சூரிய ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரிய ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஜூலை, 2013

6000 ஆண்டுகள் பழமையான "சவுக்கை' கண்டுபிடிப்பு:

பழனி அருகே 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான "சவுக்கை' கண்டுபிடிப்பு: சூரிய ஒளி ஊடுருவிய விந்தை
பழநி: பழநி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில், 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, "சவுக்கை' (பெருங்கற்களாலான அமைப்பு) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், பழநி ஆண்டிபட்டி மலைப்பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில், ஆர்வலர்கள் கன்னிமுத்து, சவுரப், ராமலிங்கம் ஆகியோர் குழுவாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது "சவுக்கை' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாராயண மூர்த்தி கூறியதாவது: இங்குள்ள மலைப்பகுதியில் இரண்டு பெரும் உருண்டை பாறாங்கற்களை அருகருகே அடுக்கி, அதன் மேல் ஒரு பலகை பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர். தூரத்திலிருந்து பார்க்கும் போது இவ்வமைப்பு ஆயுத எழுத்து வடிவில் உள்ளது. சூரிய ஒளியின் நகர்வுப்பாதையை கணிக்க இடைச்சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்கள் இவ்வமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனை சவுக்கை என்பர். 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஓர் ஆண்டில் 6 மாதம் காலத்திற்கு சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் பயணத்தை தட்சணாயண காலம் என்றும், மீதி உள்ள 6 மாத காலத்தில், தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் காலத்தை உத்தராயண காலம் என்றும் கணித்துள்ளனர். இந்தாண்டு தட்சணாயணத் துவக்க நாளான ஆடி 1-ல் சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக, சூரிய உதயத்தில் ஒளிக்கதிர்கள் தென்மேற்காக துல்லியமாக ஊடுருவுவதை காண முடிந்தது. மூன்று நாட்கள் இதுபோல் ஒளியை காணலாம். இதைப்போல் உத்தராயணகால, துவக்க நாளான தை 1-ல் சூரியன் மறையும் போது, ஒளிக்கதிர்கள் வடகிழக்காக துல்லியமாக ஊடுருவதற்கு ஏற்பவும், இந்த சவுக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சவுக்கைகள் இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் உள்ளன, இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 8 ஏப்ரல், 2013

விண்ணம்பள்ளி : சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்த கட்டட நுட்பம்

விண்ணம்பள்ளி அகத்தீசுவரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்த கட்டட நுட்பம்
விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்த அதிசய காட்சி
வேலூர், ஏப்.8-

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளியில் வரலாற்று சிறப்பு மிக்க அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி.12-ம் நுற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. ஈசானிய பார்வையில் வாயிற்படி கட்டப்பட்ட இந்த கோவிலில் அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார். இங்கு தரிசனம் செய்பவர்களுக்கு திருமணம் நடக்கும். நோய்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.

சூரிய ஒளி விழும் காட்சி இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 7 மணி வரை சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பக்தர்கள் தரிசனம் லிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து கோவிலில் உள்ள மூன்று பிரகாரங்களை கடந்து பின்னர் லிங்கத்தின் மீது விழுகிறது.

முதலில் லிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக லிங்கத்தின் மையப் பகுதியை அடைகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 15 நிமிடங்களில் நடந்து விடுகிறது. இன்று காலை 6.30 மணிக்கு சூரிய ஒளி விழுந்து பின்னர் காலை 6.45 மணிக்கு மறைந்து விட்டது. இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்த திரளான பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் நமச்சிவாய என கோஷமிட்டனர். இது அற்புதமான காட்சியாகும்.

இதைகாண தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகத்திலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். பக்தர்கள் 7 நாள் இதை தரிசனம் செய்தால் 7 ஜென்ம தீவினைகள் அகன்று நன்மை பெறலாம் என்று கூறப்படுகிறது.

திங்கள், 25 மார்ச், 2013

செஞ்சி அருகே கோவிலில் சூரிய ஒளி படும் சிறப்பு




செஞ்சி அருகே கோவிலில் சூரிய ஒளி படும் சிறப்பு


செஞ்சி:செல்லபிராட்டி, லலிதா செல்வாம்பிகை கோவிலில், அம்மன் மீது, சூரியஒளி பாயும் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி தேவியர் ஒரே உருவமாய், லலிதா செல்வாம்பிகையாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் உள்ள அம்மன் சிலை மீது, ஒவ்வொரு ஆண்டும், தட்சணாயண காலத்தில், மூன்று நாட்களும், உத்ராயண நாட்களில் மூன்று நாட்களும், சூரியஒளி நேரடியாக பாயும்.உத்ராயண காலமான நேற்று, சூரியஒளி, அம்மன் சிலை மீது விழும் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது.

காலை, 6:35 மணி முதல், 6:39 மணி வரை, ராஜகோபுர வாசல் வழியாக, சூரியஒளி அம்மன் மீது விழுந்தது.அப்போது, சிறப்பு தீபாராதனை, லலிதா செல்வாம்பிகை காயத்ரி மந்திரம், 1,008 மூலமந்திர ஜெபம், அம்மன் கவச மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன.முன்னதாக, அதிகாலை, 3:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்றும், நாளையும் அம்மன் மீது, சூரியஒளி பாயும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்
.




வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

வான்காலவியல், கட்டடக்கலையின் சிறப்பு





சிவலிங்கத்தின் நெற்றியில் திலகம் சூரியக்கதிர் வழிபாட்டால் களிப்பு (பரவம்)

திருச்சி:
திருச்சி, கல்லணைச் சாலையில் உள்ள சர்க்கார் பாளையம் விசுவநாதர் கோவில் இலிங்கத்தின் மீது கதிரவன் தன் பொற்கதிர்களால் வழிபாடு நடத்தியது இறையன்பர்களைப் புல்லரிக்கச் செய்தது.

திருச்சி, கல்லணைச் சாலை, காவிரித் தென்கரை சர்க்கார் பாளையத்தில், கரிகாற்சோழனால் கட்டப்பட்ட, பழமை வாய்ந்த காசி விசாலாட்சி உடனுறை விசுவநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவானைக்காவல் சம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி கோவிலின் சார்புக் கோவிலாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7, 8, 9ஆம் நாட்களில், நாள்தோறும் விடியலின்போது மூலவர் காசி விசுவநாதர் சிவலிங்கத்தின் மீது கதிரவன் ஒளி நேரடியாகப் படுவது இக்கோவிலின் சிறப்பு. இந்நிகழ்வைக் கதிரவ வழிபாடு எனத் தொன்ம நூல்கள் தெரிவிக்கின்றன. இப்படிச் சிவலிங்கத்தைக் கதிரவன் வழிபடும்போது நாமும் வழிபடுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. இந்தாண்டு கோவிலில் கதிரவ வழிபாடு நேற்று தொடங்கி நாளை வரை தொடர்ந்து நடக்கிறது. நேற்று விடிகாலை கதிரவன் எழுந்தபோது கதிர்கள் கோவிலின் முன் மண்டபம் வழியாகப் படிப்படியாக நகர்ந்து, கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றியில் பொட்டு வைத்தது போல ஒளிர்ந்தது. இறையன்பர்கள் ஏராளமானோர் இதைத் திருக்கண்டு (தரிசித்து) களிப்பு எய்தினர். தொடர்ந்து இரண்டு நாள் இவ்வழிபாடு நடக்கும். விழா ஏற்பாடுகளைக் கோவில் செயல் அலுவலர் மகேசுவரி, ஓதுவார் சாமிநாதசிவம், கொடையாளர்கள் சுந்தர மீனாட்சி, இராசாராம், ஊர் மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.