judgement லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
judgement லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 அக்டோபர், 2012

இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வெளியுறவுக் கொள்கையாம்! உச்சமன்றம் தலையிடாதாம்!

இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க த் தடை இல்லை:
உச்ச நீதி மன்றம்  தீர்ப்பு
இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க தடை இல்லை:
 சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு
புதுடெல்லி, அக். 8-

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் சுமார் 1 லட்சம் அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. இதனால் வாழ்வாதாரங்களை இழந்த ஈழத் தமிழர்கள் இன்னமும் தவித்தபடி உள்ளனர். இந்த நிலையில் சிங்கள ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக மக்களின் மன உணர்வுகளுக்கு எதிராக இது உள்ளது என்று கூறினார்கள். சிங்கள ராணுவத்துக்கு தமிழ் நாட்டில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால் தமிழக தலைவர்களின்  கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

இலங்கை நட்பு நாடு என்பதால் ராணுவ பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை தடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி சுப்ரீம்கோர்ட்டில் வக்கீல் ராஜாராமன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் மனுவில், "சிங்கள ராணுவத்துக்கு தமிழ் நாட்டில் பயிற்சி கொடுத்தால் அது தமிழக மக்களின் மனதை காயப்படுத்தும்''  என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. மத்திய அரசு சார்பிலும், மனுதாரர்கள் சார்பிலும் வக்கீல்கள் வாதம் நடந்தது. நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பளித்தபோது, "சிங்கள ராணுவம் இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கு தடை விதிக்க இயலாது'' என்று உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "இது வெளியுறவுத் துறையைச் சேர்ந்த விவகாரம். அதன் கொள்கை முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

செவ்வாய், 19 ஜூலை, 2011

சமச்சீர் கல்வி தீர்ப்பு: கல்வியாளர்கள் வரவேற்பு

சமச்சீர் கல்வி தீர்ப்பு: கல்வியாளர்கள் வரவேற்பு

First Published : 19 Jul 2011 03:53:55 AM IST


சென்னை, ஜூலை 18: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.  கல்வியாளர் எஸ்.ராஜகோபாலன்: இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு. அரசு உடனடியாக இதைச் செயல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியில் பொதுப்பாடத்திட்டம் ஒரு பகுதிதான்.  தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பரிந்துரைகள் சமச்சீர் கல்விக்காக செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, பிற பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு: இந்தத் தீர்ப்பு மாணவர்களை மகிழ்விக்கும் தீர்ப்பு. பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்கிய ஆசிரியர்கள், வல்லுநர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் தீர்ப்பு. இது அனைத்து மாணவர்களும் உயர்வு, தாழ்வு இல்லாமல் சமநிலையில் கல்வி கற்கக் கூடிய சூழலை ஏற்படுத்தும்.  தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அருமைநாதன்: தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.  கல்வியாளர் மற்றும் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன்: சமச்சீர் கல்வி தொடர்பாக அரசுக்கு எங்கள் குழு 109 பரிந்துரைகளைச் செய்திருந்தது. அந்தப் பரிந்துரைகள் மீது இப்போதைய அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக செயல்திட்டம் வகுத்துச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.  தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். கடந்த 45 நாள்களாக பாடப்புத்தகங்கள் இல்லாததால், ஆசிரியர்கள், மாணவர்களிடம் மனச்சோர்வு இருக்கிறது. பெற்றோர்களுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இனியும் தாமதம் செய்யாமல் சமச்சீர் கல்வியை அமல் செய்ய வேண்டும்.  பாடத்திட்டம் முடிவு ஆகாமல் இருந்ததால், கல்வித் துறை சார்பான பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் தேக்கமடைந்துள்ளன. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளன.  தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் விஜயன்: இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. தரமான கல்வி வழங்குவதற்காகவே மெட்ரிக் பாடத்திட்டத்தை தனியார் பள்ளிகள் நடத்திவருகின்றன என்றார் அவர்.

நீதிக்குத் தலை வணங்க வேண்டும்: அரசுக்குத் தங்கபாலு வலியுறுத்தல்

நீதிக்குத் தலை வணங்க வேண்டும்: அரசுக்குத் தங்கபாலு வலியுறுத்தல்

First Published : 19 Jul 2011 04:44:13 AM IST

Last Updated : 19 Jul 2011 05:33:32 AM IST

சென்னை, ஜூலை 18: சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குத் தமிழக அரசு தலை வணங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் செய்ய வேண்டும், அதற்கான புத்தகங்களை இந்த மாதம் 22-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றும் குறைகளை நீக்கி அடுத்த ஆண்டு அமல் செய்வோம் என்றும்தான் உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு கூறியுள்ளது.  எனவே உயர் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு அரசுக்கு வெற்றியோ தோல்வியோ அல்ல. எனவே, கெüரவம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தங்கபாலு கூறியுள்ளார்.  மேல்முறையீடு கூடாது - ராமதாஸ்: சமச்சீர் கல்வி வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  அவரது அறிக்கை: சமச்சீர் கல்விக்குத் தடை விதிக்க முடியாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. மீண்டும் மேல்முறையீடு செய்வதால் எந்தப் பயனும் இல்லை.  அரசின் பிடிவாதப் போக்கால் கடந்த 2 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றும் பாடம் படிக்க முடியாமல் உள்ளனர். முதல் பருவத் தேர்வும் நடக்கவில்லை.  செப்டம்பரில் காலாண்டுத் தேர்வு நடத்த வேண்டுமானால் இனியும் தாமதமில்லாமல் பாடங்களைத் தொடங்கியாக வேண்டும்.  எனவே, உயர் நீதிமன்ற அறிவுரைப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக அரசு செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.  திருமாவளவன்: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தியுள்ளார்.  மேல்முறையீடு செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது மாணவர்களின் கல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படும் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது.  மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பெருந்தன்மையோடு இப் பிரச்னையை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேல்முறையீடு வேண்டாம்: இடதுசாரிகள் கோரிக்கை

மேல்முறையீடு வேண்டாம்: இடதுசாரிகள் கோரிக்கை

First Published : 19 Jul 2011 04:41:06 AM IST


சென்னை, ஜூலை 18: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.  இதுதொடர்பாக தமிழ்நாடு மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:  சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேசமயம் தீர்ப்பு குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் கடந்துவிட்ட நிலையில், மேலும் காலம் தாழ்த்துவது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், நடைமுறைச் சிக்கலையும் ஏற்படுத்தும்.  எனவே மேல்முறையீடு செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சமான பொதுப்பாடத் திட்டத்தை இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல் படுத்த வேண்டும் என ராமகிருஷ்ணன் கோரியுள்ளார்.  இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா. பாண்டியன்: சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. தமிழக அரசும், அரசு வழக்கறிஞர்கள் மூலமாக சமச்சீர் கல்விக் கொள்கைதான் தங்கள் நிலை என நீதிமன்றத்தில் உறுதிப் படுத்தியுள்ளது.  இந்த தீர்ப்பு தமிழக அரசின் நடவடிக்கைகளைத் தடுப்பதாகவோ, குறை காண்பதாகவோ எந்த வாசகமும் இல்லாத நிலையில் மேல் முறையீடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற மக்களின் உணர்வை நாங்கள் வற்புறுத்துகிறோம் என பாண்டியன் கூறியுள்ளார். 

சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: வைகோ

சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: வைகோ

First Published : 19 Jul 2011 11:24:05 AM IST


சென்னை, ஜூலை.19: தவறுக்கு மேல் தவறு செய்து நாட்களை வீணடித்து மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திருத்த சட்டத்தை ரத்துசெய்து, சமச்சீர் கல்வி முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வரவேற்கத்தக்க சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழக அரசின் வீண் பிடிவாதத்தால் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்க வேண்டிய தேதியில் திறக்கப்படாமல்  பதினைந்து நாட்கள் தள்ளிப்போனது. பின்னர் திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் பள்ளி மாணவர்கள் எந்தப் பாடங்களைப் படிப்பது என்ற தவிப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு சூழல் கல்வித் துறையில் இதுவரை ஏற்பட்டதில்லை. எனவேதான், உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும் 22 ஆம் தேதிக்குள் சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும், ஆசிரியர்கள் பாடங்களை தொடங்க வேண்டும் என்றும் குறைபாடுகளை களைந்து புதிய பாடங்களை கூடுதல் புத்தகங்களாக அச்சிட்டு மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால், இதனை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் போக்கை வன்மையாக கண்டிப்பதுடன் தவறுக்கு மேல் தவறு செய்து நாட்களை வீணடித்து மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேல்முறையீடு வேண்டாம்: நெடுமாறன் வேண்டுகோள்

மேல்முறையீடு வேண்டாம்: நெடுமாறன் வேண்டுகோள்

First Published : 19 Jul 2011 01:06:19 PM IST


சென்னை, ஜூலை.19: சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வதால் ஏற்படும் காலதாமதம் மாணவர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 10- ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய தமிழக அரசு செய்துள்ள முடிவு தவறானது மட்டுமல்ல, பின்னோக்கி அடி  எடுத்து வைப்பதாகும். ஏற்கெனவே 1 மற்றும் 6 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதின் மூலம் ஏற்படும் காலதாமதம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும்.2006- ம் ஆண்டிலிருந்து முனைவர் முத்துக்குமரன் குழு சமச்சீர் கல்வியை அமல்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், நான்காண்டு காலத்திற்குப் பிறகே சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்துள்ளது. எனவே அவசர கதியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது என்று மெட்ரிக் பள்ளிகள் கூறுவது உண்மைக்கு மாறானதாகும்.பாடப்புத்தகங்களில் உள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு சேர்க்க வேண்டிய பகுதிகளைச் சேர்த்து அவற்றை கூடுதல் தொகுப்பாக மாணவர்களுக்கு விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் எவ்விதத் தாமதமும் கூடாது. பெற்றோரும் கல்வியாளர்களும் நீண்ட காலமாக நடத்திய போராட்டத்தின் விளைவாகவே சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை நினைவில் கொண்டு செயல்படுமாறு தமிழக அரசை வேண்டிக்கொள்வதாக நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 18 ஜூலை, 2011

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டில் இருந்தே அமல்படுத்த
உயர்நீதிமன்றம் உத்தரவு

First Published : 18 Jul 2011 01:24:15 PM IST

Last Updated : 18 Jul 2011 02:52:11 PM IST

சென்னை, ஜூலை.18: 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ்  வரும் 22-ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும், அதில் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனில் ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு சமச்சீர் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி கடந்த கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. பிற வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருந்தது.இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்தக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்த புதிய அரசு, அதற்காக சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அப்போது, 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 10-ம் வகுப்பு வரையிலான பிற வகுப்புகளைப் பொருத்தவரை, தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய வேண்டும் என்றும், அந்த நிபுணர் குழுவின் அறிக்கை மீது சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி கடந்த ஜூன் 17-ம் தேதி 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.தங்களது தீர்ப்பில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே அமல்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதன், 24 நவம்பர், 2010

முத்துக்குமாருக்குப் படிமம்

அருமையான தீர்ப்பு. போற்றுதலுக்குரிய முத்துக்குமார் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளமையும் பாராட்டிற்குரியது. கொள்ளைக்காரர்கள்,  கொலைகாரர்கள், அரசியல்வாதிகள் என்ற போர்வையில் சிலைகளாக நிற்கையில் தன்னுயிரையே தமிழர் எழுச்சிக்காகக் கொடுத்த முத்துக்குமாருக்குப் படிமம் நிறுவ மறுப்பது
அறமற்றது என்பதை இனியும் கூட உரியவர்கள் உணர மாட்டார்கள். வேறு வகையில் தடை வரும் முன் விரைவில் படிமத்தைத் திறநது விடுங்கள். வீரப் போராளி முத்துக்குமார் புகழ்  ஓங்குக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு சிலை வைக்க நீதிமன்றம் அனுமதி

First Published : 24 Nov 2010 03:14:52 AM IST


மதுரை, நவ. 23: இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் தீக்குளித்த முத்துக்குமாரின் மார்பளவுச் சிலையை, தஞ்சை அருகே கிராமத்தில் திறக்க அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.  இது குறித்து தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சியின் மாநில பொதுச் செயலர் மணியரசன் தாக்கல் செய்த மனு:  இலங்கையில் பல்லாயிரம் தமிழர்களை இலங்கை அரசு படுகொலை செய்யத் தொடங்கியபோது, அதைத் தடுத்து நிறுத்தி தமிழர்களைக் காக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னையில் முத்துக்குமார் 29.1.2009-ல் தீக்குளித்து உயிரிழந்தார்.   அவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது மார்பளவு உருவச் சிலையை தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சியைச் சேர்ந்த சாணுரப்பட்டி கிராமத்தில் தனியார் இடத்தில் நிறுவ மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டோம். ஆட்சியர், அந்த இடத்துக்கான பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டார். அவற்றையும் சமர்ப்பித்தோம். ஆனாலும் அரசிடம் அனுமதி பெறவேண்டும் எனக் கூறி எங்கள் மனுவை நிராகரித்துவிட்டார். எனவே, சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு அளித்த தீர்ப்பு:  தமிழக வரலாற்றில் தங்களுக்குப் பிடித்த வீரர்களுக்கு நடுகல் நாட்டி போற்றுவது மரபாக உள்ளது. இதற்கு அகழ்வாராய்ச்சிகளில் ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர், அவரது இயக்கத்தினர் போற்றுதலுக்குரிய முத்துக்குமாரின் மார்பளவுச் சிலையை, தனியார் இடத்தில் நிறுவ அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்.   அரசு அனுமதி இன்றி சிலை திறப்பது சரியானது அல்ல. இருப்பினும் சாதாரணமான இந்த விஷயத்தை அதிகாரிகள் ஊதிப் பெரிதாக்கிவிட்டனர். மாவட்ட அதிகாரி எழுப்பியுள்ள ஆட்சேபங்கள் சட்டரீதியானவை அல்ல. வருவாய்த் துறை ஆவணங்கள் அதிகாரிகளிடம் இருப்பவை. அவற்றை மனுதாரரிடம் கேட்டது சரியல்ல. மேலும் சிலை களிமண், மரம், உலோகம், கல் ஆகியவற்றால் செய்கிறீர்களா?  வெண்கலத்தினால் மட்டுமே சிலை செய்ய வேண்டும் என அரசு விதி உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தேவையற்றது. பொது இடத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கே இந்த விதிகள் பொருந்தும். அரசியல் கட்சியினர் தியாகியாக மதிக்கும் ஒருவருக்கு சிலை வைப்பதை யாரும் தடுக்க முடியாது. முத்துக்குமாரின் சிலை வைக்க மிரட்டல் உள்ளது என அதிகாரிகள் குறிப்பிடவில்லை. எனவே, தனியார் இடத்தில் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 31 ஜூலை, 2010


ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ. ராஜா விடுதலை


புதுதில்லி, ஜூலை 30: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் கல்வியாளர் எஸ்.ஏ. ராஜாவுக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.÷திருநெல்வேலி மாவட்டம், ஆலடிப்பட்டியைச் சேர்ந்த ஆலடி அருணா 31.12.2004-ல் அதே ஊரில் காலையில் நண்பருடன் நடைபயிற்சிக்கு சென்றபோது ஒரு கும்பல் வழிமறித்து இருவரையும் வெட்டிக் கொலை செய்தது.÷கல்வியாளர் எஸ்.ஏ. ராஜா உள்ளிட்டோர் இந்த வழக்கில் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டனர். 17.4.2008-ல் திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருவருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.÷ராஜா விடுதலையை எதிர்த்து அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான தீர்ப்பு 5.8.2009-ல் கூறப்பட்டது.÷இதில், எஸ்.ஏ. ராஜா, ஆறுமுகம், 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வேல்துரை ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.÷இரட்டை ஆயுள் தண்டனையை எதிர்த்து எஸ்.ஏ. ராஜா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2009-ல் மேல் முறையீடு செய்யப்பட்டது.÷ஆலடி அருணாவை கொலை செய்வதற்கு ராஜாவுக்கு காரணங்கள் இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்பதாலும், கொலையாளிகளுக்கு ஏற்பாடு செய்தார் என்று நிரூபிக்கப்படவில்லை என்பதாலும், அவருடைய வயதைக் கருத்தில் கொண்டும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
கருத்துக்கள்


அகவையை (வயதை)க் காட்டி விடுதலை என்பதை நீதிமன்றங்கள் பல வழக்குகளி்ல் மறுத்துள்ளன. அவ்வாறாயின் எசு.ஏ.இராசாவின் அகவையும் அதற்கு மேலும் உள்ள தண்டனைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/31/2010 2:45:00 AM

ஐயகோ, இந்தியாவில் தப்பு செய்தவனுக்குத் தண்டனையா? இது எப்படி சாத்தியம்? அதுவும் கொலை, கொள்ளை போன்றவைகளுக்கு எங்கள் நாட்டிலே எந்த தண்டனையும் கிடையாதே. தப்பு செய்யாதவன் கூட தண்டிக்கப்படலாம், , ஆனால், தப்பு செய்தவன் ஒருநாளும் தண்டிக்கப்படக் கூடாது. அதனால் சர்தார் ராஜாவுக்கு இந்தா விடுதலை. ஆமா, தப்பா தீர்ப்பு சொன்ன உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தண்டனை ஏதும் இல்லையா?
By படிக்காத பாமரன்
7/31/2010 12:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 29 ஜூன், 2010

தமிழறிஞர்களை பாதுகாத்தால்தான் தமிழ் வளரும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்



சென்னை, ஜூன் 28: தமிழறிஞர்கள்,எழுத்தாளர்களைப் பாதுகாத்தால்தான் தமிழ் வளரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.தமிழருவி மணியனை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்து வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும், தமிழறிஞருமான தமிழருவி மணியன் மாநில திட்டக் குழு உறுப்பினராக 2006-ல் நியமிக்கப்பட்டார்.அவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது.ஆனால், வீட்டு வசதி வாரிய நிபந்தனைகளின் படி ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியதாகக் கூறி, அந்த வீட்டில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என்று செப்டம்பர் 23, 2009-ல் உத்தரவிடப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழருவி மணியன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் எனக்கு 2007-ம் ஆண்டு வீடு ஒதுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தையும் சரியாகப் பின்பற்றி வருகிறேன்.இந்த நிலையில், 11 மாதங்களுக்குப் பிறகு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறியதாகக் கூறி எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறியதால் வெளியேற வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.நோட்டீûஸ பார்த்த பிறகுதான் அதுபோன்ற விதி இருப்பதே தெரியவந்தது. எங்கள் குடியிருப்பில் உள்ள வேறு யாரிடமும் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்படி வலியுறுத்தவில்லை.வார இதழ்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக கட்டுரைகள் எழுதியதால் என்னையும், குடும்பத்தினரையும் அவமானப்படுத்தவே வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.எங்கள் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்குமாறு எந்த நோட்டீஸýம் அளிக்காமல் திடீரென்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசியல் காரணங்களுக்காக பாரபட்சமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் மனுதாரரைப் போன்றே வீடு ஒதுக்கப்பட்ட மற்றவர்கள், ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று வீட்டு வசதி வாரியம் வலியுறுத்தவில்லை.மனுதாரரிடமும் இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. அரசுக்கு எதிராக எழுதியதால் அவரை வெளியேற்றுவதற்காக இந்தக் காரணம் கண்டறியப்பட்டுள்ளது.தமிழருவி மணியன் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருந்தாலும் அவருக்கு என்று சொந்த வீடு இல்லை என்ற அவரது வழக்கறிஞரின் வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.தமிழறிஞர்களைக் காப்பாற்ற வேண்டும்: வீட்டு வசதி வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழ் வாழ்க என்ற கோஷம் இடம்பெற்றுள்ளது. இது நடைமுறைக்கு வர வேண்டும் என்றால் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், சிந்தனையாளர்களைக் காப்பாற்ற வேண்டும்.கொள்கைகளில் மாறுபாடு கொண்டிருப்பதால் சாதாரண காரணங்களைக் கூறி அவர்களுக்கு வாழ்விடங்களை மறுக்கக் கூடாது. அதன் பிறகே, தமிழ் வாழ்க என்ற கோஷம் மேலும் ஒளிரும்,  அந்த நம்பிக்கையும் நடைமுறைக்கு வரும் என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்


சரியான தீர்ப்பு. ஆனால், யார் ஆட்சியில் இருந்தாலும் தம்மைத் துதிபாடிக் கொண்டிருப்பவர்களுக்குத்தானே பதவிகளும் பட்டங்களும் வசதிகளும் அளிப்பர்.அவர்கள் நிறம் மாறினால் கொடுக்கப்பட்டவை பிடுங்கப்படும் என்பதுதானே நம் அரசியல் ஒழுகலாறு. அவ்வாறிருக்க எவ்வாறு தமிழறிஞர்கள் என்று முதன்மை அளித்து நோக்குவர்? தமிழறிஞர்களை மதிப்பதாக இருந்தால் முதலில் தமிழ் அமைப்புகளில் இருந்து தமிழறிஞர் அல்லாவதர்களை நீக்குதல் வேண்டும். தமிழாய்ந்த தமிழர்களையே தமிழ் சார் பதவிகளில் அமர்த்த வேண்டும். இதையும் ஏ‌தேனும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு அரசிற்கு அறிவுறுத்தினால் நன்றாக இருக்கும. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2010 5:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *