பாட்டாளியப் புரட்சிக்கு இணையாகப் பாலுறவிலும் மணவுறவிலும் ஒரு புரட்சி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சிக்கல்கள் பின்னிக் கிடக்கின்றன. இதனால் இளைஞர்கள், இளம் பெண்களின் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள தவிப்பு எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதே என்கிறார் இலெனின். இக்காலத்தில் (அவர் காலத்திலும் நம் காலத்திலும்) இளையோர்க்குப் பாலியல் மனக்குறைகள் உள்ளன. அகவைக்கே உரிய வேகத் துடிப்புடன் அவர்கள் கலகம் செய்வதைப் புரிந்து கொள்ளலாம் என்கிறார்.

இந்த இளைஞர்களிடம் போய், முற்றுந்துறந்த முனிவர்களாக இருக்கச் சொல்வது, அழுக்கடைந்த முதலாண்மை ஒழுக்கத்தை அறிவுறுத்துவது…. இதை விடப் பெரிய பொய்மை வேறில்லை என்கிறார் இலெனின். பாலுணர்வு உடல்வகையில் வெளிப்படும் அகவையில் அதுவே மனத்தின் முதற்கவலை ஆகி விடுமானால் பெரிதும் கவனத்துக்குரியது.

அப்படியானால், என்ன சொல்ல வருகிறார் இலெனின்? பாலியல் விடுமைதான் தீர்வு என்கிறாரா? ‘கோப்பைத் தண்ணீர்க் கொள்கை’யைப் பரிந்துரைக்கிறாரா? நாளை சொல்கிறேன்.

+முதலாளித்துவத்திற்கு முதலிய என்னும் சொல்லைத் தோழர் தியாகு கையாள்கிறார். பொருட்குழப்பம் வரலாம் என்பதால் அவருடன் கலந்துபேசி முதலாண்மை எனக் குறித்துள்ளேன்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 1

சனி, 31 டிசம்பர், 2022

நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 





நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

நானிலம் சிறக்கவே

நன்னெறி காணவே

நலம் திகழவே

வளம் நிறையவே

அல்லன அழியவே

நல்லன பெருகவே

நல்லோர் உயரவே

இல்லார்க்கும் வல்லார்க்கும்

நல்லார்க்கும் பொல்லார்க்கும்

எல்லார்க்கும் வாழ்த்துகள்

நடைமுறை யாண்டில்

என்றென்றும் வாழிய!

– இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் – இரா. திருமாவளவன், மலேசியா

 அகரமுதல




மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும்

எதிர்மறை நேர்மறை என மறையைச் சேர்த்து எழுதும் சொல்லும் வழக்கைச் சிலர் ஆள்கின்றனர்.  இவற்றுள் நேர்மறை எனச் சொல்வது சரியா?

சரியா பிழையா என அறிய, மறையில் மறைந்துள்ள நுட்பப் பொருளை அறிந்தால் கட்டாயம் தெளிவுறும்..

எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு வேர்ச்சொல் விளக்கமேயாகும்…

உல் எனும் ஊகாரச் சுட்டு ஆணிவேர், பல்வகைக் கருத்துகளைத் தந்து சொற்களைப் பிறப்பிக்கும் என்பது பாவாணரின் கோட்பாட்டு விளக்கமாகும்.

அக்கருத்துகளில் ஒன்றே வளைவுக் கருத்தாகும்.

பாவாணர் வித்தினின்று முளைவிட்டு கிளம்பிய ஆணிவேரின் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே வேர்ச்சொல்லின் வழியிலான சொற்பிறப்பியலையும் கண்டறிந்தார். இது இருவகைக் கண்ணறைகளின் நகரும் நகரா இயற்கை அறிவியலையும்  விளக்கியுரைக்கும் நுட்பம் வியப்புக்குரியதே.

வேர் நீரைத் தேடி நகர்கையில் முன் தட்டுப்படும் பொருளின் உறுதித் தன்மைக்கேற்ப, அதனைத் தாண்டலாம்; துளைக்கலாம்; அல்லெனில் வளையலாம். வளைந்து திரும்பலாம்.

வளைதலுக்கு முன் முட்டுப்பட்ட வேரின் நேர் நகர்வு முடங்கும், முடங்கிய நகர்வு வளைதலால் தொடரும்; ஆனால் அது வளைவு பெற்ற நகர்ச்சியாகும்.

எனவே, வளைதலால், வளைவு, வட்டம், கோணல், கோடல், நேர் எதிர் திரும்பல், வருதல் முதலானப் பல்வகைக் கருத்துகள் பிறக்கும்.

அவ்வாறு வளைதலால் எதிர் நிலைக் கருத்தை உணர்த்திப் பிறந்த சொல்லே மறை என்பது.

உல்> முல்> மல்> மறு.

வளைந்து எதிர் நிலைக்குத் திரும்பியதால் முந்தைய செல்கைக்கு எதிர்முகமாய் நிற்பது. இது முரணி மறுத்தல் கருத்தை உணர்த்தியது.

முரண் என்பதுவும் அவ்வாறு எதிர்நின்ற கருத்தை உணர்ததும் வளைவுப் பொருள் வேர் விளைச்சலே.

உல்> முல்> மல்>மறு > மறை

இங்கே மறை மறுப்புப் பொருளை உணர்த்தி நிற்கும். எதிர் நிலையில் நின்று மறுத்தலால் எதிர்மறை ஆயிற்று.

வளைவே வட்டமுமாகும். வட்டமாய்ச் சுழன்று சுழன்று வருவது சுழற்சியாகவும் சுழற்சி ஒழுங்கெனவும் கொள்ளப்பெற்றது. சுழற்சியாய் ஓர் ஒழுங்கிற்குள் அமையும் அனைத்து  வினைகளும் வட்டப் பொருளையே தந்தன.

தடவை, தாட்டி, வாட்டி, சுழற்சி , முறை என அமைந்த சொற்கள் அனைத்தும் வட்டப் பொருளைத் தந்தனவே.

உல்> முல்> முறு > முறை = சுழற்சியாய் அமைந்த ஒழுங்கு.

முறு > முறுக்கு = வளைத்து நெளித்தல்

( முருகன் எனும் பெயர்ச்சொல்லின் வேர்  வளைதல் பொருளைத் தராது. அது தோன்றல் வேர்கருத்தை அடியாகக் கொண்ட இளைமைக் கருத்துச் சொல்லாகும். )

நேர்முறை என்பது நேரியவாறு அமைந்த ஒழுங்கமைவு எனப்பொருளாகும்.

இங்கு மறையும் முறையும் ஒரே வேர் கருத்தினின்று  பிறப்பினும் ஒன்று மறுப்பையும் மற்றொன்று ஒழுங்கமைவையும் குறிப்பதாகும்..

வளைவுப் பொருளில், மறுத்தல் , திரும்பல் கருத்தில் பல்வேறு சொற்களைப் பட்டியலாய்க் காணலாம்..

மறு, மறை, மாறு, மாற்று, மற்று, மற்றை , மறுபடி, மறுக்களி, மற்றொன்று, மற்றப்படி, மற்றவர், மாற்றான் முதலியன வளைதல் கருத்தில் மறுதலைப் பொருளைத் தருவனவே.

மறை கலங்கல் கருத்து வேரிலிருந்து கருமைப் பொருளைத் தந்து இன்மைப் பொருளைத் தந்தும் இயங்கும். ஒரே சொல் ஒரே வேரில் பிறப்பினும் இரு வேறு கருத்தில் பிறந்ததுவால் இருவேறு பொருளைத் தந்து விளங்கும்.

உல் > சேர்தல் கருத்தைத் தரும் வேர்.

முன் விளக்கப்பட்டது போல்  வேர், முன்னோக்கி நகர்ந்து முட்டுப்படும் பொருளோடு ஒட்டுவதை, சேர்வதை, கலப்பதை விளக்குவதே கலத்தல் அல்லது சேர்தல் கருத்து வேராகும்.

சேரல், கலத்தல், பொருந்தல், இணைதல், கரைதல் அனைத்தும் இக்கருத்துப் பற்றியனவே.

பக்கவேரினின்று கிளைவேர்களும் சல்லி வேர்களும் பிறப்பது போல் சொற்களுக்குள்ளும் கிளைக் கருத்துகளைத் தரும் சொற்களும் பிறக்கும்.

