கி.வேங்கடராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கி.வேங்கடராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 அக்டோபர், 2019

பள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – கி. வேங்கடராமன்





ஓகக் கல்வி(யோகா) என்ற பெயரால் பள்ளிகளை
ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை!
கல்வியாளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பா.ச.க. அரசின் ‘தேசியக் கல்விக் கொள்கை’யின் பரிந்துரைகளைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முந்திக் கொண்டு ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறது.
ஐந்தாம் வகுப்பு – எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, மாணவர்கள் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளை மூடுவது, ஒரு மேனிலைப் பள்ளிக்கு அருகில் சில அயிரைப்பேரடி(கிலோ மீட்டர்கள்) தொலைவு வரையிலுள்ள தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளிகளை இணைப்பது என அடுத்தடுத்து கல்வி உரிமையின் மீதான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.
தமிழ்வழிக் கல்வி புறக்கணிப்பு, எளிய மக்களின் கல்வி உரிமை பறிப்பு, தேர்வு முறையை தண்டனை முறையாக இறுக்குவது எனப் பிற்போக்குத் திசையில் இந்திய அரசின் ஆணையை கூச்சமின்றிச் செயல்படுத்துகிறது.
 இந்த வரிசையில், ‘ஓகா – ஒழுக்கக் கல்வி’ என்ற பெயரால் ஆரியத்துவ ஆதிக்கத்திற்குக் கதவு திறந்து விட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த 25.10.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மும்பையில் செயல்பட்டு வரும் ‘கைவல்ய தம்மா ஓகா ஆய்வு நிலையம்’ என்ற நிறுவனத்தோடு ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.
இந்தக் ‘கைவல்ய தம்மா ஓகா நிலையம்’ மும்பை அருகிலுள்ள இலோனாவாலா குன்றில், தலைமையிடம் அமைத்துச் செயல்பட்டு வருகிறது. சுவாமி குவலயா நந்தா என்பவர் 1924இல் நிறுவி விரிவாக்கிய இந்த ஓகா நிறுவனம், இப்போது ஓ.பி. திவாரி என்பவர் தலைமையில் நடந்து வருகிறது.
 ஓகம், மூச்சுப் பயிற்சி ஆகியவை மனித உடல் நலத்திற்கு எவ்வாறு துணை புரிகின்றன என்பதை ஆய்வுக் கூட ஆராய்ச்சியின் வழியாக மெய்ப்பித்து இந்த ஓகக் கலையை இந்நிறுவனம் கற்பித்து வந்தாலும், இது வெறும் உடல் பயிற்சியாக நடப்பதில்லை. இப்பயிற்சிகள் அனைத்தையும் வேதங்கள், உபநிசத்துகள், சங்கரரின் மாயாவாதம் ஆகியவற்றோடு இணைத்தே வழங்குகிறார்கள். அதையே ஒழுக்கக் கல்வி என்பதாகச், செங்கோட்டையனும் மெச்சிக் கொள்கிறார்.
 தமிழிசைப் பண்கள் ‘இராகங்கள்’ எனப் பெயர் மாற்றப்பட்டு, கருநாடக சங்கீதம் என ஆரியமயமானதைப் போல், நுணுக்கமும் விரிவும் உயர்வும் உள்ள சிற்பக் கலையின் செயல்பாடு, தமிழர்களின் தனித்தன்மையானதாக எங்கும் பரவி இருந்தாலும், ‘சிற்பச் சாத்திரம்’ என்பது வடமொழியில் இருப்பதைப் போல, தமிழர்களின் சதிராட்டம் ‘பரத நாட்டியம்’ என்ற பெயரால் ஆரியமயமானதைப் போல – பண்டைத் தமிழர்களின் ஓகம்தான் ஆரியத்தால் களவாடப்பட்டு ‘யோகம்’ என்ற பெயரால் மீண்டும் வருகிறது என்பதை அறிஞர்கள் பலரும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
 அகத்தியர், திருமூலர், போகர், புலிப்பாணி, ஔவையார் என்று அடுத்தடுத்த சான்றோர்களால் தமிழ் மண்ணில் வளர்த்தெடுக்கப்பட்ட ஓகக்கலையும், அதனூடான மூச்சுப் பயிற்சி, தியானம் உள்ளிட்ட உடலுக்கும் உள்ளத்திற்குமான பயிற்சிகள் அறிவியல் வழிப்பட்டவை.
‘அண்டமே பிண்டம்’ என்ற திருமூலரின் திருமந்திரம் கூறும் அறிவியல், நவீன அறிவியலாளர்களாலும் வியந்து பார்க்கக்கூடிய ஒன்றாகும். தமிழர்களின் ஐம்பூதக் கோட்பாடு, இயற்கையின் இயக்கத்திலும் உடலின் இயக்கத்திலும் கிட்டத்தட்ட ஒரே தன்மையில் செயல் படுவதை வேறு எந்த அறிவியலும் சொன்னதில்லை!
 சூழலியல் சிக்கல்களும், அது சார்ந்த நோய்களும், பெருகி வரும் இக்காலத்தில் தமிழர்களின் பண்டை அறிவியல் உலக அறிஞர்களின் மீள் பார்வைக்குச் சென்று கொண்டிருக்கிறது.
 ஔவையாரின் ‘விநாயகர் அகவல்’ குண்டலினி ஓகம் என்ற ஓகக்கலைக்கு விளக்க நூலாகவே கொள்ளப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார், ஓகம், மூச்சுப் பயிற்சி, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல அறிவியல் நடவடிக்கைகளை பரந்துபட்ட மக்களிடம் பரப்பியிருக்கிறார்.
 தமிழர்களின் மரபான ஓகக்கலை இயற்கையோடு இயைந்து வாழ்கிற மக்கள் அறிவியலையும், உயிர்மநேயம் என்ற அறவொழுக்கத்தையும் ஒன்றிணைத்துக் கூறுகிறது.
 மனித சமத்துவத்தோடும் உயிர்ம நேயத்தோடும், அதற்கு அடிப்படையான தமிழ் மொழியோடும் அது வளர்த்த தமிழ் மரபோடும் வளர்ந்திருக்கிற தமிழர் ஓகக் கலையைத்தான் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கற்பிக்க வேண்டும். இப்போது, ‘கைவல்ய தம்மா யோகா’ நிறுவனத்தோடு தமிழ்நாடு அரசு செய்திருக்கிற ஒப்பந்தம், பள்ளிச் சிறார்களை ஆரியமயமாக்குவதற்கும், அரசு செலவில் ஆர்.எசு.எசு. பயிற்சிக் களங்களை உருவாக்குவதற்கு மட்டுமே பயன்படும்.
 ஏற்கெனவே, பெரியவர்களாலும் அரசியல் கட்சிகளாலும் சாதி முகாம்களாகப் பிரிந்து வரும் பள்ளி மாணவர்களைச் சமத்துவ நோக்கில் திருப்புவதற்கு மாறாக, ஓகா – ஒழுக்கக் கல்வி என்ற பெயரால் இப்போது கொண்டு வரும் ஆரியக்கல்வி நிரந்தரமாக சாதி முகாம்களாகப் பிரித்துவிடும். தமிழ் மரபு அறுந்த ஆரிய அடிமைகளாக நிலைப்படுத்தும்.
 எனவே, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை  ‘கைவல்ய தம்மா ஓகா ஆய்வு’ நிலையத்தோடு செய்து கொண்டிருக்கிற ஒப்பந்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஓகா – மூச்சுப்பயிற்சி – ஒழுக்கக் கல்விக்குத் தமிழ் மரபு வல்லுநர்களையும், சான்றோர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=====================================
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

