திங்கள், 2 மே, 2011

Dinamani editorial about section 124A : தலையங்கம்: வேண்டாம் இந்தச் சட்டம்!

மிக நல்ல கருத்து. ஆனால்,  நம் நாட்டில் நம் நாட்டு அரசாங்கங்களுக்கு எதிராகப் பேசினால் கூட விட்டு விடுவார்கள். அடுத்த நாட்டு அரசாங்கத்தின் படுகொலைச் செயல்களைப் பேசினால் நம் நாட்டு இறையாண்மைக்கு எதிரானது எனத் தண்டிப்பார்கள். எதிர்க்கட்சியாக இருந்து உரிமைக் குரல் கொடுப்பவர்கள், ஆளும் கட்சியானால் இதே சட்டப்பிரிவை வேண்டாதவர் மீது பயன்படுத்துகிறார்கள். தினமணி தலையங்கம் ஓர் இயக்கமாக மாறி இது போன்ற  தேவையற்ற பல சட்டப்பிரிவுகளை நீக்கும் நிலை ஏற்பட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



தலையங்கம்: வேண்டாம் இந்தச் சட்டம்!

First Published : 02 May 2011 02:10:14 AM IST


சட்டங்கள் எல்லாமே காலமாற்றங்களுக்கு ஏற்ப மாற்றப்படவேண்டியவைதான். சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களும் மாற்றப்படாவிட்டால், சட்டமீறல்கள் நடைபெறுவதை எந்த அரசாலுமே தடுக்க முடியாமல் போய்விடும். அந்த அரசும் வெகுஜன விரோத அரசாக மாறி, மக்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாக நேரிடும்.  இந்தியா சுதந்திரம் அடைந்து இன்னும் சில மாதங்களில் 64 ஆண்டுகள் நிறைவுபெறப் போகிறது. ஆனால், ஓர் அடிமை நாட்டை ஆள்வதற்காகப் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய பல சட்டங்களை நாம் இன்னும் மாற்றாமலும் அகற்றாமலும் பாதுகாத்து வருகிறோம் என்பதுதான் வேதனையான ஒன்று. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காகவும் அவர்களைத் தண்டிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் இப்போது சுதந்திர இந்தியாவில் மக்களின் நியாயமான உணர்வுகளை அடக்குவதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?  சமீபத்தில் டாக்டர் வினாயக் சென் மீது சத்தீஸ்கர் அரசால் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தி இருக்கும் சில கருத்துகள், இந்தியச் சட்டவியலில் இருக்கும் இந்தக் களங்கத்தைத் துடைத்து, ஏனைய பல பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்திய சட்டப்பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைக்கு வலு சேர்த்திருக்கின்றன. குறிப்பாக, தேசத் துரோகக் குற்றம் தொடர்பான 124 அ பிரிவு தேவைதானா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.  இந்தியச் சட்டவியலில் 1870-ல் சேர்க்கப்பட்ட 124 அ என்கிற சட்டப்பரிவு, தேசத்துரோகம் என்கிற குற்றத்துக்கு, எந்தவிதமான அடிப்படைக் காரணங்களையும் குறிப்பிடாமல், மூன்று விதமான தண்டனைகளைப் பரிந்துரைக்கிறது. தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், ஆயுள்தண்டனையோ, மூன்றாண்டு சிறைத் தண்டனையோ, இல்லை வெறும் அபராதமோ நீதிபதியின் கணிப்புக்கு ஏற்ப விதிக்கப்படலாம் என்கிறது 124 அ பிரிவு. இவைஇவை தேசத்துரோகம் என்றோ, இன்ன தவறுக்கு இன்ன தண்டனை என்றோ இந்தச் சட்டப்பிரிவில் குறிப்பிடவில்லை என்பதுதான் வேடிக்கை.  1922-ல் மகாத்மா காந்தியடிகள் தமது "யங் இந்தியா' இதழில் இரண்டு கட்டுரைகளை எழுதினார். இந்தச் கட்டுரைகளுக்காக தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். கூண்டில் நிறுத்தப்பட்ட மகாத்மா காந்தி கூறிய கருத்து இதுதான் - ""இந்த அரசுக்கும் ஆட்சிக்கும் எதிராக எழுதுவதும் பேசுவதும் எனக்கு உணர்வுப் பூர்வமான விஷயமாகி விட்டிருக்கிறது. தேசப்பற்று என்பதைச் சட்டத்தின் மூலம் உருவாக்கவோ, முறைப்படுத்தவோ முடியாது. இந்த 124 அ என்கிற சட்டப் பிரிவு என்பது கருத்துச் சுதந்திரத்தை அடக்கவும் ஒடுக்கவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்களில் முதன்மையானது''.  இந்த 124 அ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட சுதந்திரப் போராட்டக் கால தலைவர்களின் பட்டியல் பாலகங்காதர திலகர், வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, லாலா லஜபதிராய், வீரசாவர்க்கார் என்று நீளும். இரண்டு முறை இந்தச் சட்டத்தின் கீழ் தேசத்துரோகக் குற்றத்துக்காக திலகர் கைது செய்யப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட்டபோதும், நான் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக எழுதவும், பேசவும் செய்தேனே தவிர இந்த தேசத்து மக்களுக்கு எதிராகச் செயல்படவில்லை என்று கூறி, தனக்கு தரப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டார் என்கிறது சுதந்திரப் போராட்ட சரித்திரம்.  1951-ல் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவாஹர்லால் நேரு, நாடாளுமன்றத்திலேயே "இதுபோன்ற கண்டனத்துக்கு உரிய சட்டப் பிரிவு எதுவுமே இருக்க முடியாது என்றும், இதை எவ்வளவு சீக்கிரம் அகற்றுகிறோமோ அவ்வளவு நல்லது என்றும் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வளவெல்லாம் இருந்தும் இன்றும் ஏன் இப்படி ஒரு சட்டப் பிரிவு நமது சட்டவியலில் தொடர வேண்டும் என்பதுதான் வியப்பாக இருக்கிறது. மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே, கருத்துச் சுதந்திரம்தான். கருத்துச் சுதந்திரத்தின் உயிர்ப்பான பகுதி எது என்று கேட்டால், ஆட்சியாளர்களுடனான கருத்து வேறுபாடும், அரசியல் செயல்பாடுகளை கேள்வி கேட்கும் உரிமையும்தான்.  1962-ல் பிகார் மாநில அரசுக்கு எதிரான கேதார்நாத் சிங் வழக்கில் 124 அ சட்டப் பிரிவை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக்கியது. அரசின் செயல்பாடுகளை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது என்பது தேசத்துரோகம் என்று கருதப்படக் கூடாது என்பதுதான் அது.  "தேசத் துரோகம்' பற்றிய 124 அ சட்டப் பிரிவு 1860-ல் இயற்றப்பட்ட இந்திய சட்டவியலில் கிடையாது. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சுதந்திரத்துக்கான குரலை ஒடுக்குவதற்காக இந்தச் சட்டப் பிரிவு இணைக்கப்பட்டது. 1898-ல் இது மேலும் கடுமையாக்கப்பட்டு, அரசுக்கு எதிரான கருத்துகள் தேசத் துரோகக் குற்றமாக்கப்பட்டன.  உலகில் உள்ள பல நாடுகளில் தேசத்துரோகம் என்கிற சட்டப் பிரிவு இருந்தால், அதை அகற்றி வருகின்றன. நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் தேசத் துரோகக் குற்றம் வந்ததே நீர்த்துப் போய்விட்ட நிலைமை. பிரிட்டனில் கடைசியாகத் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட சம்பவம் 1947 உடன் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு இந்தச் சட்டப் பிரிவே பயன்படுத்தப்பட வில்லை. ஆனாலும் கூட 2010-ல் இந்தச் சட்டப் பிரிவு பிரிட்டிஷ் சட்டவியலிலிருந்து அகற்றப்பட்டது. ஏனைய நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக எதிர்க் கட்சிகளையும், விமர்சனங்களையும் அடக்கவும் ஒடுக்கவும் இந்தச் சட்டப் பிரிவு, பிரிட்டனை முன் உதாரணம் காட்டி பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணம்.  மக்களாட்சி முறையில் விமர்சனங்கள் எழுப்பப்படுவதும், ஆட்சிக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதும் தடுக்கப்படக் கூடாது. விமர்சனங்களும், மக்களின் நியாயமான உணர்வுகளும் தேசத்துரோகம் என்று வர்ணிக்கப்பட்டு ஒடுக்கப்படக் கூடாது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கால 124 அ பிரிவு சட்டம், சுதந்திர இந்தியாவுக்குத் தேவையில்லை. மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் சட்டத்தால் அடக்க நினைக்கும் மடமைக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.  தேவையில்லை இனியும் இந்த 124 அ!

வகுப்புகளுக்கு மட்டம்போடும் மாணவர்களுக்குத் தேர்வு எழுதக் கருணை காட்டக்கூடாது: தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

நாம் பாராட்டுகின்ற வெளிநாட்டுக் கல்வி முறைகளில் வருகைக்கு முதன்மை அளிப்பதில்லை. அதனைப் பயன்படுத்தி நூலக வாசிப்பிற்கு முதன்மை அளித்து நம் கல்வி முறையை மாற்றலாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
 
வகுப்புகளுக்கு மட்டம்போடும் மாணவர்களுக்கு தேர்வு எழுத கருணை காட்டக்கூடாது: தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

First Published : 02 May 2011 01:06:52 AM IST


புது தில்லி, மே 1: வகுப்புகளுக்கு மட்டம் போடும் மாணவர்களுக்கு தேர்வு எழுத கருணை காட்டக் கூடாது என்று தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.  ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் இதழியலை பாடமாக எடுத்து படித்த 3 மாணவர்கள் வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்லாமல் மட்டம் போட்டனர். இந்த 3 மாணவர்களுக்கும் வருகை பதிவு 75 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதையடுத்து இவர்கள் இறுதியாண்டு தேர்வு எழுத பல்கலைக் கழகம் அனுமதி மறுத்தது.  இதையடுத்து 3 மாணவர்களும் தாங்கள் அளித்த மருத்துவ சான்றிதழை ஏற்று தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தில்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி கைலாஷ் காம்பீர் விசாரித்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் அவர் கூறியது:  மாணவனோ அல்லது மாணவியோ அவர்கள் படிக்கும் பாடத்தை அறிய முழு ஈடுபாட்டுடன் வகுப்புகளுக்குச் சென்றால்தான் அவர்கள் மேன்மை அடைய முடியும். ÷கல்லூரி,பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் வருகை பதிவு ஒரு சட்டம். அதற்கு விதி விலக்கு அளிக்க முடியாது. இந்த 3 மாணவர்களுக்கும் கருணை காட்டினால், ஒழுங்கீனத்துக்கு அங்கீகாரம் கொடுத்ததுபோல் ஆகிவிடும். இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருப்பது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கல்லூரி,பல்கலைக் கழகங்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும்.  மாணவர்களின் வருகை பதிவு விஷயத்தில் பல்கலைக் கழகங்கள் தங்கள் விதிகளில் உறுதியாக இருக்கும்படி வலியுறுத்தி உச்ச நீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. இதில் விதிமுறை ஏதாவது தளர்த்தினால் அது பரிகாசத்துக்கு இடமாகிவிடும். இதனால் மாணவர்கள் வருகை பதிவு விஷயத்தில் நிவாரணம் தேடி நீதிமன்றத்துக்கு வரக் கூடாது.  அவசரத் தேவை ஏற்பட்டால் மாணவர்களின் வருகை பதிவில் 2 வாரங்கள் தளர்த்த பல்கலைக் கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு மேல் தளர்த்தக் கூடாது. ஒரு மாணவர் வகுப்புக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவரின் மருத்துவ சான்றிதழை பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் பரீசிலிக்கலாம் என்று நீதிபதி கைலாஷ் காம்பீர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 1 மே, 2011

May Day - Dinamalar Photo Message


May Day - Dinamalar Photo


China supports srilanga: ஐ.நா. அறிக்கை: இலங்கைக்கு சீனா ஆதரவு

அரசு அறியாமலோ அரசை மீறியோ படைத்துறையினர் போர்க்குற்றங்கள் புரிந்திருந்தால் அரசு உசாவுவதில் பயன் உண்டு. ஆனால், போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைகளையும்
சிங்கள அரசே புரிந்துள்ளதால்  குற்றவாளியே எப்படி உசாவவும் நீதி வழங்கவும் முடியும்?  சீனா தொடர்ந்து சிங்களத்திற்குச் சார்பாக இருப்பதற்காகவாவது இந்தியா ஈழத்தை ஆதரிக்க வேண்டாவா? இனப்படுகொலைகளில் சீனாவிற்கு உள்ள பங்கும் உசாவப்பட்டு அனைத்துக் குற்றவாளிகளுக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



