த.தே.பே. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
த.தே.பே. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 பிப்ரவரி, 2021

தழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!

 அகரமுதல

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த

தழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!

தமிழீழத்தில் 2008 – 2009ஆம் ஆண்டில் இந்திய அரசின் துணையோடு சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை நிறுத்தக் கோரித் தீக்குளித்து உயிரீகம் செய்த தழல் ஈகி கு. முத்துக்குமார் முதலான ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் சனவரி 29 அன்று வீரவணக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்வாண்டும் (2021) தமிழகமெங்கும் வீரவணக்க நிகழ்வுகள் தை 16, 2052 / 29.01.2021 அன்று எழுச்சியுடன் நடைபெற்றன.

சென்னை

சென்னை கொளத்தூரில் ஈகி முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் ஆண்டுதோறும் நினைவுத் தூண் எழுப்பி நடைபெறும் வீரவணக்க நிகழ்வு – 2021 சனவரி 29 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் ஐயா த. வெள்ளையன், இயக்குநர் புகழேந்தி, முத்துக்குமாரின் தந்தையார் திரு. குமரேசன், தங்கை மற்றும் தங்கை கணவர் முதலான குடும்பத்தினர், வீரவணக்க நிகழ்வுக்குழு ஏற்பாட்டாளர்கள் தோழர் செம்பியன், தாவீது பெரியார் உள்ளிட்டோர் நிகழ்வை தொடங்கி வைத்தனர். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா பழ. நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் நேரில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார். த.தே.பே. தலைமைச்செயற்குழுத் தோழர் க. அருணபாரதி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைப் பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், திருவள்ளூர் செயலாளர் தோழர் செயப்பிரகாசு, சென்னை நடுவண் செயலாளர் தோழர் மு. வடிவேலன், பல்லாவரம் செயலாளர் தோழர் மு. கவியரசன், தோழர்கள் ஆவடி சுப்பிரமணியன், பொன்னி முதலானோர் பங்கேற்றனர்.

செங்கிப்பட்டி

தழல் ஈகி முத்துக்குமாரின் சிலை அமைந்துள்ள தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் அவரது சிலைக்குச் சனவரி 29 அன்று காலை, த.தே.பே. ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமையில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் நந்தகுமார், த.தே.பே. மாவட்டச் செயற்குழு தோழர்கள் இரெ. கருணாநிதி, ஆ. தேவதாசு, க. காமராசு, அ. பகத்துசிங்கு, குன்றாண்டார்கோயில் ஒன்றியச் செயலாளர் தோழர் சி. ஆரோக்கியசாமி முதலானோர் பங்கேற்றனர்.

சிறப்புப் பொதுக்கூட்டம்

மாலையில், செங்கிப்பட்டி (சானூரப்பட்டி) முதன்மைச்சாலையில் நடைபெற்ற தழல் ஈகி முத்துக்குமார் நினைவு நாள் மற்றும் தமிழர் திருநாள் – சிறப்புப் பொதுக்கூட்டம் பேரியக்கப் பாடகர் கரியப்பட்டி பாலுராசு அவர்களின் எழுச்சி பாடல்களுடன் தொடங்கியது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் தழல் ஈகி முத்துக்குமார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அனிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

பொதுக்கூட்டத்திற்கு, த.தே.பே. ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்கினார். செங்கிப்பட்டி த.தே.பே. செயலாளர் தோழர் பழ. மலைத்தேவன்  வரவேற்றார். த.தே.பே. ஒன்றியக்குழு தோழர்கள் க. காமராசு, ஆ. தேவதாசு, ச. அருள்தாசு, அ. பகத்சிங், செபஸ்தியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து, பாவலர்கள் கவிபாஸ்கர், மூ.த. கவித்துவன், அஞ்சுகம் ஆகியோர் சிறப்பான பா வீச்சு நிகழ்த்தினர்.

 தமிழுரிமைக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலவர், த.தே.பே. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் காமராசு, மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள் ஆகியோர் உரையாற்றினர்.

 நிறைவாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். மக்கள் பாடகர் மதுரை சந்திரன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் பெ. ஆனந்து நன்றி கூறினார். இறுதியில் மக்கள் பாடகர் மதுரை சந்திரன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில், ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் திரளாகப் பங்கேற்றனர்.




 














வியாழன், 28 மே, 2020

தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்! த.தே.பே. தீர்மானம்!


வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்!

த.தே.பே. தீர்மானம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், வைகாசி 10, 2051  / 23.05.2020 காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கி. வேங்கடராமன் முன்னிலை வகித்தார்.
பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழுத் தோழர்கள் நா. வைகறை, இரெ. இராசு, க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், தை.செயபால், க. முருகன், முழுநிலவன் முதலான தலைமைச் செயற்குழுத் தோழர்களும், குடந்தை தீந்தமிழன், தமிழ்த்தேசியன், தஞ்சை இலெ. இராமசாமி, பூதலூர் தென்னவன், திருச்சி வே.க. இலக்குவன், மதுரை அருணா, சிவா, கதிர்நிலவன், கோவை இராசேந்திரன், ஓசூர் ப. செம்பரிதி, சுப்பிரமணியன், சென்னை வெற்றித்தமிழன், வி. கோவேந்தன், இளங்குமரன், சிதம்பரம் சிவா, திருத்துறைப்பூண்டி சிவவடிவேலு, புதுச்சேரி இரா. வேல்சாமி, மகளிர் ஆயம் தோழர்கள் அருணா, மேரி முதலான தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இணைய வழியில் பங்கேற்றனர்.
முன்னதாக, அண்மையில் மறைவுற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் திருச்சி செயல்பாட்டாளர் தோழர் மதியழகன், பொதுக்குழு தோழர் குபேரன் அவர்களின் தந்தை புலவர் ஆதிமூலம், குடந்தை தோழர் வளவன் அவர்களின் தாயார் திருவாட்டி கோ. அம்சவல்லி, தஞ்சை ஓவிய ஆசிரியர் இளங்கோ ஆகியோர் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் – 1
வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்!
தீர்மானம் – 2
வெளிமாநிலத் தொழிலாளிகளை
நிலையாக வெளியேற்ற வேண்டும்
தீர்மானம் – 3
தமிழ்நாடு உரிமை பறிபோவதைத்
தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்க வேண்டும்!
தீர்மானம் – 4
அரசு மதுக் கடைகளை மூடுக!

வெள்ளி, 22 ஜூன், 2018

அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! – கி. வெங்கட்ராமன்

அரசமைப்பு உறுப்பு 161இன்படி

ஏழு தமிழர்களை விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

கிவெங்கட்ராமன் கோரிக்கை!

உச்ச நீதிமன்றக் கெடு முடியும் தறுவாயில், இந்திய அரசு – குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்து வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது.
2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது.
இந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச் சென்று அதன் பிறகு இவர்கள் விடுதலைபற்றி விசாரித்து வந்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நின்றது. நான்காண்டுகளாக இவ்வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை! இந்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை!
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து ஒன்றிய அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் “தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டா” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக வெளியிட்டிருக்கிறது.
குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும்!
ஏனெனில், இவ்வழக்கை புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராசன் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில், முக்கியமானப் பிழையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டு, இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்விலேயே தனது உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார்.
இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமசு, தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
கொலையுண்ட இராசீவு காந்தியின் மகன் இராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்!
இராசீவு காந்தி கொலையில் பன்னாட்டுச் சதித் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது!
இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது! இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது.
இச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனமான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது!
அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்!
மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தஅளவில், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும்! அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் – அந்த அதிகாரம் கட்டற்றது!
ஆளுநர் முடிவு என்பது, தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி அது அமைச்சரவையின் முடிவே ஆகும்!
குடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நமது அனைவரின் நேசத்திற்கும் உரிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கேட்பது – மனச்சான்று உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannottam.com
=====================================
இணையம்: tamizhdesiyam.com
=====================================