Ilakkuvanar |Thiruvalluvan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Ilakkuvanar |Thiruvalluvan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 நவம்பர், 2017

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

     19 நவம்பர் 2017      கருத்திற்காக..


இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3

எழுத்து நெறி :
  மொழியின் வாழ்வு எழுத்தில்தான் உள்ளது. எழுத்தைச் சிதைக்கும் பொழுது அம்மொழியும் அம்மொழி இலக்கியங்களும் சிதைந்து அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது என்பதை ஓயாமல் உணர்த்தியவர் பேராசிரியர் இலக்குவனார். “ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்? எனவே இந்தியமொழிகள் அனைத்தும் இந்திமொழியாம் தேவநாகரியில் எழுதப்படவேண்டும் என விதிக்கும் நடுவணரசின் முயற்சியை எப்பாடுபட்டேனும் தடுக்கவேண்டும்” என எழுதியும் பேசியும் வந்தார். இன்றைக்கு  அயல்மொழி எழுத்துக் கலப்பும்  அதை விரைவு படுத்தும் கிரந்தத்திணிப்பும  மிகுதியாக நடைபெறுகின்றன. எனவே, நாம் நம் எழுத்தைக் காத்து, மொழியைக்காத்து, இனத்தைக் காப்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
பயன்பாட்டு நெறி :
 கல்வி மொழியாகவும் கலை மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இறை மொழியாகவும் அனைத்துநிலை மொழியாகவும் தமிழ்  பயன்படுமொழியாக அமைந்தால்தான் இவ்விலக்கை நாம் அடைய முடியும் என்பதையும் பேராசிரியர் இலக்குவனார் வலியுறுத்தத் தவறவில்லை. இவற்றை நிறைவேற்றவே தமிழ்  உரிமைப் பெருநடைப் பயணத்தை அமைத்து அதனால் பாதுகாப்புச் சட்டப்படிச் சிறை சென்றது மூலம் தம் சொல்லும் செயலம் தமிழ்நலம் சார்ந்தனவே  என்பதை மெய்ப்பித்தவர் பேராசிரியர் இலக்குவனார். ஊடக மொழியாகவும் பிற பயன்பாட்டு மொழியாகவும் தமிழே இருக்க  வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனார் காட்டும் பயன்பாட்டு நெறியாகும்.
உரிமை நெறி :
  தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமையும் முதன்மையும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் மத்திய ஆட்சியிலும் சமநிலை உரிமை பெற்ற மொழியாகத் தமிழ் திகழ வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனாரின் பெருவிழைவு. ஆட்சிமொழி, பணித்தேர்வு மொழி, நாடாளுமன்ற மொழி, உச்ச நீதிமன்ற மொழி, அறிவியல் துறைகளின் மொழி என இந்தியும் ஆங்கிலமும் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளனவோ அங்கெல்லாம் தமிழும் முழு உரிமையுடன் வீற்றிருக்க வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனாரது முழக்கம்.
நூல் நெறி :
 வாழ்வியல் நூலாம் தொல்காப்பியத்தையும், வாழ்க்கைநெறி நூலாம் திருக்குறளையும் கண்களாகக் கொண்டு போற்றி முழுமையாய்ப் படித்துப் பின்பற்றி வாழவேண்டும்; சங்கஇலக்கியக் காலம் நம்பொற்காலம். சங்கஇலக்கியங்களை மக்களிடையே பரப்பவேண்டும் என்பனவும் பேராசிரியரின் பேரவா. தமிழக வரலாறு எழுதுவோர் தமிழர் கருவூலமாக அமைந்துள்ள தொல்காப்பியத்தைக் கற்று அறிதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றினை எழுதுதல் கூடும் என்பதைப் பேராசிரியர் இலக்குவனார் நமக்கு இட்ட கட்டளையாகக் கொண்டு வரலாற்றுப் பாடத்திட்டங்களில் தொல்காப்பியத்தையும் பிற சங்கஇலக்கிய வரலாற்றுச் செய்திகளையும்   சேர்க்க வேண்டும்.
 புதுக்கவிதை என்ற பெயரிலும் குறும்பாக்கள் (ஐக்கூ) என்ற முறையிலும் உண்மைச் சிறப்பை உணர்த்தாத, தவறான தகவல்கள் நிறைந்த  மரபு மீறிய தமிழ் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் பாடல்கள் பெருகுகின்றன. பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது.  நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும் என்னும் பேராசிரியர் இலக்குவனார் கூறும் நூல் நெறியைப் பின்பற்றினால் பண்பாட்டைச் சிதைக்காக அறிவு வளம் நிறைந்த இலக்கியங்கள் பெருகும்.
போராட்ட நெறி :
  இன்றைக்கு அரச வன்முறை என்பதே எல்லா  நாடுகளிலும் பெருகி வருகின்றது. வன்முறையை  ஒடுக்குவதாகக் கூறி, மக்களின் உரிமைகளுக்குக்  குரல் கொடுப்போரை  அழிப்பதற்கு அரசுகளே கொடுங்கோல் முறையில் ஈடுபடுகின்றன. மக்களாட்சியில் கிளர்ச்சி என்பது நோய்க்கு மருந்து போன்றதாகும். ஆட்சியாளரின் பொறுப்பை உணர்வதற்குக் கிளர்ச்சிகள்தாம் கை கண்ட மருந்தாய் உலகம் முழுவதும் காணப்பெறுகின்றன. எனவே, கிளர்ச்சிகளுக்கு எதிராக அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தக்கூடாது. கிளர்ச்சிகளுக்குக் காரணமானவற்றை நீக்கவேண்டும். அவ்வாறு நீக்க முன்வந்தால் கிளர்ச்சியாளர்கள் அரசின் உறுதிமொழிகளை  ஏற்றுப் போராட்டங்களைக் கைவிடவேண்டும் என்ற பேராசிரியரின் அறிவுரையை அரசுகள் பின்பற்றினால், ஆட்சியில் குறைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடக்குமுறையின்றி நீக்கும் நல்லரசுகள் அல்லவா எங்கும் கோலோச்சும்.
கல்வி நெறி:
  தமிழ்நாட்டில் தமிழ்மட்டுமே எல்லா நிலைகளிலும் கல்வி மொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்திப் போராடியவர் பேராசிரியர் இலக்குவனார்.  பாடவழிக்குத் தெரிவே இல்லாமல் தமிழ் மட்டுமே பாடமொழியாக இருக்க வேண்டும் என வழி கூறியவர் பேராசிரியர் இலக்குவனார். ”தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், – இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் -தோன்றும் நிலை ஏற்படவில்லை.  தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர்.  ஆதலின் ஆங்கிலம் அகன்றால்  அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும்.  பிற நாடுகளைப் போன்றே நம் நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும்.  அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும் என்பதை நாம் உணர்ந்து தமிழையே என்றும் எங்கும் பயன்படுத்தினால்தான் நாம் உலக அளவில் முன்னணியில் இருப்போம்” என்னும் பேராசிரியர் இலக்குவனாரின் கல்வி நெறியைப் பின்பற்றினால் நாம் உலகின் முன்னரங்கில் இருப்போம் அல்லவா?
காப்பு நெறி :
  பிற மொழித்திணிப்புகளில் இருந்து தமிழைக்காக்கத்  தம் வாழ்வையே போர்க்களமாக ஆக்கியவர்  பேராசிரியர் இலக்குவனார். இந்தியைத் திணிக்கவில்லை எனக்  கூறிக்கொண்டே இந்தியையும் அதன் வழி சமசுகிருதத்தையும் மத்திய அரசு திணித்துக் கொண்டுள்ளது.  இந்தித் திணிப்பிற்கு எதிரான போர்த்தளபதியாக விளங்கிய  பேராசிரியர் இலக்குவனார், ”எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்; மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும். தெளிந்து செந்தமிழை அழிக்க வரும் இந்தி மொழிச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். உண்ணும் உணவினும் உரைக்கும் மொழியைப் பெறலே மானமுள்ள மக்களுக்குரிய மாண்புறு கடமையாகும்”  என நம் கடமையை உணர்த்திச் சென்றுள்ளார். இந்தித் திணிப்பு மட்டுமல்ல! தனித்து வாழக்கூடிய நாம் பல வகைகளில பிற மொழிகளின் அடிமையாக விளங்குகிறோம். அவற்றிற்கு எதிராகவும் பேராசிரியர் இலக்குவனார் தொடர்ந்து போராடி உள்ளார். ”தேசியமொழி இந்தியாம், ஆட்சிமொழி ஆங்கிலமாம், சமயமொழி ஆரியமாம், பாட்டுமொழி தெலுங்காம், வட்டாரமொழி தமிழாம். என்னே விந்தை! தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும். தமிழர்க்குத் தேசிய மொழியும், கல்வி மொழியும், தொடர்பு மொழியும், பாட்டு மொழியும் தமிழாகவே இருத்தல் வேண்டும்” எனப் பிறமொழிகளில் இருந்து தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும்  காக்கப் பேராசிரியர் இலக்குவனார் நமக்குக் காட்டிய காப்பு நெறியைப்  பின்பற்றினால் தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின்  முப்பத்தொன்பதாம் நினைவு நாளில்  வெளியானது. நட்பு :  03/09/2012 )

வியாழன், 9 நவம்பர், 2017

நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே! – இலக்குவனார் திருவள்ளுவன்

பெட்டகம்

நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே!

இந்தியா என்பது இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ இயற்கையாய் அமைந்த நாடன்று. அயலவர் ஆட்சி நலனுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை அரசமைப்பு. இந்த அமைப்பு அனைத்துத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகச் செயல்பட்டால் வலிவும் பொலிவும் மிக்கதாக விளங்கும். மாறாக ஒரே மொழி ஒரே நாடு என்ற அடிப்படையில் இன அழிப்பு முயற்சியில் ஈடுபட்டால் சிதைவுண்டு போகும்
  ஆனால் இந்தியாவிற்கு அமைந்த நலக்கேடு என்னவெனில் மத்திய அரசு எப்பொழுதும் நாட்டு ஒற்றுமையைப் பேசிக் கொண்டே ஆரிய அரசாகச் செயல்படுவதுதான். அதன் இந்தித் திணிப்பு முயற்சிகளும் ஆரிய ஆட்சிக்குப் படிக்கட்டுகளாகத்தான் கருதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
  இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் தென்னாட்டவரும் குறிப்பாகத் தமிழ் நாட்டவரும் பெரிதும் உயிரும் உடைமையும் ஆட்சியும் மாட்சியும் இழந்து பாடுபட்டு உள்ளனர்; இருப்பினும் இந்திய வரலாறு என்றாலேயே வடவர் வரலாறு என்னும் போக்கிலும் இந்திய நிலப்பகுதி மொழி எனில் சமசுகிருத மேலாண்மைக்கு வழி விடுவதற்கான இந்தி என்றும் நடந்து கொள்வதுதான் காங்கிரசு எனப்படும் பேராயக் கட்சியின் மாறாக் கொள்கையாக உள்ளது. எனவேதான் விடுதலைக்கு முன்பிருந்தே சமசுகிருதத்தையும் இந்தியையும் திணித்து வந்தது; குடியரசாக நம் நாட்டு அரசியலமைப்பு அமைந்த பின்னும்   செயற்கையான ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தியைத் திணித்தது. இந்தி ஒன்றுதான் நாட்டு மக்களின் தேசிய மொழி என்னும் தவறான பரப்புரையையும் எக்காலத்தும் மக்களின் பேச்சு மொழியாக இல்லாத சமசுகிருதத்திற்கு மிக மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது.
  அவற்றின் ஒரு பகுதிதான் இந்தியைத் திணிக்க வில்லை எனக் கூறிக் கொண்டே இந்தியைத் திணித்து வருவது. இந்தித் திணிப்பால் 1967 இல் தமிழ் நாட்டில் ஆட்சியை இழந்த பின்னும் தன் தவறான பரப்புரையால்  தேசிய மொழி பற்றிய தவறான விதைகளை விதைத்துவிட்ட செருக்கில் நவதோயா பள்ளிகள் மூலம்  தமிழை அழிக்க மூக்கை நீட்டிப் பார்க்கிறது.
  தமிழக அரசின் மொழிக் கொள்கை இரு மொழித் திட்டம் எனத் திட்டவட்டமாக அறிவித்து நவோதயா பள்ளிகளுக்குத் தமிழ் நாட்டில் இடம் இல்லாமல் செய்து விட்டதைக் காங்கிரசால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. மத்தியில் தற்போதைய ஆட்சி அமைந்தது முதல் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் தொடங்க வலியுறுத்தி வருகிறது. மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளிப்படையாகவும் பன்முறை பேசி உள்ளார். இருந்தும் தமிழ்நாட்டின் அரசு அசையாமையால் தேர்தல் சூழலைப் பயன்படுத்தித் தன் முயற்சியில் வெற்றி பெறலாம் எனக் கருதிக் காங்கிரசுச் சட்ட மன்ற உறுப்பினர்கள் மூலம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறது.
  நவோதயா பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கலாம்; இந்தித் திணிப்பு இல்லை; பள்ளி ஒன்றிற்கு இருபது கோடி உரூபாய் வீதம் மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி நடத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிற்றூர்ப் பகுதியினரும் மிகுதியாய்ப் பயன் பெறுவர்; இவைதான் இந்திக்கு வால்பிடிப்போர் கூற்று. சட்டமன்றத்திலேயே பொய்யான தகவல்களைக் கூறும் இவர்களை என்னவென்று சொல்வது?
  நவோதயா பள்ளி என்பது 6 ஆம் வகுப்பில் இருந்து உள்ள மேனிலைப்பள்ளியாகும். எடுத்த உடன் ஆங்கில வழியையும் இந்தி வழியையும் திணிக்க வேண்டாம் என்பதற்காக 6 ஆம் வகுப்பிலும் 7 ஆம் வகுப்பிலும் மாநில மொழிகளில் பாடம் கற்பிக்கப்படலாம். ஆனால் மெல்ல மெல்ல மாணவர்களை அயல்மொழிக் கல்விக்கு ஆயத்தப்படுத்தி 7 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்விற்குப் பின் ஆங்கில வழிக்கு  மாறும் வகையில்தான் கல்வித் திட்டம் உள்ளது. 9 ஆம் வகுப்பில் இருந்து அறிவியல் பாடமும் கணக்குப் பாடமும்  ஆங்கிலத்திலும் சமூக அறிவியல் பாடம் இந்தியிலும் இருக்கும்.
  பின்னர் ஆங்கில வழியாகவும் இந்தி வழியாகவும் படிக்க இருப்பதால் முதலில் இருந்தே அந்த மொழிகளில் படிக்கத்தான் யாவரும் விரும்புவர். இருப்பினும் முதலில் கூறிய பின்பு தொடக்க ஆண்டுகளில் தாய்மொழி வாயிலாகவும் சொல்லித் தருகின்றனர். எனவே இதனைத் தாய்மொழி வாயிலான கல்வி என்றோ தமிழ்நாட்டில் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படும் என்றோ கூறுவது தவறாகும்.
  தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்கினால் வடக்கே மும்மொழித் திட்டத்தின் கீழ்த் தமிழ் கற்பிக்கப்படும் வாய்ப்பு கிட்டும் என்றும் அடுத்த பொய் மூட்டை அவிழ்த்துவிடப்படுகிறது.
  1985 இல் நவோதயா பள்ளி அறிமுகப்படுத்துவதற்கு முன்பிருந்தே மும்மொழித்திட்டம் உள்ளது. ஆனால் இது வரை எந்த ஓர் ஆண்டிலும் மும்மொழித்திட்டத்தின் கீழ் வட நாட்டில்  தமிழோ பிற தென்னிந்திய மொழிகளோ கற்பிக்கப்படவில்லை என்பதை நிதிநிலை அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.  நவோதயா பள்ளியை இங்குத் தொடங்கினால் வடக்கே தமிழ் கற்பிக்கப்படும் எனக் கூறும் மேதையர் புதுச்சேரியில் நவோதயா பள்ளிகள் இருக்கின்றனவே! ஏன் அம்மாநில மக்கள் மொழியான தமிழ் வடக்கே கற்பிக்கப்படவில்லை என்பதை விளக்குவார்களா?
  புதுச்சேரி நவோதயா (வித்யாலயா) பள்ளியின் பாடத்திட்டங்களைப் பார்த்தால் தமிழுக்கான பாட நேரம் குறைவாகத்தான் உள்ளது. அது மட்டுமல்ல! இந்தி முதலான பிற துறைகளின் ஆசிரியர்கள் முழு நேர ஆசிரியர்களாக உள்ளனர். ஆனால் தமிழுக்கு அவ்வாறு இல்லை.
  இந்தியா முழுவதும் 600 நவோதயா பள்ளிகள் உள்ளன. எவற்றிலுமே (இந்தி நீங்கலான) மாநிலத்தாய்மொழி முதன்மையாக  இல்லை. எனவே, பாட மொழி பற்றிய கருத்தையும் தவறாகவே பரப்பி வருகின்றனர்.
 கல்வித்துறை என்பது மாநிலப் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் பொதுப்பட்டியலுக்கு மாற்றியதால்தான் இந்த அவலங்கள் தொடருகின்றன. நவோதயாவிற்கு வால் பிடிக்காமல் பேராயக் கட்சியினர் அதற்கான நிதி ஒதுக்கீட்டைத் தமிழ் நாட்டில் தமிழ் வழிப் பள்ளிகளுக்குப் பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு ஓர் அரசு புத்தியல் பள்ளி என மாவட்டந்தோறும் பள்ளிகள் தொடங்க மத்திய அரசின் பொருளுதவி கிடைத்தால் தமிழ்வழிக்கல்வி வளம் பெறும்; அறிவியல் அறிஞர்களும் பிற துறை அறிஞர்களும் தமிழ் நாட்டில் பெருகுவர்.
  அரசு மருத்துவமனைக்குத் தங்கள் தலைவர் பெயர் வைத்ததாலேயே அரசு இதற்கும் உடன்படும் எனப் பேராயக் கட்சியினர் தப்புக் கணக்கு போடக் கூடாது. எனவே, நவோதயா வித்யாலயா நிதியுதவியைத் தமிழ்நாட்டின்  தமிழ்வழி அரசு பள்ளிகளுக்குப் பெற்றுத்தராமல் இந்திப்பள்ளியை இறக்குமதி செய்யச்சதி செய்தால் அடியோடு காணாமல் போக நேரிடும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
 பேராயக்கட்சியானது தமிழர்கள் இளிச்சவாயர்கள், மானங்கெட்டவர்கள், கொத்தடிமைகள் என எண்ணிக்கொண்டு தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே நவோதயா பள்ளியைத் தமிழகத்தில் திறப்பதைக் கொள்கையாக அறிவித்துள்ளது. இந்த ஒரு காரணத்திற்காகவாவது நாம் அக்கட்சியை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். நவோதயா பள்ளிக்கான நிதி நல்கைகளைத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்க வகை செய்ய வேண்டும். மாவட்டத்திற்குக் குறைந்தது ஒரு தமிழ்வழிக் கல்வியான  கல்விக்கூடத்தையாவது அனைத்து வசதிகளுடனும் கட்டணமின்றியும் சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும்.
தமிழ்வழிக் கல்வி நமது பிறப்புரிமை!
பிற மொழித் திணிப்பு எதிர்ப்பு நமது காப்புரிமை!
– இலக்குவனார் திருவள்ளுவன்
  • நட்பு, மீனகம் இணையத்தளங்கள், பங்குனி 2042 / ஏப்பிரல் 2011