சி.இலக்குவனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சி.இலக்குவனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 மார்ச், 2025

 

தமிழ்க் காப்புக் கழகம்: ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம்



நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641)

தமிழே விழி!                                                    தமிழா விழி!

கூட்ட இணைப்பு 

தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் 

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்

“தமிழும் நானும்”  – ஆளுமையர்கள்

தமிழ் நெறியாளர் நீலகண்டத் தமிழன், தலைவர், உலகத்தமிழர் ஒன்றியம்

பாவாணர் சீர் பரவுவார் இல.நிலவழகன்

தலைவர், உலகத்தமிழ்க்கழகம், ஆசிலாபுரம்(விருதுநகர்)

எம் நூலரங்கம்

செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் 

ஆசிரியர்கள்: முனைவர் மறைமலை இலக்குவனார் 

இலக்குவனார் திருவள்ளுவன் 

ஆய்வுரைஞர் : தமிழ்த்திரு சரவணன்

நிறைவுரைஞர் : பொதுமை அறிஞர் தோழர் தியாகு

நன்றி: முனைவர் ஆனந்தி வாசுதேவன், புது தில்லி

சனி, 2 செப்டம்பர், 2023

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23

 




தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23 என நீட்டிப்பு

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி குறித்து அறிவித்திருந்தோம்.

இப்போட்டியில் மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும்

முதல்பரிசு உரூ.5,000/-

இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /, & மூன்றாம் உரூ.2000/

நான்காம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-)

ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு மணிகள் நூல் (விலை உரூ.300/-)

ஆறாம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் எழுதிய பழந்தமிழ் நூல் (விலை உரூ.100/-)

கட்டுரைப்போட்டியின் தலைப்பு:

இந்தி, சமற்கிருத, ஆங்கிலத் திணிப்புகளை முறியடிப்போம்!

4 பக்கங்களுக்குக் குறையாமல் (மேல் வரம்பு இல்லை)

பங்கேற்பாளர்கள் வேண்டியதற்கிணங்கக் கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி

ஆவணி 24, 2054 /

10.09.2023 தமிழக நேரம் மாலை 6.00 மணிக்குள்

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி:

thamizh.kazhakam@gmail.com
ஆர்வமுள்ளவர்களைப் பங்கேற்க வேண்டுகிறோம்

இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்க் காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

திங்கள், 14 நவம்பர், 2022

கி.ஆ.பெ.விசுவநாதம் & சி.இலக்குவனார் பிறந்த நாள் விழா

 அகரமுதல


தமிழியக்கம்
வே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம்
இணைந்து வழங்கும்
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 124ஆவது &
செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 114 ஆவது
பிறந்த நாள் விழா


கார்த்திகை 1, 2053 / வியாழன் / 17.11.2022 காலை 10.00 மணி
வே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம் சென்னை வளாகம்
வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, சென்னை 600 127


தலைமை: கல்விக்கோ கோ.விசுவநாதன்
சிறப்புரை: முனைவர் மறைமலை இலக்குவனார்
நெகிழ்வுரை: திரு சிறீசாந்து கருனோசு


புதிய, திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் :👇 

தமிழியக்கம்
முத்தமிழ்க் காவலர் 
கி.ஆ.பெ. விசுவநாதம் (124)
செந்தமிழ்க் காவலர் 
சி. இலக்குவனார் (114)
பிறந்தநாள் விழா  

நாள் : 17.11.2022,வியாழன்,
காலை 10.00 மணி 
இடம் : விஐடி பல்கலைக்கழகம், சென்னை வளாகம் 

தலைமை : 
வேந்தர் கல்விக்கோ கோ. விசுவநாதன்
நிறுவனர் - தலைவர், தமிழியக்கம் 

நிகழ்ச்சி நிரல்

10.00 - 10.02 மணி 
தமிழ்த்தாய் வாழ்த்து 

10.02 - 10.07 மணி 
வரவேற்புரை : 
திரு. மு. சுகுமார்
மாநிலச் செயலாளர், தமிழியக்கம்
 
வாழ்த்துரை :
10.07 - 10.12 மணி 
திரு. மு. சிதம்பர பாரதி
தென்தமிழக ஒருங்கிணைப்பாளர், தமிழியக்கம்

10.12 - 10.17 மணி 
முனைவர் கு. வணங்காமுடி
வடதமிழக ஒருங்கிணைப்பாளர், தமிழியக்கம் 

10.17 - 10.24 மணி 
புலவர் வே. பதுமனார்
பொருளாளர், தமிழியக்கம் 

10.24 - 10.34 மணி 
கவியருவி அப்துல்காதர்
பொதுச் செயலாளர், தமிழியக்கம் 

10.34- 10.44 மணி 
நெகிழ்வுரை :
திரு. க.சிறீகாந்த்
இயக்குநர்,
இந்திய தேசியக் கல்வி நிறுவனம் 

10.44 - 11.04 மணி 
தலைமையுரை :
வேந்தர் கல்விக்கோ கோ. விசுவநாதன்
நிறுவனர் - தலைவர், தமிழியக்கம் 

11.04 - 11.24 மணி 
சிறப்புரை :
முனைவர் மறைமலை இலக்குவனார்

11.24 - 11.27 மணி 
நன்றியுரை : 
முனைவர் பெ. சசிரேகா
சென்னை மண்டலச் செயலாளர் 
தமிழியக்கம்

11.27 - 11.37 மணி 
விஐடி பல்கலைக்கழகம் (சென்னை)
தமிழியக்க உறுப்பினர்கள்
அய்யா வேந்தர் அவர்களோடு
குழுவாக நிழற்படம் எடுத்தல்




ஞாயிறு, 3 மே, 2020

01.02.1965 : உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்


01.02.1965 உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்

மறைமலை இலக்குவனார் :

என்னுடைய பதிவு 2/5/65 அன்று என் தந்தையார் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் படி தளைப்படுத்தப்பட்ட செய்தியைக் குறித்தது. இது தொடர்பாக இன்னும் பல செய்திகளைக் கூறவேண்டும். ஆனால் இதற்கு முன்னதாக 1/2/65 அன்று இந்தியக் குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட செய்தியைக் கூறவேண்டும். இதற்கு முன்னர் இதனைப் பதிவு செய்துள்ளேன். எனினும் புதிய நண்பர்கள் பலர் கேட்பதால் அந்தச் செய்தியை மீண்டும் இங்குப் பதிவு செய்கிறேன்.ஏற்கெனவே படித்தவர்கள் கடந்து செல்க.
1/2/1965 மாலை 5/30 இருக்கும். திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திற்கு எதிரில், மலைப்பாதையில் அமைந்திருந்த ‘குறள்நெறி அச்சகம்’ பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அந்த இந்திஎதிர்ப்புக் கொந்தளிப்புச் சூழலில் அடுத்துவரும் இதழ் அச்சாகிக்கொண்டுள்ளது. முந்தைய நாள் திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியற்கல்லூரியில் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்திய கொடுமையை விளக்கும் மாணவர் கையறிக்கை ஒன்று அப்போதுதான் அச்சுப்பொறியில் (டிரெடில்) ஏற்றப்பட்டிருந்தது.
வரவேற்பறையாகச் செயல்பட்ட முன்னறையில் மேலாளர் இருக்கையின் எதிரே என் தந்தையார் அமர்ந்திருந்தார். நான் பொறி இயங்கும் உள்கூடத்திலிருந்து வெளியே வரவேற்பறைக்குத் தற்செயலாக வந்தபோதுதான் காவல்துறையின் ஈப்பு அச்சகத்தின் முன்வந்து நிற்பதைக் கவனித்தேன். பருமனாகவும் நடுத்தர உயரத்துடனும் இரட்டைநாடிக் கட்டமைப்புடன், சதுரமான சட்டகம்கொண்ட மூக்குக் கண்ணாடி அணிந்த ஆய்வாளர் உள்ளே நுழைந்தார்.
இரும்புக்கம்பிகள் மட்டுமே சுற்றுவேலிபோல் அமைந்திருந்தமையால் குறைந்தது பத்துக்காவலர்களாவது வெளியே, திசைக்கொருவராகச் சிதறிய நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள் எனத் தோன்றியது.
உள்ளே நுழைந்த ஆய்வாளரை நோக்கி’ஐயா, வாருங்கள்! என்ன செய்தி?” என என் தந்தையார் வினவினார்.
“Dr. Ilakkuvanaar! I am Sachchithaanantham,Inspector at Thirupparankundram police station.”
“ம்ம்..சொல்லுங்கள்”
“Dr.Ilakkuvanaar, You are under arrest”
“என்ன காரணத்திற்காக எனத் தெரிந்துகொள்ளலாமா?”
““Dr.Ilakkuvanaar. You are the father of Anti-Hindi agitation”
‘ஐயா! அவ்வளவு பெருமைக்கு நான் உரியவன் அல்லன். இது மாணவர்கள் நடத்தும் போராட்டம். தங்கள் வருங்காலம் குறித்த கவலையில் போராடுகிறார்கள்.”
“No. Dr.Ilakkuvanaar! We know everything. You are leading this agitation. Come on! Let us go”
ஆய்வாளர் சச்சிதானந்தம் சற்று உரத்த குரலுக்கு சொந்தக்காரர். அழுத்தம் திருத்தமாகவும் சுருக்கமாகவும் அவர் நிகழ்த்திய உரையாடல் ஐம்பத்தைந்தாண்டுகள் கடந்தபின்னும் இன்னும் என் அகச்செவியில் ஒலிக்கிறது.
ஒரு பெரிய நீலவண்ணக் காவல்துறைப்பேருந்தும் இரண்டு ஈப்புகளும் வெளியே நின்றுகொண்டிருப்பதை அப்போதுதான் முழுமையாகப் பார்த்தேன்.
ஓர் ஈப்பில் தந்தையாரை ஏற்றிக்கொண்டு ஆய்வாளர் சச்சிதானந்தம் ஏறிக்கொண்டார்.பிறகு உசுபுசு என மூச்சுவிட்டும் உர்ரென உறுமியவாறும் வண்டிகள் கிளம்பின.வெளியே சீருடையில் பத்துப்பேரும் வெள்ளுடையில் பதினைந்துபேரும் நின்றிருந்தார்கள் என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது.
ஒருவரைக் கைது செய்ய ஏன் இத்துணைக் காவலர்கள்?? எனக்கு அப்போது விளங்கவில்லை. காலம் செல்லச்செல்லத் தான் அந்தக் கைது—மாணவர் மனங்கவர்ந்த ஒரு பேராசிரியரைத் தளைப்படுத்தும் கைது_எவ்வளவு முதன்மையான நிகழ்ச்சி என்பது எனக்கு விளங்கியது.தங்கள் தலைவராக மாணவர்கள் கொண்டாடும் பேராசிரியரைக் கைது செய்வதனை ஒருவேளை அந்த மாலைப்பொழுதில் மாணவர்கள் அறிந்துகொள்ளநேரிட்டால் எவ்வளவு கொந்தளிப்பும் குழப்பமும் ஏற்பட்டிருக்கும்?
காவல்நிலையத்தின் எண்ணை நான் இப்போது மறந்துவிட்டேன். பி2 என எண்ணுகிறேன். ஆய்வாளர் ஒருவர் எங்கள் வீட்டுக்குவந்து இரண்டு மாற்று உடைகள் வாங்கிச்சென்றார். நாங்கள் கேட்ட எந்த வினாவுக்கும் அவர் விடைவழங்கவில்லை,”இதோ நாளை வந்துவிடுவார்.இரண்டு மாற்று உடைகள் போதும்.”எனக் கூறிச் சென்றார்.
அரைமணி நேரம் கழித்துத் தொலைபேசி வந்தது.”நாளைக் காலை எட்டரையிலிருந்து ஒன்பது மணிக்குள் காலைச்சிற்றுண்டி கொண்டுவாருங்கள். இன்னும் நடுவர்முன் முன்னிலைப்படுத்தவில்லை. ஆகவே சிறைக்கு அழைத்துப்போகவில்லை. காவல்நிலையத்தில்(ரிமாண்டு) தளைப்படுத்தியுள்ளனர். எனவே வீட்டு உணவு கொடுக்கலாம்.”எனக் காவல்நிலையத்திலிருந்து கூறினார்கள்.
மறுநாள் காலை, சிற்றுண்டியை எடுத்துச்சென்றேன். அங்கே அவர் பி2 காவல்நிலையத்தில் இல்லை. பி4-க்குக் கொண்டுபோயுள்ளனர்.’என மறுமொழி கூறினர்.
பி4 காவல்நிலையம் சென்றேன்.
”அவர் பி6 நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே ஆய்வாளர் தமது வீட்டிலிருந்து சிற்றுண்டி கொடுத்துவிட்டார். கவலையின்றி வீட்டுக்குச் செல்லுங்கள்” என என்னை ஆற்றுப்படுத்தினர்.
வீட்டுக்கு வந்தவுடன் தந்தையார் கைது நாளிதழ்களில் பரபரப்புச் செய்தியாக வெளிவந்ததைப் படிக்கவே நேரம் போதவில்லை. காலையில் அலைந்தது அலுப்புத்தரவில்லை; சிற்றுண்டி அருந்தவேண்டும் என்னும் எண்ணமும் ஏற்படவில்லை.
கல்லூரி மூடப்படிருந்தமையால் வெளியே செல்லும் வேலையில்லை. எனினும் கடைத்தெரு வரை காலார நடக்க விழைவு உந்தியது.
வெளியே புறப்பட்டவுடன் சற்றுத்தள்ளி எதிர்ப்புறம் அமைந்திருந்த வீட்டில் தமிழ்நாடு பல்தொழில்நுட்பநிறுவனத்தின் முதல்வர் திருஞானசம்பந்தன் கல்லூரி கிளம்பிக்கொண்டிருந்தார்.
வாயிற்படியிலிருந்து கீழிறங்கித் தெருவுக்கு வந்தவர் எதிர்ப்பட்ட என்னைக் கண்டு என் காதில்” The fools have arrested a great scholar. Time will teach them befitting lessons,” என் காதில் கிசுகிசுத்தார்.
பத்திரிகைக்கடையில் சுவரொட்டி காற்றில் அசைந்துகொண்டிருந்தது.
“சித்தப்பாவுக்கு அரிவாள் வெட்டு
இலக்குவனார் கைது”
என்னும் தொடர்கள் தினத்தந்தி சுவரொட்டியில் இடம்பெற்றிருந்ததை நான் மறந்தாலும் என் மனக்கண்முன் இன்றும் அவை பசுமையாகக் காட்சியளிக்கின்றன.
மறைமலை இலக்குவனார்


வியாழன், 2 ஏப்ரல், 2020

பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்


பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு

திட்டமிட்ட பொழுதுபோக்கும் ஒரு நாட்டு மக்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துவனவாகும். 
உழைப்போர்க்கு ஓய்வு இன்றியமையாதது.  ஓய்வு, ஒன்றும் செய்யாது மடிந்திருப்பதனால் மிகு பயன் தாராது.  எப்படியாவது பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக எதிலும் ஈடுபடுதலும் நற்பொழுதுபோக்கு ஆகாது. பொழுதுபோக்கால் உள்ளத்திற்கு இன்பம், உடலுக்குப் பயிற்சி ஏற்பட்டு மீண்டும் தம் கடமையிலீடுபடப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் பெறுதல் வேண்டும். தாமே தனியாகப் பொழுதுபோக்கில் ஈடுபடுவதினும் பிறருடன் கூடிப்பொழுதுபோக்கலே நற்பயன் தருவதாகும்.
சங்கக்காலத்தில் சிறுவர் முதல் பெரியோர் வரை ஆடவரும் பெண்டிரும் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கில் இன்பம் கண்டுள்ளனர்.  விளையாட்டும், ஆடலும் பாடலும், இன்ப உரையாட்டும் எல்லாருடைய உள்ளங்களையும் கவர்ந்துள்ளன.
பூங்காக்களுக்குச் சென்றும், நகரைவிட்டு வெளியிடங்களை அடைந்தும் அன்றும் பொழுது போக்கியுள்ளனர். கடற்கரையில் அலவனாட்டுதல், வண்டல் விளையாடுதல், பாவையை வைத்துக்கொண்டு விளையாடுதல், விளையாட்டுக் குதிரை, தேர் முதலியவற்றை இழுத்து விளையாடல், ஒருவரோடு ஒருவர் கைகோத்து ஆடல், பந்தாடல், நீர்நிலைகளிற் சென்று முழுகி விளையாடல், கிளி வளர்த்தல், திருவிழாக்களுக்குச் செல்லல், ஆடவர் பெண்டிர் இருசாரார்க்கும் உரிய அக்காலப் பொழுது போக்குகளாகும்.
            ஆடவர் மற்போர் புரிதலையும் கோழிப் போர், யானைப் போர் காண்டலையும், வேட்டையாடுதலையும் தமக்குரியனவாகக் கொண்டுள்ளனர். ஆடவரில் முதுமையுற்றோர் ஓரிடத்தில் அமர்ந்து வல்லாட்டம் (சூதாட்டம்) ஆடிப் பொழுதுபோக்கியுள்ளனர்.  சூதாடுவதற்கெனத் தனி அகங்கள் இருந்துள்ளன (புறம்-52).  வல்லாட்டத்திற்குரிய பலகை, காய் முதலியனபற்றித் தொல்காப்பியத்தில கூறப்படுவதனால் கி.மு.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் வல்லாட்டம் பொழுதுபோக்காக அமைந்துள்ளது என்று அறியலாம்.
கெடவரல், பண்ணை, ஓரை முதலியன விளையாட்டின் பெயர்களாகும்.
‘ஓரை ’ என்பது மகளிர்க்குரிய விளையாட்டு என்பதும் அதில் ஆடவரும் சேர்ந்து விளையாடுவர் என்பதும் “ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்” (நற்றிணை-155) என்பதிலிருந்து அறியக் கிடக்கின்றது.
ஊஞ்சல் ஆடுதல் மகளிர்க்கே உரிய விளையாட்டு,  ‘தெற்றி’ என்பதும் மகளிர்க்கே உரிய விளையாட்டாகும் (புறம்-53).  அது இன்ன விளையாட்டு என அறிய முடியவில்லை.  “கழங்கு ஆடுதல்” என்பதும் (அகம்-334) மகளிர்க்குரிய ஒன்றாகும்.
கடற்கரையில் நண்டுகள் ஓடி ஓடி மறைதலைக் காண்பது வியத்தகு காட்சியாகும்.  அதனைக் கண்டு பொழுதுபோக்கலைச் சிறு விளையாடலாகக் கருதினர் என்பது “செம்பேர் ஈரளை அலவற் பார்க்கும் சிறு விளை யாடல்” (நற்றிணை-123) என்று கூறுவதனால் அறியலாம்.
காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் எவ்வாறு பொழுது போக்கில் ஈடுபட்டு மகிழ்ந்தனர் என்பது பட்டினப்பாலையில் கற்போர் உள்ளம் கவருமாறு கவினுறக் கூறப்பட்டுள்ளது ( வரிகள் 62-117)
தொழிலாளர்கள் கடற்கரைக்குச் சென்று கடல் இறா மீனைச் சுட்டுத் தின்பர்; வயலாமையைப் புழுக்கி உண்பர்; அடும்பு மலரையும் ஆம்பல் மலரையும் அழகுறச் சூடிக் கொள்வர்.  ஆடவர்கள் பலர் கூடிக் கையாலும் கருவிகளாலும் போர் செய்வர்.  ஒருவரை ஒருவர் சுற்றிச் சுற்றிப் பொருது கொள்வது நாள்மீன்கள் (நட்சத்திரங்கள்) கோள்மீனைச் (கிரகம்) சுற்றிவருவது போல் இருக்கும்.  கவண் வீசுவர்; ஆட்டுச் சண்டை, கோழிச் சண்டை, கவுதாரிச் சண்டை முதலியன கண்டு களிப்பர்; பெண்கள் சுறாமீன் கோடு நட்டு வணங்கி வாழ்த்துவர்.  பரதவர் உவா நாளில் மீன்வேட்டைக்குச் செல்லாது வீட்டிலிருந்து பெண்களுடன் உண்டு ஆடி மகிழ்வர்;  கடலில் குளிப்பர்; பின்னர் நன்னீர்க் குளத்தில் முழுகி மகிழ்வர்; அலவனாட்டியும், அலைகளில் நடந்தும் பதுமைகளைப் புனைந்தும் ஐம்பொறிகளால் நுகரும் பொருள்களை நுகர்ந்து மயங்குவர்; பகலில் இவ்வாறு விளையாடிய பின்னர்க் காதலனும் காதலியும் பட்டாடையை நீக்கிப் பருத்தியாடையை அணிவர்; மட்டு நீக்கி மது மகிழ்வர்.  மைந்தர் கண்ணியை மகளிர் சூடுவர்; மகளிர் கோதையை மைந்தர் மலைவர்; பாடலோர்ப்பர்; நாடகம் நயப்பர்.  வெண்ணிலாவில் வீற்றிருந்து மகிழ்வர்.  பின்னர் அங்குள்ள மணல்மேடுகளில் துயின்று இரவைக் கழிப்பர்.
இவ்வாறெல்லாம் அக்கால மக்கள் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர்.
எளிய மக்களும் இனிய முறையில் பொழுது போக்கினர் என்பதைப் பின்வரும் புறநானூற்றுப் பாடலால் அறியலாம்.
“நெல்லரியும் இருந்தொழுவர்
 செஞ்ஞாயிற்று வெயில்முனையின்
 தெண்கடல்திரை மிசைப்பாயுந்து
 திண்திமில் வன்பரதவர்
 வெப்புடைய மட்டுண்டு
 தண்குரவைச் சீர்தூங்குந்து
 தூவற் கலித்த தேம்பாய் புன்னை
 மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
 எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
 வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
 முண்டகக் கோதை ஒண்தொடி மகளிர்
 இரும்பனையின் குரும்பைநீரும்
 பூங்கரும்பின் தீம்சாறும்
 ஓங்குமணல் குவவுத்தாழைத்
 தீநீரோடு உடன் விராஅய்
 முந்நீருண்டு முந்நீர்ப் பாயுந்”     (புறம்-24)
கடலில் குளித்தலும் கள்ளுண்டலும் குரவையாடலும் மாலைகளைச் சூடி விளையாடலும், மகளிருடன் நடனமாடுதலும் மூன்று வகை நீரும் கலந்த கலவை நீரையுண்டு மகிழ்ந்து கடலில் பாய்ந்து விளையாடலும் இன்றைய மேனாட்டார் பொழுதுபோக்கோடு ஒத்திருக்கின்றனவன்றோ?
மற்போர்பற்றி ஆமூர் மல்லனைச் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி வென்ற நிலை வண்ணிக்கப்பட்டுள்ளது.  அக்கால மற்போர் இக்கால மற்போர் போலவே நடந்துள்ளது.  சாத்தந்தையார் எனும் புலவர் அம்மற்போரை நேரிற் கண்டு பின்வருமாறு கூறியுள்ளார்:
“இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
 மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
 ஒருகால் மார்பு ஒதுங்கின்றே; ஒருகால்
 வருதார் தாங்கிப் பின்ஓதுங் கின்றே;
 நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப்
 பொரல்அருந் தித்தன் காண்கதில் அம்ம
 பசித்துப்பணை முயலும் யானை போல
 இருதலை ஓசிய எற்றிக்
 களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே” (புறம்-80)
மற்போரைக் கண்டவர் ஆர்ப்பரவம் ஏழ்கடல் ஒலியினும் மிகுதியாய் இருந்தது என்று அப் புலவரே  கூறியுள்ளமையால் (புறம்-81) மற்போரைக் கண்டு போதுபோக்கியோர் கூட்டம் இக்காலம் நடைபெறும் மற்போர், விளையாட்டுப் பந்தயங்கள் முதலியவற்றைக் கண்டு களித்துப் பொழுதுபோக்கும் பெருங்கூட்டத்தைப் போன்று இருந்திருக்கும் என்று உய்த்துணரலாம்.
மற்போரைக் கண்டு மகிழ்ந்தது போன்றே யானைப் போரைக் கண்டும் மகிழ்ந்தனர் என்பது,
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால்  தன்கைத்துஒன்று
 உண்டாகச் செய்வான் வினை”  (குறள்-758)
எனும் திருக்குறளால் தெளியலாம்.
“நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
 வல்லா ராயினும் புறம்மறைத்துச் சென்றோரைச்
 சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
 நல்லிதின் இயக்கும்அவன் சுற்றத் தொழுக்கமும்”
என்னும் மலைபடுகடாம் அடிகளால் (77-80) இயற்றமிழும்,
“குழலினிது யாழினிது என்ப” எனும் திருக்குறளால் இசையும்,
“கூத்தாட் டவைக்குழாத் தற்றே” எனும் திருக்குறளால் நாடகமும், அக்கால மக்களின் பெரும் பொழுதுபோக்காய் அமைந்திருந்தன என்று அறிய இயலும்.  பாடும் புலவரும் பாணரும் ஆடும் விறலியும் பொருநரும் அக்காலத்து நன்கு மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டனர் என்பதனாலும் இவை மக்களுக்குப் பயன் விளைக்கும் பொழுதுபோக்காய் அமைந்திருந்தன என்றும் தெரியலாம்.  சங்கக்காலத் தமிழ்மக்கள் பொழுதுபோக்கு முறையிலும் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தனர் என்பதில் ஐயமின்று.
– தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
தினச்செய்தி 02.04.2020