புதன், 20 மார்ச், 2019

தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! – கி.வேங்கடராமன்

அகரமுதல

மாணவர் வழியாகத் தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வேங்கடராமன் கண்டனம்!

  “தேர்தலில் வாக்களித்து, சனநாயகத்தில் பங்கு கொள்வீர்” என்ற உறுதிமொழிப் பத்திரம் (Sankalp Patra) தேர்தல் ஆணைய அதிகாரிகளால், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று வருமாறு மாணவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.
 இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும், இதுவரை பதிவு செய்யப்படாதவர்களைப் பதிவு செய்து விடுவோம் என்றும், 2019 ஏப்பிரல் 18 அன்று தமிழ்நாட்டில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்போம் என்றும் பெற்றோர்கள் உறுதிமொழி அளித்துக் கையொப்பம் இட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் தாய், தந்தை பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், கைப்பேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என்றும், அவற்றைத் தமது பெற்றோர்களிடம் இருந்து மாணவ, மாணவிகள் பெற்று வந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் பள்ளி நிருவாகங்களுக்குத் தேர்தல் ஆணையம் கட்டளை இட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின்  இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டப் புறம்பானது ஆகும்.
அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளின்படி, தேர்தலில் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் இருப்பதும் இந்தியக் குடிமக்களின் விருப்பம் சார்ந்தது. யாரையும் வாக்களிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் இதனை உறுதி செய்திருக்கின்றன.
இந்த நிலையில், வாக்களிப்போம் என்று வாக்காளர்களை உறுதிப் பத்திரம் அளிக்குமாறு வலியுறுத்துவது தேர்தல் ஆணையமே செய்யும் சட்டமீறலாகும்!
வாக்களிக்கும் அகவை 18 என்று சட்டம் கூறும் நிலையில், வாக்களிக்க வலியுறுத்தும் ஆவணத்தில் பெற்றோர் கையொப்பம் பெற்று வருமாறு, 18 அகவைக்குக் கீழுள்ள பிள்ளைகளை ஈடுபடுத்துவது அப்பட்டமான சட்டமீறலாகும்.
இன்றைக்கு இந்தச் சட்டமீறல் அனுமதிக்கப்படுமானால், நாளைக்கு ஆளுங்கட்சிக்கு வாக்களிக்குமாறு, மறைமுகமாக வலியுறுத்துவதற்கு வழி ஏற்படும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எனவே தேர்தல் ஆணையம் சட்டத்திற்குப் புறம்பான இந்த உறுதிமொழி பத்திரச் சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தலையிட்டுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உறுதிமொழிப் பத்திரத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com  
இணையம் : www.tamizhdesiyam.com  
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam