(தோழர் தியாகு எழுதுகிறார் 84 தொடர்ச்சி)

அருளியார்: எப்போதும் என்னுடன்!

அருளியாருடன் உரையாடி முடித்து விடைபெறும் போது “விடாப்பிடியாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள், நீங்கள் அப்படிச் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார். சிரித்துக் கொண்டே “நாம் செய்வோம்” என்று சொல்லி விடைபெற்றேன். அவர் முதன்முதலாக இப்படிச் சொன்னதை நான் மறக்கவில்லை, அவரும் மறக்கவில்லை.

1986-87-88? சரியாக நினைவில்லை. தஞ்சாவூரில் என் கல்லூரிக் கால ஆங்கிலப் பேராசிரியர் சேசாத்திரி அவர்களைப் பார்க்க நண்பர் மோகன் (அமரன்)  என்னை அழைத்துப் போயிருந்தார். கிட்டத்தட்ட இருபது ஆண்டு இடைவெளிக்குப் பின் பார்த்த போதிலும் உடனே தெரிந்து கொண்டு பேசினார். (இவருடன் எனக்கு நடந்த வகுப்பறை மோதல்கள் பற்றி முகநூலில் எழுதியுள்ளேன்.) இப்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பணி செய்து கொண்டிருந்தார். தமிழ் பல்கலைக்கழகம் பற்றியும், அங்கே அவரது பணி பற்றியும் சொன்னார். சங்கத் தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது பற்றிச் சொன்னார். என் பணிகளைப் பற்றிக் கேட்டறிந்தார்.

இடையில் அந்தக் கேள்வியைக் கேட்டார்: “தியாகராசா, உனக்கு அருளியாரைத் தெரியுமா?” “தெரியாது” என்றேன். அருளியாரின் உழைப்பு, தமிழறிவு, ஆய்வுத் திறன், சோர்வின்மை பற்றியெல்லாம் வியந்து சொன்னார். “நீ அவசியம் அவரைப் பார்க்க வேண்டும்” என்றார்.

அருளியாரை முதன்முதலாக எப்போது பார்த்தேன்? தஞ்சையில் காவிரி உரிமைக்கான போராட்டம், எங்களோடு அவரும் கலந்து கொண்டு தளைப்பட்டுப் பச்சைத்துண்டுடன் காவல்துறை வண்டியில் ஏறிய போதாக இருக்கலாம். நின்ற படி உணர்ச்சி பொங்க முழக்கம் எழுப்பிக் கொண்டே வந்தார்.

1993இல் தாய்த் தமிழ் கல்விப் பணி நிறுவி, அதன் சார்பில் அம்பத்தூரில் ஆலமரம் அருகே தமிழ்நாட்டின் முதல் தாய்த் தமிழ் பள்ளி நிறுவிய போது “தாருங்கள் ஆளுக்கு ஒரு உரூபாய் நன்கொடையாக” என்று ஒரு உரூபாய் முத்திரை விற்றுப் பொருள் திரட்டிக் கொண்டிருந்தோம். இதற்காகவே புதுவை சென்றிருந்தேன்.

அருளியார் அப்போது தஞ்சையில் பணி செய்து கொண்டிருந்தார், விடுமுறை நாட்களில் புதுவை வந்து விடுவார். நண்பர்கள் என்னை அருளியாரிடம் அழைத்துப் போனார்கள். அவர் எங்களை அன்புடன் வரவேற்றுத் தேநீர் வாங்கிக் கொடுத்து அமரச் சொல்லி நான் தந்த அறிக்கையை வாங்கிப் படித்தார். என்னைப் பார்த்துச் சொன்னார்:

“வேறு யாராய் இருந்தாலும் இதெல்லாம் வீண் வேலை என்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், ஏனென்றால் வெற்றி பெறாமல் விட மாட்டீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது. விடா முயற்சி செய்து வெற்றி பெறச் செய்யும் உங்கள் பண்பினை அறிவேன்” என்று சொல்லி ஐம்பதோ நூறோ முத்திரைகள் எண்ணி வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார்.

