இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2026

ல கரத்தை rh எனக் குறிப்பிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

     24 June 2026      அகரமுதல



லகர, ளகர, ழகரங்களை ஆங்கிலத்தில் எவ்வாறு நாம் வேறுபடுத்திக் குறிக்கலாம்?

தமிழில் இவற்றை நாம் எவ்வாறு குறிப்பிடுகிறோம் என முதலில் பார்ப்போம்.

ல – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம். எழுத்து மேல்நோக்கி முடிவதால் மேல்நோக்கு லகரம் என்றும் சொல்வர்.

     ள –  நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்றும் கூறுவர். எழுத்து கீழ்நோக்கிமுடிவதால் கீழ் நோக்கு ளகரம் என்றும் சொல்வர்.

      ழ – நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்றும் கூறுவர்.

பொதுவாக

லனா/லாவன்னா/லகாரம் என்றும்

ளனா/ளாவன்னா/ளகாரம் என்றும்

ழனா/ ழாவன்னா/ ழகரம் என்றும் குறிப்பர். இருப்பினும் ஒலிப்பில் குறைபாடு ஏற்படலாம் எனக் கருதுவோர் இலக்கண அசிரியர் குறிப்பதுபோல் மேலே தெரிவித்தவாறு குறிப்பர்.

எழுத்தின் பெயர்களைக் குறிக்கையில் இது சரி. ஆனால் பிறமொழியில் எழுதும்பொழுது எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவது? குறிப்பாக இப்போது நாம் ஆங்கிலத்தில் குறிப்பதைப் பார்ப்போம். ஆங்கிலத்தில் லகர, ளகர, ழகரங்களுக்கு L/l என ஓரெழுத்தையே பயன்படுத்துகிறோம். இதனால் குழப்பம் வருகிறது.

ல (Lakaram) la

ள (Lakarum) l’a

ழ (Zhakaram) l”a

என்று ஒரு சாரார் குறிப்பர். சிலர் எழுத்துமேல் அல்லது கீழே புள்ளி அல்லது கோடிட்டு வேறுபடுத்துவர். இவற்றில் ஒற்றுமை இல்லை.

சிறப்பு ழகரத்திற்குப் பேரா.முனைவர் சி.இலக்குவனார் zha எனப் பயன்படுத்த அறிமுகப்படுத்தினார். கற்றவரிடையே இஃது அறியப்பட்டிருந்தாலும் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, இதனை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதற்கு முதற்கட்டமாக அரசு தமிழ்நாடு என்பதை THAMIZHNAADU என்றே குறிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். TAMILNAD என்று சொல்லவும் தடை விதிக்க வேண்டும். இதனால் இயல்பாகவே சிறப்பு ழகரத்திற்கு ஆங்கிலத்தில் zha எனக் குறிக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து பயன்படுத்துவர்.

இவை தொடர்பில் லகரத்திற்கு  rh எனப் பயன்படுத்தலாம் என நீண்ட நாளாக எனக்கு எண்ணம் உண்டு. நண்பர் பேரா.தங்க.மாரியப்பன் இவற்றை வேறுபடுத்த ஏதும் குறிப்பு தந்தால் அனைவரிடமும் பரப்பி அவ்வாறே நாம் பயன்படுத்தலாமே என்றார். நான் இக்கருத்தைக் குறிதததும் இஃது ஏற்கத்தக்கதாகத்தான் உள்ளது. நாம் பயன்படுத்திப் பரப்புவோம் என்றார்.

ல என்பதற்கு rh எனக் குறிப்பதன் காரணத்தையும் நான் தெரிவித்தேன்.

புணர்ச்சி விதியில் ‘ல்’, ‘ற்’ ஆக மாறுவது இயற்கை.

சான்றுக்குச் சில சொற்களைப் பார்ப்போம்.

கல்+கண்டு=கற்கண்டு; கல்+கோயில்=கற்கோயில்; கல்+கோபுரம்=கற்கோபுரம்; கல்+குவியல்=கற்குவியல்; கல்+சட்டி=கற்சட்டி; கல்+சிலை=கற்சிலை;  நல்+கனி=நற்கனி; நல்+சுழி=நற்சுழி; நல்+கதி=நற்கதி; நல்+குடி=நற்குடி; நல்+குணம்=நற்குணம்; நல்+செய்தி=நற்செய்தி; நல்+புதல்வன்=நற்புதல்வன்; நல்+புதல்வி=நற்புதல்வி; நல்+பயன்=நற்பயன்; நல்+பொழுது=நற்பொழுது; பல்+காறை=பற்காறை; பகல்+பொழுது=பகற்பொழுது; பல்+பசை=பற்பசை; பல்+கறை=பற்கறை; பல்+காவி=பற்காவி; பல்=பல=பற்பல; பல்+குச்சி=பற்குச்சி; கல்+கந்து=கற்கந்து; கல்+பலகை=கற்பலகை; மல்+போர்=மற்போர்; மல்+கூத்து=மற்கூத்து; விரல்+கிடை=விரற்கிடை; விடியல்+காலை=விடியற்காலை; விடியல்+பொழுது=விடியற்பொழுது என்பனபோல் வரும். 

அதே நேரம் தன்புகழ்ச்சி>தற்புகழ்ச்சி, தன் பெருமை> தற்பெருமை, தன்காலம்>தற்காலம், தன்+சமயம்>தற்சமயம் என்பனபோலும் வரும். எனினும் நாம் பெரும்பான்மையாக வரும் லகர மாற்றத்தை மட்டும் பார்ப்போம்.

லகரம் றகரமாக மாறுவதால் லகரத்தைக் குறிக்க ஆங்கில r பயன்படுத்தலாமா?ஆனால் r என்றால் ற என வந்து விடும். எனவே rh எனலாம்.

கலைச்செல்வி > karhaicherhvi;

கலைமாமணி > karhai maa mani;

மலைச்சாமி > marhaichamy

நல்லப்பன்> >narhrhappan;

 நல்லுச்சாமி > narhrhuchamy

  எனக் குறிப்பிடுவோம்.

தொடக்கத்தில் இடராகத் தோன்றும். பயன்படுத்தப் பயன்படுத்த எளிதாக மாறும்.

எனவே, லகரல, ழகர, ளகரங்களைப் பின்வருமாறு ஆங்கிலத்தில் அடையாளப்படுத்துவோம்.

லகரம்

ழகரம்

ளகரம்

தமிழார்வலர்கள் இது குறித்த ஏற்பை, மறுப்பை, மாற்றுக் கருத்தைத் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –6, இலக்குவனார் திருவள்ளுவன்

 




(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –5 தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!  – 6

இதில் 8 நாள் முதல் 10 நாள் முடிய விழா நடைபெறும்’ என உள்ளது.

 எட்டு நாள் எட்டாத நாள், பத்து நாள், பத்தாத நாள் என்றெல்லாம் இங்கு வேண்டா.

 ‘ஆவது’ என எழுத வேண்டியதுபோல் ‘ஆம்’ என்றே எழுத வேண்டும்.

 8-ஆம் நாள்

 10-ஆம் நாள் என்றாவது

 எட்டாவது நாள்

 பத்தாவது நாள்

 என முழு எழுத்து வடிவிலாவது இருக்க வேண்டும்.

‘பயனாளிகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும்’ என இக்கோப்பில் உள்ளது. ‘பயனாளிளுக்குத் தவறாமல் கொடுக்க வேண்டும்‘ என வர வேண்டும்.

நான்காம் வேற்றுமை உருபான ‘கு’வின் பின்னும் வல்லினம் மிகும். அஃதாவது  ‘கு’ என்னும் 4 ஆம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லின எழுத்து தொடங்கும் சொல் வந்தாலும் வல்லின மெய்யெழுத்துக் கூடுதலாக வரும்.

சான்றாக, ‘மதுரை’ என்னும் சொல்லுடன் ‘கு’ உருபு சேரும் பொழுது மதுரைக்கு என்றாகிறது.

மதுரைக்கு + கிடைத்தது = மதுரைக்குக் கிடைத்தது.

மதுரைக்கு + செல் = மதுரைக்குச் செல்.

மதுரைக்கு + தா = மதுரைக்குத் தா

மதுரைக்கு + பெருமை = மதுரைக்குப் பெருமை

என வரும்.

இவ்வாறு வரக்கூடிய இடங்களைத் தெரிந்து சரியாக எழுதி னாலேயே  எல்லா இடங்களிலும் சரியாக எழுதலாம்.

சான்றுகள் சில:

  1. பணிமனைக்குச் செல்ல வேண்டும்.
  2. மாவட்ட ஆட்சியகத்திற்குப் போய் வந்தேன்.
  3. மதுரைக்குத் திரண்டு வருக.    
  4. குழந்தைக்குத் தடுப்பூசி போட வேண்டும்.
  5. பணத்திற்குக் கணக்கு வேண்டும்.    
  6. தேர்வாணையத்திற்குத் தெரிவிக்க   வேண்டும்.
  7. நிரந்தப்படுத்துவதற்குத் தகுந்த சூழல்  . . .
  8. அலுவலகத்திற்குத் தெரிவிக்கவும்.
  9. அவருக்குப் பணியாளருடனான உறவு நன்றாக உள்ளது.
  10. வாங்குவதற்குக் கருதப்படும்.
  11. அரசுக்குப் பொருந்துகிறது.
  12. அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும்.
  13. நியமிப்பதற்குப் பொருத்தமானவர்.
  14. நியமனம் செய்யப் பெறுவதற்குப் பொருத்தமானவர்.
  15. குறியளவுக்கும் குறைவு.
  16. இலக்கிற்குக் குறைவு.
  17. அலுவலருக்குப் பணிந்தனுப்புக.
  18. பணியாளர்களுக்குக் கொடுக்கப்படுன்றனவா?
  19. நீண்ட காலங்களுக்குத் தேவையற்றது.    

இவ்வாறு செய்திகளில் 4 ஆம் வேற்றுமை உருபு இடம் பெறும் சில தொடர்கள் பின்வருமாறு அமையும் :-

  1. செயலகத்திற்குப் புதிய ஊழியர்கள் …..
  2. அரசிற்குப் பொதுமக்கள் வேண்டுகோள் …
  3. ஊழியர்களுக்குப் பதிலாக  (மாற்றாக)
  4. நீக்கப்பட்டவர்களுக்குப் பதில்  (மாற்று)
  5. அலுவலகத்திற்குப் புதிய ஊழியர்….
  6. பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
  7. கோவிலுக்குச் சென்று …  
  8. ஆகியோருக்குக் கொடுத்தார்.
  9. அணைக்குச் சென்று ….
  10. வெளிநாடுகளுக்குப் பெருமளவு….
  11. விவசாயத்திற்குத் தேவையான…
  12. முன்னேற்றத்திற்குத் தடை.
  13. ஈரானியப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்.  
  14. பத்திரிகைகளுக்குச் செய்தி சேகரித்தவர்.
  15. அரசு வேலைக்குத் தொடர்ந்து தேர்வு
  16. கூட்டத்திற்குப் பின்னர்
  17. வீரர்களுக்குத் தீவிரப்பயிற்சி    
  18. பேச்சு(வார்த்தை)க்குப் பின்னர்
  19. இராமர் கோயில் கட்டுவதற்குச் சட்ட…
  20. செய்தியாளர்களுக்குப் பேட்டி…
  21. செயல் திட்டத்திற்குக் கட்டுப்பட்டு…  
  22. கட்சிகளுக்குப் பங்கு …
  23. நாமக்கல் நகருக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.    
  24. அவர் 20 மாவட்டங்களுக்குச் சென்று …
  25. இரகசிய இடத்திற்குச் சென்று….
  26. வீட்டிற்குச் செல்கையில்
  27. வந்தவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு…   
  28. போராட்டத்திற்குத் தூண்டிய …
  29. ரூபாய் 52 கோடி அளவிற்குச் சலுகை
  30. அவருக்குத் தொடர்பு உண்டா?
  31. பாசனத்திற்குத் தண்ணீர்..
  32. இடைவேளைக்குப் பிறகு…
  33. சிம்மராசிக்குக் குரு இடம்பெயர்தல்
  34. அவர்களுக்குப் போதிய வசதி …..
  35. …ஆலங்குடிக்குச் சிறப்பு.
  36. காவல்துறையினருக்குத் தகவல்…
  37. இதற்குக் கண்டனம்….
  38. நாமக்கல் மாவட்டத்திற்குச் செல்கிறார்.
  39. கடலுக்குச் சென்றனர்.    
  40. பயணிகளுக்குப் புதியது.

ஞாயிறு, 27 ஜூலை, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5

 




(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4  தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5

இவ்வாறு செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் தொடர்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

50.      ஊழியர்களைத் தேர்வு செய்தனர்.

51.      16 பேரைக் கைது செய்தனர்.

52.      புதிய ஆட்களைத் தேர்ந்தெடுத்தனர்.

53.      நடவடிக்கையைக் கைவிடு.

54.      விடுமுறையைக் குறை.   

55.      புதுமுறையைப் பின்பற்று.

56.      நடைமுறையைக் கவனி.

57.      அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

58.      கோசுட்டியைச் சேர்ந்தவர்கள்.  

59.      கும்பலைச் சேர்ந்தவர்கள்.

60.      தமிழகத்தைக் கடும் வெயில் வாட்டுகிறது.

61.      நிதியுதவியைப் பெற்றுக் கொண்டார்.

62.      ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

63.      போட்டியிடாததைத் தொடர்ந்து …

64.      பெயரைப் பரிந்துரைத்தால் …   

65.      பயிர்களைச் சாகுபடி….

66.      அதனைச் சுற்றி

67.      திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்.

68.      கேரளாவைச் சார்ந்தவர்.

69.      தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்

70.      குழுக்களைச் சேர்ந்தவர்கள்.    

71.      தேர்தலைக் கருத்தில் கொண்டு …..   

72.      பணிகளைத் தொடங்க வேண்டும்.

73.      ஆகியவற்றைப் பற்றி…

74.      அறிக்கையைப் பெற்றார்.

75.      திட்டத்தைத் தொடங்கினார்.

76.      இடங்களைப் பிடித்தனர்.

77.      செயலாளரைச் சந்தித்தார்.

78.      மக்களுக்குக் குறைந்த விலையில் உணவு……

79.      விவரங்களைத் தெரிவித்தார்.   

80.      கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

81.      தண்ணீரைச் சேமி.   

82.      திரு.வாசுபாயைச் சந்தித்து….

83.      கோரிக்கையைப் பரிசீலிக்க

84.      கட்சியைப் பலப்படுத்த….

85.      இதைத் தொடர்ந்து ….

86.      உதவியாளர்களைத் திருப்பி அனுப்பினர்.

87.      விமானத்தைக் கடத்த முயன்றனர்.   

88.      திட்டங்களைத் தொடக்வைத்தார்.

89.      அவர்களைப் போராட்டத்திற்கு ……    

90.      நடவடிக்கையைச் சிவசேனாக் கட்சி ..

91.      ஊழியர்களைத் தூண்டி விட்ட ……    

92.      …… வாலிபரைக் காவல் துறையினர் ……

93.      விமானத்தைக் கடத்தும் நோக்கு ……  

94.      அணையைத் திறந்தார்.

95.      மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.

96.      … சிக்கல்களைத் தமிழக ….

97.      சாதனங்களைப்  பறிமுதல் செய்தனர்.

98.      வாகனத்தைத் திருடியவர்.

99.      … என்பவரைக் காவல் துறை ….

100.    வாகனங்களைப் பறிமுதல் ….

101.    தீர்ப்பைப் பூந்தமல்லி நீதிமன்ற …..

102.    …. நாடுகளைப் புதிய கோணத்தில் …..

