சொல்கிறார்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்கிறார்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஜூன், 2013

70 அகவை இளைஞர்!

70  அகவை  இளைஞர்!

எம்.ஜி.ஆர்., காமராஜர், என்.டி.ஆர்., என, மூன்று முதல்வர்களிடம் விருது பெற்ற, 70 வயதிலும் விளையாடி வரும், மாரிமுத்து: எனக்கு, 70 வயது ஆனாலும், 20 வயது இளைஞனை ப் போல் விளையாட்டுகளில் வெற்றி பெற்று, பரிசு மற்றும் பதக்கங்கள் வாங்கி வருகிறேன். சீர்காழியில், பள்ளியில் படிக்கும் போதே, வன்தட்டு எறிவதில், நன்கு பயிற்சி பெற்றேன். 18 வயதிலேயே, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று, வன்தட்டு எறிதலில் முதலிடம் பிடித்து, என் வெற்றியை துவக்கினேன். தனியார் நிறுவனத்தில், 1964ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த போது, விளையாட்டு மீதான என் ஆர்வத்தை பார்த்து, "ஸ்பான்சர்ஷிப்' வழங்கியதால், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்றேன். தமிழகத்தில், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஆந்திராவில், என்.டி.ஆர்., என, மூன்று முதல்வர்களின் கையால், முதல் பரிசுகளை பெற்றது பெருமையாக உள்ளது. இதில், எம்.ஜி.ஆர்., கையால் பரிசு பெற்ற புகைப்படத்தை, இன்னும் நினைவாக வைத்துள்ளேன். "ஆசிய மூத்தோர் தடகள போட்டி'களில் இந்தியா சார்பில் பங்கேற்று, குண்டு எறிதலில் மலேசியாவில் முதலிடமும், சிங்கப்பூரில் இரண்டாமிடமும் பெற்று சாதித்துள்ளேன். 2003ல் நடந்த விபத்தால், இடது தொடை முற்றிலும் முறிந்து, நான்கு ஆண்டுகளாக நடக்கக் கூட முடியாமல் இருந்தேன். கால்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என, மருத்துவர்கள் சொன்னாலும், விளையாட்டின் மீது எனக்கிருந்த ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல், உடலை சற்று பின்னுக்கு தள்ளி, குண்டு, வன்தட்டு எறிவதில் பயிற்சி பெற்று, சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த, மூத்தோருக்கான தேசிய போட்டியில், இரண்டு பதக்கங்கள் பெற்று சாதித்தது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் நடக்க இருக்கும், ஆசிய மூத் தோர் தடகள போட்டியில், மீண்டும் பங்கேற்க, தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன். ஏனெனில், விளையாட்டு வீரனுக்கு, சாகும் வரை ஓய்வு என்பதே இல்லை.

திங்கள், 17 ஜூன், 2013

கோடியிலும் கிடைக்காத மன நிறைவு

கோடியிலும் கிடைக்காத மன நிறைவு
மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரங்களில் சுற்றி திரிபவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும், வெங்கடேசு: நான், சென்னை திரு வான்மியூரைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கி றேன். கூரியர் டெலிவரி, மருத்துவமனையில் வார்டு பாய், கம்பி கட்டுவது என, நான் பார்க்காத வேலையே இல்லை. இருந்தாலும், கிடைக்கிற ஓய்வு நேரங்களில், நூலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது. புத்தர், நபிகள் நாயகம், வள்ளலார் போன்றோரின், புத்தகங்களை படித்த போது, அன்பு ஒன்றை மட்டுமே அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இக்கருத்துக்கள், என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்தன. 1995ல், திருவான்மியூர் பகுதியில், அரை நிர்வாணமாக, ஒரு வட மாநில பெண் சுற்றி திரிந்தார். மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, நான் முன்வந்து அவரை காப்பகத்தில் சேர்த்து வீடு திரும்பிய போது, எனக்கு ஏற்பட்ட மனதிருப்தி, கோடி ரூபாய் கிடைத்தாலும் வராது. அடுத்த உயிர்கள் மீது அன்பு செலுத்திய போது, உருவான அற்புதமான அனுபவத்தை அன்று தான், உணர்ந்தேன். இந்த அனுபவத்திற்கு பின், குழந்தைகள், பெண்கள், முதியோர் என, சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த, 1,000த்திற்கும் மேற்பட்டவர்களை, அரசு மற்றும் தனியார் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்த மொழியிலேயே பக்குவமாக பேசி, குளிப்பாட்டி, தலை முடியை வாரிவிட்டு, ஆடைகளை அணிவித்து, சாப்பிட வைத்த பின்னரே அங்கு சேர்ப்பேன். சேர்த்த பின்னும், அவர்கள் எப்படி இருக்கின்றனர் என, தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்றவர்களுடன் இணைந்து, ஒரு தொண்டு நிறுவனமாகவோ, தனியார் அமைப்பாகவோ இல்லாமல், தனியொரு மனிதனாகவே கடந்த, 18 ஆண்டுகளாக, இச்சேவையை செய்து வருகிறேன். இச்சேவையை செய்யும் போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும், என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.
தொடர்புக்கு: 93801 85561

திங்கள், 10 ஜூன், 2013

மனத்தில் உறுதி வேண்டும்!

மனத்தில் உறுதி வேண்டும்!
மின்சார விபத்தில் பலத்த காயமடைந்து, மறுநாளே பிளஸ் 2 தேர்வையும் எழுதி, 1,056 மதிப்பெண் பெற்ற, தனசேகரன்: நான், தேனி மாவட்டத்தின், முத்துதேவன்பட்டியைச் சேர்ந்தவன். மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தேன். தேர்வுக்கு முந்தைய நாளான, பிப்., 28ம் தேதி, வழக்கம் போல் நண்பர்களுடன் வயக்காட்டிற்கு சென்ற போது, வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராமல் மிதித்து விட்டேன். மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதால், பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைக்கு பின், கண் விழித்தேன். கை, கால்களில் தீக்காயம் அதிகம் இருந்ததால், தேர்வெழுத வேண்டாம் என, மருத்துவர்கள் கூறினர். விடிந்தால் தேர்வு, என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதுவரை படித்த பாடங்கள் எல்லாம் பாழாகி விட்டதே என, நான் மனமுடையவில்லை. கை, கால்களை அசைக்க முடியாமல், உடல் நிலை ஒத்துழைக்காத நேரத்திலும், எப்படியாவது தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்ற மன உறுதி மட்டும் இருந்தது. படுக்கையில் இருந்தபடியே பாடங்களை படித்தேன்.
மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம், என் நிலையை விளக்கி சிறப்பு அனுமதி பெற்றேன். எனக்காக தனி அறை ஒதுக்கி, நான் சொல்வதை எழுத, ஒரு ஆசிரியரை நியமித்தனர். அவர் உதவியால் தேர்வு எழுதினேன். அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை, நானே எழுதி, 1,056 மதிப்பெண்கள் எடுத்து, வெற்றி பெற்றேன்.
அப்பா மற்றும் தாத்தாவுக்கு உள்ள, இதய நோயை குணமாக்க, மருத்துவர் ஆவதே என் நீண்ட நாள் கனவு. இதற்காக, அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்தேன். எய்ம்ஸ் மற்றும் புனே ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வையும் எழுதி, அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், என் வெற்றிக்கு வழிகாட்டும் என, மன உறுதியுடன் இருக்கிறேன்.

ஞாயிறு, 2 ஜூன், 2013

வேளாண் கல்விக்கு த் தேவைப்பாடு!

வேளாண் கல்விக்கு த்  தேவைப்பாடு!
மாணவர்களுக்கு, விவசாயம் தொடர்பான படிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி: ஐ.டி., போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில் மட்டுமே, கவனம் செலுத்தி வந்த இளைய தலைமுறையினருக்கு, தமிழகத்தின் பாரம்பரிய தொழிலான விவசாயத்தின் மீதும் ஆர்வம் ஏற்பட்டு, அது தொடர்பான படிப்புகளில், அதிகம் சேருகின்றனர்.தனியார் விவசாயக் கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகளிலும், ஒரே மாதிரியான பாடத் திட்டங்கள் மற்றும் வகுப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. எனவே, தனியார் கல்லூரிகளில் படித்தாலும், பல்கலைக்கழக முத்திரையோடு தான், மாணவர்கள் வெளியே செல்வர். இதனால், ஒரே மாதிரியான தரமான கல்வியையே, அனைவரும் பயின்றவர்களாக இருப்பர்.விவசாயப் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள், "ஆன்-லைனில்' வெளியிடப்பட்டு உள்ளதால், மாணவர்கள் விண்ணப்பங்களுக்காக எங்கும் அலைய வேண்டியதில்லை. விவசாயத்தில், யு.ஜி., படிக்க விரும்பும், எஸ்.டி., - எஸ்.சி., மாணவர்கள், 325 ரூபாயும், மற்ற மாணவர்கள், 625 ரூபாய்க்கான டி.டி.,யை, விண்ணப்பம் மற்றும் புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.இந்த ஆண்டில் மட்டும், வேளாண் படிப்பு படித்த, 450 இளைஞர்களுக்கு, அரசு பணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும், 58 விவசாயம் சார்ந்த நிறுவனங்களுக்குத் தேவையான பணியிடங்கள், காலியாக உள்ளதால், வேளாண் தொடர்பான படிப்புகளுக்கு நல்ல எதிர் காலம் உள்ளது.ஐரோப்பிய நாடுகளில், வேளாண் கல்வி பயின்றவர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. குறிப்பாக, வேளாண் படிப்பு முடித்து ஜெர்மன் மொழி தெரிந்திருந்தாலே, அந்நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலையில் சேரும் வாய்ப்பு உள்ளது.
விவசாயக் கல்விக்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, விரைவில் விவசாய பாலிடெக்னிக் தொடங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவர்களும், ஏராளமாக இங்கு வந்து வேளாண் கல்வி பயில்கின்றனர்.

சமவெளியில் கேரட் பயிரிடலாம்!
மலை பிரதேசத்தில் மட்டுமே வளரும் செடிகளை, சமவெளியான பெரம்பலூரிலும் அறுவடை செய்து சாதித்த, முகமது ஜின்னா: நான், பெரம்பலூர் மாவட்டத்தின், விசுவக்குடி பகுதியைச் சேர்ந்தவன். கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, குவைத் நாட்டில் பணியாற்றிய அனுபவம் உண்டு. வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள அந்நாட்டில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற, குளிர்ச்சியான மலைப் பிரதேசங்களில் மட்டுமே வளரும், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளையும், விவசாயம் செய்து அறுவடை செய்கின்றனர்.பாலைவன பூமியான குவைத் நாட்டிலேயே, மலை பிரதேச காய்கறிகளை வளர்க்கும் போது, சோளம், பருத்தி மட்டுமே விளையும், சமவெளி பூமியான, பெரம்பலூர் மாவட்டத்தில், ஏன் கேரட் போன்ற பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்ய முடியாது என்ற எண்ணம் தோன்றியது. சொந்த ஊர் திரும்பியதும், எசனை என்ற கிராமத்தில், சொந்தமாக இடம் வாங்கி, வேளாண் அதிகாரிகள் உதவியுடன், கேரட் பயிரிட முயற்சித்தேன்.மலை பிரதேசங்களுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தினாலே, கேரட் போன்ற செடிகளை பயிரிடலாம். எந்த வகை மண்ணாக இருந்தாலும், நீரை நன்கு உறிஞ்சும் தன்மையும், எளிதில் இறுகி, கட்டியாகாத தன்மையும் இருக்க வேண்டும். எந்நேரமும் நிலம் சிறிது ஈரத் தன்மையோடு இருக்க வேண்டுமே தவிர, நீர் தேங்கி இருக்க கூடாது. தேவையான குளிர்ச்சி மற்றும் சூரிய ஒளி கிடைக்கும் நவம்பர் மாதத்தில், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற, மலைபிரதேச காய்கறிகளை, நம் சமவெளி பகுதியிலேயே பயிரிடலாம்.கேரட்டை சரியான காலத்தில் பயிரிட்டு, தகுந்த முறையில் பராமரித்தாலும், செடிகளில் நோய் தாக்கியது. உடனே, வேளாண் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று, சாதாரண சமவெளி பகுதியிலேயே, கேரட் பயிரிட்டு அறுவடை செய்து சாதித்தேன்.
முதல் முறை என்பதால், 45 ஆயிரம் செலவிட்டு, 70 ஆயிரம் ரூபாய் பெற முடிந்தது. அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபட்டு, இன்னும் அதிக லாபம் பெற முயற்சிப்பேன்.
தொடர்புக்கு: 95855 13312.