கி. வெங்கட்ராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கி. வெங்கட்ராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 அக்டோபர், 2021

வெளிமாநிலத்தவருக்கான வேலை வாய்ப்பை மறுத்திடுக! -த.தே.பே. வலியுறுத்தல்

 அகரமுதல




அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில்

வெளி மாநிலத்தவரை மீண்டும் அனுமதிக்கக்கூடாது!

தேர்வு அறிவிப்பைத் திருத்தி வெளியிட வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

 

தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 2021 அட்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடக்கவுள்ளதாக ஆசிரியர் பணித்தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB) அறிவித்துள்ளது. வெளி மாநிலத்தவர் பங்கேற்பால் ஏற்கெனவே நீக்கப்பட்டு இரண்டாம் முறையாக நடைபெறும் அத்தேர்வில் மீண்டும் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த 2017இல் இதே பணியிடங்களுக்காக நடந்த தேர்வில், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் பெருமளவில் தேர்வானதை அம்பலப்படுத்தி 10.11.2017 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்துப் பல்வேறு அரசியல் கட்சியினரும் அதனைக் கண்டித்தனர். வெளி மாநிலத்தவரை நீக்கிவிட்டுப் புதிய பட்டியல் வெளியிடாவிட்டால், வெற்றி பெற்றோருக்கு 2017 நவம்பர் 23 அன்று நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பை முற்றுகையிட்டுத் தடுப்போம் என்று ஐயா மணியரசன் அவர்கள் அறிவித்தார்.

இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு அரசாலேயே ஒத்தி வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதில் தலையிட்டு, அத்தேர்வை நீக்கியதுடன் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 27.11.2019 அன்று, இதே 1060 பணியிடங்களுக்கான மறுதேர்வு அறிவிப்பு (அறிவிப்பு எண் – 14/2019) வெளியிடப்பட்டது. தமிழ் தெரியாதோரும் இத்தேர்வை எழுதலாம் என்று கடந்த முறை (2017) அறிவிப்பு வெளியிட்டதால்தான் வெளி மாநிலத்தவர் இத்தேர்வில் பங்கேற்று முறைகேட்டில் ஈடுபட்டனர் என்ற நிலையில், 2019இல் வெளியிடப்பட்ட அறிவிப்பும் அதே விதியைக் கொண்டிருந்தது. எனினும் தேர்வு நாள் அறிவிக்கப்படவில்லை.

மகுடை (கொரோனா) முடக்கம் காரணமாகக் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெறாத அத்தேர்வு, தற்போது இம்மாதம் அட்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய அறிவிப்பின்படியே இத்தேர்வு நடைபெறவுள்ளதால் மீண்டும் இத்தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்கும் நிலை உள்ளது. வெளி மாநிலத்தவர்கள் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், சிற்றூர்ப்புறங்களில் தமிழ்வழியில் படித்துவிட்டுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழ் மாணவர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகும்!

 

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற இந்தி மாநிலங்களில் இந்தியும், கருநாடகா போன்ற மாநிலங்களில் கன்னடம் உள்ளிட்ட அத்தேசிய இன மொழிகளும் கட்டாயமாக்கப்பட்டு, மண்ணின் மக்கள் மட்டுமே அரசுத் தேர்வெழுத முடியும் என்ற நிலை உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் வந்தவரெல்லாம் தேர்வெழுதலாம் என்ற விதி இன்றும் மாற்றப்படாமல்  இருப்பது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல தமிழ் மக்களின் வாழ்வுரிமையையும் பறிக்கும் செயலாகும்!

 

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தேர்வுக்கான அறிவிப்பை நீக்கிவிட்டுத், தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மறுத்தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அட்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள தேர்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதைத் தமிழ்நாடு அரசு தடுத்து ஆணையிட வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கி. வெங்கட்ராமன்

 

===================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

===================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

===================================



வெள்ளி, 22 ஜூன், 2018

அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! – கி. வெங்கட்ராமன்

அரசமைப்பு உறுப்பு 161இன்படி

ஏழு தமிழர்களை விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

உச்ச நீதிமன்றக் கெடு முடியும் தறுவாயில், இந்திய அரசு – குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்து வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது.
2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது.
இந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச் சென்று அதன் பிறகு இவர்கள் விடுதலைபற்றி விசாரித்து வந்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நின்றது. நான்காண்டுகளாக இவ்வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை! இந்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை!
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து ஒன்றிய அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் “தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டா” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக வெளியிட்டிருக்கிறது.
குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும்!
ஏனெனில், இவ்வழக்கை புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராசன் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில், முக்கியமானப் பிழையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டு, இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்விலேயே தனது உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார்.
இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமசு, தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
கொலையுண்ட இராசீவு காந்தியின் மகன் இராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்!
இராசீவு காந்தி கொலையில் பன்னாட்டுச் சதித் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது!
இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது! இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது.
இச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனமான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது!
அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்!
மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தஅளவில், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும்! அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் – அந்த அதிகாரம் கட்டற்றது!
ஆளுநர் முடிவு என்பது, தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி அது அமைச்சரவையின் முடிவே ஆகும்!
குடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நமது அனைவரின் நேசத்திற்கும் உரிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கேட்பது – மனச்சான்று உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannottam.com
=====================================
இணையம்: tamizhdesiyam.com
=====================================