103.    முறையைக் கொண்டுவர ….    

104.    சட்டத்தைப் புதிய வடிவில் ….

105.    2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடு

106.    ஆவணங்களைப் பார்க்கும் போது ….

107.    சொத்துகளைச் சேர்த்திருப்பது ….

108.    பெண்ணைக் கேலி செய்ததால் ….

109.    பட்டத்தைக் கைப்பற்றினார்.    

110.    பட்டத்தைத் தட்டிச் சென்றனர்.

111.    முதலிடத்தைப் பெற்றனர்.

112.    மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.

113.    குப்பையைக் கொண்டு …..

114.    உரங்களைத் தயாரிக்கும் …..

115.    கலையைக் கற்பித்து வரும்..

116.    இரயில்களைக்  கவிழ்க்கப் போவதாகத் தெரிவித்தனர்.

117.    நட்புறவைப் பலப்படுத்த உறுதி 

 (தொடரும்)

சனி, 26 ஜூலை, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3: தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4

(இங்குள்ள கோப்புகளின் அடிப்படையிலும் பொதுவாக நாம் பயன்படுத்தும் தொடர்களின் அடிப்படையிலும் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம்.)

1.       மேலாளரைக் கண்டாயா?

2.       ஆட்சியரைச் சந்தித்தேன்.

3.       ஆலையைத் திறக்க வேண்டும். 

4.       செயலரைப் பார்க்கவில்லை.

5.       அணையைத் திறந்து விடுக.    

6.       மருத்துவமனையைப் பார்வையிட்டார்.

7.       தடுப்புமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.  

8.       தொற்று நோய்களைத் தடுக்க வேண்டும்.

9.       பதிவேடுகளைப் பேண வேண்டும்.

10.      வேலையைச் செய்யத் தவறாதே.

11.      கிடங்கினைப் பூட்டவும்.

12.      மருந்துகளைக் கொடு.

13.      சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திரு.

14.      முதலியவற்றைக் கொணர வேண்டும்.

15.      இழப்புகளைக் கணக்கிடு.

16.      அலுவலுகத்தைத் துப்புரவு செய்க.    

17.      பணிகளைச் சிறப்பாகச் செய்க.

18.      முன்கோப்பைத் தேடவும்

19.      சத்துணவைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.

20.      தன்மையினைக் கருதி …  

21.      கருத்துருவினைப் பரிந்துரைக்கிறேன்

22.      அவரைப் பணியமர்த்திய நாள்

23.      ஏற்பாடுகளைச் செய்து…

24.      என்பதைக் குறிப்பிடுக.    

25.      என்பதைத் தெரிவிக்கவும்.

26.      தொகையைத் தெரிவிக்கவும்.

27.      பணிக்காலத்தைப் பணியாளர் முடித்த நாள்.

28.      பணியினைத் திறமையாக ஆற்று.    

29.      வேண்டுவதைக் கருத்தில் கொண்டு

30.      தொகையைத் திருப்பச் செலுத்தவும்.

31.      பதிவேடுகளைக் கூர்ந்தாய்வு செய்க.

32.      வேலையைத் தீர்வு செய்க.

33.      கணக்கினைச் சரிசெய்க.

34.      அறிக்கையைக்கேட்டுப் பெறுக.

35.      அஞ்சல்களைப் பிரிக்கவும்.

36.      அலுவலகத்தைத் திறக்கும்

37.      நடைமுறைப்   பணியைத் தொடங்கவும்.

38.      அவற்றைப் பற்றிய விவரங்கள்.

39.      கோப்புகளைப் பரிசீலித்தல்.

40.      கோப்புகளைக் கிழிக்காதே.

41.      சொல்வதைச் செய்வோம்.

42.      செய்வதைச் சொல்வோம்.

43.      விலைவாசியைக் குறைக்க வேண்டும்.

44.      புலவா“களைப் பாராட்டவேண்டும்.

45.      குறைகளைப்போக்க வேண்டும்.

46.      நிறைகளைப் பெருக்க வேண்டும்.

47.      திட்டத்தைச் செயலாக்கு.

48.      வழித்தடங்களைக் கூட்டுக.

49.      வழிமுறைகளைக் கூறவும்.

வேற்றுமை உருபு, வல்லினம் முதலியவற்றைத் தெரிந்திருந்தும் மறந்திருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் இல்லாவிட்டாலும் இவை போல் வரக்கூடிய பல இடங்களை அறிந்து கொண்டாலே இயல்பாகவே இவ் வொற்றெழுத்துகளைச் சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்து நீக்க வேண்டிய இடங்களில் நீக்கி எழுதும் பழக்கம் வந்துவிடும்.

மேலும், பரிசீலித்தல், பரிசீலனை என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. இவ்வாறு தமிழ்ச் சொற்கள் அல்லாதவற்றையும் நாம் பயன்படுத்தி வருகின்ற காரணத்தால் குறிப்பிடுகின்றேன். ஆனால், பிறமொழிச் சொற்களைத் தவிர்க்க வேண்டும். மேலும்,

(தொடரும்)

திங்கள், 21 ஏப்ரல், 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! -2 – இலக்குவனார் திருவள்ளுவன்

 






(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 – தொடர்ச்சி)

Jan 5, 2011

 

 

** இந்தக் கோப்பிலுள்ள மடல்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அரசு மடல்கள், ஆணைகளில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் தனியார் அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பிட வேண்டும் என்ற உணர்வு இயல்பாய் அமைதல் வேண்டும். தமிழராய் இருந்தாலும் இல்;லாவிட்டாலும் அரசு, அரசு சார் பணிகளில் உள்ள ஒவ்வொருவரும் அரசாணைக்கு இணங்கத் திருவள்ளுவர் ஆண்டு குறிக்க வேண்டும். எழுத்துப் பணியினர் குறிக்க மறந்தாலும் தட்டச்சிடுவோரும் கணியச்சிடுவோரும் தவறாமல் குறிக்க வேண்டும்.

? திருவள்ளுவர் ஆண்டை எவ்வாறு கணக்கிடுவது?

** திருவள்ளுவர் பிறப்பு கி.மு. 31 என அறுதியிடப் பட்டுள்ளது; எனவே, நடைமுறையில் உள்ள கிருத்துவ ஆண்டுடன் 31 ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

 தை முதல் நாள்தான் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்பதால் சனவரித்திங்களில் தைத் திங்கள் முதல் நாள் முதல்தான் இவ்வாறு31 ஆண்டைக் கூட்டிக் கணக்கிட வேண்டும்.சனவரித் திங்களில் மார்கழித் திங்கள் முடிய 30ஐ க் கூட்டினால் போதுமானது. அஃதாவது மார்கழி முடிய முந்தையத் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கே தொடரும்.

? தை இரண்டாம் நாள்தானே திருவள்ளுவர் பிறப்பு?

** தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அல்லவா? தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கும் முதன்மை அளிக்க வேண்டும் என்பதால் தை இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடுகிறோம். 

?  சித்திரைத் தொடக்கம் தமிழ் ஆண்டுப்பிறப்பு இல்லையா?

** வெவ்வேறு காலக் கட்டங்களில் நிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டும் கதிரவனை அடிப்படையாகக் கொண்டும் ஆண்டுப் பகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர் காலத்தில் ஆவணித் திங்களை முதலாகக் கொண்ட ஆண்டுக் கணக்கு இருந்துள்ளது. சேர நாட்டில் நிலைத்த இவ்வாண்டுக் கணக்கு மலையாளத்தில் இன்னும் தொடருகிறது.

 பின்பு, தைத் திங்களை முதலாகக் கொண்ட ஆண்டுக் கணக்கும் இருந்துள்ளது. அதற்கடுத்து சித்திரைத் திங்களை முதலாகக் கொண்ட ஆண்டுக் கணக்கும் இருந்து தொடருகின்றது. சித்திரைத் திங்கள் முதல் நாள் வருடை ஓரையில் பிறப்பதால் இதில் தொடங்கும் காலக் கணக்கு வருடம் எனப்படுகிறது. இக்கணக்கின் அடிப்படையில் சித்திரைத் தொடக்கமும் தமிழ் ஆண்டுப் பிறப்பே. இப்பொழுது நிதியாண்டு, பயிராண்டு, கல்வியாண்டு என உள்ளமைபோல் அப்பொழுதும் வெவ்வேறு வகை ஆண்டுக் கணக்குகள் இருந்துள்ளன. ஆனால் ஆரியர்கள் ஆண்டுப் பிறப்பு என்பதை ஆண்டுத் தொடக்கமாகக் கருதாமல் உயிர்களின் பிறப்பு போன்று கருதியமையால் (ஆண்டு) பிறந்ததாகக் கதை கூறி 60 குழந்தைகள் எனக்கூறி 60 சமற்கிருதப் பெயர்களையும் சூட்டிவிட்டனர்.

இந்த இழிவைப் போக்குவதற்காகத் தமிழ் அறிஞர்களும் ஆன்றோர்களும் – மீண்டும் மீண்டும் வரும் சுழற்சி முறையிலான 60 ஆண்டுகள் கணக்கிற்கு மாறாகத்,  தொடர் ஆண்டை வலியுறுத்த விழைந்து திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப் படுத்தினர்.

? இதனை யார் முதலில் அறிமுகப்படுத்தியது?

**அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருத்தமற்ற ‘பிரபவ முதல் ’அம்சம் வரை வழக்கில் உள்ள ஆண்டுகளுக்கு முடிவுகட்டித் தொடர் ஆண்டை அறிமுகப்படுத்த வேண்டும் என விழைந்த தமிழ்ச் சான்றோர் 1921 – ஆம் ஆண்டு தமிழ்க் கடல் மறைமலையடிகள் தலைமையில் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆய்ந்தனர்.

திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதனையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என முடிவெடுத்தனர். தை முதல் தான் திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் (எனவும் ஆண்டு இறுதி மார்கழி இறுதி நாள்) எனவும் முடிவெடுத்தனர். அன்று முதல் தமிழ் அன்பர்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாகத் தமிழ் இதழ்களிலும் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டு இடம் பெற்று வருகிறது. எனினும் திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுமாறு 1971 – இல் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுவது நமது வரலாற்றுக் கடமை என உணர்ந்து அனைவரும் அனைத்து நிலைகளிலும் திருவள்ளுவர் ஆண்டையே பின்பற்ற வேண்டும். அரசு, அரசு சார் நிறுவனங்க்ள என்றில்லாமல் தனியார் நிறுவனங்கள் உட்பட அனைவரும் – தமிழ் நாட்டில் உள்ள அனைவரும், உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் – திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்த வேண்டும். 

? இவ்வாறு திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுவதால் குழப்பம் வராதா?

** நாம் திருவள்ளுவர் ஆண்டை மட்டும் குறிப்பிடுமாறு கூறவில்லை. உலக நடைமுறையில் உள்ள கி.பி.ஆண்டுடன் சேர்த்துக் குறிப்பிடுமாறு கூறுகிறோம். உலகின் பல நாடுகளில் இவ்வாறு பிற ஆண்டைக் குறிப்பிடுவது போன்று, இந்தியாவிலும் ஒன்றிய அரசு சக ஆண்டைக் குறிப்பிடுகின்றது. கேரளம் கொல்லம் ஆண்டைக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பிற மாநிலங்கள் தத்தம் ஆண்டைக் குறிப்பிடுகையில், ஒன்றிய அரசு வடபகுதி ஆண்டுமுறையைக் குறிப்பிடுகையில் நாம் இவ்வாறு நமக்குரிய ஆண்டு முறையைக் குறிக்காமல் இருப்பதுதான் தவறாகும். சில சமய அமைப்புகள் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. இவ்வாறு தவறான சமயப் பார்வையில் திருவள்ளுவர் ஆண்டைப் புறக்கணிப்பதும் தவறாகும்.

(தொடரும்)