ஐ.நா. அறிக்கை: இலங்கைக்கு சீனா ஆதரவு

First Published : 01 May 2011 03:32:23 AM IST


பெய்ஜிங், ஏப். 30: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது போர்க்குற்றமே என்ற ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் மே மத்தியில் இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், திடீரென சீனா அதற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.  இலங்கை அதிபர் ராஜபட்சயை போர்க் குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இப் பிரச்னையை இலங்கையிடமே விட்டுவிடுங்கள், பெரிதுபடுத்த வேண்டாம். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு அரசே குழு ஒன்றை அமைத்துள்ளதால், அதன் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளே சரியானதாக இருக்கும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ சனிக்கிழமை தெரிவித்தார்.  இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானதை, உலக நாடுகள் வெளியில் இருந்து செய்தால் போதும் என்றும் ஹாங் அதில் குறிப்பிட்டுள்ளார்.

+2 results on May 9th : மே 9-இல் + 2 தேர்வு முடிவுகள்

நல்ல வேளை. அதிகாரிகள் சொன்னவாறு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, அவை செல்லாது அமைச்சர் அறிவிக்கும் நாளில் வெளியிடுவதுதான் சரியான முடிவுகள் எனச் சொல்லாமல் எப்படியோ அறிவித்து விட்டார்களே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


மே 9-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
First Published : 01 May 2011 02:38:36 AM IST

Last Updated : 01 May 2011 03:56:26 AM IST
சென்னை, ஏப். 30: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை அறிவித்தார்.  மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமாகவும் அரசுத் தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளம், எஸ்எம்எஸ், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  "மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டன. கம்ப்யூட்டரில் பதிவான மதிப்பெண்களில் உள்ள தவறுகளைத் திருத்தும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் மே 8-ல் தான் முடிவடையும். எனவே வரும் திங்கள்கிழமை (மே 9-ம் தேதி) முடிவுகள் அறிவிக்கப்படும்' என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.  பிளஸ் 2 தேர்வு முடிவு மே 14-ம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மே 25-ம் தேதியும் வெளியிடப்படலாம் என்று பள்ளி கல்வித்துறை செயலர் டி. சபிதா கடந்த வாரம் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித்துறையே தன்னிச்சையாக அறிவித்தது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.  "தேர்வு முடிவு தேதிகளை அறிவிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள், அதன் அமைச்சரைக் கலந்து ஆலோசித்து விட்டு முதல்வரின் ஒப்புதலைப் பெறுவர். அவர் அனுமதி அளித்த பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மூலமாகத் தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும். இதுவே நடைமுறை. ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வித்துறை செயலரே தேர்வு முடிவு தேதியை அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தேர்தல் தேதி முடிவு அறிவிப்புக்கும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கும் தொடர்பில்லை'' என்று அமைச்சர் தெரிவித்தார்.  அமைச்சரின் எதிர்ப்பால், பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் தேதியை முடிவு செய்வதில் குழப்பம் நிலவியது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு திடீரென அறிவித்துள்ளார்.  10 வகுப்புத் தேர்வு முடிவு: பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இப்போது நடைபெற்றுவருகிறது. பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.

சனி, 30 ஏப்ரல், 2011

Pandemonium in P.A.C. : தலையங்கம்: பொதுக்கணக்கில் புதுக்கணக்கு!

பொதுக்கணக்குக் குழுவின் விசாரணை தேவையில்லை என்பவர்களை இக்குழுவில் இருந்து நீக்கிவிட்டு விசாரிக்க வேண்டும். இனி இது போன்ற குழுக்களை அமைக்கும் பொழுது எழுத்து மூலமாக இக் குழுவின் நடவடிக்கையில் நம்பிக்கை உள்ளதாக எழுதித்தருபவர்களை மட்டுமே உறுப்பினர்களாக்க வேண்டும். இருப்பினும் தி.மு.க.துணைக்குற்றவாளிதான். காங்.தான் தலைமைக் குற்றவாளி என்பதை இந்தச் செயற்கை அமளி  மெய்ப்பித்து விட்டது. பழிஓரிடம் பாவம் ஓரிடம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தலையங்கம்: பொதுக்கணக்கில் புதுக்கணக்கு!

First Published : 30 Apr 2011 03:37:08 AM IST

Last Updated : 30 Apr 2011 04:11:52 AM IST

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, பொதுக்கணக்குக் குழு (பிஏசி)எதற்காக எல்லோரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று குழு உறுப்பினர்களில் ஒருவரான மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எதிர்ப்புக் குரல் எழுப்பியபோது, இந்த விசாரணையை ஊத்திக் கவிழ்க்கும் முயற்சியின் முதல்கட்டம் தொடங்கிவிட்டது என அப்போதே தெளிவாகிவிட்டது.  பி.ஏ.சி.-யின் தனி விசாரணை தேவையில்லை என்ற எதிர்ப்பு ஏற்பட்ட நாளன்று சட்டத்துறைச் செயலரும், அட்டர்னி ஜெனரல் வாஹன்வதியும் நேரில் விளக்கம் அளிக்க வந்திருந்தனர் என்பதையும், இப்போது கசிந்துள்ள அறிக்கையில், ""அன்றைய தினம் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாஹன்வதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்கிற நடைமுறை சரியானதுதான் என்கிற கருத்தை, சட்டத்துறையைப் புறந்தள்ளிவிட்டு நேரடியாகத் தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவித்தார் என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும் இப்போது இணைத்துப் பார்க்கும்போது, இவர்களுக்குக் கோபம் எங்கே கிளைக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும்.  நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தாலும்கூட, நாடாளுமன்றத்தால் சட்டப்படி உருவாக்கப்பட்ட பொதுக்கணக்குக் குழு, அரசுக்கு ஏற்பட்ட நிதியிழப்பு குறித்து விசாரிக்க முழு உரிமை பெற்றுள்ளது. அதன்படிதான், பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, தொலைபேசித் துறைச் செயலர் முதல் இதில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்து வந்தார். அவர்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன, என்ன பதில் அளிக்கப்பட்டது என்பது வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது.  பொதுக் கணக்குக் குழு நடத்திய விசாரணையில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படாத சில விஷயங்களும்கூட வெளிப்பட்டுள்ளதும், இவை பொதுக்கணக்குக் குழு அறிக்கையில் பதிவு செய்யப்படுமேயானால், இதில் சுட்டிக்காட்டப்பட்ட விஷயங்களை நாளை நீதிமன்றமும் கையில் எடுக்கக் கூடும் என்கிற அச்சமும்தான் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது.  பி.ஏ.சி. விசாரணைக்குத் தடை விதித்த பிறகு, அடுத்ததாக இந்த அறிக்கையைத் தடுத்து நிறுத்தும் முகமாக, சமாஜ்வாதி கட்சியின் அங்கத்தினர் ஒருவர், பகுஜன் சமாஜ் கட்சியின் அங்கத்தினர் ஒருவர் என இரண்டு பேரை மட்டும் தங்கள் பக்கம் "இழுத்து'க்கொண்டு எண்ணிக்கை பலத்தை 11 ஆகக் காட்டி, இந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, ஜோஷி மீது கடுமையாக வசை பாடினார்கள்.  இதையெல்லாம்விட பெரிய கேலிக்கூத்து, இவர்களின் "ரகளை' பொறுக்கமாட்டாமல் ஜோஷி வெளியேறியபோது, ஓடுகிறார் என்று கேலி பேசியதுடன், அந்த 11 பேரும் உட்கார்ந்து பிஏசி தலைவராகப் பேராசிரியர் சைபுதின் சோûஸத் தேர்வு செய்தார்கள். பிஏசி தலைவராக இருப்பவர் மக்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்கிற அடிப்படைகூடத் தெரியாமல், மாநிலங்களவை உறுப்பினரான சோஸ் தேர்வு செய்யப்படுகிறார் என்றால், இதுகுறித்து இன்றுவரையிலும் மக்களவைத் தலைவரும் பிரதமரும் ஏதும் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருப்பார்கள் என்றால், இதை என்னவென்பது?  இந்த அறிக்கை உள்நோக்குடன் கசிந்தது என்றும், மத்திய அரசைக் களங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் கட்சி கருதினால் அதை பிஏசி கூட்டத்தில் விவாதிப்பதும், கேள்வி கேட்பதும் நியாயமானதே. ஆனால், அதற்காக அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பது என்பது இத்தனை நாள்களாக பிஏசி நடத்திய விசாரணையையே அழிப்பதாக ஆகாதா?  பி.ஏ.சி.-யில் ஒவ்வொருவரும் தெரிவித்த தகவல்களை வைத்துத்தான் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது உறுப்பினர்களுக்கே நன்றாகத் தெரியும். அத்தனையும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள். இதில் தனியாக ஜோஷியோ அல்லது பாஜகவோ இட்டுக்கட்டி எழுதுவதற்கு ஏதுமில்லை. அவ்வாறு இருந்தால், விசாரணையில் பதிவு செய்யப்படாமல் தன்னிச்சையாக எழுதப்பட்ட பகுதிகள் எவையெவை என்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரினால் அது நியாயமான அணுகுமுறையாக இருந்திருக்கும்.  இவர்களது அடிப்படை அச்சம் , இணையான விசாரணை நடந்தால், அறிக்கை வெளியானால், தங்கள் குற்றம் மேலும் உறுதி செய்யப்படும் என்பதுதான். ஆகவேதான் காங்கிரஸýம் திமுகவும் இதில் இந்த அளவுக்கு எதிர்ப்பு காட்டியுள்ளன.  நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தன்னிச்சையாகத் தயாரித்துவிட்டார் என்று கூக்குரலிடுகிறார்கள் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள். இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கும்போது, குழுவின் சார்பில் விசாரணையின்போது அனைவரும் கலந்துகொள்வதும் அதன் தலைவர் அறிக்கையைத் தயாரிப்பதும்தானே வழக்கம். அந்த அறிக்கை குழுவின்முன் விவாதத்துக்கு வைக்கப்படும்போது, தங்கள் ஆதரவையோ, ஆட்சேபணைகளையோ உறுப்பினர்கள் பதிவு செய்வதுதானே முறை?  பொதுக்கணக்குக் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அதில் பிரதமரின் செயல்பாடுகள் குறித்த பல கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதுதான், காங்கிரஸ் - திமுக உறுப்பினர்களின் ஆவேசத்துக்கும், அவசரத்துக்கும் காரணம். 2003-ல் கார்கில் போரின்போது ராணுவக் கொள்முதல்கள் பற்றி விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட பூட்டா சிங் தலைமையிலான பொதுக்கணக்கு விசாரணைக் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் அன்று ஆட்சியிலிருந்த பாஜக தடுத்தது. இப்போது, முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்யவிடாமல் இன்றைய ஆளும் கட்சிகள் தடுக்கின்றன.  தவறுகளையும், முறைகேடுகளையும் யார் செய்திருந்தாலும் வெளிக்கொணர வேண்டிய நமது மாண்புமிகு உறுப்பினர்கள், தவறுகளை மூடி மறைப்பதில் காட்டும் அக்கறை பிரமிக்க வைக்கிறது. இந்தியா ஒளிர்கிறது, நிஜம்!

sharing power or which is the real solution of the crisis in ilangai?அதிகாரப் பரவல்: தமிழ் தேசியக் கட்சியுடன் இலங்கை அரசு பேச்சு

இந்த நாடகம் சிங்கள மேடையில் எத்தனை நாளம்மா? அம்மா! எத்தனை நாளம்மா? ௧௯௦௦ ஆ் ஆண்டில் இரு்நத தமிழ்நிலப்பரப்பு தமிழ்  ஈழமாக ஏற்கப்பட வேண்டும். இதுவே சரியான தீர்வு.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அதிகாரப் பரவல்: தமிழ் தேசியக் கட்சியுடன் இலங்கை அரசு பேச்சு

First Published : 30 Apr 2011 02:14:31 AM IST


கொழும்பு, ஏப்.29: அதிகாரப்பரவல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளது.  இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் சட்டப்பிரிவு ஆலோசகர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியது: தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் நிரந்தர தீர்வு காண இலங்கை அரசு பிரதிநிதிகள் குழுவுடன் தமிழர் கட்சி பிரதிநிதிகள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இப்போதுதான் முதன் முதலாக இலங்கையில் அதிகாரப் பரவல் குறித்த பேச்சுவார்த்தை துவங்கப்பட்டுள்ளது. 4,600 தமிழர்களை ராணுவம் பிடித்தது வைத்திருப்பது குறித்தும், 850 தமிழர்கள் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டிருப்பது குறித்தும் இலங்கை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்.  அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது என்றார்.  போராட்டத்தை ஏற்க முடியாது: இதற்கிடையே இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அளித்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மே 1-ம் தேதி இலங்கையில் உள்ள ஐ.நா. சபை அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என சில அமைப்புகள் அறிவித்துள்ளன. இதற்கு ஐ.நா. சபை பேச்சாளர் ஃபார்ஹன் ஹக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வியாழக்கிழமை நிருபர்களிடம் பேசிய அவர், இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கோ, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கோ எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு இலங்கை அரசே பொறுப்பாகும். இந்த போராட்டத்தை ஏற்க முடியாது என்றார். 

Anticipations from the new govt. - education : என்ன வேண்டும் எங்களுக்கு? பள்ளிக் கல்வித் துறை

இது போன்ற கட்டுரை வர வேண்டும் என எண்ணியதற்கேற்ப வெளிவந்துள்ளது. (அவ்வாறு எழுதி அனுப்பினால் தினமணி வெளியிடுமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது.)தினமணிக்குப் பாராட்டுகள். ஆனால், அனைவருக்கும் பாகுபாடற்ற கட்டணமில்லாக் கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் வலியுறுத்தவில்லையே! இவைதான் அடிப்படைத் தேவை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

என்ன வேண்டும் எங்களுக்கு? பள்ளிக் கல்வித் துறை

First Published : 30 Apr 2011 12:00:00 AM IST


வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 14 நாள்கள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், முக்கியமான துறைகளில் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன, அதற்குத் தீர்வு என்ன, அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசிடம் அந்தந்தத் துறைகளிடமிருந்து மக்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்கிற விவரங்களைத் தொகுத்தளித்து, அடுத்த அரசுக்கு சில ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.  - ஆசிரியர்.  கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 14 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஏழை, நடுத்தர வகுப்பினர் கூடத் தங்கள் பிள்ளைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். கந்து வட்டிக்கு கடன் வாங்கிக் கூட தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பக் காரணம் என்ன?  தமிழக அரசிடம் உங்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்வியைக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் வைத்ததுமே அவர்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் வைத்த கோரிக்கை அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான்.  கடந்த 20 ஆண்டுகளில் புற்றீசல் போல முளைத்துவிட்ட தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் அதிகக் கட்டணத்தை வசூல் செய்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்கு முக்கிய பிரசார ஆயுதமாகப் பயன்பட்டது அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் சிறப்பாக இல்லை என்பதுதான். தரம், தரம் என்ற பெயரில் சேவைத்துறை என்பதிலிருந்து வருமானம் ஈட்டும் துறையாக கல்வித் துறையை கீழே இழுத்துக் கொண்டுவந்துவிட்டனர் தனியார் பள்ளி நிர்வாகத்தின்ர்.  நிதிநிலை அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.10,148 கோடி ஒதுக்கப்பட்டாலும், அரசுப் பள்ளிகளின் நிலை மட்டும் மாறாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.  புதிதாக அரசுப் பள்ளிகளைத் தொடங்காமலும், இருக்கும் பள்ளிகளைத் தரம் உயர்த்தாமலும் 5 ஆண்டுகளைக் கடத்திவிட்டது இப்போதைய அரசு.  பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தும் சட்டம், சமச்சீர் கல்வி முறை ஆகியவற்றை அமல்படுத்தியிருந்தாலும், கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய அவை போதுமான நடவடிக்கைகளாக இல்லை.  பள்ளிக் கல்வித் துறை புத்துயிர்ப்பைப் பெற என்னென்ன நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளலாம்?  பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தும் சட்டம்: சென்ற கல்வியாண்டில், நீதிபதி குழு நிர்ணயித்தக் கட்டணத்தை மட்டுமே செலுத்துவோம் எனக் கூறிய பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான தொல்லைகள் தரப்பட்டன. பள்ளியை விட்டே வெளியேற்றுவது, வகுப்புகளில் தனியாக அமரச் செய்வது, வகுப்புகளுக்குள்ளே அனுமதிக்க மறுப்பது என ஏராளமான செயல்களைப் பல பள்ளிகள் செய்தன.  ஆனால், இதுவரை ஒரேயொரு பள்ளி மீதுகூட உறுதியான நடவடிக்கை எதையும் அரசோ, அதிகாரிகளோ எடுக்காதது பெற்றோருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டத்தை மீறுபவர்களைத் தண்டித்தால்தானே அந்தச் சட்டத்துக்கு மதிப்பிருக்கும்.  எனவே, நீதிபதி குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.  விதிகளை மீறும் பள்ளிகள் மீது யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் தெளிவு இல்லை. நீதிபதி குழு பரிந்துரை செய்தால்தான் நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் இதுபோன்று வரும் புகார்களைப் பதிவு செய்யவும், விசாரணையும் செய்யவும் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மாவட்ட அளவில் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.  நீதிபதி குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வசூலிக்கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.  அரசே அங்கீகரிக்கும் தனியார் பள்ளிகள்: நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் தரமான மேல்நிலைக் கல்வி வழங்க தமிழக அரசு 2007-ல் ஓர் அரசாணையைப் பிறப்பித்தது. அதில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தரமான தனியார், மத்திய, மாநில அரசு பள்ளிகளில் படிப்பதற்கான செலவை அரசே ஏற்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.  இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  ஒரு மாணவன் மாவட்ட அளவில் சிறப்பான இடம் பெற்றாலே அந்தப் பள்ளி தரமானதாக இருக்கும் என்றுதானே அர்த்தம். அந்த மாணவனை வேறு அரசுப் பள்ளியிலோ, தனியார் பள்ளியிலோ எதற்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்? இது அரசே தனியார் பள்ளிகளை அங்கீகரிப்பது போல் இருக்கிறதே என்று கல்வியாளர்கள் வாதிடுகின்றனர். சிறந்த மாணவர்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அரசுப் பள்ளிகளை தரம் தாழ்த்தும் நடவடிக்கைகளில் அரசே இறங்கக் கூடாது.  கட்டாயக் கல்விச் சட்டம்: அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் நாடு முழுவதும் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. ஆனால், தமிழக அரசு இதுவரை இந்தச் சட்டத்திற்கான விதிகளை உருவாக்கவில்லை.  இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தலைசிறந்த கல்வியாளர் தலைமையில் கல்வி ஆணையமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.  பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதியை எதிர்க்குமாறு சில தனியார் பள்ளிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.  பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி அறிவித்ததை தன்னிச்சையான நடவடிக்கை என்று கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தப் பள்ளிகளின் சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டத்தில் பள்ளிகளில் இருக்க வேண்டிய வசதிகள் குறித்து வரையறுத்து கூறப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து இப்போது என்னென்ன வசதிகள் உள்ளன, முழுமையான வசதிகளை ஏற்படுத்த எவ்வளவு செலவாகும் என்பது குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் கோருகின்றனர்.  சமச்சீர் கல்வி: இந்தக் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. ஆனால், இதுவரை சமச்சீர் கல்வி புத்தகங்கள் வெளிவரவில்லை. அதன் காரணமாக, சமச்சீர் கல்வியை எதிர்த்து தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பொதுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரிடம் விழிப்புணர்வு பிரசாரம் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து சரியான புரிதலை ஏற்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் கோருகின்றனர்.  பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தில் எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறைப்படுத்திக்கொண்டே இதை இன்னமும் செழுமைப்படுத்த வேண்டும்.  பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஒரே விதமான கல்வி என்பதை மையமாகக் கொண்டு புதிய அரசின் கொள்கைகள் இருக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவது, சமச்சீர் கல்விமுறையை செழுமைப்படுத்துவது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள கட்டாயக் கல்விச் சட்டத்திற்கான விதிமுறைகளை விரைந்து இயற்றுவது, நீதிபதி குழுவின் கட்டண நிர்ணயத்தை தீவிரமாக அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் ஒரே சீரான கல்வி என்ற இலக்கை நோக்கி புதிய அரசு எடுத்து வைக்கும் அடுத்த அடியாக இந்த நடவடிக்கைகள் இருக்கும். 

