பாசக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாசக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

2-ஆவது தேசிய அலுவல் மொழியாகத் தமிழ்

2-ஆவது தேசிய அலுவல் மொழியாகத்  தமிழ்

நாட்டின் இரண்டாவது தேசிய அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவை பாசக உறுப்பினர் தருண் விசய் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியது:
"நம் நாட்டில் சிறந்து விளங்கும் மொழிகளின் முக்கியத்துவத்தையும் அருமை பெருமைகளை அறியாமலும் சில வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இந்தியாவின் சிறந்த மொழிகளில் ஒன்றான தமிழின் பெருமையும் செல்வாக்கும் ஏழு கடல்களைத் தாண்டி காலத்துக்கும் அழியாமல் உள்ளது.
தமிழகத்தில் பிறந்த சுப்பிரமணிய பாரதி, தேசிய ஒற்றுமையையும் கலாசார மறுமலர்ச்சிக்கும் வித்திட்டார். ஆனால், இந்தியாவின் கலாசாரம், மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் மொழிக்கு உரிய மதிப்பையும் உயரிய நிலையையும் நாம் வழங்கத் தவறிவிட்டோம்.
எனவே, வட இந்திய பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியின் பெருமையை நாம் போதிக்கும் திட்டத்தைத் தொடங்க வேண்டும். குறிப்பாக, இந்தியா முழுவதும் தமிழைக் கற்க ஆர்வம் காட்டுவோருக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் தமிழ் கற்றோருக்கு பதவி உயர்வு, ஊதிய பலன்களை வழங்க வேண்டும்.
மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழ் அறிந்தவரை உயர் பதவியில் நியமிக்க வேண்டும். அதைவிட மேலாக, நாட்டின் இரண்டாவது அலுவல் மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுத்த வேண்டும்' என்றார் தருண் விஜய்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

பொதுநல மாநாட்டைப் புறக்கணிக்க பாசக ஆர்ப்பாட்டம்

நாடகமாயினும் பாராட்டுவோம்! கொலையாளிகள் நாட்டில் கொலையாளி தலைமையில் நடைபெறும் கூட்டாளி ஒத்துழைப்பிலான மாநாடு நிறுத்தப்படுவது நன்மை பயக்கும். ஆதலின், நாடகமாயினும் பாராட்டுவோம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

பொதுநல மாநாட்டை ப் புறக்கணிக்க வலியறுத்தி 24-இல் பாசக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் நவம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்குமாறு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான அந்நாட்டு அதிபர் ராஜபட்சவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது. அதோடு காமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை அதிபர் தலைமை வகிக்கும் வரை அதிலிருந்து இந்தியா விலகி இருக்க வேண்டும்.இதனையும் மீறி மாநாட்டில் பங்கேற்றால், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இந்தியா அங்கீகரித்ததாகிவிடும். எனவே, மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி  ஆகஸ்ட் 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
"மெட்ராஸ் கபே' படத்தை திரையிடக் கூடாது:இலங்கைத் தமிழர்களின் துயரங்களை அறியாமல், அவர்களை தீவிரவாதிகளைப்போல சித்தரித்து மெட்ராஸ் கபே என்ற பெயரில் திரைப்படம் எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல, நாட்டில் எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது  என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

செவ்வாய், 4 ஜூன், 2013

தமிழர் குறித்த பாசக நிலையைத் தெளிவாக்க இலங்கைப் பயணம் : இரவிசங்கர் பிரசாத்து

2014 தேர்தலில் தமிழர் குறித்த பாசக நிலையை த் தெளிவாக்க எனது இலங்கை ப் பயணம் உதவும் !?: இரவிசங்கர் பிரசாத்து

முன்னாள் மத்திய அமைச்சரான பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், ஆறு நபர் குழுவுடன் நாளை (ஜூன் 4) ஐந்து நாள் பயணமாக இலங்கைக்குச் செல்கிறார். இந்தக் குழுவில், சிவசேனைத் தலைவர் சுரேஷ் பிரபு, மூத்த ஊடகவியலாளரான ஸ்வபன் தாஸ்குப்தா, ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி விவேக் கட்ஜு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ராம் மாதவ், மனித உரிமை ஆர்வலர் மோனிக் அரோரோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கையில் உள்ள பண்டாரநாயக சர்வதேச கழகத்தின் அழைப்பின் பேரில் இந்தக் குழு செல்லவுள்ளதாகவும், ஸ்வாமி விவேகானந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு, தபால்தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரவிசங்கர் பிரசாத் இது குறித்துக் கூறியபோது, பாஜக சார்பிலான அதிகாரபூர்வ பயணமாக இது இல்லை; இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பயணம் என்று கூறியுள்ளார்.
ஜூன் 7ம் தேதி அன்று, இந்தியக் குழுவுடன் இலங்கைக் குழு சந்திப்புக்கு பண்டாரநாயக இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த 15 பேர் இலங்கைக் குழுவில் ரௌஃப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட இருவர், மூத்த இலங்கை அமைச்சர்கள் மூவர், மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர், எல்.எல்.ஆர்.சி உறுப்பினர் ஒருவர், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் 4 பேர், பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்தியக் குழுவுடன், இலங்கை தமிழர்களின் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகள், போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா சார்பில் கட்டிக் கொடுக்கப்படும் வீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றைப் பார்வையிட உள்ளனர்.
ஆனால், தமிழர் பகுதிகளுக்கு நிலம், காவல் அதிகாரம் ஆகியவற்றை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமைச்சர்கள் விமல் வீர்வன்ஸா, படாலி சம்பிகா ரனவகா ஆகியோர் இந்தக் கூட்டதைப் புறக்கணித்துள்ளனர்.
சென்ற முறை இந்தியக் குழு இலங்கை பயணித்தபோது, அதிபர் ராஜபட்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச ஆகியோரைச் சந்தித்து, தமிழர் பகுதிகளுக்கு நிலம், காவல் அதிகாரம் வழங்குவது குறித்த வடக்கு மாகாணம் தொடர்பிலான 13வது சட்டத்திருத்தம் குறித்து பேச்சு நடத்தியது.
இந்த முறை இலங்கைப் பயணத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், தனது தனிப்பட்ட முயற்சியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். ஆனால், தனது இந்தப் பயணமானது இலங்கைத் தமிழர் தொடர்பில் ஒரு புதிய அணுகுமுறையையும் கண்ணோட்டத்தையும் பாஜகவுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும், அடுத்து வரும் 2014 பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர் தொடர்பிலான பாஜகவின் அரசியல் முன்னெடுப்புக்கு இது உதவும் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

சனி, 9 மார்ச், 2013

மீனவர் தாக்குதலில் இந்தியக் கடற்படையினரின் பணி என்ன ? பாசக கேள்வி

மீனவர் தாக்குதலில் இந்திய க் கடற்படையினரின் பணி என்ன ? பாசக கேள்வி

தமிழகம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், இந்திய கடற்படையினரின் பணி என்னவாக உள்ளதென பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.
காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை புதுவை மாநில பாஜக செயலர் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவர் ராஜவேலு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
பிறகு அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறியது :  ஜெனீவாவில் ஐ.நா. கவுன்சிலில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய ஆதரிக்கவேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை தங்களது நிலைபாட்டை ஆதரிக்கவேண்டுமென இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கும் வகையிலேயே, கடந்த சில நாள்களாக காரைக்கால் மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாவதாக கருத வேண்டியுள்ளது.
இந்திய எல்லையில் புகுந்து இலங்கை கடற்படையினர் தாக்குகின்றனர் என காரைக்கால் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால், இந்திய கடற்படையினரின் பணி என்ன, அவர்கள் எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி சாமானிய மக்களிடேயே ஏற்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் கடற்படை, கடலோரக் காவல்படையினர் பணியை செம்மைப்படுத்த தீவிர கவனம் செலுத்த வேண்டும். இலங்கை விவகாரத்தில் காட்டப்படும் அலட்சியம், வளரும் பல அண்டை நாடுகளின் அச்சுறுத்தலுக்கும் இந்தியா ஆளாகவேண்டிவிடும் என்றார் அவர்.