தெளிந்த நீரில் பிற கலந்தால் அல்லது கிண்டி கலக்கினால்  கலங்கல் உருவாகுவது போல் சேர்தலால் கலங்கல் கருத்து உருவாகும். கலங்கியது கருக்கலாகும் அல்லது கருமையாகும் . கலங்கிய கருக்கலில் தெளிவற்ற இருண்மை உருவாகி உட்பொருள் தெரியாதும் போகும். தெளிவற்றுத் தெரியாது போதலே மறைதல்.

உல்> முல் > மல் = கருமை கருத்து வேர்.

உல்> முல்> மல் > மய் > மை = கருமை

உல்> முல்> மல் > மால் = கருமை நிறம், திருமால்

உல்>மல் > மால் > மார் > மாரி  = மழை

உல்> முல்> மல் > மால்> மாய் > மாயம் = மறைவு

மாய் > மாயோன்

மல்> மய்> மயக்கம் = கலக்கம், குழப்பம், தலைச்சுற்றல்

உல்> மல் > மறு > மறை = காணாதிருத்தல், ஒளித்தல்

மறை = பிறர் அறியாதவாறு  ஒளித்தல்,

கள்ளர் அறியாவண்ணம் விலை உயர் பொருட்களை மறைத்து வைத்தலால் , மறை காத்தல் பொருளையும் கிளைக்கருத்தாய்த் தந்தது.

உயர் கருத்துகளைப் பொதித்து வைத்திருப்பதால் அரிய நூல்கள் மறை நூல்கள் எனப்பட்டன. அத்தகு கருத்துகள் மறைபொருள், மறைமொழி  எனவும் கூறப்பட்டன.

மறைமொழி தாமே மந்திரம் என்ப எனத் தொல்காப்பியமும்

நிறைமொழி மாந்தர் மறைமொழி என வள்ளுவமும் மறை பற்றி விளக்கியுரைப்பதைக் காணலாம்.

எதிர்மறையில் அமைந்த மறையும் மறைமொழியில் அமைந்த மறையும் ஒருபொருளனவல்ல.

எதிர்மறை போல் நேர்மறை எனல் தவறே.

நேர்முறை எனல் நேரொழுங்காகும். எதிர்மறை , எதிர்நின்று மறுதலையாய் அமைவது. நேர்மமும் எதிர்மமும் நேர்மை எதிர்மை போல் அமைவன. நேரியப் பண்பு நேர்மை , மறுதலைப் பண்பு எதிர்மை.

நேர்மம் நேரிய சிந்தனை

எதிர்மம்  முரணிய சிந்தனை

மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் ஓரே வேரினின்று இருவேறு கருத்தாய்த்  தெளிவுறுவதை வேர்ச்சொல் ஆய்வால் உணரலாம்.

– இரா. திருமாவளவன், மலேசியா

வியாழன், 29 டிசம்பர், 2022

உலகத்தமிழ்ச்சங்கம், நூல் அரங்கேற்றம்

 அகரமுதல


நூல்கள் அரங்கேற்றம்

மார்கழி 14, 2053 – 29.12.2022 வியாழன் முற்பகல் 10.00

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

கவிஞர் ச.கசேந்திரன், கவிஞர் பொன்.சந்திரன், எழுத்தாளர் கா.புவனேசுவரி, எழுத்தாளர் சோ.பரமசிவம், ஆய்வாளர் சோழ.நாகராசன் ஆகியோரின் நூல்கள் அரங்கேற்றம் மதிப்புரைகளுடன்.



சனி, 24 டிசம்பர், 2022

தி.சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா, மதுரை

 அகரமுதல




நாள்: மார்கழி 11, 2053 திங்கள் 26.12.2022 மாலை 5.00

இடம்: அரபிந்தோ மீரா பதின்மப் பள்ளி, மதுரை 625016

திப்புசுல்தான்  சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா

தலைமையும் நூல் வெளியீடும்: முனைவர் சா.குமார்

துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

நூலறிமுகம்: முனைவர் நிருமலா மோகன்

சிறப்புரை: முனைவர் மு.கிருட்டிணன், துணைவேந்தர், மத்தியப்பல்கலைக்கழகம், திருவாரூர்

வாழ்த்துரை, வரவேற்புரை, நன்றியுரை: அழைப்பிதழில் உள்ளவாறு பலர்

ஏற்புரை: நூலாசிரியர் திப்புசுல்தான் சபருல்லா