புதன், 3 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 89 : கெட்ட போரிடும் உலகு!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 88 தொடர்ச்சி)

கெட்ட போரிடும் உலகு!

இனிய அன்பர்களே!

வீட்டிலிருந்த வரை புத்தாண்டு நாளில் ஒரே ஒரு சிறப்புதான்! அது அப்பா சொல்லும் சிரிப்புத் துணுக்கு. வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு எங்களை எழுப்பி விடும் போது அப்பா சொல்வார்கள்: “ஏய்! எழுந்திரு! போன ஆண்டு படுத்தது. அடுத்த ஆண்டே வந்தாச்சு. ஒரு வருசம் தூங்கியாச்சு. போதும் எழுந்திருங்கடா!”

இதோ தாழியில் ஆண்டுக் கடைசி நாள், முதல் நாள் என்ற வேறுபாடு எதுவுமில்லை. கருத்துப் போர்க்களத்தில் இது என் இறுதிப் பதுங்கு குழி. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்காதிருக்க வேண்டிய இடம். வேடிக்கைகள், கேளிக்கைகளுக்கு இங்கே இடமில்லை.

திசம்பர் 31 இரவு 11 மணிக்கு உறங்கப் போனேன். சரியாக 12 மணிக்கெல்லாம் வெடியோசை கேட்டு எழுந்துவிட்டேன். பட்டாசு வெடிதான்! புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகிறார்களாம் புத்தாண்டு!

பழைய ஆண்டு, புத்தாண்டு என்று எந்த வேறுபாடும் இல்லாமல் உலகின் சில பகுதிகளில் குண்டுகள் வெடித்து உயிர்களைக் குடித்து அமைதியை அழித்துக் கொண்டிருக்கும் போர்கள் நடந்து கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தால் பட்டாசு வெடிக்க மனம் வருமா?

உக்குரைன் மீது உருசியா போர் தொடுத்து 300 நாட்களுக்கு மேலாயிற்று. பொதுமக்கள் சற்றொப்ப 7,000 பேர் மடிந்துள்ளனர். 10,000 த்துக்கு மேல் காயமடைந்துள்ளனர். இது ஐநா மனிதவுரிமைகளுக்கான உயராணையர் அலுவலகம் தந்துள்ள கணக்கு. ஆகப் பெருந்துயரம்: ஒருகோடியே அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட உக்ரைனியர்கள் வீடுவாசல் இழந்து ஏதிலியராக வெளியேறி அகதி வாழ்வின் துயரங்களுக்கு இன்னுமொரு சான்றாகியுள்ளனர்.


இப்போதும் அணுவாய்தப் போர் ஆபத்து நீடிக்கிறது. போரினாலும் பொருளியல் தடைகளாலும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் இலங்கை, இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் நெருக்கடியின் பிடியில் சிக்குண்டுள்ளன. அமெரிக்கப் படைக்கலன் வணிகர்கள் மட்டுமே இந்தப்போரினால் ஆதாயமடைந்துள்ளனர்.
இந்தப் போருக்கு இருகாரணங்களாக உருசிய புதினின் விரிவாதிக்க வெறியையும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் விரிவாக்கப் பேராசையையும் குறிப்பிடலாம். இரண்டுமே எதிர்க்கப் படவேண்டும். உருசியப்படைகள் போரை நிறுத்திவிட்டுப் பின்வாங்கும் படியும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் நேட்டோவைக் கலைத்து விடும்படியும் உலகின் அமைதி விருப்ப ஆற்றல்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.


பழைய இராணுவக் கூட்டணிகள் போதாவென்று குவாட்டு போன்ற அடைகாப்பிலுள்ள புதிய இராணுவக் கூட்டணிகளும் கலைக்கப் படவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் போர் கூடாது என்பது மன்பதையின் போர் முழக்கமாக வேண்டும்.
ஐநா வில் இடம் பெற்றுள்ள அரசுகள் மட்டுமல்லாமல் அரசில்லாத் தேசங்களும் மக்களியக்கங்களும் சேர்ந்து அமைதிக்கான அணிவகுப்பைத் தோற்றுவிக்க வேண்டும்.


விளாதிமிர் புதின் போரை நிறுத்திப் படை விலக்கம் செய்வது தான் அமைதியின் முதல் கோரிக்கையாக இருக்க முடியும். ஆனால் அவரோ உருசியத் தொலைக்காட்சியில் விடுத்த புத்தாண்டுக் காணொலிச் செய்தியில் உருசியா உக்குரைனில் தனது “தாயகத்தை”ப் பாதுகாப்பதற்காகவும் அதன் மக்களுக்கு உண்மையான விடுமை பெற்றுக் கொடுப்பதற்காகவும் போர் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். புதினின் போர் வெறி தொடருமானால் அவரது அதிகாரத்தை நீக்குவது தான் அமைதிக்கு வழி என்பதை உருசிய மக்கள் உணர வேண்டும்.


இந்தியாவில் அனைத்துத் தேசிய இன மக்களுடனும் சேர்ந்து இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, உக்குரைன் போரில் புத்தினைக் கண்டிக்கச் செய்ய வேண்டும். இந்தியாவின் ஆதரவு உருசியாவுக்கா, அமெரிக்காவுக்கா என்றால் அமைதி மீட்புக்கே என்று விடையிறுக்க வேண்டும். மொத்தத்தில் நரேந்திர மோதி தன் விலாங்கு மீன் அணுகுமுறையைக் கைவிட வேண்டும். அயலுறவுத்துறை அமைச்சர் செய்சங்கர் தேசநலன் கருதி இந்த ‘நடுநிலை’ அணுகுமுறை என்று தரும் விளக்கம் “கிட்டப்பார்வை” வகைப்பட்டது. போரில் ஏற்படும் அழிவுகளில் தான் தேச நலன் என்றால் அசோகச் சக்கரம் ஏன்?

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 57

செவ்வாய், 2 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 88 : காந்தி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 87 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மார்க்குசிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர் வெளியிடப்படுகிறது. பல ஆண்டுகளாகவே ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலரில் தவறாமல் என் கட்டுரை இடம்பெறும். வழக்கமாகத் தோழர் ஆனைமுத்து எனக்கான தலைப்பைச் சொல்வார். அவர் போய் விட்டார். அவருடன் பணியாற்றிய பாவலர் தமிழேந்தியும் போய் விட்டார். அவர்களிடத்தில் தோழர்கள் வாலாசா வல்லவனும் முகிலனும் மற்றவர்களும் தொடர்ந்து உழைக்கின்றார்கள். ‘சிந்தனையாளன்’ தொடர்ந்து வருகிறது. இவ்வாண்டு பொங்கல் மலரில் எனக்குச் “சாதியத்தை எதிர்ப்பதில் காந்தி-அம்பேத்கர் முரண்” என்று தலைப்புக் கொடுத்திருந்தார்கள். இன்று காலைதான் எழுதி முடித்து அனுப்பி வைத்தேன். பட்டி அடைக்குமுன் கடைசி மாடாக இருக்கக் கூடும். பொறுமையாகக் காத்திருந்தார்கள் வல்லவனும் முகிலனும். அந்தக் கட்டுரையின் முகன்மைப் பகுதிகள் இரண்டை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்:

1.  காந்தியின் வன்முறை

1932 ஆகட்டு 16ஆம் நாள் பிரித்தானியத் தலைமையமைச்சர் இராம்சே மக்குடொனால்டு அறிவித்த வகுப்புவாரித் தீர்வு (Communal Award):

முற்பட்டசாதிகள், முசுலிம்கள், சீக்கியர்கள், ஐரோப்பியர்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், தீண்டப்படாதார் என்று ஒவ்வொரு குழுவுக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கொதித்தெழுந்தார் மகாத்துமா! மற்ற எந்தக் குழுவுக்கும் ஒதுக்கீடு வழங்குவதுபற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்குவதை மட்டும் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று உறுதியாக அறிவித்தார். வெறும் அறிவிப்போடு நிற்க வில்லை. சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கி விட்டார்.

அம்பேத்துகருக்கு மிகப்பெரும் நெருக்கடி! காந்தி உயிரிழந்தால் பழி அம்பேத்கரைச் சாரும். அதை விடவும் மோசம், இந்துக்களின் சினம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திரும்பும். பெரும் படுகொலைகள் நிகழலாம். நெருக்கடி அம்பேத்துகருக்குத்தானே தவிர, பிரித்தானிய அரசுக்கல்ல, விட்டுக் கொடுங்கள் என்று தேசியத் தலைவர்களும் தலித்து தலைவர்களும் கூட அம்பேத்துகரை வலியுறுத்தலானார்கள். என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காதீர்கள் என்று அம்பேத்துகருக்கு அறிவுரை சொன்ன ஒரே ஒருவர் பெரியார் மட்டுமே. கடைசியாக அம்பேத்துகர் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனி வாக்காளர் தொகுதி என்ற அம்பேத்துகர் கனவைப் பலியிட்டு காந்தி பிழைத்துக் கொண்டார்..   

காந்தியின் அகிம்சைக் கொள்கை பொய்மையானது என்பதற்குச் சான்றாகச் சில நிகழ்வுகளை அவரின் குற்றாய்வர்கள் எடுத்துக் காட்டுவதுண்டு. ஆனால் என் பார்வையில் அவரது பூனா உண்ணாநோன்புதான் மிகப்பெரும் சான்று. அது ஒரு வன்முறை அச்சுறுத்தல், அம்பேத்துகரை வீழ்த்துவதற்காகப் பாமர தலித்துகளுக்கு காந்தி விடுத்த வன்முறை மிரட்டல். உளத்தியல் வன்முறை.

2.  காந்திக் கொலையின் உட்பொருள்

காந்தியைக் கொன்றவர்கள் மதவெறியர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்து மத வெறிக்குள் மறைந்திருப்பது சாதி வெறியே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்து மதவாதிகள் இசுலாத்தையும் கிறித்துவத்தையும் வெறுப்பது ஏன்? அவர்கள் வெறுப்பது அல்லாவையோ இயேசுவையோ அல்ல. அந்த மதங்களில் சேர்ந்த கீழ்சாதியினர், இழிகுலத்தவர் மீதான வெறுப்புதான் அந்த மதங்களின் மீதான வெறுப்பாக வெளிப்படுகிறது.

இப்படிப் பார்க்கும் போது காந்தி மீதான வன்மத்தின் வேர்மூலம் சிறுபான்மை மதங்களில் சேர்ந்த மக்கள் மீதான வெறுப்பின் வெளிப்பாடுதான். முசுலிம்களிடம் காந்தியாரின் பரிவு என்பதும் முசுலிமாக மாறிய எளிய ஒடுக்குண்ட மக்கள் மீதான பரிவாகவே புரிந்து கொள்ளப்படும். இது காந்திக்குப் புரிந்ததோ இல்லையோ சவர்க்கருக்கும் கோட்சேக்கும் புரிந்திருந்தது. தெளிந்த சாதியொழிப்புப் பார்வையே இல்லாவிட்டாலும் காந்தியாரின் உயிரீகம் இந்துமத வெறிக்கு எதிரானது மட்டுமல்ல; பார்ப்பன வர்ண-சாதி வெறிக்கும் எதிரான ஒன்று.

(தொடரும்)

தோழர்  தியாகு
தரவு : தாழி மடல் 55

திங்கள், 1 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 87 – வாலாசா வல்லவன் பகிரும் திருக்குறளைப் போற்றும் பெரியார் 2/2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 86 தொடர்ச்சி)

பெரியாரும் திருக்குறளும் 2/2

அன்பர் வாலாசா வல்லவன் எழுதுகிறார்

ஆனால், குறளில் அப்படிப்பட்ட அதிசயம் ஒன்றையுங் கூறாவிட்டாலும் திருவள்ளுவரைத் தெய்வீகப் பிறவியாக ஆக்கா விட்டாலும் – அவருடைய பிறப்புப் பற்றி இழித்துக் கூறிவிட்டார்கள். 

வள்ளுவரின் தாயை ஒரு விபச்சாரியாகக் கற்பனை செய்து விட்டான். வள்ளுவர் பிறப்பைப் பற்றி எழுதும் போது பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் வள்ளுவர் பிறந்தார் என்று எழுதுகிறான். இதில் புத்திசாலித்தனம் என்னவென்றால் – குறளைப் போன்ற நீதி நெறிகளை, மக்களின் உயர் ஒழுக்கத்திற்கு வேண்டிய பண்புகளைப் போதிக்கத்தக்க தகுதியும் அறிவும் வள்ளுவருக்கு வந்ததற்குக் காரணமே, அவர் பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் ஆகும் என்ற கருத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள். இந்தப்படி பறைச்சியுடன் பார்ப்பான் கூடினான் என்பது, பார்ப்பனர்களுக்கு தருமப்படி எவ்வளவு கேவலம் என்பதை மறந்து விட்டார்கள். அக்காலத்தில் அறிவாளிப் பார்ப்பான் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது. இந்தப்படியாக முதலில் எடுத்தவுடனேயே குறளையும், அதன் ஆசிரியரையும் இழிவு படுத்தி விட்டார்கள். 

நாட்டில் புராணங்களைப் பற்றியும், இராமன்-சீதை தொடர்பு பற்றியும், கந்தன் வள்ளி காதல் (இ)லீலைகள் பற்றியும், கிருட்டிணனின் பிள்ளை விளையாட்டு, கோபிகள் லீலைகள் பற்றியும் எல்லோருக்கும் – பாமரர்கள், பாட்டாளிகள், படிக்காதவர்கள், கூலிகள் முதற் கொண்டு பெரிய, பெரிய சீமான்கள் வரை தெரியும்; தெரிந்திருப்பார்கள். ஆனால், குறள் பற்றிப் பெரிய பணக்காரர்களுக்கும் தெரியாது; தெரிய வாய்ப்பும் இல்லை. இந்தப்படியாகக் குறளை எந்தெந்த வழியாக மங்கும்படி செய்ய முடியுமோ – மக்கள் மனத்தில் குறளின் கருத்துக்கள் புக முடியாது செய்ய முடியுமோ அவ்வளவுக்கு ஆரியர்கள் செய்து விட்டார்கள்.

நான், ஆரியக் கருத்துக்களெல்லாம் – அதன் தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவையெல்லாம் ஒரு கூட்டத்தின் உயர்வுக்கும், வேறொரு கூட்டம் வேதனைப் படவுமான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி – அவற்றை, ஆரியக் கருத்துகளை அவற்றுக்கு ஆதாரமாய் இருக்கின்ற மதம், கடவுள் தன்மை, புராணங்கள் போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்றும் பரப்புரை புரிந்து வருவதால் எனக்கு வள்ளுவர் உள்ளமும், அவர் நூலின் உண்மைக் கருத்தும் தெளிவாகத் தெரிகின்றது.  ஆகவேதான், நாம் வள்ளுவரை, அவர் இயற்றிய திருக்குறளைப் போற்றுகிறோம். 

வள்ளுவர் யார், எந்தக் குலத்தைச் சோந்தவர் என்று நிச்சயமாய்க் கூற முடியாது. வள்ளுவர் ஆரியத்தை எதிர்ப்பவர்; ஆரியக் கருத்துகளைக் கண்டிப்பவர் ; அவற்றை வெறுப்பவர் என்றுதான் நமக்குத் தெரிகிறது. அத்தோடு, வள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவராகத் தெரியவில்லை. சாதாரணமாகச் சைவ, வைணவ, சமணர்கள் விவாதங்களில் – சமணர்கள்தான் வெல்லுவார்கள். பெரிய புராணம் எழுந்ததே சமணர்களை ஒழிப்பதற்காகத்தான். ஆரியக் கருத்துகளை சமணர்கள் ஏற்கவில்லை என்பதற்காக அவர்கள் வெறுக்கப்பட்டார்கள். அதன் விளைவாகப் பலப் பல தொல்லைகளுக்கு ஆளாக்கப் பட்டார்கள் சமணர்கள். இன்றுங்கூட மதுரையில் 8000 சமணர்களைக் கழுவேற்றின திருவிழா கொண்டாடப் படுகிறது. 

அவ்வளவு தூரம் ஆரியக் கருத்துகளை எதிர்த்து, அதற்காக இன்னல்கள் பல பட்டிருக்கும் சமணர்களும் – திருக்குறளை ஆகரிக்கிறார்கள். சைவ சமயத்தவரும், வைணவ மதத்தாருங்கூட திருக்குறளை மாபெரும் நூல் என்று ஒத்துக் கொள்ளுகின்றனர். இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்களும், கிறித்துவ மதத்தின் கீழிருப்பவர்களும் திருக்குறளைப் போற்றுகிறார்கள். இந்தப்படி எல்லாரும் போற்றுவதால்தான் திருக்குறள் ஒரு மதத்தைத் தழுவியோ, ஒரு மதத்தின் உயர்வுக்காகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல், மக்களின் வாழ்க்கைக்கு, மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலே கையாள வேண்டிய வழிவகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறது. குறளாசிரியர் காலத்தில் – இந்து மதம்‘ என்பது இல்லை. இந்து மதம் என்று இருந்திருந்தால் திருக்குறளில் ஒரு இடத்திலாவது ‘இந்து‘ என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், 1330 பாட்டுக்களிலும் ஒரு இடத்திலாவது ‘இந்து’ என்ற சொல் காணப்படவே இல்லை. 

அது மட்டுமல்ல, குறளாசிரியர் கடவுளையும், மோட்ச நரகத்தையும் ஒத்துக் கொள்ளவில்லை . குறளில் நீங்கள் அறம், பொருள், இன்பம் என்ற அளவில்தான் காண முடியுமே தவிர-‘ வீடு’ – மோட்சம்’ பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை . அறம், பொருள், இன்பம் என்றுதான் முப்பிரிவுகளைக் கூறுகிறார், மோட்ச சாம்ராஜ்யத்தை விட்டு விட்டு. 

திருவள்ளுவர் கடவுளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று கூறினேன். திருக்குறளின் முதல் அத்தியாயத்தில், ‘ கடவுள் வாழ்த்து‘ என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக் கொள்கைகள் இடம் பெறவில்லை. மேலும், இந்து மதக் கடவுள்களைப் பற்றிய ‘புகழாரம்‘ அந்தப் பத்துப் பாட்டுக்களிலும் கிடையாது.

சிலர் கூறுகிறார்கள், ‘ குறளில் முதல் அத்தியாயத்தில் இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாக்கள் இடைச் செருகல்’ என்று ; சிலர், ‘ அப்படியெல்லாம் இல்லை; வள்ளுவர் பாடியது தான்’ என்று கூறுகிறார்கள். நம்மைப் பொறுத்த வரையில் கடவுள் வாழ்த்துப் பாக்களை வள்ளுவரே பாடினதாக வைத்துக் கொண்டாலும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற கடவுள்களைப் போன்ற கடவுள்களுக்கா வள்ளுவர் வாழ்த்துக் கூறினார்? இல்லை. கடவுள் வாழ்த்துக் கூறப்படும் பத்துப் பாட்டிலும், ஒரு பாட்டிலாவது வள்ளுவர் ‘கடவுள்‘ என்ற சொல்லைக் கையாளவில்லை. திராவிட மக்களுக்கு ‘எல்லாம் வல்ல,’ ‘ எங்கும் நிறைந்த’ என்பதாகக் கடவுளைக் குறிக்க ‘கடவுள்’ என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லையே வள்ளுவர் தமது குறளில் கையாளவில்லை! கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் கையாளவில்லை என்பதோடு மாத்திரமல்ல. குறள் முழுவதிலுமே- 1330 பாடல்களிலுமே ஒரு இடத்திலாவது வள்ளுவர் ‘கடவுள்’ என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை. தமிழ் மொழியில் உள்ள நல்ல சொற்களையெல்லாம் – உயர்ந்த சொற்களையெல்லாம் தமது நூலில் பயன்படுத்திய வள்ளுவர், ‘ கடவுள் ‘ என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவில்லை.

இரண்டாவது, ‘கடவுள் வாழ்த்து’ என்பதே கேலிக்குரியது; மிகவும் தவறான சங்கதியாகும். ‘சருவ வல்லமை’யும் படைத்த- நம்மையெல்லாம் காக்கும் கடவுளுக்கு ‘கடவுள் வாழ்த்து’ என்று நாம் போய் வாழ்த்துக் கூறுவதா? வள்ளுவரை நாம் மாபெரும் அறிவாளி, ஆராய்ச்சிக்காரர் என்று கூறுகிறோம். அதற்குத் தக்க ஆதாரங்களும் இருக்கின்றன. அவர் போய் இந்தப்படி ‘கடவுள்’ என்று நாம் கருதுவதற்கு வாழ்த்துப் பாடல் வாசிப்பாரா? 

வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அந்தப்படியாக நடக்க வேண்டும் என்பதற்காகவே பத்துப் பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறினார். சருவ வல்லமையுடைய சருவேசுவரனைப் பற்றிப் பாடுவதென்றால் இரண்டு, மூன்று பாட்டுகளோடு குறளை நிறுத்தியிருப்பார். அதை விட்டு அவ்வளவு பாட்டுகள் – அவைள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நற்குணத்தைப் போதிக்கிறார் என்றால் என்ன பொருள்? மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் – வாழ்வின் வகையை, நிலையை உணர்த்துவதற்காகத்தான் எட்டு, ஒன்பது கருத்துகளை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்துக் கூறியிருக்கிறார். [ விடுதலை 30-5-1950)

(தொடரும்)

தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 52

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 86: வாலாசா வல்லவன் பகிரும் திருக்குறளைப் போற்றும் பெரியார்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 85 தொடர்ச்சி)

பெரியாரும் திருக்குறளும் 1/2

அன்பர் வாலாசா வல்லவன் எழுதுகிறார்

இன்று காலை பெ.ம.வின் அடிப்பொடி கதிர்நிலவன் “பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னார், இதோ பார் ஆதாரம் என்று காட்டுவதற்காக ஒரே ஒரு பத்தியை மட்டும் எடுத்துப் பதிவிட்டிருந்தார். முழுமையாகப்  பதிவிடும்படி கேட்டேன். அவர் பதியவில்லை. ஆனைமுத்து ஐயா தொகுத்த பெரியார் சிந்தனைகள் நூலிலிருந்து முழுமையாகப் பதிவிட்டுள்ளேன்.

“குறளும் – நானும்”

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! வணக்கம். 

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது, பலர் என்னிடம், “எல்லாம் போய் விட்டால், நமக்கு எதுதான் நூல்!’ என்று கேட்பார்கள். நான், ‘இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் “அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?” என்று பதில் கூறுவேன். 

ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக் கூடாது என்று கருதி அந்தப்படியாகவே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு – அறிவாளி என்றால் பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு – நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகிய போது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான், ‘இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே!’ என்று கேட்டேன். ‘அது பரிமேலழகரின் உரை; அது குறளாசிரியர் கருத்தல்ல’ என்று எடுத்துக் கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாத்திரப்படி குறளுக்கு உரை எழுதி விட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள். 

அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக் கொண்டல்ல; ‘நான் சொல்லுகிற கருத்து- அதிலும் இருக்கிறது பார்!’ என்று கூறி வந்தேன். சிறிது குறை இருந்தாலும் இப்போதைக்கு இது இருக்கட்டும் என்று கருதினேன். 

புராணக் கருத்துகளிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்த பின், மூடக் கருத்துகள் ஆட்டம் கண்ட பின்தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி, முதலில் மூடக் கருத்துகளை அகற்றும் பணியில் பிரசாரம் புரிந்து வந்தேன். இன்று மக்களுக்குக் கொஞ்சம் அறிவுத் தெளிவு-பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப் பற்றிப் பேசுகிறேன். 

‘குறளில் இப்படியிருக்கிறதே! நீ ஏன் இப்படி நடக்கிறாய்?’ என்று கேட்காதீர்கள். நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில்தான் – நான் குறளை ஆதரிக்கிறேன்; அதை அப்படியே முழுவதையும் ஒத்துக் கொள்ள மாட்டேன். 

உதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிக வன்மையாகக் கண்டிக்கிறார்;  கொல்லாமையின் உயர்வு குறித்து வெகுவாக எழுதியிருக்கிறார். குறளிலேயே அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே என்பதற்காக நான் மாமிச உணவு உட்கொள்ளாமல் இருக்க முடியுமா? மக்களுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் குறள்தான் ஆதாரம் என்று சொல்லவில்லை. 

குறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் கூறுகிறேன். 

ஒரு கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும் என்றால், அந்தக் கடையில் உள்ள எல்லா சாமான்களையும் நாம் வாங்கிக்கொண்டு வருவோமா? நமக்குத் தேவையான சாமான்களை மாத்திரந்தான் வாங்கிவருவோம். அது போலவே, குறளில் வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டு விடுங்கள் என்று கூறுகிறேன். 

குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம் ; இருக்க முடியும். ஏனென்றால், அது 1950ஆவது வருடத்திய (இன்றைய) மாதிரி அல்ல. 2000 வருடத்திற்கு முந்திய சங்கதி. திருவள்ளுவர் திரிகாலமுணர்ந்த முனிபுங்கவ ரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை. 2000 வருடங்களுக்கு முன்னர் ஒருவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் மின் விளக்கு, ஒலிபெருக்கி, இயக்கி முதலியவற்றைக் கண்டிருப்பானா? மதவாதிகள் வேண்டுமானால், ‘எல்லாக் காலத்தையும், முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர்’ என்று பலரை விளம்பரப்படுத்தலாம். ஆனால், அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. நாம் திருவள்ளுவரை மகான் என்றோ அவதார புருசரென்றோ ஒத்துக் கொள்ள மாட்டோம். 

திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக் கொள்ள முடியும். 

அந்தப்படியிருக்க, 2000 ஆண்களுக்கு முன்னதாகத் திருவள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கும் ஏற்றதாக இருக்க முடியுமா? இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கைகள் சரி; என் திட்டங்கள் சரி என்றால் எனக்குப் பிறகும், இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள் – நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சங்கூட மாற்றப்படாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? அந்தப்படி இருக்க முடியுமா? 

