அறிவியல் ஆய்வகங்களில் ஒரு பொருளை அதன் வெப்பம் அல்லது குளிர்ச்சி மாறாமல் காப்பது என்பது பெரும்பாடாக இருந்தது. இதற்கு 1892இல் ஒரு தீர்வு கண்டார் அறிவியல் அறிஞர் சேம்சு திவியார் (Sir James Dewar). அவர் கண்டுபிடித்த வெப்பக்குடுவை (Thermos Flask) வெப்பத்தைப் பாதுகாக்கவும் குளிர்ச்சியைப் பாதுகாக்கவும் உதவியது. அறிவியல் உலகில் இப்படி ஒரு தேவை உள்ளதை அக்கால நம் நாட்டவர் உணர்ந்திருந்தார்கள் எனில் நம் முன்னோரைப் பின்பற்றி எளிதில் சேமக்கலனை மீள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கலாம்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குளிர்ச்சியை அல்லது வெப்பத்தை உள்ளவாறே சேமிப்பதற்குச் சேமச்செப்பு என்னும் ஒன்றைப் பயன்படுத்தி உள்ளனர் பழந்தமிழர்கள்.
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பல் பெறீஇயரோ (குறுந்தொகை 277).
என்கிறார் ஓரில் பிச்சையார் என்னும் புலவர் பெருந்தகை.
அற்சிரம்-பனிக்காலம்; வெய்ய-விரும்பத்தக்க; பெறீஇயரோ-பெறுவாயாக; பனிக் காலத்தில் விரும்பிக் குடிக்கும் வகையில் வெப்ப நீரைச் சேமித்து வைக்கும் சேமச்செப்பினைப் பெறுவாயாக எனக் குறிப்பிடுகிறார். புலவரின் பெயர் தெரியாததால் இப்பாடலில் இடம் பெறும் ஓரில் பிச்சை என்னும் தொடரின் பெயரால் ஓரில் பிச்சையார் என அழைக்கப்படுகிறார். எனவே குறுந்தொகை தொகுக்கப்பட்ட காலத்திற்கு முன்பே புலவரும் சேமச் செப்பும் இருந்திருக்க வேண்டும் எனலாம்.
சேமக்குடுவையின் அமைப்பு முறை வெவ்வேறாக இருந்தாலும் அதன் நோக்கமும் பயனும் ஒன்றுதானே! அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்களான நாமே அதை அறிந்து உணராதபொழுது அயலவர் எவ்வாறு உணர்வார்கள் என எதிர்பார்க்க முடியும்?
1902ஆம் ஆண்டு உலக மக்களை வியப்பில் ஆழ்த்தினார் அறிஞர் சகதீசு சந்திரபோசு. அவர் வெளியிட்ட உயிரினங்கள்-உயிற்றவற்றின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்னும் நூலில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றதால் குழப்பமும் வியப்பும் ஏற்பட்டு இறுதியில் உலகம் அவரைப் போற்றியது. நம்மிடம் உள்ள அறிவியல் புதையலை அறியாத நாமும் அறியாமையால் இன்று வரையும் அவ்வாறுதான் படித்து வருகிறோம். பாடல் வடிவில் உள்ள தமிழ் இலக்கிய உண்மைகள் யாவும் கற்பனையே என்னும் மாயையில் உள்ளதால் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர் தொல்காப்பியர் தமக்கும் முன்னரே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை வெளிப்படுத்தியதை உரியவாறு உலக அறிவியல் அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லத் தவறியுள்ளோம்.
ஓரறிறவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை வகைப்படுத்தி நெறிப்படுத்தியுள்ளனர் அவருக்கும் முன்னோர். அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. புல்லும் மரனும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(தொல்காப்பியம்: மரபியல் )
என வரிசையாக ஓரறிவு- ஆறறிவு உயிர்களை விளக்குகிறார்.
தமிழ்வழிக் கல்வியை நாம் இழந்ததால் நம் அறிவியல் வளத்தையும் இழந்தோம்! உலகினர்க்குத் தமிழ் அறிவியல் சிறப்பை எடுத்துரைக்கவும் தவறி விட்டோம்! அறிவியல் மேதைகளாகும் வாய்ப்புகளையும் தவற விட்டோம்! அறிவியலில் இப்பொழுதும் சிறந்திருந்தால் உலக நாடுகள் நம்மை மதித்து நம் குரல்களுக்குச் செவிமடுத்து நம் இனமக்களைக் காப்பாற்ற முன் வந்திருப்பார்கள் அல்லவா?
விலங்கு என்பது குறுக்காக நடப்பவற்றைத்தான் குறிப்பிடும். கைகளில் குறுக்காக மாட்டப்படும் சங்கிலிக்காப்பை விலங்கு என்கிறோம் அல்லவா? வளைந்த அமைப்பு உள்ளதுதானே வில். எனவே, குறுக்காக உடலுடைய உயிரினங்கள் விலங்குகள் எனப் பட்டன. எனினும் அறிவியலில் பறவை வகைகளும் விலங்கு வகையில் அடங்கும். ஏன், மனிதனே ஒரு மன்பதை விலங்குதானே! தமிழ்ப் பெருநிலப்பரப்பு, புவி அமைந்த தொடக்கக் காலத்தில் இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை இருந்தமையால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்திருந்தன. அவற்றையெல்லாம் ஆராயும் நோக்கில் மாணாக்கர் அறிவு வளம் பெருக வேண்டும். பொதுவாக இப்புவியில் வாழ்ந்த, வாழ்கின்ற சில உயிரினங்களைப் பற்றி இங்கு அறிவோம்.
தமிழில் ’மா என்றால், விலங்கு, பெரிய, மா மரம், குதிரை, மாவு, ஓர் அளவு முதலிய பல பொருள்கள் உண்டு. எனினும் ’மாப்பெயர் வகை என்னும் தலைப்பில் புள்வகை, விலங்கு வகை, பாம்பு வகை, நீர் வாழ்வன வகை முதலிய அனைத்து உயிரிகளையும் முன்னோர் குறித்தனர்.
சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள முப்பந்தைக்கும் மேற்பட்ட விலங்கு வகைகளை அறிஞர் பி.எல்.சாமி குறிப்பிட்டுள்ளார்.(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்)
அவற்றுள் குறிப்பிடத்தக்கன, குரங்குகள். வருடை, ஆமான், மான்கள், கேழல்,நரி, கோநாய், தீநாய், செந்நாய்,கரடி,வெருகு,புலி,யானை, நீர் நாய், எலி, அணில், முளவுமா, கவரிமா என்பனவாகும். கவரிமா என்பதை நாம் கவரிமான் எனக் குறிப்பிட்டு மான்வகையாக எண்ணுகிறோம். தெய்வப்புலவர் திருவள்ளுவர் ,
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். (969)
என்கிறார். தன் மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால் அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள் எனத் தவறாகக் கருதுகிறோம். கவரிமா என்பது பனிமலைப்பகுதிகளில் குளிரைத் தாங்கும் வகையில் அடர்முடியுடன் வாழும் ஆட்டினமே ஆகும். இயற்கைச் சூழலுக்கேற்ப இதன் உடல் அமைந்துள்ளது. எனவே அச்சூழலில் முடியை இழப்பின் குளிரைத் தாங்க இயலாமல் அவை மாண்டு விடும். இதையே தெய்வப்புலவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அனைத்துப் பகுதிகளிலும் அனைத்துச் சூழல்களிலும் வாழும் விலங்கின வகைகளைப் பழந்தமிழர் அறிந்திருந்தமை அவர்களின் விலங்கியல் அறிவைப் புலப்படுத்துகின்றது.
மேலும், மான், கழுதை ஆகியவற்றின் ஐந்தைந்து வகைகளையும்
குரங்கு, நாய் ஆகியவற்றின் நன்னான்கு வகைகளையும்
எலி, முதலை ஆகியவற்றின் மும்மூன்று வகைகளையும்
புலி, அணில் ஆகியவற்றின் இரண்டிரண்டு வகைகளையும்
பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன.
உயிரினங்களின் ஆண்மரபு, பெண்மரபு ஆகியவற்றின் அறிவியல் உண்மைகளையும், இவற்றின் பிள்ளைத் தன்மைகளையும் முன்னைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
விலங்குகளின் ஆண் இனமானது
உம்பல்,
ஏட்டை,
ஏறு,
ஒருத்தல்,
ஓதி,
கடுவன்,
கபடு,
கலை,
களிறு,
சே,
சேவல்
தகர்,
போத்து,
மா,
என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் விளக்கம் வருமாறு:-
இவற்றுள் ஆண்யானையானது களிறு, பகடு, ஒருத்தல், உம்பல், மா என அழைக்கப்பெற்றுள்ளமை போல், ஒரே விலங்கிற்கு வெவ்வேறு பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன.
ஒரே இனத்தின் வகைப்பாட்டிற்கு ஏற்ப இவை அமைந்து பின்னர்ப், பொதுப்பெயர்களாக மாறி இருக்கலாம். இது குறித்து ஆராய்ந்தால் நுண்ணிய வேறுபாடுகளைக் கண்டறிய வாய்ப்பு உள்ளது.
பெண்விலங்கினங்கள்
பிணை
பாட்டி
பேட்டை
பிணா
ஆ
ஆன்
பிடி
நாகு
மந்தி
மூடு
கடமை
என அழைக்கப்பெறும். இவற்றுள்ளும் ஒரே இனத்திற்கு வெவ்வேறு பெண்பால் பெயர்கள் உள்ளன.
பெண் விலங்கினங்கள் எவ்வெவ்வாறு அழைக்கப்பெற வேண்டும் எனப் பார்ப்போம்.
வரிசை எண்
உயிரிகள்
பெண்பால் பெயர்
1.
உழை, நாய், பன்றி, புல்வாய்
பிணை
2.
பன்றி, நாய், நரி
பாட்டி
3.
ஒட்டகம், குதிரை, கழுதை, மரை(மான்), சிங்கம்
பெட்டை
4.
பன்றி, புல்வாய், நாய்
பிணை
5.
எருமை, பசு, மரை
ஆ
6.
ஆ,எருமை,மரை
ஆன்
7.
கவரி, ஊகம்(கருங்குரங்கு)
பிடி
8.
மரை, பெற்றம், எருமை, நந்து, நீர்வாழ்வன
நாகு
9.
குரங்கு, ஊகம, முசு
மந்தி
10.
ஆடு
மூடு, கடமை
ஆண் பன்றி, பெண்பன்றி, ஆண் நாய், பெண் நாய், என்பன போன்று உயிரினங்கள் அனைத்தும் ஆண் அல்லது பெண் எனச் சேர்த்து அழைக்கப்பெறும். இவை போல் பெண் விலங்கினங்கள் அனைத்தும் பிணை மான் என்பது போன்று பிணை என்று சேர்த்தும்அழைக்கப் பெறும்.
ஆண் பெண் வேறுபாடின்றி விலங்கின் பிள்ளைகள் குருளை,
குட்டி,
பறழ்,
பிள்ளை,
மறி,
கன்று,
குழவி,
பார்ப்பு,
மகவு
என அழைக்கப் பெறும்.
வரிசை எண்
உயிரிகள்
பிள்ளைமைப் பெயர்
1.
புலி, முயல், பன்றி, நரி, நாய்
பறழ், குட்டி
2.
ஆடு, குதிரை, மான், அழுங்கு
மறி
3.
கலை, மான்,கழுதை, மரை, பசு, எருமை, கடமை, யானை, ஒட்டகம், கவரி, கராம்
கன்று
4.
குரங்கு போன்று மரக்கொம்புகளில் வாழ்வனவற்றின் பிள்ளைகள்
குழவி, மகவு, குட்டி, பிள்ளை, பறழ், பார்ப்பு,
5.
வெருகு, நரி, முயல்
பறழ், குட்டி
6.
தவழ்வன
பிள்ளை, பறப்பு, பறழ்
7.
யானை, கடமை,மரை, எருமை
குழவி
8.
