இரா. திருமாவளவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரா. திருமாவளவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜனவரி, 2023

தமிழன் வாயில் .. … வேண்டாத வடநாட்டு ‘ஜி’- இரா. திருமாவளவன்

  அகரமுதல





தமிழன் வாயில் .. … வேண்டாத வடநாட்டு  ‘ஜி’

ஆர் எசு எசு-இன் சூழ்ச்சியை உணர்ந்து தமிழ்நெறியைக் காப்பீர்!

இக்கால் அடிக்கடி ‘ஜி’ எனும் சொல்லினைப் பல இடங்களில் கேட்க முடிகிறது. வடநாட்டில் வடவர்கள் ஒருவரை ஒருவர் மதிப்போடு அழைத்துக்கொள்ளப் பயன்படுத்துகின்ற ‘ஜி’யை இன்று தமிழர் சிலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

சுவாமி’ஜி’, குரு’ஜி’, குமார்’ஜி’, இராதா’ஜி’, இராமா’ஜி’… என ‘ஜீ’…நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குட்டிப் போட்டு வருகின்றது..

இந்தியாவின் ஆர் எசு எசு( RSS) … இந்தியாவில் மட்டும் தன் கைவரிசையைக் காட்டவில்லை . தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியாவிலும் தன் சித்து வேலையைத் தொடங்கியிருக்கிறது..

அதற்கு இங்குள்ள இந்து அமைப்புகள் வழியமைத்துக் கொடுத்துள்ளன.

தமிழ்ப்பள்ளிகளில் சமயப் பாடம் எனும் போர்வையில் ஆர் எசு எசின் உச்சிக்கொண்டை தெளிவாகத் தெரிந்தாலும் அதைத் தெளிவாக அறியக் கூடிய நிலையில் தமிழர்கள் இல்லை. அதற்கு அவர்கள் தமிழர்கள் என்பதை விட இந்துவாக எண்ணிக் கொண்டிருப்பதே கரணியமாகும். தமிழர்கள் என எண்ணினால் தமிழ்வழி தமிழிய வழிச் சிந்தனை வாழ்வு இருக்கும். இந்துவாக எண்ணுவதால்..ஆரிய இந்துத்துவ சிந்தனை வழியே மேலோங்கி இருக்கிறது. எனவே தான் ‘ஜீ’க்களும் ‘ஶ்ரீல ஶ்ரீ’க்களும் முகத்தை மிகத் துணிச்சலாகக் காட்டுகின்றன.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவர், இந்த இந்துவப் பயிற்சியாளரிடம் ஏன் வேண்டாத, எங்களுக்குப் புரியாத சமற்கிருதத்தைத் திணிக்கிறீர்கள் என்று கேட்க, உங்களுக்குச் சங்க இலக்கியப் பாடல் புரிகிறதா , புரியாத சங்க இலக்கியத்தை ஏற்றுகொள்ளும் போது சமசுகிருதத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் என்றாராம்.. அட கெடுமதியாளர்களே! கழக இலக்கியப் பாடல்கள், எங்கள் தாய்மொழிப் பாடல்கள்; அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது என்றால் தமிழனே தமிழை விட்டு அகன்று அயல்மொழியின் தாக்கம் கொண்டதுதான் கரணியம். அதுவும் இந்தக் கேடுகெட்ட சமசுகிருதத் தாக்கத்தால்தான். சமசுகிருதம் தமிழருக்கு அயல்மொழி . அயல் மொழி நமக்குப் புரியாமல் போவதில் வியப்பொன்றும் இல்லையே. கழக இலக்கியங்கள் முழுக்க முழுக்கத் தமிழில் எழுதபட்டவை தமிழரின் தாய்மொழி. கொஞ்சம் முயன்றால் இயல்பாக விளங்கி விடுமே.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”  கழக இலக்கியப் பாடல்தானே .. விளங்கவில்லையா. எனவே கழக இலக்கியத்தோடு சமசுகிருதத்தை ஒப்பிடலாமா? சமசுகிருதம் நமக்கு விளங்கினால் என்ன விளங்காமல் போனால்தான் என்ன ? அந்த மொழியை ஏன் எங்களிடத்துத் திணிக்க வேண்டும்?

தமிழில் அத்தன் என்பது முதன்மையான அப்பனுக்கு உள்ள மற்றொரு சொல்லாகும். அத்தன் திரிபுற்று அச்சன் என்றாகும். இதுவே மலையாளத்தில் வழங்குகின்றது. அத்தன் அச்சனாகி அச்சன் அச்சியாகி அச்சி சீயாகிச் சிதைந்து இறுதியில் வடமொழியில் ‘ஜீ’ யாகியது என்பார்.. பன்மொழிப்புலவர் பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்கள்.

சீவன் எனும் சொல்லின் சிதை வடிவம் என்று கூறுவார் உளர்.

ji

/dʒi/

combining form INDIAN

suffix: -ji

                1              used with names and titles to show respect.”Lalitaji”



Origin

via Hindi from Sanskrit jīva, 2nd singular imperative of jīv- ‘to live’, from an Indo-European root shared by Latin vivere ‘to live’.

என இதற்கு விளக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிவணுதல் என்பது இயைதல், பொருந்துதல் எனப் பொருள் விளக்கம் தரும். உடலோடு சிவணி, சிவ்வியிருப்பதே சீவனாயிற்று. எனவே உயிரைக் குறிக்கும் சமற்கிருதச் சொல்லாகக் கருதப்படும் சீவனும் தமிழ்ச் சிவணின் மருவலே. இவ்வுண்மை அறியாமலும், உணராமலும் இச்சொல்லுக்கு மூலம் சமசுகிருதம் என்பது நுணுகி ஆராயாததே கரணியமாகும். தமிழ் வேரினை மூலமாகக் கொண்டிருப்பினும் மொழிமாறி சிதைவுற்ற ஒரு சொல்லினை அப்படியே் தமிழில் ஏற்கக் கூடாது… அவ்வாறே ஒரு சிதைவடிவத்தைத் தமிழில் பயன்படுத்துவது தமிழின் கேட்டிற்கே வழிவகுக்கும் .

தமிழ்ச்சொல்லை மூலமாகப் பெற்று சமற்கிருதச் சொல்லாகவோ அயற்சொல்லாகவோ திரிந்த திரி சிதைச்சொற்களைத் தமிழில் அப்படியே ஏற்பது தெளிந்த நீரில் நஞ்சு கலப்பது போலாகி விடும்.

எடுத்துக்காட்டாக,

பூ > புஷ்பம்

அரசன் > ராஜா

திரு > ஶ்ரீ

காயம்> ஆகாஷ்

மாந்தன்> மனுஷ்யன்

கண்ணன்> கிருஷ்ணன்

தேயம்> தேஷ்

கயம்> கஜம்

இப்படிப் பல சொற்கள் தமிழில் வழங்கப்பட்டன. இன்றும் வழங்கப்படுகின்றன. தனித்தமிழியக்கத்தாரின் பேருழைப்பால் பல கலைந்தெறியப்பட்டன.

இருப்பினும்.. வடவாரிய சிந்தனைகளையும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும் புகுத்தித் தமிழரை, தமிழைச் சமசுகிருத மயப்படுத்தும் நோக்கில்  இம்முயற்சி மேலும் வலுப்படுத்தப்பட்டு தமிழில் புகுத்தப்பட்டு வருகின்றது.

இராட்டிரிய சேவா சங்கத்தில் (RSS) பயிற்சி பெற்றார் மலேசியாவிலும் இயங்குகின்றனர். ஆர் எசு எசு எனத் தெரியக்கூடாது என்பதற்காக… பல்வேறு இரவல்  முகங்களில் அவர்கள் இயங்குகின்றனர் . அவர்களால் செயற்படுத்தப்படும் செயல்களில் ஒன்றுதான் ‘ஜி’… இதை ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ‘ஜி’ யை இணைத்துக்கொள்வர்.

தமிழியத்தைச் சாகடித்து தமிழ் அடையாளத்தை இழந்து வேறு வேறு அடையாளங்களுடன் தமிழினத்தின் பெரும்பகுதி சிதைந்து கொண்டிருக்கிறது.. தமிழன் எந்தெந்த அயல் தாக்கத்தைப் பெறுகிறானோ அந்தந்த அயல் வடிவமாக மாறிக்கொண்டிருக்கிறான். தமிழனின் முதல் தாக்கம் ஆரியம் என்பதால் ஆரியத்தின் வாயிலாகவே கடுஞ்சிதைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை வரலாற்றால் தெளிவாக அறிமுடிகிறது. ஆரியத் தாக்கத்தின் விளைவே திரவிட மொழிகளின் பிறப்புகள்.. தமிழினம் இதன் வாயிலாக தனக்குள் தானே அயலினமாக மாறியது.. இன்று வேறுபட்டு கிடக்கின்றது.

இத்தகு கேடுகளைத் தமிழுக்கும் தமிழர்க்கும் விளைத்த சமசுகிருதவாக்கத்தையும் ஆரிய சனாதன வெறியையும் தமிழர்கள் ஒட்டுமொத்தமாகத் தூக்கிய எறிய கிஞ்சிற்றும் தயங்கிடல் கூடாது. தமிழர்க்கு வாழ்வியல் தமிழ்நெறியே அன்றி ஆரிய நெறியன்று.

இரா. திருமாவளவன்

சனி, 31 டிசம்பர், 2022

மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் – இரா. திருமாவளவன், மலேசியா

 அகரமுதல




மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும்

எதிர்மறை நேர்மறை என மறையைச் சேர்த்து எழுதும் சொல்லும் வழக்கைச் சிலர் ஆள்கின்றனர்.  இவற்றுள் நேர்மறை எனச் சொல்வது சரியா?

சரியா பிழையா என அறிய, மறையில் மறைந்துள்ள நுட்பப் பொருளை அறிந்தால் கட்டாயம் தெளிவுறும்..

எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு வேர்ச்சொல் விளக்கமேயாகும்…

உல் எனும் ஊகாரச் சுட்டு ஆணிவேர், பல்வகைக் கருத்துகளைத் தந்து சொற்களைப் பிறப்பிக்கும் என்பது பாவாணரின் கோட்பாட்டு விளக்கமாகும்.

அக்கருத்துகளில் ஒன்றே வளைவுக் கருத்தாகும்.

பாவாணர் வித்தினின்று முளைவிட்டு கிளம்பிய ஆணிவேரின் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே வேர்ச்சொல்லின் வழியிலான சொற்பிறப்பியலையும் கண்டறிந்தார். இது இருவகைக் கண்ணறைகளின் நகரும் நகரா இயற்கை அறிவியலையும்  விளக்கியுரைக்கும் நுட்பம் வியப்புக்குரியதே.

வேர் நீரைத் தேடி நகர்கையில் முன் தட்டுப்படும் பொருளின் உறுதித் தன்மைக்கேற்ப, அதனைத் தாண்டலாம்; துளைக்கலாம்; அல்லெனில் வளையலாம். வளைந்து திரும்பலாம்.

வளைதலுக்கு முன் முட்டுப்பட்ட வேரின் நேர் நகர்வு முடங்கும், முடங்கிய நகர்வு வளைதலால் தொடரும்; ஆனால் அது வளைவு பெற்ற நகர்ச்சியாகும்.

எனவே, வளைதலால், வளைவு, வட்டம், கோணல், கோடல், நேர் எதிர் திரும்பல், வருதல் முதலானப் பல்வகைக் கருத்துகள் பிறக்கும்.

அவ்வாறு வளைதலால் எதிர் நிலைக் கருத்தை உணர்த்திப் பிறந்த சொல்லே மறை என்பது.

உல்> முல்> மல்> மறு.

வளைந்து எதிர் நிலைக்குத் திரும்பியதால் முந்தைய செல்கைக்கு எதிர்முகமாய் நிற்பது. இது முரணி மறுத்தல் கருத்தை உணர்த்தியது.

முரண் என்பதுவும் அவ்வாறு எதிர்நின்ற கருத்தை உணர்ததும் வளைவுப் பொருள் வேர் விளைச்சலே.

உல்> முல்> மல்>மறு > மறை

இங்கே மறை மறுப்புப் பொருளை உணர்த்தி நிற்கும். எதிர் நிலையில் நின்று மறுத்தலால் எதிர்மறை ஆயிற்று.

வளைவே வட்டமுமாகும். வட்டமாய்ச் சுழன்று சுழன்று வருவது சுழற்சியாகவும் சுழற்சி ஒழுங்கெனவும் கொள்ளப்பெற்றது. சுழற்சியாய் ஓர் ஒழுங்கிற்குள் அமையும் அனைத்து  வினைகளும் வட்டப் பொருளையே தந்தன.

தடவை, தாட்டி, வாட்டி, சுழற்சி , முறை என அமைந்த சொற்கள் அனைத்தும் வட்டப் பொருளைத் தந்தனவே.

உல்> முல்> முறு > முறை = சுழற்சியாய் அமைந்த ஒழுங்கு.

முறு > முறுக்கு = வளைத்து நெளித்தல்

( முருகன் எனும் பெயர்ச்சொல்லின் வேர்  வளைதல் பொருளைத் தராது. அது தோன்றல் வேர்கருத்தை அடியாகக் கொண்ட இளைமைக் கருத்துச் சொல்லாகும். )

நேர்முறை என்பது நேரியவாறு அமைந்த ஒழுங்கமைவு எனப்பொருளாகும்.

இங்கு மறையும் முறையும் ஒரே வேர் கருத்தினின்று  பிறப்பினும் ஒன்று மறுப்பையும் மற்றொன்று ஒழுங்கமைவையும் குறிப்பதாகும்..

வளைவுப் பொருளில், மறுத்தல் , திரும்பல் கருத்தில் பல்வேறு சொற்களைப் பட்டியலாய்க் காணலாம்..

மறு, மறை, மாறு, மாற்று, மற்று, மற்றை , மறுபடி, மறுக்களி, மற்றொன்று, மற்றப்படி, மற்றவர், மாற்றான் முதலியன வளைதல் கருத்தில் மறுதலைப் பொருளைத் தருவனவே.

மறை கலங்கல் கருத்து வேரிலிருந்து கருமைப் பொருளைத் தந்து இன்மைப் பொருளைத் தந்தும் இயங்கும். ஒரே சொல் ஒரே வேரில் பிறப்பினும் இரு வேறு கருத்தில் பிறந்ததுவால் இருவேறு பொருளைத் தந்து விளங்கும்.

உல் > சேர்தல் கருத்தைத் தரும் வேர்.

முன் விளக்கப்பட்டது போல்  வேர், முன்னோக்கி நகர்ந்து முட்டுப்படும் பொருளோடு ஒட்டுவதை, சேர்வதை, கலப்பதை விளக்குவதே கலத்தல் அல்லது சேர்தல் கருத்து வேராகும்.

சேரல், கலத்தல், பொருந்தல், இணைதல், கரைதல் அனைத்தும் இக்கருத்துப் பற்றியனவே.

பக்கவேரினின்று கிளைவேர்களும் சல்லி வேர்களும் பிறப்பது போல் சொற்களுக்குள்ளும் கிளைக் கருத்துகளைத் தரும் சொற்களும் பிறக்கும்.

தெளிந்த நீரில் பிற கலந்தால் அல்லது கிண்டி கலக்கினால்  கலங்கல் உருவாகுவது போல் சேர்தலால் கலங்கல் கருத்து உருவாகும். கலங்கியது கருக்கலாகும் அல்லது கருமையாகும் . கலங்கிய கருக்கலில் தெளிவற்ற இருண்மை உருவாகி உட்பொருள் தெரியாதும் போகும். தெளிவற்றுத் தெரியாது போதலே மறைதல்.

உல்> முல் > மல் = கருமை கருத்து வேர்.

உல்> முல்> மல் > மய் > மை = கருமை

உல்> முல்> மல் > மால் = கருமை நிறம், திருமால்

உல்>மல் > மால் > மார் > மாரி  = மழை

உல்> முல்> மல் > மால்> மாய் > மாயம் = மறைவு

மாய் > மாயோன்

மல்> மய்> மயக்கம் = கலக்கம், குழப்பம், தலைச்சுற்றல்

உல்> மல் > மறு > மறை = காணாதிருத்தல், ஒளித்தல்

மறை = பிறர் அறியாதவாறு  ஒளித்தல்,

கள்ளர் அறியாவண்ணம் விலை உயர் பொருட்களை மறைத்து வைத்தலால் , மறை காத்தல் பொருளையும் கிளைக்கருத்தாய்த் தந்தது.

உயர் கருத்துகளைப் பொதித்து வைத்திருப்பதால் அரிய நூல்கள் மறை நூல்கள் எனப்பட்டன. அத்தகு கருத்துகள் மறைபொருள், மறைமொழி  எனவும் கூறப்பட்டன.

மறைமொழி தாமே மந்திரம் என்ப எனத் தொல்காப்பியமும்

நிறைமொழி மாந்தர் மறைமொழி என வள்ளுவமும் மறை பற்றி விளக்கியுரைப்பதைக் காணலாம்.

எதிர்மறையில் அமைந்த மறையும் மறைமொழியில் அமைந்த மறையும் ஒருபொருளனவல்ல.

எதிர்மறை போல் நேர்மறை எனல் தவறே.

நேர்முறை எனல் நேரொழுங்காகும். எதிர்மறை , எதிர்நின்று மறுதலையாய் அமைவது. நேர்மமும் எதிர்மமும் நேர்மை எதிர்மை போல் அமைவன. நேரியப் பண்பு நேர்மை , மறுதலைப் பண்பு எதிர்மை.

நேர்மம் நேரிய சிந்தனை

எதிர்மம்  முரணிய சிந்தனை

மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் ஓரே வேரினின்று இருவேறு கருத்தாய்த்  தெளிவுறுவதை வேர்ச்சொல் ஆய்வால் உணரலாம்.

– இரா. திருமாவளவன், மலேசியா