A.C.Sanmugam about War crimes of singalam: இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும்: ஏ.சி.சண்முகம்

பலரும்  கூறும் நலல கருத்து. ஆனால், இந்திய அரசு  தன் சார்பாக நடத்தப்பட்ட  இனப்பபடுகொலைகளுக்கு எவ்வாறு எதிரான நடவடிக்கை எடுக்கும்? எய்தவன் இருக்கஅம்பை நோவானேன்? காங்.அரசை அகற்ற நாடு தழுவிய போராட்டத்தை நடத்துங்கள். கொலைகார அரசு அகன்றால் அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக்கப் பெறுவர். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
 
இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும்: ஏ.சி.சண்முகம்

First Published : 30 Apr 2011 02:50:32 AM IST


சென்னை,ஏப்.29: தமிழின படுகொலையைக் கண்டிக்கும் வகையில் இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:  இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் இதுவரை மெüனம் காத்துவந்த மத்திய அரசு இனியேனும் விழித்திட வேண்டும். உலக அரங்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கையின் அதிபர் ராஜபட்சவின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தத் தமிழின படுகொலையைக் கண்டிக்கும் விதமாக இலங்கை அரசுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ளவேண்டும். இதுவரை இலங்கைக்குச் செய்துவரும் பொருளாதார உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்