curruption லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
curruption லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஜூலை, 2011

cong.alliance will continue - kalaignar: காங்கிரசுடன் கூட்டணி தொடரும்: கருணாநிதி

வேறு வழி?  திகார் செல்வோரைக் குறைக்கவும் திகாரில் இருப்போரை மீட்கவும் இப்படித்தான் சொல்ல வேண்டி உள்ளது! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

காங்கிரஸூடன் கூட்டணி தொடரும்: கருணாநிதி

First Published : 25 Jul 2011 01:02:38 AM IST


கோவை, ஜூலை 24: மத்தியில் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும்; எனினும் மத்திய அமைச்சரவையில் காலியாக இருக்கும் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 2 இடங்களைக் கேட்கப்போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.  கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  காங்கிரஸ் - திமுக உறவு, திமுகவுக்கு ஒதுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் காலியாக இருக்கும் 2 இடங்கள் குறித்து திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.  காலியாக இருக்கும் அந்த இடங்கள் திமுகவைப் பொருத்தவரை வெற்றிடமாகவே இருக்கும். அதை நிரப்ப திமுக முயற்சி செய்யாது. இருப்பினும் திமுக தொடர்ந்து காங்கிரஸ் அணியில் இருக்கும்.  இந்த முடிவு காங்கிரஸ் மீதான அதிருப்தியில் எடுக்கப்படவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் திமுக மீது வெளிப்படுத்தும் அதிருப்தி குறித்துத்தான் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். ஏற்கெனவே உள்ள மத்திய அமைச்சர்கள் அப்படியே நீடிப்பார்கள்.  பொதுக்குழு தீர்மானத்தில் சிபிஐ அமைப்பைக் குறை கூறவில்லை. அந்த அமைப்பில் உள்ளவர்கள் சிலர், உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்றுதான் தீர்மானத்தில் கூறியுள்ளோம்.  ஒவ்வொரு பொதுக்குழு கூடும்போதும் ஊடகங்கள் ஏற்படுத்தும் கலகங்களுக்காக, தலைவரை மாற்ற முடியாது. திமுக சட்டதிட்டத்துக்கு உட்பட்ட கட்சி. உங்கள் இஷ்டத்துக்குத் தலைவரை மாற்ற முடியாது என்றார் கருணாநிதி.  பேரவைத் தேர்தல் தோல்விக்கு திமுகதான் காரணம் என பாமக, கொமுக ஆகிய கூட்டணிக் கட்சிகள் கூறியுள்ளனவே என்ற கேள்விக்குப் பதில் அளித்த கருணாநிதி, "நான்தான் காரணம் என்று பொதுக்குழுவிலேயே கூறிவிட்டேன்' என்றார்.  பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2,050 பேர் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.    இவர்தான் தலைவர்!  பொதுக்குழுவில் பேசிய தலைவர் ஒருவர் எதிர்காலத்துக்கு ஒரு தலைவரைச் சுட்டிக்காட்டுங்கள் என்று கூறியிருக்கிறாரே என ஒரு நிருபர் கருணாநிதியிடம் கேட்டார்.  உடனே அந்த நிருபரைப் பார்த்து உன் பெயர் என்ன? எனக் கேட்டார் கருணாநிதி.  அதற்கு அவர் தன் பெயரைச் சொல்ல, அந்த நிருபரின் பெயரைக் குறிப்பிட்டு "இவர்தான் திமுகவுக்கு எதிர்காலத் தலைவர்' என்று சிரித்துக் கொண்டே கூறினார் கருணாநிதி.  மத்திய அமைச்சர் அழகிரி, பொதுக்குழுவைப் புறக்கணித்துவிட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளதே எனக் கேட்டதற்கு, "புறக்கணிப்பதாக இருந்தால், இங்கு யாரும் வந்திருக்கமாட்டார்கள். காலை நிகழ்ச்சி முழுவதும் அவர் கலந்து கொண்டார். அதன் பிறகுதான் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்' என்றார் கருணாநிதி.

வெள்ளி, 10 ஜூன், 2011

will D.M.K. continue in the central govt.? : மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா? இன்று முடிவு

சிங்கள அரசுடன் மத்திய அரசு கூடா நட்பு கொண்டதே ஈழத்தமிழர்க்கும் அதனால் ஆட்சிக்கும் பெருங்கேடாய் அமைந்தது. எனினும் கலைஞர் அதைக் கூறும் உறுதி பெற்றிருக்கவில்லை. காங்.உடன் தி.மு.க. கூடா நட்பு கொண்டதே பெருந்தோல்விக்குக் காரணம். எனினும் கலைஞர் அதை வெளிப்படுத்தும் துணிவு பெற்றிருக்கவில்லை. மத்திய ஆட்சியில் பெயரவிற்கேனும் பங்கு  இல்லாவிடில் பெருந் தொல்லை. எனவே, காங்.ஐ எதிர்க்க முடியாது. தொண்டர்கள் அ.தி.மு.க.வுடன் நட்பு கொண்டு கட்சி மாறும் சூழல் வரக்கூடாது என்பதற்காகக் கட்சியினருக்குத்தான் அதனைக் கூடா நட்பாகக் கூறியுள்ளார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா?இன்று முடிவு

First Published : 10 Jun 2011 02:10:39 AM IST

Last Updated : 10 Jun 2011 05:06:07 AM IST

சென்னை ஜூன் 9: திமுக - காங்கிரஸ் உறவு தொடர்பாக, வெள்ளிக்கிழமை நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  அக் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் மாலை 4.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாகத்தில் இக் கூட்டம் நடக்கிறது.  பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின். முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.  சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியானதற்குப் பிறகு கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் முறைப்படியான முதலாவது கூட்டம் இதுவாகும்.  தேர்தல் தோல்விக்குக் காரணம், "கூட்டணிக் கட்சிகள் கேட்டுப் பெற்ற இடங்களா, அவர்களுக்கு விட்டுக் கொடுத்த இடங்களா' என்று கருணாநிதி கூறியுள்ளார். கூட்டணி ஆட்சிதான் வரும் என்றால் அதை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்ற கருத்தை காங்கிரஸ் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் கருணாநிதி.  இருந்தாலும் காங்கிரஸ் தலைமை பிடிவாதமாக இருந்து 63 தொகுதிகளைப் பெற்றதால், திமுக 118 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டது. எனவே கூட்டணி ஆட்சி என்ற சூழ்நிலையை தவிர்க்கவே மக்கள் விரும்புவர் என்ற கருணாநிதியின் கருத்தை உறுதி செய்வதைப் போலவே தேர்தல் முடிவு அமைந்துவிட்டது.  அதைத் தொடர்ந்து தனது பிறந்த நாளன்று அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, கூடாநட்பு கேடாய் முடியும் என்பதை தொண்டர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கு பல அர்த்தங்கள் கூறப்பட்டாலும், அதில் ஒன்று காங்கிரஸ் உறவைக் குறிப்பது என்று காங்கிரஸ் தரப்பினரே கருதுகின்றனர்.  இதுதவிர, கருணாநிதியின் மகள் கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு 18 நாள்களாகிவிட்டன.  திருவாரூரில் கடந்த 5-ம் தேதி நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, மத்திய அரசு உத்தரவாலோ அல்லது அலட்சியத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ கனிமொழி சிறை செல்ல நேரிட்டது என குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையில் கனிமொழி கைதாகி இருப்பதால் இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.  சி.பி.ஐ. நீதிமன்றத்திலும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் கனிமொழியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. கருணாநிதிக்கு இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.  மாநிலத்தில் ஆட்சி இல்லாத சூழ்நிலையில், மத்திய ஆட்சியில் நீடிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும் என திமுக தலைவர்கள் கருதி வந்தனர்.  ஆனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காததும், மாநிலத்தில் ஆட்சியை இழக்க காரணமாக இருந்தது என்ற கருத்தும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறது.  2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த ஆ. ராசா சிறை சென்று சுமார் 4 மாதங்கள் ஆகிவிட்டன. கனிமொழியும் சிறையில் உள்ளார். மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், வலுப்பெற்று வருவதால் அவரும் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அடுத்தடுத்து திமுக அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் வருவது குறித்து கட்சித் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிகிறது.  இவ்வளவு நடந்த பிறகும் காங்கிரஸ் கட்சியுடன் உறவு இருந்து எதைக் காப்பாற்றப் போகிறோம் என்ற கருத்து கட்சித் தலைவர்களிடம் காணப்படுகிறது.  இதற்கிடையில், வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, ""தேர்தலில் திமுக இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களில் ஒன்று மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழி ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதுதான்'' என கூறியுள்ளார்.  திமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இப்படி ஒரு கருத்தை வீரமணி தெரிவித்திருக்க மாட்டார் என்றே அரசியல் வட்டாரத்தில் கருத்தாக உள்ளது.  இவைதவிர, இக் கூட்டத்தில் தலைவர்கள் பேசும்போது தேர்தல் தோல்விக்கான காரணங்களைப் பட்டியலிடுவார்கள். அதிலும் காங்கிரஸ் மீது குறைகள் தெரிவிக்கப்படலாம். எனவே காங்கிரஸ் கட்சியுடன் உறவைத் தொடருவதா, மத்திய அமைச்சரவையில் பங்கேற்பைத் தொடருவதா அல்லது வெளியில் இருந்து ஆதரவா என்று முக்கிய முடிவு ஏதாவது இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைப்பு, புதிய தலைமைச் செயலக பணிகள் நிறுத்தம் போன்றவற்றைக் கண்டித்து ஏற்கெனவே மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைவரிடம் கலந்து பேசி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  அதுபோன்ற போராட்ட முடிவுகளும் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

