முதல்வர் செயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல்வர் செயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 செப்டம்பர், 2013

இலங்கைக்குப் போர்க் கப்பல் : ஒப்பந்தத்தை முறி - செயலலிதா மடல்



இலங்கைக்கு ப் போர் க் கப்பல் வழங்கும் ஒப்பந்தத்தை முறிக்க வேண்டும்: த.அமைச்சருக்கு  முதல்வர் செயலலிதா மடல்
 
சென்னை:"இலங்கைக்கு ப் போர் க் கப்பல்கள் வழங்க, ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:இந்தியா உடனான நட்புறவுக்கு, பாதிப்பு ஏற்படும் வகையில், இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து, நான் பல முறை, உங்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபோது, சமுதாய படுகொலை, போர் குற்றங்கள் நடந்தன. போர் முடிவுக்கு வந்த பிறகும், சிறுபான்மை சமூகமாக உள்ள, தமிழர்கள் மீது, தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.சொந்த நாட்டிலே, அவர்கள், இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். எனவே, "இலங்கையை நட்பு நாடு என, இந்தியா கூறிக் கொள்வதை, நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, தமிழக சட்டசபையில், வரலாற்று சிறப்பு மிக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு, தமிழகத்தில், பயிற்சி அளிக்க, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும், என, உலக அளவிலான நிர்ப்பந்தத்தை, இலங்கை அரசு கண்டு கொள்ளவில்லை.இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு, அரசியல் அதிகாரம் அளிக்கும், 13வது சட்ட திருத்தத்தை நீர்த்து போகச் செய்துள்ளது. மேலும், இலங்கை அரசு, தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. கடலில் மீன் பிடிக்க சென்ற, 97 தமிழக மீனவர்கள், இலங்கை சிறையில் வாடுகின்றனர். தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில், இந்தியா, இரண்டு போர் கப்பல்களை, இலங்கைக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக, பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு, இலங்கைக்கு போர் கப்பல் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இவற்றை வழங்கினால், அதை இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தும்.எனவே, போர் கப்பல்கள் வழங்க, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தமாக இருந்தாலும், தற்போதுள்ள சூழ்நிலையில், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவியும் வழங்கக் கூடாது.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

புதன், 20 மார்ச், 2013

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் செயலலிதா தலைமையில் போராட்டம்: தா. பாண்டியன் கோரிக்கை

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் செயலலிதா தலைமையில் போராட்டம்: தா. பாண்டியன் கோரிக்கை


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் போராட்டம் நடைபெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுக் கூட்டம் கடந்த 15, 16, 17 தேதிகளில் தில்லியில் நடைபெற்றது. அதில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப் படுகொலைகள் குறித்து சர்வதேச சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் உள்ள அகதி முகாம்களை மூடிவிட்டு அங்குள்ள தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும், அவர்களின் மறுவாழ்வுக்கான நலத்திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஈழத் தமிழர்களுக்காக அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாது போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருவது வரவேற்கத்தக்கது. சமுதாய அக்கறையுடன் போராடும் உணர்வு மாணவர்களிடம் இன்னமும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர்கள் கூட்டமைப்பு புதன்கிழமை (மார்ச் 20) அழைப்பு விடுத்துள்ள தொடர் முழக்கப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமல் மாணவர்கள் அமைதியாகப் போராட வேண்டும். இல்லையெனில் போராட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடும்.
திமுகவின் முடிவு ஆறுதல் அளிக்கிறது: மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது என்று திமுக எடுத்துள்ள முடிவு ஆறுதல் அளிக்கிறது. காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்துக்கு இது வலுசேர்க்கும் என்பதால் இதனை வரவேற்கிறோம். ஒருவேளை கருணாநிதியின் இந்த முடிவு நாடகமாக இருந்தால் அது விரைவில் அம்பலமாகிவிடும்.
தமிழகத்துக்கு சுற்றுலா வரும் இலங்கை நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. இது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்திய அரசு வலுவான திருத்தங்களை கொண்டு வந்தால் அதனை ஆதரிக்க பெரும்பான்மையான நாடுகள் தயாராக இருக்கின்றன.
இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நாடான இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக இருப்பதால்தான் பல நாடுகள் அந்நாட்டுக்கு ஆதரவளிக்கின்றன. எனவே, மத்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வலுவான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்றார் தா. பாண்டியன்.
பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

முதல்வர் செயலலிதா பொங்கல் வாழ்த்து

முதல்வர் செயலலிதா பொங்கல் வாழ்த்து



தமிழக முதல்வர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்...
உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும்  மகிழ்ச்சி அடைகிறேன்.
சாதி வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை  பொங்கல் பண்டிகை ஆகும்.
சுழன்றும்ஏர்ப்  பின்னது  உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
- எனும் வள்ளுவர் குறளிற்கேற்ப, உலகில் மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் 
உழவுத் தொழிலே முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது.  இத்தகைய பெருமைக்குரிய உழவர்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் வருமானத்தை பெருக்கிடவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் பல்வேறு சீரிய திட்டங்களை உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று கொண்டாடி மகிழ்ந்திட தமிழக அரசு சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக மக்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.
இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்!
இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்!
என்று மனமார வாழ்த்தி, என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
- என்று வாழ்த்துக் கூறியுள்ளார்.