தமிழியக்கம் என்பது நான்கு சுவர்களுக்கு நடுவில் சொல்லாய்வு முயற்சிகளோடு முடிந்து விடுவதில்லைதமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கிய போது ‘மிகையான’ ஊக்கத்துடன் துள்ளி வந்து நின்ற அருளியாரைக் கண்டேன். அரசியல் தலைவர்களை இந்த அளவுக்கு நம்ப வேண்டுமா என்ற கேள்விதான் எழும். இந்த முயற்சி தோற்று அடுத்த முயற்சி எடுத்தால் அப்போதும் வந்து நிற்பார். அருளியாரின் விடாப்பிடி அத்தகையது. 

மூலமுதல், பொதுமையறிக்கை முதலான செவ்வியல் மார்க்குசிய நூல்களைத் தூய தமிழில் மீளாக்கம் செய்ய முடிவெடுத்த போது அருளியாரிடம் சொன்னேன். “உங்கள் விடாமுயற்சி வெற்றி தரும்” என்று வாழ்த்தினார். சோசலிசம் என்பதைக் குமுகியம் என்று தமிழாக்கம் செய்வதாகச் சொல்லி அதற்கான காரணங்களை விளக்கிய போது ஏற்று ஊக்கம் கொடுத்தார். இடையில் ஒரு முறை புதுவைப் பயணத்தின் போது சொற்களின் நீண்ட பட்டியலோடு நானும் இளந்தமிழகம் செந்திலும் அவர் இல்லம் சென்றோம். தேன்மொழியம்மாவும் அருளியாரும் தாய் தந்தை போல் அன்பைப் பொழிந்து தட்டு நிறையத் தின்பண்டமெல்லாம் கொடுத்து உண்ணச் செய்தது கண்டு கூசிப் போனேன். விருந்தோம்பல், அருந்தோம்பல் செய்து எங்கள் ஐயங்களையெல்லாம் தெளியச் செய்து அனுப்பினார்.

‘சுய நிர்ணய உரிமை’ பற்றிய விவாதத்தை அவருக்கும் சொன்னேன். ‘தன்-தீர்வுரிமை’தான் சரி என்று ஏற்றுக் கொண்டார். நான் முதலில் தந்தீர்வு (தன் + தீர்வு) என்று எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு தன்றீர்வு என்று புணர்ச்சி நெறி வழுவாமல் எழுத முற்பட்டேன். [தம்+தீர்வு = தந்தீர்வு. தன்+தீர்வு = தன்றீர்வு]. வேண்டா, அது கடினமாக இருக்கும், ஆங்கிலத்தில் போலவே இடையில் ஒரு சிறு கோடு (hyphen) போட்டுக் கொண்டால் போதும் என்றார். இப்படித்தான் தன்-தீர்வுரிமை இறுதியாயிற்று.

மக்கள் தொலைக்காட்சியின் சங்கப் பலகையில் அவரை அழைத்து அமர்த்திச் சொல்லாய்வு பற்றிப் பேசக் கேட்டு மகிழ்ந்தேன். கண்டோர் மகிழ்ந்தனர். சுவைஞன் (இரசிகன்) எப்படி விசிறி ஆனான்? எள்+நெய் = எண்ணெய். அது ஏன் நல்லெண்ணெய் எனப் பெயர் பெற்றது? அவர் கொடுத்த விளக்கங்கள் ஊணுறக்கம் பாராமல் உழைத்து ஆய்வுச் சுரங்கத்தில் வெட்டியெடுத்த வைரங்களது ஒளிவீச்சின் சிற்சில சிதறல்களே! அவரது சொல்லாய்வு பற்றிப் பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம். அவர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

(தொடரும்)

தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 52