திங்கள், 11 ஏப்ரல், 2011

Raghul about curruption: ஊழல் நாட்டின் பெரிய சிக்கலாக உள்ளது: இராகுல் காந்தி

ஊழல் வெளிபப்டும் பொழுது ஊழல் முகவரை இடம் மாற்றம் செய்து மக்களை ஏமாற்றுவது காங். வழக்கம். உண்மையிலேயே ஊழலற்ற ஆட்சியை விரும்புபவராக இராகுல் இருநதால் அவர் காங்.ஐ விட்டு வெளியேறி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கி நாட்டை நேர்மையான வழிக்குத் திருப்ப வேண்டும். ஆனால், தேர்தல் பரப்புரையின் உத்தியாக  இவ்வாறு பேசினால் உரியவிலையை மக்கள் தேர்தலில் தருவர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஊழல் நாட்டின் பெரிய பிரச்னையாக உள்ளது: ராகுல் காந்தி


திருவனந்தபுரம், ஏப்.10: ஊழல் நாட்டின் பெரிய பிரச்னையாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ராகுல் காந்தி தெரிவித்தார்.  திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ராகுல் மேலும் கூறியது: நாட்டின் பெரிய பிரச்னையாக ஊழல் உள்ளது. இதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மத்தியில் செயல்படும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தகவல் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தது. ஊழலை ஒழிக்கவும், அரசு நிர்வாகம் வெளிப்படையாக அமையவும் தகவல் உரிமைச்சட்டம் உதவும். ஆட்சி நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள இச்சட்டம் உதவும். இந்தச் சட்டத்தைத் தடுக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. மாறாக இதை இன்னும் பொறுப்புடன் செயல்படுத்த சட்டம் கொண்டுவரப்படும்.  காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் ஊழல் பற்றிய புகார் எழுந்ததுமே நாங்கள் நடவடிக்கை எடுத்துவந்துள்ளோம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆளும் கேரளத்தில் ஊழல் புகார் எழுப்பப்பட்டும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை மக்களின் பணத்தை சுரண்டும் ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கும்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரளத்தின் தொழில் வளர்ச்சியை இடதுசாரி கூட்டணி அரசு அடியோடு அழித்துவிட்டது. தொழில் அதிபர்கள் தொழில் துவங்க விரும்பும் மாநிலங்கள் பட்டியலில் கேரளமில்லை. தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகளை கேரள அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. நிலம், மது, மற்றும் லாட்டரி மாஃபியாக்கள் கேரளத்தை ஆண்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் 43 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெற வேண்டுமானால் அவர்களுக்கு 3 வழிகள்தான் உள்ளன. ஒன்று வேறு மாநிலத்துக்குச் செல்லவேண்டும், அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல வேண்டும், இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என்றார்.  கேரளம் வளர்ச்சியடைய மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் இணைந்து செயல்படும் அரசு இங்கு அமைய வேண்டும். மத்திய அரசு ஒதுக்கிய வளர்ச்சித்திட்ட நிதியைப் பயன்படுத்த கேரள அரசு தவறிவிட்டது. கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு அமையுமானால் இங்கு தொழில் துவங்க சாதகமான சூழ்நிலை உருவாகும். அதன்மூலம் இங்கு வேலைவாய்ப்புப் பெருகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  பிரசாரக் கூட்டத்தில் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி, சசிதரூர் எம்.பி. ஆகியோரும் பேசினர்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

வெளியுறவு அமைச்சக பணியில் மகளுக்கு சலுகை: தென் கொரிய அமைச்சர் ராஜிநாமா


சியோல், செப்.6: தென் கொரிய வெளியுறவு அமைச்சர் யு மிங்-வான் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். வெளியுறவு அமைச்சக விதிமுறைகளை மீறி தனது மகளுக்கு சிறப்புச் சலுகைகள் காட்டியதாக இவர் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.தனது ராஜிநாமா கடிதத்தை அதிபர் லீ மிங்-பாக்-கிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் லீ அமைச்சரவையிலிருந்து பதவி விலகும் நான்காவது அமைச்சர் யு மிங் வான் என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் ரீதியில் லீ-க்கு பெரும் பின்னடை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சரின் மகளுக்கு சலுகை காட்டிய விவரம் வெளியுறவு அமைச்சகத்துக்கு முன்னரே தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தணிக்கையாளர்கள் சோதனைக்கு பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் சில பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஐந்து பேரடங்கிய குழு நேரடித் தேர்வு நடத்தியது. இதில் மூன்று பேர் வெளியுறவு அமைச்சகத்தைச் சாராதவர்கள்.நேரடித் தேர்வு முடிவில் வெளியிலிருந்து வந்த மூன்று பேர் மற்றொரு போட்டியாளருக்குஅதிக மதிப்பெண் அளித்துள்ளனர். ஆனால் அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அமைச்சரின் மகளுக்கு அதிக மதிப்பெண் அளித்துள்ளனர். முடிவில் அமைச்சரின் மகளுக்கு இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சக அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.1973-ம் ஆண்டு வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்தவர் யு மிங். தனது அமைச்சகத்துக்கும், அமைச்சக நண்பர்களுக்கும் தொந்தரவு கொடுத்துவிட்டதாகவும், அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கோருவதாக யு மிங் தெரிவித்துள்ளார். 
கருத்துக்கள்

விவரம் தெரியாத கொரியா அமைச்சர். இந்திய அரசியல்வாதிகளிடம் வந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளின் இலக்கணத்திற்கே களங்கம கற்பித்து விட்டார் என்று இந்திய அரசியல் வாதிகள் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளனர். இப்பொழுது ஒன்றும் காலம் கடந்து விடவில்லை. இதைக் கொண்டே எவ்வாறு மீண்டும் அமைச்சர் பதவி பெறுவது என்பது குறித்துத்த் தெரிந்து கொள்ள இந்தியா வரட்டும் யு-மிங்-வான் 
பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/7/2010 4:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *