செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பொதுநலக் கூட்டத்தில் தலைமையர் பங்கேற்கக்கூடாது

பொதுநலக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கக்கூடாது

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக்கூடாது என்று மாநிலங்களவையில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மாநிலங்களவை திங்கள்கிழமை நண்பகலில் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் கூடியபோது, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் பேசியது:
இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இருமுறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அக்கடிதங்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்படவில்லை.
இலங்கை கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் உயர்நிலைக் குழு சென்றாலும்கூட, அது அந்நாட்டில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்குவதாகவே கருதப்படும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கும் முடிவை தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு கொடுமைகளை இழைத்துள்ளது. இதனால், இலங்கையை எதிரி நாடாக தமிழக மக்கள் கருதுகின்றனர். அதிமுகவும் அவ்வாறே கருதுகிறது.
இக்கருத்தை, பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்லக்கூடாது என்று மைத்ரேயன் கேட்டுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர் கனிமொழி பேசியது:
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவும், சமவுரிமை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்திலும், இந்தியாவிடமும் அளித்த உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்தியா அனுப்பிய மறுவாழ்வு உதவிகள் பயனாளிகளை முழுமையாகச் சென்றடையவில்லை.
இந்தியாவிடம் உறுதியளித்தபடி, அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 13-ஆவது திருத்தத்தை அமல்படுத்த இலங்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இவற்றை கருத்தில் கொண்டுதான் இலங்கையில் நடத்தப்படும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக்கூடாது என திமுக வலியுறுத்துகிறது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, நமது குடிமக்களைப் பாதுகாக்க கடுமையான நிலையை எடுத்து காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார். மேற்கண்ட இருவரும் பேசியபோது, அவையில் இருந்த திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக