சனி, 30 ஏப்ரல், 2011

Pandemonium in P.A.C. : தலையங்கம்: பொதுக்கணக்கில் புதுக்கணக்கு!

பொதுக்கணக்குக் குழுவின் விசாரணை தேவையில்லை என்பவர்களை இக்குழுவில் இருந்து நீக்கிவிட்டு விசாரிக்க வேண்டும். இனி இது போன்ற குழுக்களை அமைக்கும் பொழுது எழுத்து மூலமாக இக் குழுவின் நடவடிக்கையில் நம்பிக்கை உள்ளதாக எழுதித்தருபவர்களை மட்டுமே உறுப்பினர்களாக்க வேண்டும். இருப்பினும் தி.மு.க.துணைக்குற்றவாளிதான். காங்.தான் தலைமைக் குற்றவாளி என்பதை இந்தச் செயற்கை அமளி  மெய்ப்பித்து விட்டது. பழிஓரிடம் பாவம் ஓரிடம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தலையங்கம்: பொதுக்கணக்கில் புதுக்கணக்கு!

First Published : 30 Apr 2011 03:37:08 AM IST

Last Updated : 30 Apr 2011 04:11:52 AM IST

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, பொதுக்கணக்குக் குழு (பிஏசி)எதற்காக எல்லோரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று குழு உறுப்பினர்களில் ஒருவரான மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எதிர்ப்புக் குரல் எழுப்பியபோது, இந்த விசாரணையை ஊத்திக் கவிழ்க்கும் முயற்சியின் முதல்கட்டம் தொடங்கிவிட்டது என அப்போதே தெளிவாகிவிட்டது.  பி.ஏ.சி.-யின் தனி விசாரணை தேவையில்லை என்ற எதிர்ப்பு ஏற்பட்ட நாளன்று சட்டத்துறைச் செயலரும், அட்டர்னி ஜெனரல் வாஹன்வதியும் நேரில் விளக்கம் அளிக்க வந்திருந்தனர் என்பதையும், இப்போது கசிந்துள்ள அறிக்கையில், ""அன்றைய தினம் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாஹன்வதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்கிற நடைமுறை சரியானதுதான் என்கிற கருத்தை, சட்டத்துறையைப் புறந்தள்ளிவிட்டு நேரடியாகத் தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவித்தார் என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும் இப்போது இணைத்துப் பார்க்கும்போது, இவர்களுக்குக் கோபம் எங்கே கிளைக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும்.  நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தாலும்கூட, நாடாளுமன்றத்தால் சட்டப்படி உருவாக்கப்பட்ட பொதுக்கணக்குக் குழு, அரசுக்கு ஏற்பட்ட நிதியிழப்பு குறித்து விசாரிக்க முழு உரிமை பெற்றுள்ளது. அதன்படிதான், பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, தொலைபேசித் துறைச் செயலர் முதல் இதில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்து வந்தார். அவர்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன, என்ன பதில் அளிக்கப்பட்டது என்பது வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது.  பொதுக் கணக்குக் குழு நடத்திய விசாரணையில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படாத சில விஷயங்களும்கூட வெளிப்பட்டுள்ளதும், இவை பொதுக்கணக்குக் குழு அறிக்கையில் பதிவு செய்யப்படுமேயானால், இதில் சுட்டிக்காட்டப்பட்ட விஷயங்களை நாளை நீதிமன்றமும் கையில் எடுக்கக் கூடும் என்கிற அச்சமும்தான் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது.  பி.ஏ.சி. விசாரணைக்குத் தடை விதித்த பிறகு, அடுத்ததாக இந்த அறிக்கையைத் தடுத்து நிறுத்தும் முகமாக, சமாஜ்வாதி கட்சியின் அங்கத்தினர் ஒருவர், பகுஜன் சமாஜ் கட்சியின் அங்கத்தினர் ஒருவர் என இரண்டு பேரை மட்டும் தங்கள் பக்கம் "இழுத்து'க்கொண்டு எண்ணிக்கை பலத்தை 11 ஆகக் காட்டி, இந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, ஜோஷி மீது கடுமையாக வசை பாடினார்கள்.  இதையெல்லாம்விட பெரிய கேலிக்கூத்து, இவர்களின் "ரகளை' பொறுக்கமாட்டாமல் ஜோஷி வெளியேறியபோது, ஓடுகிறார் என்று கேலி பேசியதுடன், அந்த 11 பேரும் உட்கார்ந்து பிஏசி தலைவராகப் பேராசிரியர் சைபுதின் சோûஸத் தேர்வு செய்தார்கள். பிஏசி தலைவராக இருப்பவர் மக்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்கிற அடிப்படைகூடத் தெரியாமல், மாநிலங்களவை உறுப்பினரான சோஸ் தேர்வு செய்யப்படுகிறார் என்றால், இதுகுறித்து இன்றுவரையிலும் மக்களவைத் தலைவரும் பிரதமரும் ஏதும் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருப்பார்கள் என்றால், இதை என்னவென்பது?  இந்த அறிக்கை உள்நோக்குடன் கசிந்தது என்றும், மத்திய அரசைக் களங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் கட்சி கருதினால் அதை பிஏசி கூட்டத்தில் விவாதிப்பதும், கேள்வி கேட்பதும் நியாயமானதே. ஆனால், அதற்காக அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பது என்பது இத்தனை நாள்களாக பிஏசி நடத்திய விசாரணையையே அழிப்பதாக ஆகாதா?  பி.ஏ.சி.-யில் ஒவ்வொருவரும் தெரிவித்த தகவல்களை வைத்துத்தான் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது உறுப்பினர்களுக்கே நன்றாகத் தெரியும். அத்தனையும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள். இதில் தனியாக ஜோஷியோ அல்லது பாஜகவோ இட்டுக்கட்டி எழுதுவதற்கு ஏதுமில்லை. அவ்வாறு இருந்தால், விசாரணையில் பதிவு செய்யப்படாமல் தன்னிச்சையாக எழுதப்பட்ட பகுதிகள் எவையெவை என்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரினால் அது நியாயமான அணுகுமுறையாக இருந்திருக்கும்.  இவர்களது அடிப்படை அச்சம் , இணையான விசாரணை நடந்தால், அறிக்கை வெளியானால், தங்கள் குற்றம் மேலும் உறுதி செய்யப்படும் என்பதுதான். ஆகவேதான் காங்கிரஸýம் திமுகவும் இதில் இந்த அளவுக்கு எதிர்ப்பு காட்டியுள்ளன.  நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தன்னிச்சையாகத் தயாரித்துவிட்டார் என்று கூக்குரலிடுகிறார்கள் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள். இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கும்போது, குழுவின் சார்பில் விசாரணையின்போது அனைவரும் கலந்துகொள்வதும் அதன் தலைவர் அறிக்கையைத் தயாரிப்பதும்தானே வழக்கம். அந்த அறிக்கை குழுவின்முன் விவாதத்துக்கு வைக்கப்படும்போது, தங்கள் ஆதரவையோ, ஆட்சேபணைகளையோ உறுப்பினர்கள் பதிவு செய்வதுதானே முறை?  பொதுக்கணக்குக் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அதில் பிரதமரின் செயல்பாடுகள் குறித்த பல கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதுதான், காங்கிரஸ் - திமுக உறுப்பினர்களின் ஆவேசத்துக்கும், அவசரத்துக்கும் காரணம். 2003-ல் கார்கில் போரின்போது ராணுவக் கொள்முதல்கள் பற்றி விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட பூட்டா சிங் தலைமையிலான பொதுக்கணக்கு விசாரணைக் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் அன்று ஆட்சியிலிருந்த பாஜக தடுத்தது. இப்போது, முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்யவிடாமல் இன்றைய ஆளும் கட்சிகள் தடுக்கின்றன.  தவறுகளையும், முறைகேடுகளையும் யார் செய்திருந்தாலும் வெளிக்கொணர வேண்டிய நமது மாண்புமிகு உறுப்பினர்கள், தவறுகளை மூடி மறைப்பதில் காட்டும் அக்கறை பிரமிக்க வைக்கிறது. இந்தியா ஒளிர்கிறது, நிஜம்!

1 கருத்து: