katchatheevu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
katchatheevu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 மார்ச், 2011

Katchatheevu and thamizh fishermen: Nallakannu article: கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்!

நல்ல கட்டுரை. எனினும் இந்திய ஆரிய அரசு சிங்களத்திற்கு ஆதரவாக இருக்கும் வரை கட்சத்தீவை மீட்க முடியாது. இதனைத் தமிழ்நாட்டுச் சிக்கலாகக் கருதாமல் அனைத்து  மாநில - அனைத்துக் கட்சி - நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் உணர்த்தி ஒன்றுபட்டுப் போராடி வெற்றி காண வேண்டும்.அதற்கான முயற்சியை எளியோர் ஏந்தல் தோழர் தலைவர் நல்லக்கண்ணு மேற்கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்!


எண்ணூரிலிருந்து குளச்சல் துறைமுகம் வரை 1,076 கி.மீ. நீள கடற்கரை வளமுள்ளது தமிழ்நாடு. 13 மாவட்டங்கள், 591-க்கு மேலான கிராமங்களில் 15 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். நெய்தல் நிலத்தில் வாழும் இந்தத் தொன்மையான குடிமக்கள், நாட்டின் தென்கோடிக் கடற்கரையின் காவலர்களாகவும் பணியாற்றி வந்த பழங்குடியினர். வங்கக்கடலில் மீன் பிடித்தும், முத்துக் குளித்தும், மேற்கத்திய நாடுகளோடு வணிகத்தொடர்பும் வைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்.நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகளில், கடந்த பத்தாண்டுகளில்தான் கடலில் மீன் பிடிக்க முடியாமலும் கரையில் அமைதியாக வாழ முடியாமலும், இவர்கள் தங்களது வாழ்வுரிமையை இழந்து வருகிறார்கள். இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் பயணித்துச் சேர்த்துவரும் கடல் பொருள்களின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி ஆண்டுக்கு ரூ. 50,000 கோடியாகும்! ஆனால், இந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதற்கும் கட்டுப்பாடு! கரையோரங்களில் குடியிருப்பதற்கும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.நாட்டுப்படகு, விசைப்படகு உரிமையாளர்களான மீனவர்கள் மீன்பிடிக்கும் கடலுக்கு எல்லை விதிக்கப்படுகிறது. ஆழ்கடலில் பிடித்துவரும் மீனுக்கும் அளவு எல்லை போடப்படுகிறது. ஆனால், 15 பெரிய டிராலர்கள், மீன்பிடிக் கப்பல்களின் உரிமையாளர்களுக்கோ, ஆழ்கடலில் மீன் குஞ்சுகளைக்கூடப் பறித்து அள்ளிச் செல்லும் உரிமை வழங்கப்படுகிறது. வியாபாரிகளான கப்பல் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமை மீன்பிடித் தொழிலைத் தங்களது வாழ்வாதாரமாகக் காலங்காலமாகச் செய்துவரும் மீனவர்களுக்கு மறுக்கப்படுவது என்ன நியாயம் என்பதுதான் கேள்வி.உலகமயமாக்கல் கொள்கையால், மண்ணின் மைந்தர்களான மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. கப்பல் உரிமையாளர்களுக்குக் கடலே சொந்தமாக்கப்பட்டுள்ளது; கடற்கரையும் அழகுபடுத்தப்பட்டு சுற்றுலா மையங்களாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், உயர்தரப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் வணிக வளாகங்களாகவும் உருவாக்கப்படுகின்றன. இத்தனை தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு, மீன்பிடித் தொழிலையே அன்றாட வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்கள் மீனவர்கள். வேறு வழி? அவர்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாதே.1974-1976-ம் ஆண்டுகளில் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில், குறிப்பாக நாகப்பட்டினம், கோடியக்கரை, தொண்டி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரையில் 7 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றால், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். அடித்துக் கொல்லப்படுகிறார்கள். வலைகள் அறுத்தெறியப்படுகின்றன. படகுகளை வெட்டி அழிக்கிறார்கள். மீன்களை மீண்டும் கடலில் வீசிவிடுகிறார்கள். நிர்வாணப்படுத்தி தலைமன்னார் சிறையில் கொடுமைப்படுத்துகிறார்கள்.2010 முடிய - தமிழக மீனவர்கள் 571 பேர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்கள் 1,200 பேர், அழிக்கப்பட்ட விசைப்படகுகள் 300, சேதப்படுத்தப்பட்டவை 600. காணாமல் போனவர்களும் உண்டு; தலைமன்னார் சிறைகளில், கைதிகளாகச் சிலர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை பொருள் சேதமும், மீனவர்கள் அடைந்த பொருள் இழப்பும் ரூ. 25,000 கோடி இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் நொந்து வேதனைப்படும், தமிழக மீனவர்களைப் பற்றி மத்திய அரசும், அமைச்சர்களும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. தமிழக அரசும் தனக்கு நெருக்கடி வரும்போதெல்லாம், தமிழக மீனவர்களின் மீது ஒப்புக்குக் கண்ணீர்விட்டு ஆதரவைத் தெரியப்படுத்துவதோடு சரி.டச்சுக்காரர்கள் இலங்கையை அடிமைப்படுத்திய காலத்தில் உருவாக்கிய இலங்கை வரைபடத்தில் கச்சத்தீவு இல்லை. கி.பி.1600-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சி வெளியேறியது வரை, ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்ததற்கான ஆவணங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பின்னர் 1948-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டப்படி, கச்சத்தீவு தமிழக அரசுக்குச் சொந்தமாக்கப்பட்டது.தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை, நட்பு முறையில் மத்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.முதல் ஒப்பந்தம் 1974-ல் கையெழுத்தானது. இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் கையெழுத்திட்டார்கள். நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் சுவரண்சிங் பேசியது -""பாக் நீரிணையில் உள்ள கச்சத்தீவு முக்கால் சதுர மைல் அளவுள்ளதாம். இந்த ஒப்பந்தத்தை நாம் உறுதி செய்கிறபோது, மீன் பிடிக்கும் உரிமை, பண்டிகைக்கான சுற்றுலா, கப்பல் போக்குவரத்து போன்ற உரிமைகள் கடந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இருந்தது. வருங்காலத்துக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மாண்புமிகு அங்கத்தினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென நினைவுபடுத்துகிறேன். இவ்வொப்பந்த அடிப்படையில் இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்குப் போய் வருவதற்கு இதுவரை பெற்றிருந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிப்பார்கள். எனவே, போக்குவரத்து அனுமதி ஆவணங்களையோ அல்லது விசா போன்றவற்றையோ வேண்டுமென இலங்கை அரசு கோர முடியாது.ஸ்ரீலங்கா - இந்தியக் கப்பல்கள் இதுவரை பாரம்பரியமாக அனுபவித்து வந்த எல்லா உரிமைகளையும் தொடர்ந்து அனுபவிப்பார்கள். இதுவரை என்னென்ன உரிமைகள் இருந்து வந்ததோ நம்முடைய படகுகள் அந்தப்பக்கம் செல்வதற்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கம் வருவதற்கும் கச்சத்தீவு பயன்படுத்தப்படுவதற்குரிய அந்த உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பது இந்த ஒப்பந்தத்திலிருந்து ஏற்படுகிறது.''ஆனால், இன்றைய காலகட்டத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை விரட்டுவதோடு விட்டுவிடாமல், உயிரையும் பறிக்கும் பாதகச் செயலில் ஈடுபட்டு வருகிறது. தமிழக மீனவர்களுக்கு விரோதமான செயலில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.கச்சத்தீவை திரும்பப் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர். அதற்கு 31.8.2010 அன்று பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கச்சத்தீவு ஒப்பந்தம் புனிதமானது, பவித்திரமானது அதனை ரத்துசெய்ய முடியாது'' என்றெல்லாம் கூறியுள்ளார்.பாக். நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பேணிக்காக்க வேண்டிய கடமையில் இருந்து மத்திய அரசு விலகி நிற்கிறது. தமிழக அரசு இதற்கு உடந்தையாக வேடிக்கை பார்க்கிறது.இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்று 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை அரசு அறிவித்த பிறகும், தமிழக மீனவர்களை வேட்டையாடும் செயலை இலங்கைக் கடற்படை நிறுத்தியபாடில்லை. ஜெகதாப்பட்டினம் பாண்டியன், புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமார் போன்றோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமாராவ் இலங்கை சென்று மீனவர் பிரச்னை குறித்துப் பேசிவிட்டுத் திரும்பியபோதும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேடிக்கை பார்த்துக்கொண்டு தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளன. சில நாள்களுக்கு முன்னர்கூட ராமேஸ்வரம் மீனவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. உடைமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன என்ற செய்திகள் வந்தன.நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், ""இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்ய வேண்டுமே தவிர, சுட்டுக்கொல்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது'' என்று கூறியுள்ளார்.இந்திய மீனவர்களைக் கைது செய்யலாம் என இலங்கை அரசுக்குப் பிரதமரே பச்சைக்கொடி காட்டுவது வேதனை அளிக்கிறது. மேலும், பிப்ரவரி 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையில், ""சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் செல்லும் போதெல்லாம்தான் பிரச்னை ஏற்படுகிறது என்பதை இந்த அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதற்காக இந்திய மீனவர்களை அடித்துத் துன்புறுத்துவதோ, சுட்டுக்கொல்வதோ நியாயமாகிவிடாது.அதேவேளையில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களின் கவலை, அச்சம் ஆகியவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நிம்மதியாக மீன்பிடிக்க முடியாமல் தவித்த இலங்கை மீனவர்கள், இப்போதுதான் அச்சம் நீங்கி மீன்பிடித் தொழிலில் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்துக்காக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இலங்கை மீனவர்களும், மீன்பிடித் தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்பது நியாயம்'' எனக் கூறியுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கூறுவதைக் கவனிக்கிறபோது, அவர்கள் இலங்கை ராஜபட்ச அரசுக்கு வக்காலத்து வாங்குவதாகத்தான் இருக்கிறதே தவிர, இந்திய மீனவர்கள் பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அப்படியானால், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றி, உரிமைகள் பற்றிக் கவலைப்பட யாருமே கிடையாதா? அவர்கள் நாடில்லா அனாதைகளா? அந்நிய தேசத்துப் பிரஜைகளா?1987-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம் தமிழர்களின் வரலாற்று வாழ்விடமான வடக்கு - கிழக்கு மாகாணத்தை ஒருங்கிணைக்க அடிகோலியது. இலங்கைத் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள் இல்லை என்பதைப் பறைசாற்றியது. அந்த ஒப்பந்தத்தை இனவாத ஜே.வி.பி. தொடுத்த வழக்கின் காரணமாக இலங்கை நீதிமன்றம் ரத்து செய்தது.இலங்கை அரசு, ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. ஆனால், நாம் மட்டும் எவ்வாறு கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் புனிதமாகக் கருத முடியும்? புனிதத்தின் பெயரில் இந்திய உயிர்கள் பலியிடப்படலாமா? இந்திய நாட்டில் தமிழக மீனவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவது நியாயமாகுமா?எனவே, கச்சத்தீவை மீட்கவும், அங்கு இந்திய மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும், நிரந்தரத்தீர்வு காண்பதற்கான எல்லா வழிகளும் காண ஒன்றுபட வேண்டும்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய எஸ்.எம். கிருஷ்ணா மறுப்பு


புதுதில்லி, ஆக.11- கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்ய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மறுத்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளிக்கையில் அவர் பேசியதாவது:
இலங்கையுடன் எப்போது பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் மீனவர் பிரச்னையும் இடம்பெற்று வருகிறது. இதுகுறித்து அவர்களுடன் மீண்டும் பேசுகிறேன்.
இலங்கை கடற்பகுதிக்குள் நமது மீனவர்கள் நுழையாதவாறு பார்த்துக்கொள்ளப்பட வேண்டும். விதிமுறைகளை பின்பற்றும் மீனவர்கள் பாதுகாப்பாகவே இருப்பார்கள்.
எனினும், கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து நாம் தன்னிச்சையாக மறுபரிசீலனை செய்ய இயலாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறைகள்படி தான் நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.
அடுத்த முறை இலங்கை செல்லும்போது, மீனவர் பிரச்னை குறித்து நிச்சயமாக ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
கருத்துக்கள்

விதிமுறைகளை பின்பற்றும் மீனவர்கள் பாதுகாப்பாகவே இருப்பார்கள் என்னும் பொய்யைப் பாராளுமன்றத்தில் சொன்னதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காங். ஆட்சியில் தொடர்ந்தால் தமிழ்நாட்டைக்கூடச் சிங்களனுக்குத் தாரை வார்ப்பார்கள். தமிழன் தமிழனாக வாழத் தமிழ்நல உணர்வுகள் மக்களுக்குத் தேவை. அவ்வுணர்வு பெருகாதவரை இந்தியப் போர்வையில் தமிழன் அழிக்கப்படுவான். 
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

ஞாயிறு, 8 நவம்பர், 2009

கச்சத்தீவை மீட்க ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்: ராமதாஸ்



சென்னை, நவ. 7: கச்சத்தீவை மீட்க ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவுக்குச் சொந்தமான அந்தமான் தீவுகள், இலங்கையின் கடல் எல்லைப் பகுதிக்குள் வருகிறது என்றும், அந்தமான் தீவுகள் இலங்கைக்கே சொந்தம் என்றும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகலகாமா அறிவித்திருக்கிறார். கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்கு மிகத் தாராளமாக விட்டுக்கொடுத்தது. அதன் காரணமாகவே, அந்தமான் தீவுகளும் எங்களுக்கே சொந்தம் என்று இலங்கை மார்தட்டுகிறது. இலங்கையில் சீனா புதிதாக கால்பதித்துள்ள நிலைமையும், இலங்கைக்கு முன் எப்போதும் இல்லாத துணிச்சலை கொடுத்திருக்கிறது. இலங்கையின் இந்த மண் ஆசைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ஒரேவழி, இலங்கைக்கு தவறாக தாரை வார்க்கப்பட்டுள்ள கச்சத்தீவை மீட்டு தமிழகத்தோடு இணைக்க வேண்டும். இதற்கு தமிழகம் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளில் நமது செயல்பாடுகள் நாட்டின் கட்டுக்கோப்பை குலைத்து விடக் கூடாது என்பது முக்கியமானதுதான். அதேநேரத்தில் நமது உரிமைகளுக்காகவும், நமக்குச் சொந்தமான மண்ணை மீட்கவும் மத்திய அரசிடம் போர்க்குரல் எழுப்புவதில் தவறில்லை. இத்தகைய உணர்வோடுதான், அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், சேலம் உருக்காலைக்காகவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் "எழுச்சி நாள்' கொண்டாடியிருக்கிறார். அந்த வழியில் இப்போதும் இலங்கையிடம் பறிகொடுத்துவிட்ட கச்சத்தீவை மீட்கவம், அதன் மூலம் தமிழக மீனவர்களைக் காக்கவும், நதிநீர் பிரச்னைகளில் நமது உரிமைகளை நிலைநிறுத்தவும் பழைய எழுச்சியோடு செயல்பட அனைவரும் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துக்கள்

தமிழகக்கட்சிகளுக்கு, உருப்படாத காங்கிரசுக்கட்சியின் மீது ஒரு கண் இருக்கும் வரை எதுவும் உருப்படாது. இந்திய மண்ணில் இருந்து காங்கிரசு கட்சி அகற்றப்படும் வரை இந்தியப்பாதுகாப்பு என்பது ஒரு கேள்விக் குறியே! தமிழர்கள் இன மானத்துடன் வாழக் குறைந்தது தமிழ்நாட்டில் இருந்தாவது காங்கிரசு ஓட ஓட விரட்டி அடிக்கப்பட வேண்டும். காங்கிரசு கட்சியில் இருப்பதைத் தலைகுனிவாகவும் அவமானமாகவும் ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும். ஆனால், பண ஆசையும் பதவி ஆசையும் உள்ளவர்கள் உள்ளதனால் அதற்கான வாய்ப்பு இல்லை. எனவே. கட்சத் தீவை மீட்கும் வாய்ப்பே இல்லை. ஆதலின் தமிழ் ஈழம் அமையும் வரை பொறுமையாக இருக்க வேண்டியதுதான்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2009 4:27:00 AM

ORU PAYALUM VARAMAATAN AIYAA NAAMA NAMB VALAIYAI PAKALAM

By vanniyakannan
11/8/2009 2:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 27 அக்டோபர், 2009

இன்னும் ஏன் மௌனம்...?



கச்சத்தீவு பாக்நீரிணைப்பில் பாம்பன் தீவுக்கு அருகில் உள்ளது. இத் தீவு ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்தது. பிரிட்டிஷ் அரசி விக்டோரியா மகாராணி ஆட்சியின் ஆணவமும் இதை உறுதிப்படுத்துகிறது. இந்திய நாடு விடுதலை பெற்றதும் 1949-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதும், ராமேஸ்வரம் கிராம வருவாய்த்துறை அடங்கலில் 285 ஏக்கர் பரப்பளவுள்ள கச்சத்தீவு பயிர் செய்யப்படாத அரசுப்புறம்போக்கு நிலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை 1948-ல் தான் சுதந்திரம் பெற்றது. இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை, நம்மிடம் அனுமதி பெறாமலேயே, இலங்கை அரசு ராணுவப் பயிற்சித் தளமாகப் பயன்படுத்தத் துவங்கியது. இலங்கை அரசின் அத்துமீறலைக் கண்டித்து 1956-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே. அனந்த நம்பியார் பேசினார். பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு தலையிட்டு, சின்னஞ்சிறு தீவுப் பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுப்பதாகவும் பெருந்தன்மையுடன் தெரிவித்தார். கச்சத்தீவு பற்றி இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து முடிவில் ஜூன் 26-ம் தேதி 1974-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்களும், அந்தோணியார் கோவில் வழிபாட்டுக்குச் சென்று வருபவர்களும் கச்சத்தீவுக்குச் சென்றுவர முழு உரிமை உண்டு. இலங்கை அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதியோ பெற வேண்டிய தேவையில்லை. கச்சத்தீவுக்கு குறிப்பிட்ட எல்லை வகுத்து இலங்கை அரசுக்கு உரிமை வழங்கப்பட்டது. 1974-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் பி.கே. மூக்கையாத் தேவர், இரா. செழியன், நாஞ்சில் மனோகரன், எம். கல்யாணசுந்தரம், பழனியாண்டி, ஷெரீஃப் ஆகிய அனைத்துக்கட்சித் தலைவர்களும் கண்டித்துப் பேசியுள்ளனர். சிலர் வெளிநடப்பும் செய்தார்கள். பி.கே. மூக்கையாத் தேவர் ராமநாதபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றத்தில் பேசியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஜூலை 22-ல் பிரதமர் இந்திரா காந்திக்குப் பகிரங்கக் கடிதமும் எழுதினார். 1. இராமேஸ்வரம், 2. குத்துக்கல், 3. புள்ளிவாசல், 4. முசல்தீவு, 5. பூமறிச்சான், 6. முல்லித்தீவு, 7. மணலித்தீவு, 8. வாலித்தீவு (கச்சத்தீவு), 9. அப்பாத்தீவு, 10. நல்லதண்ணீர்தீவு, 11. உப்புத் தண்ணீர்தீவு - இத்தனை தீவுகளும் ராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமானவை (இராமநாதபுரம் மானுவல் 1891). இந்தியாவுக்கு எதிரான உலகப் பெரிய நாடுகள் திட்டமிட்டிருக்கும் சதிகளைக் குறிப்பிட்டு எச்சரித்திருக்கிறார். இந்தியாவைச் சுற்றிவளைத்து இந்துமகா சமுத்திரத்தில் டியூகோ - கார்ஷியா தீவில் அமெரிக்க ராணுவ முகாம் இருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இறுதி வேண்டுகோளில், இந்திய நாடு தனது எல்லையை விரிவுபடுத்தும் நாடு அல்ல. அதே நேரத்தில் அண்டை நாடுகளுக்கு விட்டுக்கொடுத்து திருப்திப்படுத்தும் கொள்கை எந்த வகையிலும் நாம் செயல்பட வேண்டும். நீண்டகால நலன் கருதி ஸ்ரீலங்கா அரசுடன் செய்து கொண்டுள்ள கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் எழுதி இருக்கிறார். India is not expansionist. At the same time, the policy of appeasement won’t help us in anyway. We should act like a mature nation. பி.கே. மூக்கையாத் தேவர், பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் கொடுத்திருக்கும் எச்சரிக்கை இன்றும் பொருத்தமாக உள்ளது. 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இந்திரா காந்தியும், ஸ்ரீமாவோ பண்டார நாயகாவும் கையெழுத்திட்டார்கள். தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததைக் கண்டித்து எல்லாக் கட்சிகளும் எதிர்த்தன. மீனவர்களின் உரிமை பாதுகாப்பதற்கு உத்தரவாதம் வேண்டுமென்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக இந்திய, இலங்கை அரசுகளின் வெளியுறவுத்துறைச் செயலாளர்கள் கையெழுத்திட்டு 1976-ல் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முதல் ஒப்பந்தத்தில் மீனவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமைகளெல்லாம் மறுக்கப்பட்டிருந்தன. அவசர நிலை அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததால், எதிர்ப்பு வலுப்பெறவில்லை. சாமி வழங்கிய வரத்தைப் பூசாரி மறுத்துவிட்ட பழமொழியைப் போல் இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் ஒப்பந்தத்தை வெளியுறவுத்துறை அதிகாரிகள் மறுதலித்து விட்டார்கள். கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தாலும் கடற்படை அதிகாரிகளாலும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக 1983-ல் துவங்கி இன்றுவரை நாள்தோறும் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. * 400-க்கு மேல் மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். காணாமல் போனவர்கள் 95 பேர். * 12,000-க்கும் அதிகமான மீனவர்கள் காயமடைந்தார்கள். * ஏறத்தாழ 3,000-க்கு மேலாக செயல்பட முடியாதவாறு ஊனமடைந்தார்கள். * ஆயிரம் முறைக்கும் அதிகமாகத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டன. * ரூ. 300 கோடி மதிப்புள்ள மீன்வலைகள், படகுகள், மீன்பிடி கருவிகள் அழிக்கப்பட்டன. இலங்கை ராணுவத் தாக்குதலுக்குப் பயந்து மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த நாள்களில் ஏற்பட்ட இழப்புகள் பெரும் இழப்பாக உள்ளது. எல்லா வழிகளிலும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி. ராஜா, கச்சத்தீவு பற்றி பலமுறை மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போதெல்லாம், தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குள் அனுமதிக்கப்படுவார் என்று அமைச்சர் பதில் கொடுத்தார். ஆனால், நடைபெறவில்லை. விடுதலைப் புலிகளுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருள்கள் இந்திய மீனவர்களால் கடத்தப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்கள். இலங்கை, இந்தியக் கடற்படையினர் கூட்டாகச் சேர்ந்து இந்திய மீனவர்களை வழிமறித்துச் சோதனையிட்டார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக வெற்றி வீராப்போடு உலக மனித உரிமை அமைப்புகளுக்கு பதில் கூறும் ராஜபட்ச. தமிழ் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்திய அரசும் கவலைப்படுவதாக இல்லை. நாள் தவறாமல் இலங்கை ராணுவம் தமிழ் மீனவர்களைத் தாக்கும் செய்தி வந்துகொண்டே இருக்கிறது. மீனவர்களின் வலைகள் கிழித்தெறியப்படுகின்றன. தனுஷ்கோடி, தொண்டி, கோட்டைப்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய 500 கடற்கரை கிராமங்களிலும் பதற்ற நிலை நீடித்துத் தொடர்கிறது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்பதாகத் தமிழக மீனவர்கள் கண்காணிக்கப்பட்டார்கள். இப்போது கச்சத்தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதாகத் தாக்கப்படுகிறார்கள். இந்தியக் கடற்கரைப் பாதுகாப்புப் படையினர் இந்தியத் தமிழ் மீனவர்களைப் பாதுகாக்க வராமல் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் கண்டன அறிக்கை விடுகின்றன. தமிழக முதல்வரும் பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். மத்திய அரசு மனமிறங்குவதாகத் தெரியவில்லை. மாறாக இலங்கையின் மறுசீரமைப்புக்கும், ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும் ஈழமண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளைத் தோண்டி எடுப்பதற்கான கருவிகளை வழங்குவதிலும் ஓடோடி உதவி செய்து வருகிறது இந்தியா. இந்திய அரசின் உதவிகள் ஈழத்தமிழ் மக்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க எந்த உத்தரவாதமும் இல்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை? கச்சத்தீவு பிரச்னைக்கு இறுதித்தீர்வு காணப்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு நிம்மதியான வாழ்வுரிமை வழங்கப்பட வேண்டும். கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். இல்லையேல் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவது சர்வதேச விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று சிலரால் வாதிக்கப்படுகிறது. ஆனால், ஜெயவர்த்தனே - ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தை இலங்கை மீறிவிட்டது. சாஸ்திரி ஒப்பந்தம் சரியாக அமலாக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் இன்னும் நாடற்றவர்களாக நீடிக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைகளையும் ராஜபட்ச துச்சமாகக் கருதுகிறார். செஞ்சிலுவைச் சங்கத்தின் விதிகளையும் புறக்கணித்து வருகிறார். 21-ம் நூற்றாண்டின் ஹிட்லராக ராஜபட்ச மறுபிறவி எடுத்திருக்கிறார். கச்சச்தீவுப் பிரச்னை மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும், இலங்கைத் தீவில் நடக்கும் தமிழின ஒழிப்பும், மனித உரிமை மீறலும், மனித குலத்துக்கே சவாலாகவும் உள்ளவை அல்லவா? இலங்கைக்கும், இந்தியாவின் தென்கோடி கடற்கரைக்கும் 18 கிலோ மீட்டர் தொலைவுதான். கூப்பிடும் தூரம்தான். அக்கரையில் வாழும் மக்களுக்கு ஆறுதல் கூறக்கூட நமக்குத் துணிச்சல் வரவில்லை. கழிவிரக்கம் போதாது. காந்தியடிகளின் அமெரிக்க சீடர் மார்ட்டின் லூதர்கிங் வேதனையோடு கூறிய பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது. பெரும்பான்மை மக்களின் மௌனமே சிலரின் காட்டுமிராண்டித்தனமான கொடுமையைவிட மிகமோசமான மானிடப் பேரவலமாகும். (The ultimate tragedy of mankind is nor the brutality of the few but the absence of many).
கருத்துக்கள்

அருமையான கட்டுரை. ஆனால் தெரிந்தே அவலங்களை உண்டாக்கும் அறவழி யற்ற மத்திய அரசு ஒன்றும் செய்யாது. இங்குள்ள கட்சிகள் எக்காரணங் கொண்டும் காங்கிரசுடன் சேருவதில்லை என்ற உறுதிப்பாட்டை எடுத்தால் சிந்திக்கத் தொடங்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்பும் இல்லை. அண்ணன் எப்பொழுது தொலைவான்? திண்ணை எப்பொழுது காலியாகும்? என்ற எதிர்பார்ப்பிலேயே கட்சிகள் உள்ளமையால் காங்கிரசு தான்தோன்றித்தனமாகத்தான் நடக்கும். எனவே, மக்களை ஒன்று திரட்டி மக்களுக்கு எதிரான போக்கையே கையாளும் காங்கிரசைத் தமிழ் நாட்டில் இருந்தே ஓட ஓட விரட்டினால்தான் அதற்கும் புத்தி வரும். அடுத்து வருபவர்க்கும் அறிவு வரும். கச்சத் தீவும் நமக்கு வரும். தமிழக மீனவர்களுக்கும் பாதுகாப்பு வரும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2009 6:31:00 AM

Aiya Nalla Kannu, India does not consider Tamils as Indians, but Tamils. Good lucky with your plea.

By Suresh M
10/27/2009 2:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *