வி.உருத்திரகுமாரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வி.உருத்திரகுமாரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 மே, 2019

நினைவேந்தல் நாளில் கறுப்புப்பட்டி அணிவோம்! மரம் நாட்டுவோம்! –வி.உருத்திரகுமாரன்

அகரமுதல

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! ஆளுக்கொரு மரம் நாட்டுவோம்! – தலைமையர் வி.உருத்திரகுமாரன்
பெரும் இனவழிப்பொன்றின் ஊடாகத் தமிழர் தேசத்தை வன் கவர்வு செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டுப்பெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசியத் துக்க நாளில், இரண்டு செயற்பாடுகளைத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு  நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ் மக்களின் விடுதலைர உணர்வை நீர்த்துப் போகச் செய்யச் சிங்களப்பேரினவாதம் பகீரத முயற்சி எடுத்த போதும் அவை வெற்றியடையவில்லை.  தமிழ் மக்கள் தமது விடுதலை உணர்வை முழுமையாக வெளிப்படுத்தப் போதிய அரசியல் வெளி தமிழர் தாயகத்தில் இல்லாத போதும் தமக்குக் கிடைக்கக்கூடிய அனைத்துவகை வாய்ப்புகளையும்; பயன்படுத்தித் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது உரிமைக்குரலை வெளிப்படுத்திக் கொண்டவாறுதான் உள்ளனர்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தைத் தமிழ் மக்கள் ஏற்கெனவே இருக்கும் அனைத்துலக அரங்குகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வரங்குகள் பலவற்றில் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் நாடுகளின் வசமே இருப்பதால், அரசற்ற தமிழ்மக்கள் அங்கு நீதியினைப் பெறுவது இலகுவானதொரு நிகழ்வாக இருக்கப்போவதில்லை என்பது புரிகின்றது. எனவே நீதிக்கான எமது போராட்டத்திற்காக புதிய போர்க்களங்களை உருவாக்குவது இன்றியமையாததாகும்.
 மாறிவரும் உலகச் சட்ட நடைமுறை அதற்கான வாய்ப்புகளைத் தருகின்றது. இப்போது பன்னாட்டுச் சட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டுவரும் ‘உண்மைகளை அறியும்’ உரிமையின் அடிப்படையிலும் (right to the truth), ‘தெரிந்து கொள்வதற்கான உரிமையின்’ அடிப்படையிலும் (right to know) பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினை நிலைநாட்டும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் (Victim Driven International Justice (VDIJ )  என்னும் நீதிக்கான முன்முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இம் முன்முயற்சி நாம் புதிதாகத் திறக்கவுள்ள நீதிக்கான போர்க்களங்களில்   சிறப்பியல்பாகும்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தந்த ஆழ்ந்த சோகம் நெஞ்சக்கூடெங்கும் நிரம்பியிருக்க, தமிழின அழிப்பின் 10ஆவது ஆண்டினை உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்கள் நினைவேந்தும் நாட்களை இலங்கை அரசு அனுமதிக்காதுதடுக்கக்கூடிய நிலைகளும் தற்போது உருவாகியிருக்கின்றன. இலங்கைத்தீவில் நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்விளைவாகப் பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படலாம். எத்தகைய தடைகள் வந்தாலும் ஈழத்தமிழ் தாயகத்திலும் உலகில் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகள் மக்களால் நினைவுகூரப்பட்டே ஆகும்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பையும் தமிழர் துயரத்தின் வெளிப்பாடாகப் பறையறிவிக்கப்பட்ட தமிழீழத் தேசியத் துக்க நாளையும் அடையாளப்படுத்தும் வகையில் இரண்டு செயல்களை உலகில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் செய்ய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் நாம் தோழமையுடன் வேண்டுகிறோம்.
  1. மே 18 – தமிழீழத் தேசிய துக்க நாளன்று, ஈழத்தமிழர் தாயகம், தமிழகம், மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தமது கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பையும் தமிழர் துயரத்தினையும் வெளிப்படுத்த வேண்டும்.

  1. முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையிலும், உலகச் சுற்றுச் சூழலை மேம்படுத்த உதவும் வகையிலும் நாம் ஆளுக்கொரு மரத்தை இக் காலப்பகுதியில் நாட்ட வேண்டும்.  இதனைத் தமிழ் மக்கள் தாம் வாழும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் நினைவுக்காலத்திலும் மேற்கொள்ள வேண்டும். நாம் நாட்டும் ஒவ்வொரு மரக்கன்றின் ஊடாகவும் நாம் தமிழின அழிப்பில் மாண்டுபோன உறவுகளை நினைவு கூர வேண்டும்
இவ்வாறு தலைமையர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை

புதன், 21 நவம்பர், 2018

மாவீரர் நாள், அமெரிக்கா

அகரமுதல

 கார்த்திகை 11, 2049 / செவ்வாய்/

27.11.2018 மாலை 6.05

80-51, 261ஆம் தெரு, கிளென் ஓக்கு,

புதிய யார்க்கு – என்.ஒய்.11004

மாவீரர் நாள்

  எழுச்சி உரை:  பெ.மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

 நினைவுரை: வி.உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

தொடர்பிற்கு:   917 8800 320

வியாழன், 13 செப்டம்பர், 2018

தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : வி.உருத்திரகுமாரன் !

அகரமுதல

விடுதலைப்புலிகளின் தமிழீழக் கொள்கை

எங்கும் தடை செய்யப்படவில்லை :

தலைமையர் வி.உருத்திரகுமாரன் !

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் (United Nations) ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை.
 ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பெருவிருப்பாக அமைகின்ற தமிழீழத்தைக் கொள்கையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அக்கொள்கைக்காக எங்கும் தடை செய்யப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு தனது அரசென்னும் தகுதியின் மூலம் அனைத்துலகப் பரப்பில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நெறிபிறழ்ந்த பயரங்கவாதச் செயலாகப் படம்பிடித்துக் காட்ட முயன்றது எனச் சுட்டிக்காட்டியுள்ள தலைமையர் வி.உருத்திரகுமாரன் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் குறிக்கோளைக் காரணம் காட்டி அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் ‘பயங்கரவாத’ இயக்கமாக என்றுமே பறையறிவிக்கப்படவில்லை. அமெரிக்க உச்சநீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கொள்கைகளைப் பரப்புரை செய்யவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியினை ஏற்றவும் தனியருக்கு உரிமை உள்ளதெனத் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளது. அமெரிக்கக் குடிமகன் எவராயினும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ‘பொருண்மிய’ உதவி செய்வது மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபை 693 தனியாள்களையும் 400 இயக்கங்களையும் தடை செய்துள்ள பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகளோ அன்றி ஒரு தமிழரோ உள்ளடங்கவில்லை.
இதுபோலவே சுவிசு கூட்டரசுக் குற்றத் தீர்ப்பாயம் கடந்த யூனில் வழங்கிய தீர்ப்பும் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்ற அமைப்பு இல்லை’ என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம்:
என்ன குற்றம் செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று இலங்கை அரசு மார்தட்டித் திரிவதையும், போர் முடிவுற்றுக் கிட்டத்தட்டப் பத்தாண்டு ஆவதையும், தமிழீழ விடுதலைப் புலிகள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பே தங்கள் ஆயுதங்களை மவுனித்து விட்டோமென்று அறிவித்து விட்டதையும், இலங்கைத்தீவில் தமிழர்கள் மீதான கட்டமைப்பியல் இனவழிப்பு தொடர்வதையும் கருத்தில் கொள்வோமானால், மலேசியாவில் பினாங்கு துணை முதலமைச்சராக இருக்கும் பேராசிரியர் இராமசாமி குறித்தும் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளோடு அவரது உறவு குறித்தும் எழுந்துள்ள வாதம் நகைப்புக்கிடமானது மட்டுமன்று, அறநோக்கில் சீற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.
 பல பத்தாண்டுகளாகவே, தமிழர்களும், பல்வகைத் தமிழ் அமைப்புகளும் தமிழர்களை ஒரு மக்களினமாகவும் தேசமாகவும் அடையாளப்படுத்திக் கொள்ள எடுத்த ஒவ்வொரு முயற்சியும் ‘பயங்கரவாதம்’ என்றே முத்திரையிடப் பெற்றுள்ளது. ஒரு மக்களினத்தையே மொத்தமாகக் கொடியவர்களாய்க் காட்டும் இந்த அடாவடிப் போக்கு இன்று வரை தொடர்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டு போர் முடிந்ததோடு, இந்தப் பழிசுமத்தும் பரப்புரைகளின் உண்மைத் தன்மை இன்னுங்கூட வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
2009 மே 18க்குப் பின் இலங்கைத்தீவில் வன்முறைச் செயல் புரிந்து வருவது அந்நாட்டு அரசு மட்டுமே. இருப்பினும் தமிழர்கள் மீதுதான் இந்த வன்முறை முத்திரை தொடர்ந்து குத்தப்பட்டு அவர்கள் இவ்வன்முறைப் பழிக்கு இரையாகி வருகிறார்கள். புகழ்பெற்ற மலேசியத் தமிழ் அறிஞரும் அரசியல் தலைவருமான பேராசிரியர் பி. இராமசாமி இவ்வகையில் மிக அண்மையில் இப்பழிக்கு ஆளாகியுள்ளவராகிறார். இலங்கையில் 2002-2006 போர்நிறுத்தக் காலத்தில் அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் பங்காற்றியவர் என்பதற்காக அவர் மீது இவ்வாறு பழி சுமத்தப்பட்டுள்ளது. போர் முடிந்து விட்ட நிலையில் இந்தப் பழிதூற்றலின் அரசியல் நோக்கம் இப்போது தெட்டத் தெளிவாகி விட்டது.
இலங்கைத்தீவில் 1983-2009 காலத்தில் நிகழ்ந்த தேசவிடுதலைப் போரின் போது, போர்த் தரப்புகளில் ஒன்றாகிய இலங்கை அரசு தனது அரசென்னும் தகுதியின் மூலம் மற்றைய நாடுகளின் மேல்தட்டுப் பிரிவையும் பன்னாட்டு ஊடகங்களையும் கைவசப் படுத்தி, அமெரிக்காவின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ அறிவிப்பைத் தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்தித் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நெறிபிறழ்ந்த பயரங்கவாதச் செயலாகப் படம்பிடித்துக் காட்ட முயன்றது.
இலங்கையில் ஐநா நடவடிக்கைபற்றிய ஐநா பொதுச் செயலரின் உள்ளக ஆய்வறிக்கை (பெற்றி அறிக்கை) தமிழ்த் தேசியத்தின் முன்னணி இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் கும்பலாக பன்னாட்டு அரங்கினர் கருதச் செய்வதற்கு அரசு எடுத்த முயற்சிகள்பற்றிக் குறிப்பிட்டது. தமிழர்களின் இராணுவப் படையினரைப் பயங்கரவாதிகளாக சித்திரிப்பதில் அரசு வெற்றி பெற்றுப் பன்னாட்டு ஒழுங்கமைப்பு முடங்கிப் போனதன் விளைவாகத்தான் போரின் கடைசிச் சில மாதங்களில் 70,000 பேர், பெரும்பாலும் தமிழ்ப் பொதுமக்கள், உயிரிழந்ததாக நம்பத்தக்க மதிப்பீடுகள் கூறுவதை பெற்றி அறிக்கை எடுத்துக் காட்டிற்று. அரசு தந்துள்ள விவரங்களின் படி அந்த மாதங்களில் சிறிலங்காப் படை நடவடிக்கையைத் தொடர்ந்து 1,47,000 பேரினது உயிர்கள் பற்றிக் கணக்கெதுவும் தரப்படவில்லை என மன்னார் கத்தோலிக்கப் பேராயர் மறைதிரு இராயப்பு சோசப்பு குறிப்பிட்டிருந்தார்.
இன்றுங்கூட நெறிசார் அரசியல் உரையாடலை ஒடுக்கவும், தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கும் பொது ஊழியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இதழாளர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களின்; மீது மாசு கற்பிக்கவும் இப்பயங்கரவாத முத்திரை பயன்படுத்தப்படுகிறது. இவ்வகையாக புதிய வடிவங்கள் கொண்ட இரண்டகப்பொய்ச்சாட்டு(மெக்கார்த்திசம்-McCarthyism)நடத்தைகள் உடனேயே முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டியவை.
ஈழத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தம் அரசியல் வேணவாக்களின் உருவகக் குறியீடாகப் பார்க்கிறார்கள். தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் தலைநகரங்களில் ஆண்டுதோறும் மாவீரர் நாள் நிகழ்ச்சிகளில் பத்தாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது தமிழீழ மக்கள் தொடர்ந்து விடுதலைப் புலிகளை மதிப்பதற்கும் சார்ந்திருப்பதற்கும் அவர்கள் மீது பற்றுறுதி வைத்திருப்பதற்கும் தெளிவான சான்று. ஈழத் தமிழர்தம் இதயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய நினைவை மழுங்கடிக்கச் செய்யும் முயற்சியில் இலங்கை அரசு படுதோல்வி அடைந்து விட்டதற்கும் இதுவே சான்று.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகெங்குமுள்ள தமிழர்கள் அநீதி எங்கிருந்து வரினும் அதை எதிர்ப்பதற்கான மானவுணர்ச்சியையும் அறத் துணிவையும் விடுதலைப் புலிகள் தந்த கொடையென்றே மதிக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்தியல், அதாவது சுயநிர்ணய உரிமையைக் கொண்டு சுதந்திர அரசமைத்தல் என்பது ஐநா அரசியல் குடியியல் உரிமைகள் உடன்படிக்கையிலும் சாசனத்திலும், பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கையிலும் சாசனத்திலும், பன்னாட்டு; மரபுவழிச் சட்டமாக மதிக்கப்படும் ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவை 2625 தீர்மானத்திலும் வலுவாய் வேர் கொண்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் குறிக்கோளைக் காரணம் காட்டி அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் ‘பயங்கரவாத’ இயக்கமாக என்றுமே அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க உச்சநீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கொள்கைகளைப் பரப்புரை செய்யவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியினை ஏற்றவும் தனியருக்கு உரிமை உள்ளதெனத் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளது. அமெரிக்கக் குடிமகன் எவராயினும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ‘பொருண்மிய’ உதவி செய்வது மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமையும் ஒன்று கூடும் உரிமையும் அமெரிக்காவில் மிகக் கவனமாகவே பேணப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபை 693 தனியாள்கைளயும்  400 இயக்கங்களையும் தடை செய்துள்ள பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகளோ ஒரு தமிழரோ உள்ளடங்கவில்லை.
சுவிசு கூட்டரசுக் குற்றத் தீர்ப்பாயம் பரபரப்பானதும் முதன்மையானதுமாகிய ஒரு வழக்கில் நீண்ட விசாரணையின் முடிவில் 2018 சூன் 14ஆம் நாள் வழங்கிய தீர்ப்பை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்ற அமைப்பு இல்லை’ என்று தீர்ப்பாயம் உறுதி செய்தது. 2002-2006 போர்நிறுத்தக் காலத்தில் இலங்கை அரசு விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு நெறிசார் இயக்கமாகவே கருதிச் செயல்பட்டது. அயலுலகின் ஏனைய உறுப்பு நாடுகளும், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, சப்பான் ஆகிய நாடுகளும் அப்படித்தான் செய்தன.
மனித உரிமைகளைப் போற்றிக் காக்கும் உலகை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடாற்ற வேண்டிய நேரம் இதுவே.
குற்றங்கள் செய்தபோது கேள்வி முறையில்லாக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! ஆட்கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்! அறிவு வெல்க! அறத்தின் கட்டளைகள் வெல்க! சட்டத்தின் ஆட்சி வெல்க! இவ்வாறு தலைமையர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்பிற்கு: pmo@tgte.org

நாதம் ஊடகச்சேவை