தலைமையர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைமையர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 அக்டோபர், 2013

பொதுநல மாநாட்டில் தலைமையர் பங்கேற்பது ஐயம்.

பொதுநல மாநாட்டில் தலைமையர் பங்கேற்பது ஐயம்.

Comment (1)   ·   print   ·   T+  
பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, பி.டி.ஐ. செய்தி நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்தி வெளியிட்டுள்ளது.
திமுக உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தெரிவித்து வரும் எதிர்ப்பின் எதிரொலியாக, மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
காமன்வெல்த் மாநாடு, நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இலங்கை தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த இந்தியா உள்பட 54 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, சென்னையில் கடந்த 1-ம் தேதி முதல் 15 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
இதனிடையே, டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வலியுறுத்தினார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தியாகுவின் உடல்நிலை குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.
அப்போது பிரதமர் மன்மோகன் சிங், 'காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் தமிழ் மக்கள் மற்றும் உங்கள் கட்சியின் (திமுக) உணர்வுகளை மதித்து நல்ல முடிவு எடுப்போம். திமுக தலைவர் கருணாநிதி தலையிட்டு, தியாகுவின் போராட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று டி.ஆர்.பாலுவிடம் கூறினார். அதுதொடர்பான கடிதத்தையும் பாலுவிடம் மன்மோகன் வழங்கினார். இதைத் தொடர்ந்து, தியாகு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இந்த நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமருக்கு இன்று (வியாழக்கிழமை) எழுதிய கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன், அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், மாணவர்களும் மிகப் பெரிய அளவில் போராட்டங்களை சாத்தியம் உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் இந்து, 

வியாழன், 17 அக்டோபர், 2013

பொதுநல அமைப்பு : தலைமையருக்கு முதல்வர் மடல்

பொதுநல அமைப்பு :  தலைமையருக்கு முதல்வர் மடல்







இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஏற்கனவே மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
 இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்களை செய்துள்ளது. காமன்வெல்த் மாநாட்டு அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக் குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும்.
தமிழகம் சார்பில் அரசியல் கட்சிகளும், மாணவர்கள் அமைப்புகளும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்து விட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிம் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக உறுதியோடு அறிவிக்க வேண்டும்  என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

புதன், 16 அக்டோபர், 2013

தலைமையர் உறுதி: உண்ணா நோன்பை முடித்துக்கொண்டார் தியாகு

தலைமையர் உறுதி: உண்ணா நோன்பை முடித்துக்கொண்டார் தியாகு


தியாகு
தியாகு
இதன் தொடர்ச்சியாக, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
காமன்வெல்த் மாநாடு, நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இலங்கை தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த இந்தியா உள்பட 54 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, சென்னையில் கடந்த 1-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவரை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அதன்பிறகும் அவர், உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
தியாகு, தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுவிட்டு வேறு அறவழியில் போராடலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி, அவருக்கு ஆலோசனை வழங்கி, வேண்டுகோள் விடுத்தார். எனினும் தியாகு போராட்டத்தை கைவிடவில்லை.
'தமிழக உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்'
தியாகுவின் உண்ணாவிரதப் போராட்டம் 14-வது நாளாக திங்கட்கிழமை நீடித்த நிலையில், அன்றைய தினம் இரவு டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தார்.
அப்போது, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வலியுறுத்தினார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தியாகுவின் உடல்நிலை குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.
அப்போது பிரதமர் மன்மோகன் சிங், 'காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் தமிழ் மக்கள் மற்றும் உங்கள் கட்சியின் (திமுக) உணர்வுகளை மதித்து நல்ல முடிவு எடுப்போம். திமுக தலைவர் கருணாநிதி தலையிட்டு, தியாகுவின் போராட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று டி.ஆர்.பாலுவிடம் கூறினார். அதுதொடர்பான கடிதத்தையும் பாலுவிடம் மன்மோகன் வழங்கினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர் கொடுத்தனுப்பிய கடிதத்தை திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாகுவிடம் திங்கட்கிழமை இரவு நேரில் வழங்கினார்.
இந்தச் சூழ்நிலையில், தியாகு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மதியம் வாபஸ் பெற்றார். குழந்தைகள் கொடுத்த பழச் சாற்றை குடித்து அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். 

- தமிழ்இந்து, 

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பொதுநலக் கூட்டத்தில் தலைமையர் பங்கேற்கக்கூடாது

பொதுநலக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கக்கூடாது

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக்கூடாது என்று மாநிலங்களவையில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மாநிலங்களவை திங்கள்கிழமை நண்பகலில் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் கூடியபோது, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் பேசியது:
இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இருமுறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அக்கடிதங்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்படவில்லை.
இலங்கை கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் உயர்நிலைக் குழு சென்றாலும்கூட, அது அந்நாட்டில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்குவதாகவே கருதப்படும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கும் முடிவை தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு கொடுமைகளை இழைத்துள்ளது. இதனால், இலங்கையை எதிரி நாடாக தமிழக மக்கள் கருதுகின்றனர். அதிமுகவும் அவ்வாறே கருதுகிறது.
இக்கருத்தை, பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்லக்கூடாது என்று மைத்ரேயன் கேட்டுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர் கனிமொழி பேசியது:
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவும், சமவுரிமை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்திலும், இந்தியாவிடமும் அளித்த உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்தியா அனுப்பிய மறுவாழ்வு உதவிகள் பயனாளிகளை முழுமையாகச் சென்றடையவில்லை.
இந்தியாவிடம் உறுதியளித்தபடி, அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 13-ஆவது திருத்தத்தை அமல்படுத்த இலங்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இவற்றை கருத்தில் கொண்டுதான் இலங்கையில் நடத்தப்படும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக்கூடாது என திமுக வலியுறுத்துகிறது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, நமது குடிமக்களைப் பாதுகாக்க கடுமையான நிலையை எடுத்து காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார். மேற்கண்ட இருவரும் பேசியபோது, அவையில் இருந்த திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

திங்கள், 22 ஏப்ரல், 2013

துபையில் இலங்கை மக்கள் : வைகோவுக்குத் தலைமையர் மடல்

துபையில் இலங்கை மக்கள் : வைகோவுக்குத் தலைமையர் மடல்

By dn, சென்னை

துபையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்து வைகோ எழுதிய கடிதத்துக்கு பிரதமர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், துபையில் உள்ள 19 ஈழத் தமிழர்களை, இலங்கைக்கு அனுப்ப துபை அரசு திட்டமிட்டு உள்ளது. அவர்களை இலங்கைக்கு அனுப்பினால், கொடூரமான சித்ரவதைக்கும் உயிர்க்கொலைக்கும் ஆளாவார்கள்;  எனவே, அவர்களை இலங்கைக்கு அனுப்ப விடாமல் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, வைகோ அவர்கள் ஏப்ரல் 02 ஆம் தேதி கடிதம் எழுதினார்.
இது தொடர்பாக, ஏப்ரல் 06 ஆம் தேதி, பிரதமரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வைகோ பேசினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் அப்போது வைகோவிடம் உறுதி அளித்தார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங், வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,“ஐ.நா. மனித உரிமை கமிஷன் மூலம், 19 ஈழத் தமிழர்களை துபையில் இருந்து இலங்கைக்கு அனுப்பாமல், வேறு நாடுகளுக்கு அனுப்ப, இந்திய வெளிவிவகாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல, இந்திய முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்கா வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற இந்திய அரசுக்கும், வெளிவிவகாரத் துறைக்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் எழுதி உள்ளேன்” என்று தெரிவித்து உள்ளார்.
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
துபாயில் உள்ள ஈழத் தமிழர்கள், குறிப்பாக அரிணி, 15-ந்தேதி வைகோவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்:“அண்ணா, எங்களை இலங்கைக்கு அனுப்பாமல் காப்பாற்றிய தங்களுக்கு, நாங்கள் காலம் எல்லாம் நன்றிக்கடன்பட்டு உள்ளோம்” என்று கூறினார்.மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. தலமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 29 மார்ச், 2013

தீர்மானத்தை முதல்வர் நேரில் வழங்க வேண்டும்: தொல். திருமாவளவன்

பேரவைத் தீர்மானத்தை முதல்வர் தலைமையரிடம் நேரில் வழங்க வேண்டும்: தொல். திருமாவளவன்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக முதல்வர் பிரதமரிடம் நேரில் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், மாணவர்களும் ஈழச் சிக்கல் தொடர்பாக வலியுறுத்திவந்த கருத்துகளை தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமாக முன்மொழிந்த தமிழக முதல்வருக்கும் அதனை நிறைவேற்றித் தந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தீர்மானத்தில் இடம்பெற்றிருக்கும் பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை முதலான கருத்துகள் ஏற்கனவே 'டெசோ' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு அதற்காகப் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. என்றாலும், தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன்மூலம் அவை இன்னும் அதிகமான வலிமையைப் பெற்றிருக்கின்றன. சிங்கள அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தருவனவாக அமைந்துள்ளன. தக்க நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதன் மூலம் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் உணர்வுகளும் உலகறியச் செய்யப்பட்டுள்ளன.
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.  குறிப்பாகச் சில ஆங்கில ஊடகங்களும் விமர்சித்துள்ளன. தமிழ் இனத்தில் பிறந்த காரணத்தாலேயே பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை 'இனப்படுகொலை'யென அழைக்கக் கூடாது என்று வாதிடுகிறவர்கள்தான் இப்படி விமர்சிக்கிறார்கள். அவர்களின் தமிழின விரோதப் போக்கைத் தெரிந்துகொள்ள இதுவொரு வாய்ப்பு எனக் கருதுவோம்.
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய அரசு பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்யலாம். எனவே, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இத்தீர்மானத்தை தமிழக முதல்வர் தாமே நேரில் சென்று பிரதமரிடம் அளித்து விளக்க வேண்டும்.  அத்துடன் பிற மாநில முதல்வர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இத்தீர்மான நகலை அளித்து அவர்களது ஆதரவையும் திரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கையில்  இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு நாம் வெகுதூரம் பயணப்பட்டாக வேண்டும். கட்சி வேறுபாடுகளைக் களைவோம்! அந்த நீண்ட நெடிய போராட்டப் பயணத்தில் தமிழகம் ஒன்றுபட்டு நின்றது என்ற வரலாற்றை உருவாக்குவோம்!
- என்று கூறியுள்ளார்.