மான்
குருளை, கன்று, குழவி, பிள்ளை
9.
முசு
குழவி
10.
சங்கேறு, குருளை
பிள்ளை
11.
பாக்கன்(பூனை), அணில்
பறழ், குட்டி
மரபியலும் அறிவியல்தான். அவ்வகையில் இலக்கண நூலாக மட்டும் அல்லாமல், வாழ்வியல் அறிவியல் நூலாகவும் உள்ள தொல்காப்பியத்தில் ஆசிரியர் தொல்காப்பியர், இவை பற்றி நன்கு விளக்கி உள்ளார். எடுத்துக் காட்டாக ஒரு நூற்பாவைப் பார்ப்போம்.
தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில்தான் மேலே பட்டியல்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுடன் இவற்றையும் சேர்த்துப்படித்துப் பார்த்தால் , இலக்கண நூல் உணர்த்தும் அறிவியலே சிறந்ததாக இருக்கும் பொழுது உரிய அறிவியல் நூல்களைப் படித்திராமல் இத்தகைய அறிவு வளம் வளர்ந்திருக்காது என நன்கு புரியும்.
மிகச்சிறந்தஅறிவு வளப்பரப்பு உடைய தமிழறிவியலில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் முயன்று செம்மையாக்குவதையே நம் கடமையாகக் கொள்வோம்! அறிவியல் துறைகள் அனைத்திலும் தமிழை வளர்ப்போம்!
** இந்தக் கோப்பிலுள்ள மடல்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அரசு மடல்கள், ஆணைகளில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் தனியார் அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பிட வேண்டும் என்ற உணர்வு இயல்பாய் அமைதல் வேண்டும். தமிழராய் இருந்தாலும் இல்;லாவிட்டாலும் அரசு, அரசு சார் பணிகளில் உள்ள ஒவ்வொருவரும் அரசாணைக்கு இணங்கத் திருவள்ளுவர் ஆண்டு குறிக்க வேண்டும். எழுத்துப் பணியினர் குறிக்க மறந்தாலும் தட்டச்சிடுவோரும் கணியச்சிடுவோரும் தவறாமல் குறிக்க வேண்டும்.
? திருவள்ளுவர் ஆண்டை எவ்வாறு கணக்கிடுவது?
** திருவள்ளுவர் பிறப்பு கி.மு. 31 என அறுதியிடப் பட்டுள்ளது; எனவே, நடைமுறையில் உள்ள கிருத்துவ ஆண்டுடன் 31 ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
தை முதல் நாள்தான் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்பதால் சனவரித்திங்களில் தைத் திங்கள் முதல் நாள் முதல்தான் இவ்வாறு31 ஆண்டைக் கூட்டிக் கணக்கிட வேண்டும்.சனவரித் திங்களில் மார்கழித் திங்கள் முடிய 30ஐ க் கூட்டினால் போதுமானது. அஃதாவது மார்கழி முடிய முந்தையத் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கே தொடரும்.
? தை இரண்டாம் நாள்தானே திருவள்ளுவர் பிறப்பு?
** தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அல்லவா? தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கும் முதன்மை அளிக்க வேண்டும் என்பதால் தை இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடுகிறோம்.
? சித்திரைத் தொடக்கம் தமிழ் ஆண்டுப்பிறப்பு இல்லையா?
** வெவ்வேறு காலக் கட்டங்களில் நிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டும் கதிரவனை அடிப்படையாகக் கொண்டும் ஆண்டுப் பகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர் காலத்தில் ஆவணித் திங்களை முதலாகக் கொண்ட ஆண்டுக் கணக்கு இருந்துள்ளது. சேர நாட்டில் நிலைத்த இவ்வாண்டுக் கணக்கு மலையாளத்தில் இன்னும் தொடருகிறது.
பின்பு, தைத் திங்களை முதலாகக் கொண்ட ஆண்டுக் கணக்கும் இருந்துள்ளது. அதற்கடுத்து சித்திரைத் திங்களை முதலாகக் கொண்ட ஆண்டுக் கணக்கும் இருந்து தொடருகின்றது. சித்திரைத் திங்கள் முதல் நாள் வருடை ஓரையில் பிறப்பதால் இதில் தொடங்கும் காலக் கணக்கு வருடம் எனப்படுகிறது. இக்கணக்கின் அடிப்படையில் சித்திரைத் தொடக்கமும் தமிழ் ஆண்டுப் பிறப்பே. இப்பொழுது நிதியாண்டு, பயிராண்டு, கல்வியாண்டு என உள்ளமைபோல் அப்பொழுதும் வெவ்வேறு வகை ஆண்டுக் கணக்குகள் இருந்துள்ளன. ஆனால் ஆரியர்கள் ஆண்டுப் பிறப்பு என்பதை ஆண்டுத் தொடக்கமாகக் கருதாமல் உயிர்களின் பிறப்பு போன்று கருதியமையால் (ஆண்டு) பிறந்ததாகக் கதை கூறி 60 குழந்தைகள் எனக்கூறி 60 சமற்கிருதப் பெயர்களையும் சூட்டிவிட்டனர்.
இந்த இழிவைப் போக்குவதற்காகத் தமிழ் அறிஞர்களும் ஆன்றோர்களும் – மீண்டும் மீண்டும் வரும் சுழற்சி முறையிலான 60 ஆண்டுகள் கணக்கிற்கு மாறாகத், தொடர் ஆண்டை வலியுறுத்த விழைந்து திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப் படுத்தினர்.
? இதனை யார் முதலில் அறிமுகப்படுத்தியது?
**அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருத்தமற்ற ‘பிரபவ முதல் ’அம்சம் வரை வழக்கில் உள்ள ஆண்டுகளுக்கு முடிவுகட்டித் தொடர் ஆண்டை அறிமுகப்படுத்த வேண்டும் என விழைந்த தமிழ்ச் சான்றோர் 1921 – ஆம் ஆண்டு தமிழ்க் கடல் மறைமலையடிகள் தலைமையில் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆய்ந்தனர்.
திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதனையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என முடிவெடுத்தனர். தை முதல் தான் திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் (எனவும் ஆண்டு இறுதி மார்கழி இறுதி நாள்) எனவும் முடிவெடுத்தனர். அன்று முதல் தமிழ் அன்பர்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாகத் தமிழ் இதழ்களிலும் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டு இடம் பெற்று வருகிறது. எனினும் திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுமாறு 1971 – இல் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுவது நமது வரலாற்றுக் கடமை என உணர்ந்து அனைவரும் அனைத்து நிலைகளிலும் திருவள்ளுவர் ஆண்டையே பின்பற்ற வேண்டும். அரசு, அரசு சார் நிறுவனங்க்ள என்றில்லாமல் தனியார் நிறுவனங்கள் உட்பட அனைவரும் – தமிழ் நாட்டில் உள்ள அனைவரும், உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் – திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்த வேண்டும்.
? இவ்வாறு திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுவதால் குழப்பம் வராதா?
** நாம் திருவள்ளுவர் ஆண்டை மட்டும் குறிப்பிடுமாறு கூறவில்லை. உலக நடைமுறையில் உள்ள கி.பி.ஆண்டுடன் சேர்த்துக் குறிப்பிடுமாறு கூறுகிறோம். உலகின் பல நாடுகளில் இவ்வாறு பிற ஆண்டைக் குறிப்பிடுவது போன்று, இந்தியாவிலும் ஒன்றிய அரசு சக ஆண்டைக் குறிப்பிடுகின்றது. கேரளம் கொல்லம் ஆண்டைக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பிற மாநிலங்கள் தத்தம் ஆண்டைக் குறிப்பிடுகையில், ஒன்றிய அரசு வடபகுதி ஆண்டுமுறையைக் குறிப்பிடுகையில் நாம் இவ்வாறு நமக்குரிய ஆண்டு முறையைக் குறிக்காமல் இருப்பதுதான் தவறாகும். சில சமய அமைப்புகள் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. இவ்வாறு தவறான சமயப் பார்வையில் திருவள்ளுவர் ஆண்டைப் புறக்கணிப்பதும் தவறாகும்.