காலத்திற்கு ஏற்ற முறையில்தான் எண்ணங்களின் விரிவும், கொள்கை, திட்டங்களும் இருக்க முடியும். போர் முறை பற்றித் திருவள்ளுவர் வில்,  வாள்,  வேல்,  கேடயம் என்ற ஆயுதங்களை வைத்துத்தானே எழுதியிருக்கிறார்? இன்று எழுதப்பட்டால் அணு குண்டைப் பற்றி எழுதுவார்கள் ; நாளைக்கு வேறொன்று. இந்தப் படியாகத்தானே மாறிக் கொண்டே போகும்! அப்படியிருக்க, எதையும் மாற்றக் கூடாது என்பது என்ன நியாயம்? ஆரியக் கருத்துகள், தத்துவங்கள் நம் நாட்டில் நுழையாதிருந்தால், நமக்குக் குறளே ஆதாரமாக – குறளே நம்முடைய மதமாக இருந்திருக்கும். ஆரியர்கள் திருவள்ளுவரை முதலிலேயே – பிறப்பிலேயே இழிந்தவராக ஆக்கி விட்டார்கள். 

இந்து மதத்தில் எந்தக் காரியங்களைச் செய்தவராக இருந்தாலும், அதிசயமான அற்புதமான-நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை அவர்களின் பிறவியில் – வரலாற்றில் புகுத்துவார்கள். இவன் குதிரைக்குப் பிறந்தான்; இவன் குரங்குக்குப் பிறந்தான்; இவன் யானைக்குப் பிறந்தான்; இவன் செத்துப் போனவனை உயிர் மீட்டு எழச்செய்தான்; இவன் மண்ணைச் சர்க்கரையாக்கினான்; குருடனுக்குக் கண் கொடுத்தான் – என்பது போன்ற அதிசயங்களைப் புகுத்தி விடுவார்கள். ஏனென்றால், அப்போதுதான் அதிலிருக்கும் குற்றங் குறைகள் பற்றி – ஆபாசங்கள் பற்றி யாரும் கேள்விகள் கேட்க மாட்டார்கள் என்ற கருத்தோடு! 

(தொடரும்)

தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 52

சனி, 29 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 85 - அருளியார்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 84 தொடர்ச்சி)

அருளியார்: எப்போதும் என்னுடன்!

அருளியாருடன் உரையாடி முடித்து விடைபெறும் போது “விடாப்பிடியாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள், நீங்கள் அப்படிச் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார். சிரித்துக் கொண்டே “நாம் செய்வோம்” என்று சொல்லி விடைபெற்றேன். அவர் முதன்முதலாக இப்படிச் சொன்னதை நான் மறக்கவில்லை, அவரும் மறக்கவில்லை.

1986-87-88? சரியாக நினைவில்லை. தஞ்சாவூரில் என் கல்லூரிக் கால ஆங்கிலப் பேராசிரியர் சேசாத்திரி அவர்களைப் பார்க்க நண்பர் மோகன் (அமரன்)  என்னை அழைத்துப் போயிருந்தார். கிட்டத்தட்ட இருபது ஆண்டு இடைவெளிக்குப் பின் பார்த்த போதிலும் உடனே தெரிந்து கொண்டு பேசினார். (இவருடன் எனக்கு நடந்த வகுப்பறை மோதல்கள் பற்றி முகநூலில் எழுதியுள்ளேன்.) இப்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பணி செய்து கொண்டிருந்தார். தமிழ் பல்கலைக்கழகம் பற்றியும், அங்கே அவரது பணி பற்றியும் சொன்னார். சங்கத் தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது பற்றிச் சொன்னார். என் பணிகளைப் பற்றிக் கேட்டறிந்தார்.

இடையில் அந்தக் கேள்வியைக் கேட்டார்: “தியாகராசா, உனக்கு அருளியாரைத் தெரியுமா?” “தெரியாது” என்றேன். அருளியாரின் உழைப்பு, தமிழறிவு, ஆய்வுத் திறன், சோர்வின்மை பற்றியெல்லாம் வியந்து சொன்னார். “நீ அவசியம் அவரைப் பார்க்க வேண்டும்” என்றார்.

அருளியாரை முதன்முதலாக எப்போது பார்த்தேன்? தஞ்சையில் காவிரி உரிமைக்கான போராட்டம், எங்களோடு அவரும் கலந்து கொண்டு தளைப்பட்டுப் பச்சைத்துண்டுடன் காவல்துறை வண்டியில் ஏறிய போதாக இருக்கலாம். நின்ற படி உணர்ச்சி பொங்க முழக்கம் எழுப்பிக் கொண்டே வந்தார்.

1993இல் தாய்த் தமிழ் கல்விப் பணி நிறுவி, அதன் சார்பில் அம்பத்தூரில் ஆலமரம் அருகே தமிழ்நாட்டின் முதல் தாய்த் தமிழ் பள்ளி நிறுவிய போது “தாருங்கள் ஆளுக்கு ஒரு உரூபாய் நன்கொடையாக” என்று ஒரு உரூபாய் முத்திரை விற்றுப் பொருள் திரட்டிக் கொண்டிருந்தோம். இதற்காகவே புதுவை சென்றிருந்தேன்.

அருளியார் அப்போது தஞ்சையில் பணி செய்து கொண்டிருந்தார், விடுமுறை நாட்களில் புதுவை வந்து விடுவார். நண்பர்கள் என்னை அருளியாரிடம் அழைத்துப் போனார்கள். அவர் எங்களை அன்புடன் வரவேற்றுத் தேநீர் வாங்கிக் கொடுத்து அமரச் சொல்லி நான் தந்த அறிக்கையை வாங்கிப் படித்தார். என்னைப் பார்த்துச் சொன்னார்:

“வேறு யாராய் இருந்தாலும் இதெல்லாம் வீண் வேலை என்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், ஏனென்றால் வெற்றி பெறாமல் விட மாட்டீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது. விடா முயற்சி செய்து வெற்றி பெறச் செய்யும் உங்கள் பண்பினை அறிவேன்” என்று சொல்லி ஐம்பதோ நூறோ முத்திரைகள் எண்ணி வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார்.

தமிழியக்கம் என்பது நான்கு சுவர்களுக்கு நடுவில் சொல்லாய்வு முயற்சிகளோடு முடிந்து விடுவதில்லை. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கிய போது ‘மிகையான’ ஊக்கத்துடன் துள்ளி வந்து நின்ற அருளியாரைக் கண்டேன். அரசியல் தலைவர்களை இந்த அளவுக்கு நம்ப வேண்டுமா என்ற கேள்விதான் எழும். இந்த முயற்சி தோற்று அடுத்த முயற்சி எடுத்தால் அப்போதும் வந்து நிற்பார். அருளியாரின் விடாப்பிடி அத்தகையது. 

மூலமுதல், பொதுமையறிக்கை முதலான செவ்வியல் மார்க்குசிய நூல்களைத் தூய தமிழில் மீளாக்கம் செய்ய முடிவெடுத்த போது அருளியாரிடம் சொன்னேன். “உங்கள் விடாமுயற்சி வெற்றி தரும்” என்று வாழ்த்தினார். சோசலிசம் என்பதைக் குமுகியம் என்று தமிழாக்கம் செய்வதாகச் சொல்லி அதற்கான காரணங்களை விளக்கிய போது ஏற்று ஊக்கம் கொடுத்தார். இடையில் ஒரு முறை புதுவைப் பயணத்தின் போது சொற்களின் நீண்ட பட்டியலோடு நானும் இளந்தமிழகம் செந்திலும் அவர் இல்லம் சென்றோம். தேன்மொழியம்மாவும் அருளியாரும் தாய் தந்தை போல் அன்பைப் பொழிந்து தட்டு நிறையத் தின்பண்டமெல்லாம் கொடுத்து உண்ணச் செய்தது கண்டு கூசிப் போனேன். விருந்தோம்பல், அருந்தோம்பல் செய்து எங்கள் ஐயங்களையெல்லாம் தெளியச் செய்து அனுப்பினார்.

‘சுய நிர்ணய உரிமை’ பற்றிய விவாதத்தை அவருக்கும் சொன்னேன். ‘தன்-தீர்வுரிமை’தான் சரி என்று ஏற்றுக் கொண்டார். நான் முதலில் தந்தீர்வு (தன் + தீர்வு) என்று எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு தன்றீர்வு என்று புணர்ச்சி நெறி வழுவாமல் எழுத முற்பட்டேன். [தம்+தீர்வு = தந்தீர்வு. தன்+தீர்வு = தன்றீர்வு]. வேண்டா, அது கடினமாக இருக்கும், ஆங்கிலத்தில் போலவே இடையில் ஒரு சிறு கோடு (hyphen) போட்டுக் கொண்டால் போதும் என்றார். இப்படித்தான் தன்-தீர்வுரிமை இறுதியாயிற்று.

மக்கள் தொலைக்காட்சியின் சங்கப் பலகையில் அவரை அழைத்து அமர்த்திச் சொல்லாய்வு பற்றிப் பேசக் கேட்டு மகிழ்ந்தேன். கண்டோர் மகிழ்ந்தனர். சுவைஞன் (இரசிகன்) எப்படி விசிறி ஆனான்? எள்+நெய் = எண்ணெய். அது ஏன் நல்லெண்ணெய் எனப் பெயர் பெற்றது? அவர் கொடுத்த விளக்கங்கள் ஊணுறக்கம் பாராமல் உழைத்து ஆய்வுச் சுரங்கத்தில் வெட்டியெடுத்த வைரங்களது ஒளிவீச்சின் சிற்சில சிதறல்களே! அவரது சொல்லாய்வு பற்றிப் பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம். அவர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

(தொடரும்)

தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 52

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 84: தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 83 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (9)

தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?

இனிய அன்பர்களே!

நவ தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்பதிலிருந்து இந்த உரையாடல் தொடங்கியது நினைவிருக்கும். நவ தாராளவாதம் வேண்டா என்று தொடக்கத்திலேயே தள்ளி விட்டோம். அதுதான் வேண்டும் என்றோ, அதுவே இருக்கட்டும் என்றோ யாரும் கட்சி கட்டவில்லை. ‘நவ’ என்பது புது எனப் பொருள் தரும்.

கலைச் சொல்லாக்கத்தில் பாதி தமிழாகவும் பாதி வேற்று மொழியாகவும் இருக்கலாகாது. நவ என்ற வடமொழிச் சொல்லை தாராளம் என்ற தமிழ்ச்சொல்லோடு சேர்க்க முடியாது, சேர்த்தால் அது இயல்பான தமிழாக இருக்காது. முன்பெல்லாம் self-expansion என்பதை சுயபெருக்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இரா. கிருட்ஷ்ணையா அவர்கள்தான் “சுயமும் பெருக்கமும் ஒட்டாது” என்று சொல்லி அதனைத் “தற்பெருக்கம்” என்று மாற்றச் செய்தார்.

தன் + பெருக்கம் = தற்பெருக்கம். ஆனால் முன்னொட்டாக ‘தற்’ சேர்ப்பது எல்லா இடத்திலும் ஒத்து வராது. தற்காலம் என்ற சொல் தொடர்ந்து தவறாகவே ஆளப்படுகிறது. என் எதிரில் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி இருக்கிறது. இந்தத் தற்காலம் தன்+காலம் அன்று, தத்+காலம்  தான். ‘தத்’ என்றால் வட மொழியில் அந்த என்று பொருள். தற்காலம் என்றால் அந்தக் காலம் என்றாகிறது. இந்தக் காலத்தை மனத்திற்கொண்டு அந்தக் காலம் என்பதைக் குறிக்கும் தற்காலம் என்று எழுதுவது முரண் அல்லவா? Modern என்பதைத்தான் தற்காலம் என்று தவறாக எழுதுகின்றனர். இதற்கு நல்ல தமிழ்ச் சமன் புதுமக் காலம் என்பதே. புதுமக் காலத்துக்கு ஏற்ற புதுத் தமிழ்ச் சொல்லாக்கம் தேவை. தனித் தமிழ் அல்லது தூய தமிழ் என்பது பழந்தமிழ் என்றும் புதுத் தமிழ் என்றால் ஆங்கிலம் அல்லது சமற்கிருதம் கலந்த தமிழ் என்றும் கருதிக் கொள்வது வெறும் மயக்கமே. பழங்கவிதை என்றால் தூய செந்தமிழ் என்றும் புதுக் கவிதை என்றால் கலப்படத் தமிழ் என்றும் கருதிக் கொள்வதும் அப்படித்தான்.

சொல்லாக்கத்தில் வேற்றுமொழிச் சொல்லை அல்லது சொற்றொடரை அப்படியே ஒலிபெயர்த்துத் தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் இருக்கும் போது அப்படிச் செய்யலாம். ஆக்சிஜன், ஐட்ரஜன், மீத்தேன்  என்றெல்லாம் எழுதலாம், அறிவியல் தமிழ் அவற்றை ஏற்றுக் கொள்ளும், பாதி தமிழ், பாதி வேற்றுமொழி என்று எழுதுவதுதான் மோசம். அறிவியலுக்கு மொழி பெரிதில்லை என்பது பிதற்றலே. சரியான மொழியில்தான் சரியான அறிவியல் பழகும்.

சரி, தாராளவியமா? தாராளியமா? என்ற வினாவிற்குத் திரும்புவோம். இரண்டு விதமாகவும் ஆளலாம் என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லியிருந்தார். புணர்ச்சி இலக்கணப்படி தாராளவியம்தான் சரி என்று சிபி சுட்டிக் காட்டினார். சிபி சொல்லும் இலக்கணம் சரியானதே என்று இலக்குவனார் திருவள்ளுவனார் ஏற்றுக் கொண்டார். ஆனால் தாராளியம் என்று பழகியிருந்தால் அதிலும் தவறில்லை என்றார். ஆக, தாராளவாதத்துக்கு விடை கொடுத்தனுப்பிய பிறகும், தாராளியமா? தாராளவியமா? என்ற கேள்வி எஞ்சியிருந்தது. எந்நேரமும் என் அருகில் அருங்கலைச்சொல் அகரமுதலியாக அமர்ந்திருக்கும் சொல்லாய்வறிஞர்  அருளியாரைக் கேட்டேன். தாராளிகம் என்றார். இது என்னய்யா புதிய சிக்கல்? தொலைப்பேசியில் சிக்கலைச் சொல்லி வைத்தேன். உடனே அவர் ஒன்றும் சொல்லவில்லை. காத்திருந்தேன். அவரிடமே கேட்க வேண்டும், அவர் சென்னை வந்தால் கேட்டு விடலாம்  எனக் காத்திருந்தேன். வரவில்லை. புதுவைக்கே சென்று கேட்டு வரலாமா? என்று கூட எண்ணிக் கொண்டிருந்தேன். நேற்று தொலைப் பேசியில் அழைத்து அவரே விளக்கமாகப் பேசினார்:

தாராளம் என்ற சொல் எப்படி வந்திருக்கக் கூடும்? என்று பாவாணர் ஆராய்ந்தார். தார் என்றால் படை. ஆள் என்றால் படைத் தலைவன். (அல்லது படையாளாக கூட இருக்கலாம்) இந்தத் ‘தாராள்’ என்ன செய்தாலும் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்களாம். அவனது போக்கு தாராளம் எனப்பட்டது. தாராளம் என்பதன் வேர்ச்சொல் தாராள் ஆகையால் தாராள் + இயம் எனக் கொண்டால் தாராளியம் பெறப்படும். தாராளியம் என்பதில் தவறில்லை. தாராளம் + இயம் என்று பிரித்தால் தாராளவியம் என்றும் சொல்லலாம். நீங்கள் தாராளியம் என்று சொல்லிப் பழகியிருந்தால் அவ்வாறே தொடருங்கள்! தாராளமாகத் தொடருங்கள் என்றார்.

அப்படியானால், தாராளிகம் என்று அகரமுதலியில் கூறியுள்ளீர்களே? அப்படிச் சொல்வது தமிழ் மரபுக்கு உகந்ததே! வாணியத்தை வாணிகம் என்று சொல்வதில்லையா?

நாகரிகம் போல் தாராளிகம் எனக் கொள்ளலாம். நான் தாராளியம் என்றே எழுதியும் பேசியும் வருகிறேன். புதுத் தாராளியம் எதிர்ப்போம்! பழந்தாராளியத்தின் வரலாறு படிப்போம்! ஊழியர் கொள்கையில் மாவோ சொல்லும் தாராளியப் போக்குகளைக் களைவோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 52